சனி, 25 ஏப்ரல், 2009

' இருள்சேர் இருவினை '


பாடல்:

' இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.'
- குறள் எண்: 5

தற்போதைய விளக்கம்:

கலைஞர் உரை: இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
மு.வ உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
சாலமன் பாப்பையா உரை: கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

தவறு:

இப்பாடலில் ஒரு எழுத்துப் பிழையும் ஒரு பொருட்பிழையும் உள்ளது. முதலில் பொருட்பிழையினைக் காணலாம். ' இருள்சேர் இருவினை' என்ற தொடருக்கு 'அறியாமையினால் விளையும் நல்வினை, தீவினை' என்று பொருள் கூறி இருப்பது முரண்பாடான கருத்தாகும். இதற்குக் காரணம் 'இருள்' என்னும் சொல்லாகும். இச் சொல்லுக்கு எவ்விதமான பொருளும் கலைஞர் உரையில் கூறப்படவில்லை. ஏனை இரண்டு உரைகளிலும் 'அறியாமை' என்னும் பொருள் கூறப்பட்டுள்ளது. இப் பொருள் இவ்விடத்தில் பொருந்தாத ஒன்றாகும். ஏனென்றால் நல்வினையோ தீவினையோ யாரும் மயக்கநிலையில் அதாவது அறிவு மயங்கிய நிலையில் இருந்துகொண்டு செய்வதில்லை. செய்யும் செயல் நல்லது என்றும் கெட்டது என்றும் தெளிவாகத் தெரிந்துகொண்டு தான் அச் செயலைச் செய்கிறோம். அன்றியும் நமக்குத் தீமையாகத் தோன்றும் ஒரு செயல் மற்றவருக்கு நன்மையாகத் தோன்றுகிறது. நமக்கு நன்மையாகத் தோன்றும் ஒரு செயல் மற்றவருக்குத் தீமையாகத் தோன்றுகிறது. நன்மை தீமை குறித்த கருத்து வேறுபாடுகள் மனிதருக்குள் எல்லாக் காலத்திலும் உண்டு. அதனால் தானே நாட்டில் குற்றங்கள் நிகழ்கின்றன. கொலை செய்யும் ஒருவன் அதைக் குற்றம் என்று தெரிந்து கொண்டுதானே செய்கிறான்?. இல்லை அவன் அறியாமல் செய்கிறானா?. கொலை செய்வது குற்றம் என்று நன்றாகத் தெரிந்துகொண்டே தனது குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள அதை அவன் செய்கிறான். நல்லது செய்யும் ஒருவன் அது நன்மை தரும் என்று நன்றாக அறிந்துகொண்டே அதைச் செய்கிறான். இது தான் உண்மை. எனவே நன்மையும் தீமையும் அறியாமையினால் வருகிறது என்னும் பொருள் பொருத்தமற்றது என்று தெளியலாம்.

அடுத்து எழுத்துப் பிழையினைக் காணலாம். இரண்டாம் அடியில் வரும் 'புகழ்' என்னும் சொல்லுக்கு 'கீர்த்தி, பெருமை' என்று பொருள் கொள்ளப்பட்டு உள்ளது. இப்பொருளை அடிப்படையாக வைத்தே இப்பாடலின் முழு விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது. இறைவனின் உண்மைப் புகழை விரும்புவோரிடத்து நல்வினையும் தீவினையும் சேராது என்று கூறுவது ஏற்புடைய கருத்தாகுமா என்பதைப் பார்ப்போம். கடவுள் இல்லை என்போரைக் காட்டிலும் இருக்கிறார் என்று நம்புவோரே இவ்வுலகில் அதிகம் என்பது நாம் அறிந்த உண்மை. கடவுளின் இருப்பினை ஏற்றுக்கொண்ட அனைவருமே கடவுளைப் போற்றி வணங்குபவர்களே அதாவது கடவுளின் புகழை விரும்புபவர்களே என்பதும் உண்மை. குறளுக்குக் கூறப்பட்டு உள்ள கருத்தின்படி இவர்களின் வாழ்க்கையில் நன்மையும் தீமையும் நடக்கக்கூடாது. அப்படியே நடந்தாலும் அவை இவர்களைப் பாதிக்கக் கூடாது. ஆனால் உண்மை நிலை என்ன?. இறைவனுக்கு அணுக்கமாக இருந்து எப்போதும் போற்றி வழிபடும் பூசாரிகள் உட்பட அனைவரின் வாழ்விலும் நன்மையும் தீமையும் நிகழ்ந்து பாதிக்கத்தானே செய்கிறது. இப்படி நடைமுறைக்கு ஒவ்வாத கருத்தினை வள்ளுவர் ஒருநாளும் கூறமாட்டார் என்பதால் இப் பொருளில் பிழை உள்ளது என்று அறியலாம். குறிப்பாக புகழ் என்னும் சொல்லில் தான் பிழை உள்ளது. இதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருத்தம்:

