வியாழன், 18 ஜனவரி, 2018

சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 5 - கரடிமுன்னுரை:

கரடி - என்றவுடன் உடலெல்லாம் கருகரு முடியுடன் பெரிய கால்களுடன் மிக மெதுவாக அசைந்து அசைந்து வரும் அந்த கருநிறக் கரடி தான் நமது நினைவுக்கு வரும். கரடி ஒரு காட்டுவிலங்கு என்பதால் பொதுவாக அதை ஊர்களில் பார்க்கமுடியாது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னால்வரை, தெருக்களில் கரடியை நடனமாடச் செய்தும் பயந்த கோளாறு மற்றும் நோய்தீர வேண்டி தாயத்தை மந்திரிக்கச் செய்து கொடுத்தும் கரடிகளைக் கொண்டு முகத்தில் காற்றினை ஊதச்செய்தும் காசு பார்த்தனர். கரடிகளில் கருப்பு, பழுப்பு, வெள்ளை என்று பலவகைகள் உண்டு என்ற நிலையில், சங்க இலக்கியத்தில் எவ்வகைக் கரடிகள் பற்றிப் பேசப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

சங்க இலக்கியத்தில் கரடி:

சங்ககாலத் தமிழகத்தில் வாழ்ந்த கரடியானது ஆங்கிலத்தில் Sloth Bear என்று அழைக்கப்படும் தேன்கரடி வகையைச் சார்ந்ததாகும். இதனுடைய விலங்கியல் பெயர் மெலர்ஸஸ் உர்சினஸ் ( Melursus Ursinus ) ஆகும். இந்தியக் காடுகள் மற்றும் மலைகளில் அதிகம் காணப்படும் இவ்வகைக் கரடிகளைப் பற்றி சங்க இலக்கியங்கள் ஏராளமான செய்திகளைப் பதிவுசெய்து வைத்துள்ளன. கரடியின் உடலின் நடுவில் கூன் இருக்கும் என்றும் அதன் மயிரானது கருநிறத்தில் இருந்ததால் அதனைக் கார்மேகம், இருள் துண்டம், கருப்பு ஆடு ஆகியவற்றுடன் ஒப்பிட்டும் கூறுகிறது. கரடியின் தலைமயிரானது பனைமரத்தின் நாரினைப் போலப் பருத்துக் காணப்பட்டதாகக் கூறுகிறது. கரடியின் தலையானது கவிழ்த்து வைத்ததைப் போன்று இருந்தது என்றும் அதன் முகம் ஊமணாமூஞ்சி போல அழகற்று இருந்ததாகவும் அதன் பிளந்த வாயானது தீப்பிழம்பு போலச் சிவந்து இருந்ததாகவும் கூறுகிறது. கரடி தனது முன்னங்கால்களைக் கைகளாகப் பயன்படுத்தும் என்றும் கை மற்றும் கால்களில் ஏராளமான முடி நிறைந்திருக்கும் என்றும் கூறுகிறது. பாதங்கள் சற்றே மேடுதட்டியநிலையில் வளைந்து காணப்படும் என்றும் கால்களில் இருக்கும் நகங்கள் உளிபோல நீளமாகக் கூர்மையுடன் இருக்கும் என்றும் அறியப்படுகிறது. தேன்கரடிகள் விரும்பி உண்ணும் உணவாகக் கறையான், இலுப்பைப்பூ, இலுப்பைக்கனி, கொன்றைப்பழம் ஆகியவற்றைக் கூறுகிறது. தேன்கரடிகள் பெரும்பாலும் இரவில் தான் இரைதேடிச் செல்லும் சென்ற செய்தியும் இவை மரத்தின்மேல் ஏறுவதில் வல்லவை என்ற செய்தியும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. தேன்கரடிகள் கறையான் புற்றுக்களைத் தாக்கி அழித்து எவ்வாறு கறையான்களைப் பிடித்துண்ணும் என்ற செய்தியை இரும்பு செய்யும் கொல்லனின் செய்கையுடன்  ஒப்பிட்டு விரிவாகச் சொல்கிறது.

கரடி - பெயர்களும் காரணங்களும்:

உடம்பெல்லாம் கருகருவென்று முடியுடைய இந்த விலங்கினை நாம் கரடி என்ற பெயரால் தான் குறிப்பிடுகிறோம். ஆனால், சங்க இலக்கியத்தில் ஒரு பாடலில் கூட கரடி என்ற பெயர் காணப்படவில்லை என்பது வியப்பைத் தரும் செய்தியாகும். சங்க இலக்கியத்தில் மட்டுமின்றி, சங்கமருவிய காலத்து நூல்களான பதினெண் கீழ்க் கணக்கு நூல்களிலும் கரடி என்ற பெயர் காணப்படவில்லை. எனவே, கரடி என்ற பெயர் பிற்காலத்தில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

ஆய்வுசெய்ததில், கரடி என்னும் விலங்கினைக் குறிக்கும் பெயர்களாக எண்கு, உளியம், பெருங்கை ஆகியவற்றைத் தான் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றுள்,

எண்கு என்பது கருநிற மயிரை உடையது என்ற பொருளில் ஏற்பட்டதாகும்.
உளியம் என்பது உளிபோல நீண்ட கூரிய நகங்களை உடையதால் ஏற்பட்ட பெயராகும்.
பெருங்கை என்பது பெரிய வலிய கைகளை அதாவது முன்னங்கால்களை உடையது என்ற பொருளில் எழுந்தது.

கரடி என்னும் பெயர், சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை என்றாலும், கருமை + அடி அதாவது கரிய கால்களை உடையது என்பதின் அடிப்படையில் கரடி என்ற பெயர் இவ் விலங்கிற்கு ஏற்பட்டிருக்கலாம்.

கரடியின் உடலும் மயிரும்:

தமிழகக் காடுகளில் வாழ்ந்த தேன்கரடியின் உடலைப் பற்றிக் கூறும்போது, அவை நடுமுதுகில் கூன் விழுந்ததைப் போல மேல்நோக்கிய வளைவுடன் இருந்ததாகக் கீழ்க்காணும் சங்கப்பாடல் கூறுகிறது.

கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி - அகம். 112

கரடியின் உடலெங்கும் மயிர் மிக்கிருந்ததைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

எண்கின் பரூஉ மயிர் ஏற்றை - நற். 325

கரடியின் உடலெங்கும் நிறைந்திருந்த மயிரின் நிறம் பற்றிக் கூறுமிடத்து, அவை கருநிறம் கொண்டவை என்று நேரடியாகக் கூறாமல் சில உவமைகளின் மூலம் உய்த்துணர வைத்துள்ளனர் சங்ககாலப் புலவர்கள். கார்மேகம் போன்றும் இருளின் துண்டம் போன்றும் ஆடு போன்றும் தோன்றியதாகக் கூறும் பாடல்களில் இருந்து அதனை உறுதிசெய்து கொள்ளலாம்.

மாரி எண்கின் மலைச்சுர நீள் இடை   - நற். 192

கரடியினை மாரியுடன் அதாவது கார்மேகத்துடன் ஒப்பிடுகிறது மேற்பாடல் வரி. இதைப்போலவே, கீழ்க்காணும் பாடலும் கரடிகளைக் கார்மேகங்களுடன் ஒப்பிடுகிறது.

அரவின் ஈர் அளை புற்றம் கார் என முற்றி
இரை தேர் எண்கு இனம் அகழும் - நற்.336

பொதுவாக, பாம்புக்கும் கார்மேகத்திற்கும் ஆகாது. அதாவது, பாம்புகள் எங்கிருந்தாலும் அவற்றைத் தேடிப்பிடித்துக் கொல்வதைப்போல கார்மேகங்கள் எழுப்பும் இடியோசையினைக் கேட்ட நாகங்கள் துடிதுடித்து இறந்துபடும். இதைப்பற்றிக் கூறும் சங்கப் பாடல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை விரிவாகப் பாம்பு என்னும் புதிய கட்டுரையில் காணலாம். எப்படி கார்மேகங்கள் பாம்புகளைத் தேடி முற்றுகை இடுமோ அதைப்போலக் கரடிகள் பாம்புகள் வாழும் புற்றினைச் சூழ்ந்து தாக்கியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை
இருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளை - அகம். 201

இருளின் துண்டம் போல கரடி தோன்றியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின் - அகம். 331

கரடிகள் நடந்துசெல்லும்போது பின்புறமாக இருந்து அவற்றைப் பார்ப்பதற்கு, உடலெங்கும் அடர்த்தியாகக் கருமயிரை உடைய கருப்பு ஆடுகள் ஊர்வதைப் போலத் தோன்றியதாக மேற்பாடல் வரி கூறுகின்றது. தமிழக மலைகளில் வாழ்ந்துவந்த இந்த ஆட்டினம் தற்போது முற்றிலும் அழிந்துவிட்டதாகத் தெரிகின்றது.

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்     - திரு. 313

கரடியின் உடலில் இருந்த மயிரானது, பனைமரத்தின் செறும்பு அதாவது நார்போலத் தோன்றியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

கரடியின் தலை:

கரடியின் தலை பற்றிக் கூறும்போது, கவித்தலை என்று குறிப்பிடுகிறது சங்க இலக்கியம்.

கவித்தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை - நற். 325

கரடியின் தலையானது கவிழ்த்து வைத்ததைப் போல இருந்ததாக மேற்பாடல் வரி ஏன் கூறுகிறது என்று பார்க்கலாம். பொதுவாக, ஒரு வாளியைக் கவிழ்த்து வைத்தால் எப்படித் தோன்றும்?. கீழ்ப்புறத்தில் அகன்றும் மேலே செல்லச்செல்ல சிறுத்துக் குறுகியும் தோன்றும் அல்லவா?. அதைப்போல, கரடியின் தலையானது துவக்கத்தில் பெரிதாகவும் முன்னால் செல்லச்செல்ல சிறுத்துக் குறுகியும் இருப்பதால், அதனைக் கவித்தலை என்று இலக்கியம் குறிப்பிடுகிறது.

கரடியின் முகம் பற்றிக் கூறுகையில், உம்மென்று சுருங்கியதாய் ஒரு ஊமணாமூஞ்சி போலப் பொலிவற்று அதாவது அழகற்று இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் குறிப்பிடுகிறது.

ஊமை எண்கின் குடாஅடிக் குருளை - மலை. 501

இப்பாடலில் வரும் ஊமை என்பது வாய்பேசாத் தன்மையைக் குறித்து வராமல் உம்/ஊம் என்று குவிந்து இருக்கும் பொலிவற்ற முகத்தைக் குறித்து வந்துள்ளது. அடுத்ததாகக் கரடியின் வாயினைப் பற்றிக் கூறுமிடத்து, பகுவாய் என்றும் பேழ்வாய் என்றும் அழல்வாய் என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை - நற். 125
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை - அகம். 201
இரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை - அகம். 247

பகுவாய் என்பதும் பேழ்வாய் என்பதும் பிளந்த வாயினையுடையது என்று பொருள்படும். பிளந்த நிலையில் காணப்பட்ட அதன் வாயின் உட்பகுதியானது தீயினைப் போலச் செந்நிறத்தில் காணப்பட்டதால் அழல்வாய் என்று இலக்கியம் கூறுகிறது. அருகில் உள்ள படம் கரடியின் தலை மற்றும் வாயின் அமைப்பினைக் காட்டும்.

கரடியின் கால்/கை:

கரடியானது தனது முன்னங்கால்களைத் தனது கைகளாகப் பயன்படுத்தும். இவை பின்னங்கால்களைக் காட்டிலும் அளவில் பெரியவை மட்டுமின்றி வலிமை மிக்கவையும் கூட. இதனால்தான் இதற்குப் பெருங்கை என்ற பெயரும் உண்டானது. இதைப்பற்றிக் கூறும் சில பாடல்கள் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெரும்கை எண்கின் இரும் கிளை கவரும் - அகம். 149
பெரும்கை எண்கின் சுரன் இறந்தோரே - அகம். 171
பெரும்கை எண்கின் பேழ் வாய் ஏற்றை - அகம். 201

கரடியின் கைகள் வலிமை மிக்கவை என்று கீழ்க்காணும் அகப்பாடலும் கூறுகிறது.

வன்கை எண்கின் வய நிரை பரக்கும் - அகம். 15

கரடியின் உடல் மட்டுமின்றி, கால்கள் முழுவதிலும் கருநிற மயிர் அடர்ந்திருக்கும் என்ற செய்தியைக் கீழ்க்காணும் சங்கப்பாடல் பதிவு செய்துள்ளது.

மயிர்க்கால் எண்கின் ஈர் இனம் கவர -அகம். 267

கரடியின் முன்னங்கால்கள் வலிமையானவை மட்டுமின்றி, அதன் விரல்கள் சற்று உள்நோக்கி வளைந்தும் காணப்படும். இதனால் தான் கரடியானது எளிதில் மண்ணைத் தோண்ட முடிகிறது. கரடியின் முன்னங்கால் விரல்களைக் கொடுவிரல் என்று சங்க இலக்கியம் கூறுகிறது.

கொடுவிரல் உளியம் கெண்டும் - அகம். 88

கரடியின் கால்பாதங்களைப் பற்றிக் கூறுமிடத்து, குடா அடி என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. காரணம், தேன்கரடியின் முன்னங்கால் பாதமானது சமதளமாக இல்லாமல் சற்று மேடுதட்டிய நிலையில் வளைந்து காணப்படும். இதைப்பற்றிய சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஊமை எண்கின் குடாஅடிக் குருளை - மலை. 501
குரூஉ மயிர் யாக்கை குடாஅடி உளியம்      - திரு. 313

கரடியின் முன்னங்கால் பாதங்களில் கூர்மையுடன் கூடிய நீண்ட நகங்கள் காணப்படும். இவை பார்ப்பதற்குக் கூரிய நீண்ட உளியைப் போல இருப்பதால் கரடிக்கு உளியம் என்ற பெயர் ஏற்பட்டது. கரடியின் பின்னங்கால்களைக் காட்டிலும் கைகளில் அதாவது முன்னங்கால்களில் காணப்படும் நகங்கள் மிக நீளமானவை. பாம்புப் புற்றைத் தோண்டுவதற்கும் அதில் வாழும் பாம்புகளைக் குத்திக் கொல்வதற்கும் எதிரிகளைத் தாக்கவும் பெரிதும் உதவுவது இந்த முன்னங்கால் நகங்களே ஆகும். இந்த நகங்களைப் பற்றிக் கூறும் சில சங்க இலக்கியப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வள் உகிர் இடப்ப வாங்கும் - நற். 325
வள் உகிர் கதுவலின் - அகம். 8

கரடியின் உணவு:

தமிழகக் காடுகளில் வாழ்ந்த தேன்கரடிகளின் முதன்மை உணவு கறையான் ஆகும். ஒரு புற்றுக்குள் வாழுகின்ற சிறியதும் பெரியதுமான கறையான்களின் தொகுதியினைக் குரும்பி என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. சான்றாகச் சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெரும்கை எண்குஇனம் குரும்பி தேரும் - அகம். 307
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை - அகம். 8
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை - அகம். 72

இந்தக் குரும்பி என்பது எப்படித் தோன்றும் என்றால், தென்னையின் முற்றாத இளநீர்க் காயினுள் வெள்ளைநிறத்தில் கொழகொழவென காணப்படுகின்ற தேங்காயின் வழுக்கையினைப் போலத் தோன்றும். இதனால் தான் தென்னையின் முற்றாத இளநீர்க் காயினையும் குரும்பி / குரும்பை என்ற சொல்லால் தமிழ் அகராதிகள் கூறுகின்றன. மேலும் இந்தக் கறையான்கள் வாழும் புற்றின் அடியில் இருக்கும் மண் எப்போதும் அதிக ஈரத்துடன் இருப்பதால், ஈரம்மிக்க மண்குழியில் ஒன்றின்மேல் ஒன்றாக இருக்கும் வெண்ணிறக் கறையான்களின் கூட்டத்தினைப் பார்க்கும்போது அது ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி ஆறவைத்த வெண்ணிற அரிசிக் கஞ்சியினைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பெரும்பாணாற்றுப்படைப் பாடல்வரிகள் கூறுகின்றன.