இருள் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு. இங்கு அது அறியாமையினைக் குறிக்காமல் உருவகமாக விதியினைக் (ஊழ்) குறிக்கும் என்பதே திருத்தம் ஆகும். புகழ் என்னும் சொல்லுக்குப் பதிலாக 'புகல்' என்று வருவதே திருத்தம் ஆகும். புகல் என்னும் சொல்லுக்கு 'அடைக்கலம், சரண், தஞ்சம்' என்று பொருள். 'புகல்புரிந்தோர்' என்றால் 'சரணடைந்தோர்' என்று பொருள்.

நிறுவுதல்:

இறைவனின் திருவடிப் பெருமையினைக் கூறும் பல குறள்களுள் இதுவும் ஒன்று. விதிவசத்தால் மாந்தர் வாழ்வில் நன்மையும் தீமையும் நடப்பது இயல்பே ஆகும். புறநானூற்றில் வரும் 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்னும் பாடல் (எண்: 192) இக் கருத்தினையே ஆதரிக்கிறது. வள்ளுவரும் இந்த விதியினைப் பற்றி 'ஊழ்' என்னும் அதிகாரத்தில் விரிவாகக் கூறியுள்ளார். உயர்ந்த நிலையில் உள்ளோரைக் கீழ்நிலைக்கும் கீழ்நிலையில் உள்ளோரை உயர்ந்த நிலைக்கும் கொண்டு செல்லும் வல்லமை படைத்த இந்த விதியானது பிறரால் அறிய முடியாதது ஆகும். நன்மையும் தீமையும் நமக்கு அருகில் தான் மறைந்து உள்ளது விதியின் வடிவத்தில். அண்டவெளி எங்கும் இருளே நிறைந்திருப்பது போல விதியானது எல்லா இடங்களிலும் மறைந்தே இருப்பதால் விதியினை இருள் என்று உருவகப் படுத்திக் கூறுகிறார்.

எவ்வளவு நன்மைகள் செய்தாலும் தீமைகள் செய்தாலும் விதியினின்று தப்பிக்க முடியாது. என்றால் இந்த விதியினை வெல்லும் வழி தான் என்ன?. இறைவனைத் தஞ்சமாகப் புகுதல் ஒன்றே இதற்கான வழி. இதைத்தான் இந்தக் குறள் நமக்கு உணர்த்துகிறது.

விதியினை இருளாக உருவகப் படுத்திக் கூறிய வள்ளுவர் அதனை வெல்லும் வலிமை கொண்ட இறைவனின் திருவடிகளைப் பொருளாக உருவகப் படுத்திக் கூறுகிறார். இனி வள்ளுவர் கூற வரும் பொருள் இது தான்: 'இறைவன் தரும் பொருளாகிய திருவடிகளைச் சேர்ந்து சரணடைந்தவர்களிடத்து இருள் ஆகிய விதி தருகின்ற நன்மையும் தீமையும் சேர்வதில்லை.'