அவையா அரிசி அம்களி துழவை
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல்அடை அளைஇ - பெரும். 275

கறையான்களுக்கு அடுத்தபடியாக தேன்கரடிகளுக்கு மிகப்பிடித்தமான உணவு இலுப்பை என்று நாம் தற்போது அழைப்பதான இருப்பை மரத்தின் பூக்கள் ஆகும். இலுப்பை மரத்தின் பூக்கள் இனிப்புத் தன்மை மிக்கவை ஆகும். 'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சக்கரை' என்ற பழமொழிக்கேற்ப, இலுப்பை மரத்தின் பூக்களைச் சக்கரையாகப் பழங்காலம் தொட்டே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். தேன்கரடிகளும் இலுப்பை மரத்தின் இனிப்பான வெண்ணிறப் பூக்களை விரும்பி உண்ட செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்கள் பறைசாற்றுகின்றன.

புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ
பெரும்கை எண்கின் இரும் கிளை கவரும் - அகம். 149

இலுப்பை மரத்தின் பூக்களை மட்டுமின்றி அவற்றின் இனிப்பான பழங்களையும் தேன்கரடிகள் விரும்பி உண்ட செய்தியினைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

பழம்போல் சேற்ற தீம்புழல் உணீஇய
கருங்கோட்டு இருப்பை ஊரும் பெரும்கை எண்கின் - அகம். 171

இலுப்பை மட்டுமின்றி, கொன்றை மரத்தின் குழல் போன்ற பழங்களையும் தேன்கரடிகள் விரும்பி உண்ட செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

கொன்றை அம் சினை குழல் பழம் கொழுதி       
வன்கை எண்கின் வய நிரை பரக்கும் - அகம். 15

கரடியின் செயல்பாடுகள்:

தமிழகக் காடுகளில் வாழ்ந்த தேன்கரடியின் செயல்பாடுகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ள செய்திகளைக் கீழ்க்காணும் தலைப்புக்களின் கீழ் காணலாம்.

1. இரவில் உணவு தேடுதல்
2. மரம் ஏறுதல்
3. புற்றுக்களை அழித்தல்.

1. இரவில் உணவு தேடுதல்:

தேன்கரடிகள் இரவில் இரைதேடும் தன்மை கொண்டவை. இதனால் இவற்றை இரவாடி என்று விக்கிபீடியா குறிப்பிடுகிறது. இவற்றின் உடலும் கருமைநிறத்தில் இருப்பதால், முழுநிலா வெளிச்சத்தில் அன்றி ஏனைய இரவுகளில் இவற்றைக் காண்பது கடினம். முழுநிலா ஒளிவீசும் இரவுகளில் காடுகளின் வழியாகப் பயணம் செய்வோர் இவற்றால் தாக்கப்படுவதுண்டு. இரவுநேரத்தில் தலைவியைச் சந்திக்க வரும் தலைவனிடம், வழியில் திடும் என்று எதிர்ப்படும் கரடிகளால் ஏற்படும் துன்பத்தை எடுத்துச்சொல்லி இரவில் சந்திக்க வரவேண்டாம் என்று கூறுவதைப் போல பல பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஒருசில பாடல்களை மட்டும் இங்கே காணலாம்.

இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை ......
.......... நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என - நற். 125

கூனல் எண்கின் குறு நடை தொழுதி .........
..........இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல்- அகம். 112

மேற்காணும் பாடல்களில் வரும் நடுநாள், அரைநாள் என்பவை நள்ளிரவு நேரங்களைக் குறிப்பவை. நள்ளிரவுப் பொழுதிலும் இரை இருக்கும் இடத்தினைச் சரியாகக் கண்டறிந்து கூட்டமாகவும் சென்று உண்ணும். பெரும்பாலும் இரவில் இரைதேடும் தன்மை கொண்டவை என்றாலும் சிலசமயங்களில் அரிதாகப் பகலிலும் இரைதேடிச் செல்வதுண்டு. அதுபற்றியதொரு பாடல்கீழே:

நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் - அகம். 81

2. மரம் ஏறுதல்:

கரடிக்குப் பிடித்தமான உணவுகளில் இலுப்பைமரத்தின் பூக்களும் கனிகளும் கொன்றை மரத்தின் குழல் போன்ற பழங்களும் உண்டு என்று மேலே கண்டோம். இந்த மரங்களின் கீழே தானே உதிர்ந்துகிடக்கின்றவற்றை உண்டதுபோக, மரத்தில் இருப்பதையும் உண்ண விரும்பும் கரடிகள் தாமே மரத்தில் ஏறிச்சென்று உண்ணும். இக் கரடிகள் மரத்தில் ஏறிச்செல்வதற்கு ஏதுவாக இவற்றின் பாதங்களின் அமைப்பும் நீண்ட நகங்களும் உதவியாய் இருக்கின்றன. தேன் கரடிகள் மரம் ஏறுதலைப் பற்றிய செய்தியினைக் கீழ்க்காணும் சங்கப் பாடல் பதிவுசெய்துள்ளது.

கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை
பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய
கரும் கோட்டு இருப்பை ஊரும்
பெரும் கை எண்கின் சுரன் இறந்தோரே - அகம். 171

கீழே கிடந்த உணவுப்பொருளை உண்ணாமல், உயரமான கிளைகளில் இருந்த இனிப்பான சேற்றினை உடைய கனிகளை உண்ண விரும்பிய கரடிகள் இருப்பை மரத்தின் மேல் ஏறியதைப் பற்றி மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

3. புற்றுக்களை அழித்தல்:

தேன்கரடிகளுக்கு மிகப் பிடித்தமான முதன்மை உணவு கறையான் பூச்சிகள் என்று மேலே கண்டோம். இந்தக் கறையான்கள் பார்ப்பதற்கு அளவில் மிகச்சிறியவையாக இருந்தாலும் மிக உயரமான புற்றுக்களைக் கட்டும் திறன் கொண்டவை. மரங்களின் அடிப்பகுதிகளிலும் சுவர்களின் அடியிலும் புற்றை அமைத்து அதனுள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்ற இவற்றை உண்ண விரும்பும் கரடிகள் புற்றின் அடிப்பகுதியில் மறைந்து இருக்கும் கறையான்களை எவ்வாறு பிடித்துண்ணும் என்பதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளை இங்கே காணலாம்.

தேன்கரடியானது முதலில் புற்றின் அடிப்பகுதியினைத் தனது கைகளில் உள்ள கூரிய நகங்களைக் கொண்டு தோண்டும். பின்னர் கையை உள்ளேவிட்டு பாம்பு ஏதேனும் இருந்தால் அதனைத் தனது கூரிய நகங்களைக் கொண்டு குத்திக்கொன்று வெளியே எடுத்து வீசிவிடும். பின்னர் தனது வாயினால் காற்றை ஊதிப் புற்றுக்குள் இருக்கும் புழுதிபோன்ற மண்ணை வெளியேற்றும். அதன்பின், மறுபடியும் தனது வாயினைப் புற்றுக்குள் நுழைத்து தனது உதடுகளை நீட்டிக் குவித்துக் கறையான்களை அப்படியே உறிஞ்சி உண்ணும். இச்செய்திகளைப் பதிவுசெய்து வைத்துள்ள சங்கப் பாடல்கள் சில மட்டும் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அரவாழ் புற்றம் ஒழிய ஒய்யென
முரவு வாய் வள் உகிர் இடப்ப வாங்கும்      - நற். 325

தேன்கரடிகள் கறையான்புற்று அழியுமாறு தனது கைநகங்களால் தோண்டிய செய்தியினை மேற்பாடல் வரி விளக்குகிறது.

புற்றத்து அல்குஇரை நசைஇ வெள்அரா மிளிர வாங்கும்
பிள்ளை எண்கின் மலை வயினானே - அகம். 257

புற்றுக்குள் இருக்கும் கறையான்களை உண்ண விரும்பிய குட்டிக்கரடியானது புற்றுக்குள் இருந்த வெள்ளைநிறப் பாம்பினைக் கொன்று கையில் எடுத்த செய்தியினை மேற்பாடல் கூறுகிறது.

கொல்லன் ஊது உலை குருகின் உள் உயிர்த்து அகழும் - நற். 125

தேன்கரடியானது, கொல்லனின் ஊதுலையில் ஊதப்படும் துருத்தியைப் போலப் புற்றுக்குள் தனது வாயை நுழைத்துக் காற்றை ஊதி மண்ணை நீக்கிய செய்தியினை மேற்பாடல் வரி விளக்குகிறது.

அது ஒரு நள்ளிரவு நேரம். இருளைக் கிழிப்பதைப் போல வானம் மின்னிப் பெருமழை பொழிந்ததால் எங்கும் குளிர்ச்சி மிக்கிருந்தது. அந்தப் பெரிய கறையான் புற்றினைச் சுற்றிலும் மின்மினிப் பூச்சிகள் ஒளிர்ந்தபடி பறந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த ஒரு தேன்கரடியானது, தனது கையினால் புற்றைத் தோண்டி வாயை உள்ளே நுழைத்து காற்றினை ஊத, அங்கிருந்து தெறித்துப் பறந்த மின்மினிப் பூச்சிகளானவை பார்ப்பதற்கு, இரும்பு செய்யும் கொல்லன் ஒருவன் தனது ஊதுலையில் துருத்தியால் காற்றினை ஊத, அப்போது அந்த உலையில் இருந்து தெறித்துப் பறக்கும் தீப்பொறிகளைப் போலத் தோன்றியதாகக் கூறும் கீழ்க்காணும் அகப்பாடல் அப்படியே அக்காட்சியினை நம் மனக்கண்ணில் கொண்டுவந்து விடுகிறது.

இருள் கிழிப்பது போல் மின்னி வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்
மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை
இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண் - அகம். 72

முடிவுரை:

சங்ககாலத் தமிழகக் காடுகளில் வாழ்ந்துவந்த தேன்கரடிகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் பல்வேறு செய்திகளைப் பற்றி மேலே கண்டோம். கரடியானது, இந்திய மொழிகளில் பல்வேறு பெயர்களில் குறிக்கப்படும் நிலையில், தெலுங்கில் கூறப்படும் எலுகு என்னும் பெயர், தமிழ்ப் பெயராகிய எண்கு என்பதுடன் நெருக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக, சிவபூசையில் கரடி என்று மக்கள் சொலவடையாகக் கூறுவதற்கும் இக்கட்டுரையில் வரும் கரடி என்னும் விலங்கிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

சனி, 6 ஜனவரி, 2018

சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 4 - குதிரைமுன்னுரை:

குதிரை - என்றவுடன் சல்சல் என்று ஒலித்தவாறு குதித்துக்கொண்டு ஓடுகின்ற குதிரைவண்டி தான் பெரும்பாலும் நினைவுக்கு வரும். இப்போதெல்லாம் நகரங்களிலும் பெருநகரங்களிலும் குதிரைவண்டிகளைப் பார்க்கவே முடிவதில்லை. ஆனால், திருமணம் முடிந்த அன்று மாலை மாப்பிள்ளை ஊர்வலத்தில் மணமக்களை இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் பார்க்கமுடிகிறது. இந்த வெள்ளைக் குதிரைகள் ஓடியநிலையில் ஒருநாளும் பார்த்ததில்லை. நடந்தேதான் செல்கின்றன. ஒருசில கிராமங்களில் குதிரைவண்டிகள் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஒருகாலத்தில் கிராமத் திருவிழாக்களில் விற்கப்பட்ட சிறிய மண்குதிரை பொம்மைகள் இப்போது காணக்கிடைப்பதில்லை. ஆனால், அய்யனார் தெய்வத்தின் வாகனமாகப் பெரிய பெரிய சிலை வடிவங்களாகப் பல கோவில்களில் நின்றுகொண்டு மிரட்டுகின்றன. இப்படிப் பல ஆண்டுகளாகத் தமிழர்களின் வாழ்வுடனும் பண்பாட்டுடனும் இணைந்துவருகின்ற குதிரைகளைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் என்னென்ன செய்திகள் கூறப்பட்டுள்ளன என்பதைப் பற்றியும் குதிரைகளின் தாயகம் இந்தியாவா இல்லையா என்பதைப் பற்றியும் இங்கே விரிவாகக் காணலாம்.

சங்க இலக்கியத்தில் குதிரை:

சங்க இலக்கியத்தில் குதிரைகளைப் பற்றி ஏராளமான பாடல்களில் பல அரிய தகவல்களைப் பதிவுசெய்து வைத்துள்ளனர். குதிரைகளில் பல்வேறு நிறங்கள் இருந்தாலும் வெண்ணிறக் குதிரைகளே சிறப்பாகப் பேசப்பட்டுள்ளன. பெரும்பாலும் நான்கு வெள்ளைக்குதிரைகளைப் பூட்டிய தேரினையே பயணத்திற்கும் கொடையாகக் கொடுப்பதற்கும் பயன்படுத்தி இருக்கின்றனர். குதிரைகளின் வெண்ணிறப் பிடரிமயிரினைக் கரும்பின் பூக்களுடனும் அன்னத்தின் தூவியுடனும் ஒப்பிட்டுப் பாடியுள்ளனர். குதிரைகளின் பிடரிமயிர் நீளமாக வளர்ந்ததும் அதனைக் கொய்து அதைக்கொண்டு உளை எனப்படுவதான ஒரு தலையணியைச் செய்து அதனைக் குதிரையின் தலையுச்சியில் கட்டி அழகுபார்த்துள்ளனர். செவ்வண்ணம் ஊட்டப்பட்டிருந்தபோது இந்த உளை என்னும் அணியானது பார்ப்பதற்குச் செந்நெல் / செந்தினையின் விளைந்த கதிர்களைப் போலவும் எரியும் நெருப்புப் போலவும் தோன்றியதாகக் கூறப்பட்டுள்ளது. குதிரையின் கால்குளம்புகள் கழுதைகளைப் போலன்றி கவிழ்ந்தநிலையில் இருந்ததைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. குதிரைகளின் ஓட்டத்தினை ஆதி என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளனர். மேலும் குதிரையின் ஓட்டமானது பந்து குதித்து எழுவதைப் போன்றும் நிலத்தை அளந்து பார்ப்பதைப் போன்றும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. சீறிப்பாய்ந்த குதிரைகளைக் காற்று, மேகம், அம்பு, அன்னப்பறவை, கலைமான், கப்பல் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளனர். புல், உழுந்தின் தோல், நெய்கலந்த கொள்ளுச்சோறு ஆகியவற்றைக் குதிரைக்கு உண்ணக்கொடுத்த செய்திகள் உள்ளன. குதிரைகளைப் பயணத்திற்கு மட்டுமின்றிப் போரிலும் பரவலாகப் பயன்படுத்திய குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன.

குதிரை - பெயர்களும் காரணங்களும்:

குதிரை என்னும் விலங்கினைக் குறிக்கும் வேறு பெயர்களாக இவுளி, புரவி, பரி, கலிமா(ன்), பாய்மா(ன்), மா(ன்), கடுமா(ன்), உளைமா(ன்), கொய்யுளை ஆகியவற்றைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றுள்,

குதித்து ஓடும் இயல்புடைய விலங்கு என்பதால் குதிரை என்றும்
மலைச்சரிவுகளில் கூட இவரும் அதாவது ஏறும் தன்மையது என்பதால் இவுளி என்றும்
புரவலர்களின் அதாவது அரசர்கள் / காவலர்களின் வாகனமாகப் பயன்படுத்தப் பட்டதால் புரவி என்றும்
பயணம் செய்வதற்கான விலங்கு என்ற பொருளில் பரி என்றும் 
வலிமையும் பொலிவும் கொண்ட விலங்கு என்பதால் கலிமா(ன்) என்றும்
காற்றைப்போலப் பாய்ந்து ஓடும் விலங்கு என்பதால் பாய்மா(ன்) என்றும்
கடுகி அதாவது விரைந்து ஓடும் விலங்கு என்பதால் கடுமா(ன்) என்றும்
நீண்டு வளைந்த பிடரிமயிரினை உடையதால் உளைமா(ன்) என்றும்
இதன் பிடரிமயிரானது அடிக்கடி கொய்து திருத்தப்படுவதால் கொய்யுளை என்றும்

காரணப்பெயர்களாக அமைந்தன என்று கூறலாம்.