சரியான பாடல்:

' இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகல்புரிந்தார் மாட்டு.'
................................வாழ்க தமிழ்!.....................................

ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

' மலர்மிசை ஏகினான் '


பாடல்:

'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வர்' - குறள் எண்: 3

பொருள்:

கலைஞர் உரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
மு.வ உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
சாலமன் பாப்பையா உரை:மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.
(நன்றி: திருக்குறள்.காம்)
தவறு:

இப்பாடலில் எழுத்துப் பிழையோ சொற்பிழையோ இல்லை. பொருளில் தான் பிழை உள்ளது. 'மலர்' என்னும் பெயர்ச்சொல்லுக்கு 'விரிந்த பூ' என்று தான் அகராதிகள் பொருள் கூறுகின்றன. 'நெஞ்சம், மனம், அகம்' என்று எந்த அகராதியும் கூறவில்லை. ஒரு சொல்லுக்கு அகராதியில் இருக்கும் பொருட்களை விடுத்து இல்லாத பொருட்களைக் கூறுவதானால் அகராதிகள் ஏன் உருவாக்கப் படவேண்டும்?. இவ்வாறு 'இல்லாத பொருட்களைக் கூறியதாலும் இருக்கும் பொருட்களை விடுத்ததனாலும்' இந்த உரைகள் யாவும் தவறாகவே கொள்ளப்பட வேண்டும்.

' இல்லை இல்லை; இந்த உரைகள் எவையும் தவறில்லை; இங்கே வள்ளுவர் மலரை நெஞ்சத்துடன் உருவகப் படுத்தி/ உவமைப் படுத்தி இருக்கிறார்' என்று கூறலாம். அவ்வாறு கொண்டாலும் பொருள் பொருந்தாது. ஏனென்றால் 'ஏகுதல்' என்ற சொல்லுக்கு ' போதல், கடத்தல், கழலுதல், செல்லுதல்' என்று தான் அகராதிகள் பொருள் கூறுகின்றன. 'நிறைதல், வீற்றிருத்தல், இருத்தல்' ஆகிய பொருட்களை எந்த அகராதியும் கூறவில்லை. எனவே 'மலர்மிசை ஏகினான்' என்ற தொடருக்கு ' நெஞ்சமாகிய மலரில் வீற்றிருப்பவன்/இருப்பவன்/நிறைந்தவன்' என்று பொருள் கொள்வது எவ்வகையிலும் பொருந்தாது என்பதைத் தெள்ளிதின் உணரலாம்.

திருத்தம்:

'மலர்மிசை ஏகினான்' என்ற தொடருக்கு 'பரந்த மேலிடமாகிய அண்டவெளியினைக் கடந்துநிற்பவன்' என்பதே பொருள் ஆகும். 'மலர்தல்' என்ற வினைச்சொல்லுக்கு 'விரிதல்,பரவுதல்' என்று பொருள். 'மிசை' என்னும் சொல்லுக்கு 'மேலிடம்' என்றும் பொருள் ஆகும். வினைத்தொகை ஆகிய 'மலர்மிசை' என்பது 'மலர்ந்த மிசை' என்று விரியும். இதற்கு 'பரந்த மேலிடம்' என்று பொருள். இது அண்டவெளியினைக் குறிக்கும். 'மலர்தலை' என்பது பரந்த இடத்தையும், 'மலர்தலை உலகம்' என்பது பரந்த பூவுலகினையும் குறிப்பதைப் போல 'மலர்மிசை' என்பது அண்டவெளியினைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தமாகும். 'ஏகுதல்' என்னும் சொல்லுக்கு இங்கே 'கடத்தல்' என்னும் பொருளே பொருத்தமாகும்.