குதிரை:

பாலூட்டி வகையைச் சேர்ந்ததான குதிரையின் விலங்கியல் பெயர் ஈகுஸ் ஃபெரஸ் கபால்லஸ் (Equus Ferus Caballus) ஆகும். கி.மு. 4000 க்கும் முன்பிருந்தே குதிரைகளை மனிதர்கள் பழக்கி ஆண்டுவந்தனர் என்று விக்கிபீடியா கூறுகிறது. சங்க இலக்கியங்கள் குதிரையைப் பற்றிக் கூறியிருக்கும் செய்திகளைக் கீழ்க்காணும் பல்வேறு தலைப்புக்களின் கீழ் விரிவாகக் காணலாம்.

1. குதிரையின் நிறம்
2. குதிரையின் பிடரிமயிர்
3. குதிரையின் தலைஅணி
4. குதிரையின் கால்குளம்பு
5. குதிரையின் உணவு
6. குதிரையின் ஓட்டம்
7. குதிரையின் பயன்பாடுகள்
8. குதிரையும் உவமைகளும்

1. குதிரையின் நிறம்:

குதிரைகளில் பல வண்ணங்கள் உண்டு. வெண்மை, கருமை, செம்மை என்று பல வண்ணங்கள் இருந்தாலும் வெண்ணிறக் குதிரைகளே அழகாகத் தோன்றுவதுடன் இலக்கியங்களிலும் அதிகம் பேசப்பட்டுள்ளன. சான்றாகச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி - பொரு.165
பால் கேழ் வால் உளை புரவியொடு - பெரும். 320

பால்போல வெண்ணிறம் கொண்ட குதிரைகள் நான்கினை ஒன்றாக ஒரு வண்டியில் பூட்டிய செய்தியினை மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

2. குதிரையின் பிடரிமயிர்:

குதிரையின் தலைஉச்சியில் இருந்து தொடங்கி அதன் கழுத்துப்பகுதி முடியும் வரையிலும் மயிர் நீண்டு வளர்ந்து தொங்கிக் கொண்டிருக்கும். இதனை ஓரி, உளை, சுவல் மற்றும் கவரி ஆகிய பெயர்களால் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். குதிரையின் உடல் நிறம் கருமை அல்லது செம்மையாக இருந்தாலும் அதன் உளை மயிர் வெண்ணிறத்திலும் இருக்கும். இதனை வால் உளை என்ற சொல்லாடல் மூலம் இலக்கியங்கள் குறிப்பிடும். இதைப்பற்றிய சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வால் உளை பொலிந்த புரவி - நற்.135
கறங்கு மணி வால் உளை புரவியொடு - சிறு.92
ஆய் மயிர் கவரி பாய்மா மேல்கொண்டு - பதி.90
ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு.165

ஆண்கள் தமது தலைமயிர் நீளமாக வளர்ந்துவிட்டால் முடிவெட்டிக் கொள்வர். அதைப்போல, ஆண் குதிரைகளின் உளைமயிர் நீண்டு வளர்ந்துவிட்டால் அதனையும் வெட்டித் திருத்தி விடுவர். அப்போதுதான் அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதனைக் கொய் சுவல், கொய் உளை, கொய்ம் மயிர் மற்றும் குரங்கு உளை ஆகிய பல்வேறு பெயர்களால்  இலக்கியங்கள் குறிப்பிடும். சான்றாகச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பொலம் படை பொலிந்த கொய் சுவல் புரவி - மலை. 574
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம்மணி ஆர்ப்ப - நற்.81
கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும் - பரி.17

சங்ககால மன்னர்களும் சிற்றரசர்களும் விரும்பி அமர்ந்து பயணித்த ஆண் குதிரைக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்திருந்த அதன் பிடரிமயிரினைப் பல்வேறு பொருட்களுடன் ஒப்பிட்டுச் சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ளனர். அதைப்பற்றி இங்கே சில சான்றுகளுடன் காணலாம்.

குதிரையின் பிடரிமயிரானது செங்கால்களையும் வெண்ணிற மயிரையும் உடைய அன்னப்பறவையின் தூவியைப் போல வெண்ணிறத்தில் இருந்ததைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் பறைசாற்றுகின்றன.

செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன குரூஉ மயிர்ப்புரவி - மது.387

கரும்பு வகைகளில் வேழக்கரும்பு என்ற வகையும் உண்டு. மயிரிழை போன்ற இதன் வெண்ணிறப் பூக்கள் தண்டுகளின் மேல்பகுதியில் மலர்ந்திருக்கும்போது அவற்றைப் பார்ப்பதற்குக் குதிரையின் வெண்ணிறப் பிடரிமயிரினைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

பரி உடை நன் மான் பொங்கு உளை அன்ன
அடைகரை வேழம் வெண்பூப் பகரும் - ஐங்கு.13

3. குதிரையின் தலைஅணி:

சேவல் கோழியின் தலையுச்சியில் செந்நிறத்தில் பூப்போன்ற ஒரு கொண்டை இருக்கும். ஆண் மயிலுக்கும் தலையுச்சியில் ஒரு கொண்டை இருக்கும். இதனைச் சூட்டு என்ற பெயரால் இலக்கியங்கள் கூறும். சூட்டு என்னும் இவ் உறுப்பானது இப்பறவைகளுக்கு அழகினைச் சேர்க்கும். வளர்ப்பு விலங்கினங்களில் பறவைகளைப் போலவே விரைந்து ஓடவல்லது குதிரை மட்டும் தான். எனவே தான் குதிரைக்கும் அழகுசேர்ப்பதற்காக அதன் தலைஉச்சியில் கொண்டை போன்ற ஒரு செயற்கை அணியினை அணிவிப்பர். இந்தச் செயற்கை அணிக்கும் உளை என்றே பெயரிட்டனர். காரணம், குதிரையினுடைய நீண்டு வளர்ந்து தொங்கிய பிடரிமயிராகிய உளையினைக் கொய்து அதனைக் கொண்டே இந்த அணியினைச் செய்தனர். இக்காலத்துக் குதிரைகளின் தலைஉச்சியில் கூட இதைப்போன்ற ஒரு அலங்காரக் கொண்டை இருப்பதைக் காணலாம்.  குதிரை ஓடும்போது இந்தச் சூட்டு உளையானது அசைந்து அசைந்து ஆடி கண்ணையும் கருத்தையும் கவரும். இதைப்பற்றிக் கூறும் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு.165
கொடி படு சுவல இடுமயிர்ப் புரவியும் - மது.391

இடுமயிர் என்றும் அழைக்கப்பட்ட இது ஒரு செயற்கை அணி என்பதால் இதில் பல வண்ணச் சாயங்களை ஊட்டியும் இருப்பர். இவற்றுள் செந்நிறம் கொண்ட சூட்டுளை குறிப்பிடத்தக்கது. இந்தச் சூட்டு உளையானது வயலில் விளைந்த செந்நெல் அல்லது செந்தினையின் கதிர்களைப் போலச் செந்நிறத்தில் வளைந்து காணப்பட்டதாகக் கீழ்க்காணும் சங்கப்பாடல் வரிகள் கூறுவதைப் பார்க்கலாம்.

புரவி சூட்டும் மூட்டுறு கவரி தூக்கி அன்ன
செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்றுக் கதிர் - அகம். 156

விடுமான் உளையின் வெறுப்பத் தோன்றி
இரும் கதிர் நெல்லின் யாணரஃதே - நற்.311

செந்தினைக் குரல் வார்ந்து அன்ன
குவவுத் தலை நந்நான்கு - அகம். 400

குதிரைக்குச் சூட்டிய உளைமயிரானது தீ எரிவதைப் போன்ற செந்நிறத்தில் இருந்ததாகக் கீழ்க்காணும் பாடலும் குறிப்பிடுவதைப் பார்க்கலாம்.

எரி அவிழ்ந்து அன்ன விரி உளை சூட்டி - பதி.92

குதிரையின் தலையுச்சியில் சூட்டியிருந்த வெண்ணிறத்து உளை அணியானது கடலில் இருக்கும் வெண்சங்கினைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல்வரி கூறுகின்றது.

மால்கடல் வளை கண்டு அன்ன வால் உளைப் புரவி - பெரும். 488

குதிரையின் தலையணியாகிய உளையினைப் போலவே உச்சிக்குடுமியினை உடைய தனது மகன் போருக்குச் சென்று திரும்பாததைக் கண்டு மனம் வெம்பிய ஒரு தாயின் அவலநிலையினைக் கீழ்க்காணும் புறப்பாடல் வரிகள் கூறாநிற்கின்றன.

மான் உளை அன்ன குடுமித்
தோல் மிசை கிடந்த புல் அணலோனே - புறம்.310

புல் உளைக் குடுமிப் புதல்வன் தந்த
செல்வன் ஊரும் மா வாராதே - புறம்.273

4. குதிரையின் கால்குளம்பு:

குதிரையின் கால்குளம்பும் கழுதையின் கால்குளம்பும் பார்ப்பதற்கு ஒரேமாதிரித் தோன்றினாலும் அதில் சிறிய வேறுபாடு உண்டு. கழுதையின் கால்குளம்பானது உருளையைப்போல நேராக இருக்கும். ஆனால் குதிரையின் கால்குளம்பானது கவிழ்த்து வைத்ததைப் போல மேலே சுருங்கியும் கீழே அகன்றும் இருக்கும். எனவேதான் குதிரையின் குளம்பினைப் பற்றிக் கூறுமிடத்துக் 'கவிகுளம்பு' என்ற சொல்லால் குறிப்பிட்டனர் சங்கப் புலவர்கள். குதிரையின் கவிழ்ந்த குளம்புகளைப் பற்றிக் கூறுகின்ற சில பாடல்வரிகள் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

பரிசில் பெற்ற விரிஉளை நன்மான் கவிகுளம்பு பொருத - நற்.185
வெள்உளை கலிமான் கவிகுளம்பு உகள      - புறம்.15
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப - நற்.161

அருகில் உள்ள படத்தில் கழுதை மற்றும் குதிரையின் கால்குளம்புகள் ஒப்பிடப்பட்டுள்ளன. இதிலிருந்து, விலங்குகளின் உடலமைப்புக்களில் காணப்படும் சிறிய வேறுபாடுகளையும்கூட சங்ககாலப் புலவர்கள் எவ்வளவு நுட்பமாக அறிந்து வைத்திருந்தனர் என்பதனை அறிந்துகொள்ளலாம். 

5. குதிரையின் உணவு:

குதிரையின் முதன்மை உணவு புல் என்று அனைவரும் அறிவோம். ஆடு, மாடு, கழுதைகளைப் போலக் குதிரைக்குப் புல்லே போதுமான உணவு என்றாலும் தற்காலத்தில் கொள்ளு உணவும் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. 'கொள்ளு என்றால் திறக்கும்; கடிவாளம் என்றால் மூடும். அது என்ன?. என்ற விடுகதையே இதன் அடிப்படையில் ஏற்பட்டதுதான். சங்க இலக்கியங்களில் குதிரையின் உணவினைப் பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளை இங்கே காணலாம்.

குதிரையின் முதன்மை உணவாகப் புல்லே கொடுக்கப்பட்டுள்ளது. புல்லையே தின்றுதின்று வெறுத்த குதிரைகள் மேற்கொண்டு அதை உண்ணாமல் கனைத்து ஆர்ப்பாட்டம் செய்தவாறு இருந்ததைப் பற்றிக் கூறும் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பணைநிலைப் புரவி புல் உணா தெவிட்ட - மது. 660
பல்உளைப் புரவி புல் உணா தெவிட்டும் - நெடு.93

புல்லைத் தவிர, உழுந்தின் தோலை நீருடன் கலந்த உணவினையும், நெய்கலந்து செய்யப்பட்ட கொள்ளுச் சோறாகிய நெய்ம்மிதி என்னும் உணவினையும் குதிரைக்கு உணவாகக் கொடுத்த செய்தியினைக் கீழ்க்காணும் புறப்பாடல் பதிவு செய்துள்ளது.

பருத்தி வேலி சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய் நடை புரவி
கடல் மண்டு தோணியின் படை முகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின்
தண்ணடை மன்னர் தார் உடை புரவி - புறம். 299

கொள்ளுச்சோறுண்டு கொழுத்த குதிரைகள் உழுந்தின் தோலுண்ட குதிரைக்குப் பயந்து ஒதுங்கி நின்றதை மேற்பாடல் வரிகள் கூறுவதிலிருந்து, உழுந்தின் தோலுக்கு இருக்கும் வலிமையை அறிந்துகொள்ளலாம்.


6. குதிரையின் ஓட்டம்:

குதிரையின் ஓட்டத்தினைப் பற்றிக் கூறுமிடத்து, ஆதி என்ற சொல்லால் பல இடங்களில் சங்கப் புலவர்கள் குறித்துள்ளனர். இந்த ஆதி என்பது குதிரைக்கே உரிய சிறப்பான ஓட்டமாகும். அதாவது, எப்படியெல்லாம் சுற்றிக்கொண்டு எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் தன்னுடைய 'ஆதி' இடத்திற்கு அதாவது பயணத்தைத் தொடங்கிய இடத்திற்குத் தானாகவே குதிரை வந்துசேரும். இது எப்படிச் சாத்தியம் என்றால், தான் பயணம் செய்கின்ற பாதையினை குதிரையானது நன்கு நினைவில் கொண்டு ஓட்டுபவன் உணர்த்தாமலேயே புறப்பட்ட இடத்தைத் தானே  வந்தடையும். இவ்வாறு குதிரையானது தான் செல்லவேண்டிய இடத்திற்குத் தானாகவே செல்லவேண்டும் என்றால், அதை ஓட்டுபவன் அதன் கடிவாளத்தை மட்டுமே பிடித்து இயக்கவேண்டும். மாறாக, கவைமுள் கொண்டு அதைக் குத்தினால், அது ஆதிப் பயணம் செய்யாது. அதுமட்டுமின்றி, மலையைச் சுற்றிக்கொண்டோ கடற்கரை வழியாகவோ பயணம் செய்தாலும்கூட குதிரையின் ஆதிப் பயணம் மாறுவதில்லை. சங்ககாலக் குதிரைகளின் ஆதிப் பயணத்தைக் கூறும் பல்வேறு பாடல்களில் இருந்து சிலவற்றை மட்டும் சான்றாகக் கீழே காணலாம். 

வலவன் வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா
நன்னால்கு பூண்ட கடும் பரி நெடும் தேர் - அகம். 104

குதிரையை ஓட்டுபவன் கடிவாளத்தைப் பிடித்து ஓட்டினால் அன்றி முள்கொண்டு குத்தினால் கடற்கரையைச் சுற்றிக்கொண்டு குதிரைகள் ஆதிப் பயணம் செய்யாது என்ற செய்தியை மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. காற்றைப் போலப் பாய்ந்தோடுகின்ற தேரில் பூட்டிய குதிரையானது மலையடிவாரத்தைச் சுற்றியவாறு ஓட்டுபவனின் விருப்பத்தைக் குறிப்பால் அறிந்து ஆதிப் பயணம் மேற்கொண்ட செய்தியைக் கீழ்க்காணும் மதுரைக்காஞ்சிப் பாடல்வரிகள் கூறுவதைக் காணலாம்.