நிறுவுதல்:

இறைவனின் இருப்புநிலையினை உணர்த்த வந்த குறள் இது. அடிமுடி அறிய ஒண்ணாத அமலன் என்று இறைவனைப் பற்றி ஆகமங்களும் புராணங்களும் பக்தி இலக்கியங்களும் கூறுகின்றன. இறைவன் எங்கே இருக்கிறான்? அவனது முடியும்(தலை) அடியும் எங்கே உள்ளன? என்றெல்லாம் பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு பல கதைகளும் கூறப்பட்டுள்ளன. உண்மை நிலை தான் என்ன? இக் கேள்வியின் ஒரு பாதிக்கு விடையிறுப்பதாக இக்குறள் இருக்கிறது.

பூமிப்பந்தின் மேல் வாழும் நமக்கு மேலே பரந்து விரிந்து இருப்பது எது? அண்டவெளி தானே. இந்த அண்டவெளியினையும் கடந்து நிற்பவன் இறைவன் என்று வள்ளுவர் அவனது இருப்புநிலையினைக் கூறுகிறார். வள்ளுவர் கூறும் இறைவன் பற்றிய வேறு பல செய்திகளை மற்றொரு கட்டுரையில் காணலாம்.

சரியான பொருள்:

'பரந்த மேலிடமாகிய வெளியினைக் கடந்துநிற்கும் இறைவனின் மாட்சிமை பெற்ற திருவடிகளை அடைந்தவர்கள் பூவுலகில் நெடுங்காலம் நிலைத்து வாழ்வர்.'

------------------------------------வாழ்க தமிழ்!---------------------------------------------

வியாழன், 16 ஏப்ரல், 2009

யார் வித்தகர்?


பாடல்:


நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
- குறள் எண்: 235

பொருள்:

கலைஞர் உரை: துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.
மு.வ உரை:புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம். (நன்றி: திருக்குறள்.காம்)

தவறு:

நத்தம் என்ற சொல்லுக்கு 'நத்தை, சங்கு, ஆக்கம், ஊர்,வாழை,இரவு, இருள்' என்று தான் அகராதிகள் பொருள் கூறுகின்றன. ஆனால் மேற்காணும் மூன்று உரைகளிலும் இந்தப் பொருட்கள் பயன்படுத்தப் படவில்லை. இப்பாடலில் கூறப்படாத பொருட்களை எல்லாம் (வலிமை,புகழுடம்பு,பூத உடம்பு,வறுமை,அழியாத்தன்மை முதலாயின) வலிந்து சேர்த்துக் கொண்டு அவரவர் விருப்பம்போல ஒரு சப்பைக்கட்டு கட்டி இருக்கிறார்கள். பாடலில் கூறப்பட்டுள்ள பொருட்களை விடுத்து இவர்களே கற்பனையால் வேறுபல பொருட்களைச் சேர்த்துக் கொண்டு உரை கூறி இருப்பதில் இருந்தே இந்த உரைகள் அனைத்தும் தவறு என்பது புலப்படும்.

சரி, இந்தத் தவறுகளுக்குக் காரணம் என்ன?. முதல் அடியில் உள்ள ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். இந்தப் பிழையினால் தான் பலரும் பலவாறாகப் பொருள் கூற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. 'கேடும்' என்ற சொல்லில் தான் அந்தப் பிழை இருக்கிறது.

திருத்தம்:

முதல் அடியில் வரும் 'கேடும்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'கோடும்' என்று வரவேண்டும். கோடு என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு. இங்கே 'கோடு' என்னும் சொல் 'சங்கினை அதாவது நத்தையின் கூட்டினைக்' குறிக்கும்.

நிறுவுதல்:

' பிறந்தவர் யாவரும் ஒருநாள் இறப்பது திண்ணம் என்றாலும் மிகச்சிலரே இறந்த பின்னும் தம் புகழை புவியினில் நிலைநாட்டிச் செல்கின்றனர்' என்னும் உயரிய கருத்தினை உணர்த்த நத்தையின் வாழ்க்கையை இக்குறளில் எடுத்துக் காட்டாகக் கூறுகிறார் வள்ளுவர். நத்தையின் வாழ்க்கை நாம் அறிந்த ஒன்று தான். செல்லும் இடமெல்லாம் தனது கூட்டினைத் (சங்கினை) தானே தாங்கிச் செல்லும் இந்த அற்புதப் பிறவி இறந்த பின்னர் தனது கூட்டினை தனது அடையாளமாக விட்டுச் செல்கிறது. மனிதரிலும் இப்படிச் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் செல்லும் இடமெல்லாம் 'இவரது புகழ்' என்னும் கூட்டினை இவர்கள் அறியாமலே சுமந்து கொண்டு செல்கிறார்கள். இவர்கள் இறந்த பின்னரும் 'இவரது புகழ்' என்னும் கூடாகிய சங்கு இப்பூவுலகில் நிலைபெற்று விடுகிறது.

இவ்வளவு பெருமை வாய்ந்த இறப்பு அதாவது இறந்தபின்னரும் 'நத்தையின் சங்கு போல' எஞ்சி நிற்கும் புகழை புவியினில் விட்டுச் செல்லும் இறப்பு எல்லோருக்குமா வாய்க்கிறது? இல்லையே. மிகச் சிலருக்குத் தானே வாய்க்கிறது. ஓரறிவு உள்ள முல்லைக் கொடியின் துயரத்தைக் கண்டு மனமிரங்கி தனது தேரினைக் கொடுத்த பாரி போன்ற வள்ளல்களைத் தான் வள்ளுவர் 'வித்தகர்' என்று கூறுகிறார்.

வித்து என்ற சொல் நீர் அல்லது ஈரப்பசையைக் குறிக்கும். இதைப் பற்றி ' வித்தும் இடல் வேண்டும் கொல்லோ ' என்ற ஆய்வுக் கட்டுரையில் ஆதாரங்களுடன் காணலாம். இந்த ஈரத்தை நெஞ்சில் உடையவர்களையே வித்தகர் ( வித்து + அகர்) என்று வள்ளுவர் கூறுகிறார்.

இந்த வித்தகர் என்போர் செயற்கரிய செயல் செய்த பெரியோர்; தன்னலம் கருதாத கருணை உள்ளம் கொண்ட ஆன்றோர் ஆவர். இத்தகைய மக்கள் இறந்த பின்னரும் இவர்களது புகழ் என்னும் சங்கு இப்பூமியில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்ற அற்புதமான கண்ணோட்டத்தினால் தான் புகழை சங்கோடு ஒப்புநோக்குகிறார் வள்ளுவர்.

இனி வள்ளுவர் கூறவரும் சரியான கருத்து இது தான்: ' நத்தையின் கூட்டினைப் போல எஞ்சி நிற்கும் புகழைத் தருகின்ற இறப்பும் வித்தகர்களுக்கே அன்றி மற்றவருக்கு இல்லை.'

சரியான பாடல்:

' நத்தம்போல் கோடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.'
-------------------------------வாழ்க தமிழ்!-----------------------------------------

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

' அடி உதவுற மாதிரி '


பழமொழி:

' அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவார்.'

பொருள்:

சிக்கலான நேரங்களில் அடி (உதை) உதவுவது போல உடன்பிறந்த அண்ணன் தம்பிகள் உதவி செய்ய மாட்டார்கள்.

தவறு:

இந்தப் பொருள் தவறானது என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இதை நாம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.  சிக்கலான நேரத்தில் அடிப்பது தான் சிக்கலைத் தீர்ப்பதாகச் சொல்வது சரியான கருத்து ஆகாது. ஏனென்றால் சிக்கலான நேரத்தில் அண்ணன் தம்பி போன்ற உறவுகள் தான் கைகொடுப்பார்களே தவிர 'அடியும் உதையும்' கைகொடுக்காது. பல நேரங்களில் இந்த அடியும் உதையும் சிக்கலை மேலும் பெரிதாக்கி விடும். இதை நாம் நடைமுறை வாழ்க்கையில் நன்கு அறிவோம். எனவே இந்தக் கருத்து தவறாகும் என்பது தெளிவாகிறது.