கால் என கடுக்கும் கவின் பெறு தேரும்     
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத்து ஆதி போகிய
கொடி படு சுவல இடுமயிர் புரவியும் - மது. 391

குதிரையானது குதித்துக் குதித்து ஓடுவதைப் பற்றிக் கூறுமிடத்து, பந்தைத் தரையில் அடித்தால் அது எப்படிக் குதித்துக் குதித்து எழும்புமோ அதைப்போல இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல்வரி கூறுகின்றது.

பந்து புடைப்பு அன்ன பாணி பல்அடி சில்பரிக் குதிரை - அகம். 105

ஒரு மேட்டுநிலத்தின்மீது புலிப்பொறியுடைய பூக்கள் நிறைய விழுந்திருக்கின்றன. அப்பூக்களின் மீது கருநிற வண்டுகள் ஊதித் தேன் நுகர்கின்றன. அதை ஒரு வரிப்புலி படுத்திருப்பதாகத் தவறாகக் கருதிய குதிரையானது அச்சத்தால் கனைத்தவாறு துள்ளிக் குதிக்கிறது. அப்போது அதன் துள்ளலானது, தரையில் அடிக்கப்பட்ட ஒரு பந்தினைப் போல இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

புலிப்பொறி கொண்ட பூ நாறு குரூஉ சுவல்        
வரிவண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ
பரி உடை வயங்குதாள் பந்தின் தாவ - நற்.249

குதிரையானது தனது கால்களை மாற்றிமாற்றி முன்வைத்து மெதுவாக ஒரே சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது அதைப் பார்ப்பதற்கு அது தனது கால்களால் நிலத்தினை அளந்து பார்ப்பதைப்போலத் தோன்றியதாகக் கூறுகிறார் புலவர் கீழ்க்காணும் புறநானூற்றுப் பாடலில்.

நிலன் அளப்பு அன்ன நில்லாக் குறுநெறி
வண் பரி புரவி பண்பு பாராட்டி - புறம். 301

7. குதிரையின் பயன்பாடுகள்:

சங்ககாலத் தமிழர்களின் சமுதாயத்தில் குதிரைகளை மாடுகளைப்போல உழவுத்தொழிலுக்கோ கழுதைகளைப்போல பொருட்களைச் சுமந்து செல்வதற்கோ பயன்படுத்தியதாகச் சங்க இலக்கியங்களில் சான்றுகள் இல்லை. மனிதர்கள் பயணம் செய்வதற்கும் போர்த்தொழிலுக்குமே அதிகமாகக் குதிரைகளைப் பயன்படுத்தி உள்ளனர். சங்ககாலத்தில் குதிரைகளின்மீது ஏறி அமர்ந்தும் குதிரைகளைத் தேரில் பூட்டியும் பயணம் செய்துள்ளனர்.
 
வால் உளைக் கடும் பரி புரவி ஊர்ந்த நின் - பதி.42

குதிரைகளைத் தேரில் பூட்டிச் செல்லும்போது நான்கு குதிரைகளை ஒன்றாகப் பூட்டிச் செல்வது அக்காலத்து மரபு போலும். தன்னை நாடி வந்த இரவலர்க்குப் பரிசில் வழங்கியபோதுகூட நான்கு குதிரைகள் பூட்டிய தேரினை வழங்கியதாகச் செய்திகள் காணப்படுகின்றன. சில சான்றுகளைக் கீழே காணலாம்.

பால்புரை புரவி நால்கு உடன் பூட்டி - பொரு.165
நன்னால்கு பூண்ட கடும் பரி நெடும் தேர் - அகம்.104
புரவி துணைபுணர் தொழில நால்குடன் பூட்டி அரிதேர் நல்கியும் - பெரும். 488
நந்நான்கு வீங்கு சுவல் மொசிய தாங்கு நுகம் தழீஇ - அகம். 400

இக்காலத்தில் கார் முதலான வாகனங்களுக்கு ஓட்டுநரை அமர்த்திக்கொள்வதைப்போல சங்ககாலத்தில் பொருள்வளம் மிக்க மன்னர்களும் நிலக்கிழார்களும் தங்கள் தேரினை இயக்குவதற்கென்றே ஓட்டுநர்களை அமர்த்தியிருந்தனர். இவர்களைப் பாகன், வலவன், வாதுவன் ஆகிய பெயர்களால் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. பயணத்திற்கு மட்டுமின்றிப் போரின்போது கையில் வேலேந்திப் போரிடும் எதிரி வீரர்களைக் குதிரையின்மீது அமர்ந்தவாறு கொல்லவும் குதிரைப்படை பயன்படுத்தப்பட்டது. குதிரைகளைப் போரில் பயன்படுத்தியமைக்கு ஏராளமான சான்றுகள் உள்ளநிலையில், சிலபாடல்களை மட்டும் கீழே காணலாம்.

எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவியொடு - பதி. 62
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி - பதி. 64

மழை பெய்வதைப்போல அம்புகள் பொழிய, அம்புகள் தைத்ததால் குதிரைகள் தடுமாறிக் கீழே இறந்துவிழ, போர்க்களமே புழுதிமண்டலமாகக் காணப்பட, சங்குகளையும் ஊதுகொம்புகளையும் ஊதி வெற்றியை முழக்கிய செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் பறைசாற்றுகின்றன. 

பெயல் உறழக் கணை சிதறி பலபுரவி நீறு உகைப்ப
வளை நரல வயிர் ஆர்ப்ப பீடு அழியக் கடந்தட்டு - மது.184

8. குதிரையும் உவமைகளும்:

வளர்ப்பு விலங்கினங்களில் அதிக வேகத்தில் ஓடக்கூடிய ஆற்றல் குதிரைக்கு மட்டுமே உண்டு என்று முன்னர் கண்டோம். வேகமாகப் பாய்ந்து ஓடும் குதிரைக்கு உவமையாகக் காற்று, மேகம், அம்பு, அன்னப்பறவை, கலைமான், கப்பல் முதலான பலவற்றையும் ஒப்பிட்டுச் சங்க இலக்கியங்களில் பாடியுள்ளனர். ஒவ்வொரு உவமைக்கும் ஒருசில பாடல்வரிகள் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வளி நடந்து அன்ன வா செலல் இவுளியொடு - புறம். 197
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ - மது. 440

கடுமையாக வீசும் காற்றினைப்போலக் குதிரை பாய்ந்து சென்றதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

விசும்பு கடப்பு அன்ன பொலம்படைக் கலிமா - நற்.361

மேகங்கள் வானில் விரைந்து செல்வதைப் போலக் குதிரைகள் பாய்ந்து சென்றதை மேற்பாடல் வரி கூறும். அதுமட்டுமின்றி, வில்லில் இருந்து விடுபட்ட அம்புடனும் குதிரையின் இயக்கத்தினை ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

கணை கழிந்து அன்ன நோன் கால் வண் பரி - அகம். 400

காற்று, மேகம் மற்றும் அம்புடன் மட்டுமின்றி, குதிரையின் வேகமான ஓட்டத்தினை வேகமாகப் பறக்கவல்ல பறவைகள் மற்றும் வேகமாக ஓடவல்லப் பிற விலங்குகளுடன் ஒப்பிட்டும் புலவர்கள் பல பாடல்களில் பாடியுள்ளனர். அவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே சான்றாகக் காணலாம்.

அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவா திரிதரும்
செம் கால் அன்னத்து சேவல் அன்ன
குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும்      - மது.387

அகன்ற வானத்தில் இருந்த மேகங்களுக்குள் புகுந்து வெளிப்பட்டுக் காற்றைக் கிழித்துக்கொண்டு கதிரவனையே தொட்டுவிடுவதைப் போலப் பறந்துசெல்கின்ற சிவந்த கால்களையும் வெண்ணிற உடலையும் கொண்ட ஒரு அன்னப்பறவையினைப் போலத் தோன்றுகின்ற வெண்ணிறக் குதிரை பூட்டப்பட்ட காற்றைப் போல விரைந்தோடுகின்ற தேர் என்று கூறும் மேற்பாடல் வரிகளில் இருந்து குதிரையின் வேகத்தினை அறிந்துகொள்ளலாம். இப்பாடலில் குதிரையின் ஓட்டத்தினை அன்னப்பறவையின் பறத்தலுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளார் புலவர். இதேபோன்ற ஒரு ஒப்பீடானது கீழ்க்காணும் பாடலிலும் கூறப்பட்டுள்ளதைப் பாருங்கள்.