அன்றியும் ஒரு சிக்கலைத் தீர்க்க அடிதடி இல்லாமல் சமாதானமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று தானே பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள். அப்படி இருக்க இப் பழமொழி ஏன் தவறாக வழிநடத்துகிறது?. சிந்தித்துப் பார்த்ததில் பழமொழியில் ஏற்பட்ட எழுத்துப் பிழைகளே காரணம் என்பது அறியப்பட்டது. இப் பழமொழியில் வரும் 'அடி உதவுற' என்ற சொற்களில் தான் பிழை உள்ளது. இச் சொற்கள் தான் தவறான பொருள் கோளுக்கு வழி வகுத்து விட்டன. இவை இரண்டும் வேறு ஒரு பொருளை உணர்த்தி நிற்கின்றன. 

திருத்தம்:

வழக்கம் போல தூய செந்தமிழ்ச் சொற்கள் இப்பழமொழியில் கொச்சை வழக்காகத் திரிந்து வேறு பொருளைத் தந்து நிற்கின்றன. 'அடி உதவுற' என்பதற்கு 'அடிபுதைஉறை' என்பதே திருத்தம் ஆகும். அடி என்றால் பாதம்; புதைத்தல் என்றால் மூடுதல் அல்லது மறைத்தல்; உறை என்றால் கவசம். மொத்தத்தில் 'அடிபுதைஉறை' என்றால் 'பாதத்தை மூடும் கவசம் அதாவது செருப்பு' என்று பொருள். 

நிறுவுதல்:

நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பின் மூலம் அண்ணன்-தம்பி உறவின் மதிப்பை உணர்த்த வந்த பழமொழி இது. சங்க இலக்கியத்தில் செருப்பினை 'அடிபுதைஅரணம்' என்று குறிப்பிட்டுள்ளனர். அரணம் என்றாலும் உறை என்றாலும் கவசத்தையே குறிக்கும். விலங்குகளின் தோலினால் ஆன செருப்பினை சங்க கால வேட்டுவர்கள் அணிந்தனர். இதற்கு 'தொடுதோல்' என்றும் பெயர். சரி, செருப்பிற்கும் அண்ணன்-தம்பிக்கும் என்ன தொடர்பு? ஏன் இவற்றை ஒப்பிடவேண்டும்?. அதைப் பற்றிக் கீழே காணலாம்.

வெளியில் சுற்றித் திரியும் நேரமெல்லாம் நம்மோடு இருந்து நமது பாதங்களைப் பாதுகாக்கிறது செருப்பு. ஆனால் அதை நாம் எப்போதும் வீட்டுக்கு வெளியில் தானே விடுகிறோம். தேவைப்பட்டால் அணிந்துகொள்வதும் தேவை இல்லாவிடில் கழற்றி விடுவதும் செருப்புக்குத் தான் ஒக்கும். நம்முடன் பிறந்த அண்ணன்-தம்பியரின் உறவினை இப்படிச் செருப்பு போலப் பயன்படுத்த முடியாது. தேவைப்பட்டால் அண்ணன் என்றும் தம்பி என்றும் உறவு கொண்டாடி விட்டு தேவை தீர்ந்தவுடன் உறவினை அறுத்துக் கொள்வது இந்த உறவின் முறையில் சாத்தியமில்லை. செருப்பு அறுந்துவிட்டால் புதிய செருப்பு வாங்கிப் போட்டுக் கொள்வது மாதிரி புதிய உடன்பிறப்புக்களை நாம் பெறமுடியாது. செருப்பு அறுந்துவிட்டால் நாம் அதைப் பயன்படுத்தாமல் இருக்கலாம்; தைத்தும் பயன்படுத்தலாம்; தூக்கியும் போட்டு விடலாம். ஆனால் அண்ணன்-தம்பியருக்குள் விரிசல் ஏற்பட்டால் விரிசலை சரிசெய்யலாம்; பழகாமல் இருக்கலாம்; ஆனால் உறவினை ஒரேயடியாக அறுத்துக் கொண்டுவிட முடியாது. என்ன தான் செருப்பு தன்னை அணிபவருக்காகத் தேய்ந்து சருகாய்ப் போனாலும் ஒரு கட்டத்தில் அதைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய செருப்பைப் பயன்படுத்தித் தான் ஆகவேண்டும். செருப்பு மாதிரி தனக்காக அண்ணன்-தம்பியர் தேய்ந்து சருகாய் ஆகாவிட்டாலும் அவர்களைத் தூக்கி எறிய முடியாது. அன்றியும் பல்வேறு உறவின் முறைகளுள் அண்ணன்-தம்பி உறவு மிக முக்கியமானது. உதவி என்று தேவைப்பட்டால் அண்ணன்-தம்பியர் தான் முன்வருவார்களே ஒழிய அக்காள்-தங்கையோ மாமன்-மச்சானோ வருவதில்லை. உதவி செய்யும் உறவுகளுள் அண்ணன்-தம்பி உறவே முதன்மையானது என்பதால் தான் செருப்பையும் அண்ணன்-தம்பி உறவினையும் ஒப்பிடுகிறது இப்பழமொழி. ஒற்றுமையே இல்லாத இரண்டு பொருட்களை ஒப்பிட்டுக் கூறுவதன் மூலம் ஒன்றின் மதிப்பை உயர்த்திக் கூறலாம் என்பதற்கு இப்பழமொழி ஒரு எடுத்துக்காட்டாகும். 