வானின் வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப
நால் உடன் பூண்ட கால் நவில் புரவி  - அகம். 334

ஒரே தேரில் பூட்டப்பட்டிருந்த நான்கு வெண்குதிரைகளின் ஓட்டமானது அன்னப்பறவைகளின் கூட்டமொன்று வானத்தில் வரிசையாகப் பறந்துசெல்வதைப் போலத் தோன்றியதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

பலவில் சேர்ந்த பழம் ஆர் இன கலை
சிலை வில் கானவன் செம் தொடை வெரீஇ
செரு உறு குதிரையின் பொங்கி சாரல்
இரு வெதிர் நீடு அமை தயங்க பாயும் - குறு. 385

பலாமரத்தில் இருந்த பலாப்பழங்களை உண்டுகொண்டிருந்த கலைமானானது வேட்டுவன் எய்த அம்பில் இருந்து தப்பிக்க ஒரு போர்க்குதிரையைப் போல மூங்கில் மரங்களுக்கு இடையில் பாய்ந்து ஓடிய செய்தியை மேற்பாடல் வரிகள் விளக்குகின்றன. இப்பாடலில் மானின் ஓட்டத்தினைக் குதிரையின் ஓட்டத்துடன் ஒப்பிடுகிறார் புலவர்.

மேலேகண்டபடி, பறவைகள் மற்றும் விலங்குகளுடன் மட்டுமின்றிச் செயற்கையாக இயக்கப்படும் ஊர்திகளுடனும் குதிரையின் இயக்கத்தினை ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர். சங்ககாலத்தில் வானவூர்திகள் மட்டும் இருந்திருந்தால் கண்டிப்பாகக் குதிரைகளின் வேகத்தினை அதனுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியிருப்பர். ஆனால் சங்ககாலத் தமிழகத்தில் வானவூர்திகள் இல்லை என்பதால் கப்பலின் இயக்கத்துடன் ஒப்பிட்டுக் குதிரையின் இயக்கத்தைப் பாடியுள்ளனர். எதிரிமன்னனின் படைவீரர்களும் குதிரைகளும் அஞ்சி வழிவிட்டுநிற்க, யாருமே நெருங்க முடியாத கடுகிய ஓட்டத்தினை உடைய அந்தப் போர்க்குதிரையினைக் கடலின் நீரைக் கிழித்துக்கொண்டு வேகமாகச் செல்லும் கப்பலுக்கு உவமையாக்கிக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

ஓய் நடை புரவி கடல் மண்டு தோணியின் படை முகம் போழ - புறம். 299

மேற்காணும் பாடலைப் போலவே கீழ்க்காணும் பாடலிலும் குதிரையைக் கப்பலுக்கு உவமையாக்கிக் கூறியுள்ளார் புலவர்.

கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி
வளி வழக்கு அறுத்த வங்கம் போல
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே - புறம். 368

போர்க்களத்திலே இறந்துபட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கும் குதிரைகளைக் கடலில் புயல்காற்றில் சிக்குண்டு சிதைந்து வழக்கொழிந்து மிதக்கும் கப்பல்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது மேற்பாடல் வரிகள்.  

குதிரையின் தாயகம் இந்தியாவா?:

குதிரைகளைப் பற்றிப் பலநூறு பாடல்களில் சங்ககாலப் புலவர்கள் விரிவாகக் கூறியிருப்பதைப் பற்றி மேலே கண்டோம். இந்தக் குதிரைகளின் பூர்வீகம் அதாவது தாயகம் இந்தியாவா இல்லையா என்பதைப் பற்றிச் சில ஐயங்கள் நிலவுகின்றன. இந்த ஐயங்களுக்கான விடையினை இங்கே காணலாம்.

சங்ககால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளின் அடிப்படையில், குதிரைகளின் தாயகம் இந்தியாவா இல்லையா என்று உறுதியாகக் கூற இயலாது. ஆனால், தமிழகம் அல்ல என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம். இந்த உறுதியான முடிவுக்குக் காரணங்களாகக் கீழ்க்காணும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

1. சங்ககாலத் தமிழகத்தின் காடுகளில் வாழ்ந்த சிங்கம், புலி, கரடி, மான், யானை, நாய், பன்றி முதலான பல்வேறு விலங்குகளைப் பற்றியும் சங்க இலக்கியத்தில் புலவர்கள் பதிவுசெய்துள்ளனர். இந்நிலையில், குதிரைகளும் அந்தக் காடுகளில் வாழ்ந்திருந்தால் கட்டாயம் அவற்றைப் பதிவுசெய்திருப்பர். ஆனால் சங்க இலக்கியத்தில் எங்குமே காட்டுக்குதிரைகளைப் பற்றிய பதிவுகள் இல்லை. சங்ககாலத் தமிழகக் காடுகளில் வாழ்ந்த காட்டுயானைகளைப் பிடித்துவந்து பழக்கிப் பயன்கொண்ட செய்திகளை சங்க இலக்கியம் கூறும்போது காட்டுக்குதிரைகளை அவ்வாறு பிடித்துவந்த செய்திகள் எவையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சங்க இலக்கியம் கூறும் செய்திகள் அனைத்தும் நாட்டு / வளர்ப்புக் குதிரைகளைப் பற்றியதாகவே இருப்பதால், குதிரைகளின் தாயகம் தமிழகம் அல்ல என்று எண்ணத் தோன்றுகிறது.

2. மதுரை மன்னன் போரில் வெற்றிபெற்ற பின்னர் பகைவரின் நாட்டிலிருந்து அவர்களது செல்வங்களையும் குதிரைகளையும் கப்பலில் கொண்டுவந்த செய்தியை மதுரைக்காஞ்சியின் கீழ்க்காணும் வரிகள் கூறுகின்றன.

விழுமிய நாவாய்ப் பெருநீர் ஓச்சுநர்
நனம்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல்தோறும் வழிவழி சிறப்ப - மது. 323

மதுரைக்காஞ்சி கூறுவதைப் போலவே, குதிரைகள் கடல்வழியாகத் தமிழகம் வந்ததைக் கீழ்க்காணும் பட்டினப்பாலை வரிகளும் உறுதிசெய்கின்றன.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் - பட். 185

இப்பாடலில் வரும் நிமிர்பரிப் புரவி என்பது உயரமான குதிரைவகையினைக் குறிப்பதாகும்.

மேற்காணும் இரண்டு கருத்துக்களையும் இணைத்துப்பார்த்தால், குதிரைகள் கடல்வழியாகத் தான் தமிழகம் வந்தன என்பதையும் குதிரைகளின் தாயகம் தமிழகம் அல்ல என்பதையும் உறுதியாகப் புரிந்துகொள்ளலாம்.

முடிவுரை:

குதிரைகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறிய பல்வேறு செய்திகளை மேலே கண்டோம். இவைமட்டுமின்றி, காதலிக்கும் பெண்ணைக் குதிரையுடன் ஒப்பிட்டுக் கூறும் விரிவான செய்தியைக் கலித்தொகையில் காணமுடிகிறது. காதலித்த பெண் கைகூடாத நிலையில் அவளது காதலன், பனைமரத்தின் கருக்கினைக்கொண்டு செய்யப்பட்ட மடல்குதிரையின்மேல் அமர்ந்தவாறு அப்பெண் வாழும் தெருவில் ஊர்வலம் வந்த செய்திகளும் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. குதிரையைப் போலவே தோன்றுவதும் குதிரைக்கும் கழுதைக்கும் கலப்பினமாகப் பிறந்ததுவுமான அத்திரி அல்லது கோவேறு கழுதையைப் பற்றிக் கழுதை என்னும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையில் படிக்கலாம்.