இப்பழமொழி உணர்த்தும் சரியான பொருள் இதுதான்: ' அண்ணன்-தம்பியரின் உதவி செருப்பு போன்றதல்ல.' இனி 'அடிபுதைஉறை' என்ற சொற்கள் எவ்வாறு கொச்சை வழக்கில் திரிபுற்றன என்று பார்ப்போம். 'புதையல்' என்பது கொச்சை வழக்கில் 'புதயல்' என்று ஆவதுபோல 'உறைமோர்' என்பது கொச்சை வழக்கில் 'உறமோரு' என்று ஆவதைப் போல 'அடிபுதைஉறை' என்பது கீழ்க்கண்டவாறு ஆனது.

அடிபுதைஉறை > அடிபுதஉற > அடிபுதவுற > அடிஉதவுற

சரியான பழமொழி:

' அடி புதைஉறை மாதிரி அண்ணன் தம்பி உதவார்.'

..............................வாழ்க தமிழ்!................................

சனி, 11 ஏப்ரல், 2009

' மாயோன் மேய '

பாடல்:
'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென
சொல்லிய முறையான்
சொல்லவும் படுமே.
- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-
அகத்திணை இயல்-பாடல் எண்:5

பொருள்:
' மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும் வருணன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.'

தவறுகள்:
இப்பாடலின் முதல் வரியில் 'காடுறை' என்ற சொல்லில் 'டு' என்ற எழுத்துப்பிழையும், நான்காம் வரியில் 'பெருமணல்' என்ற சொல்லில் 'ண' என்ற எழுத்துப் பிழையும் உள்ளது. இவை எவ்வாறு பிழைகள் ஆகின்றன என்று காணும் முன்னர் இப்பாடலில் உள்ள நயங்களைக் காணலாம்.

தொல்காப்பியர் ஒவ்வொரு உலகத்தின் பெயரையும் நேரிடையாகக் கூறாமல் மறைமுகமாக உணரும் வண்ணம் இப்பாடலை இயற்றி உள்ளார். மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகம் (மைவரை உலகம்) என்று மலையினையும், இனியநீரைக் கொண்ட உலகம் (தீம்புனல் உலகம்) என்று வயலையும் பெரும் ஓசையினைக் கொண்ட உலகம் (பெருமதில் உலகம்) என்று கடலையும் குறிப்பிடுகிறார். இவ்வாறு மற்ற மூன்று உலகங்களின் பெயர்களை மறைமுகமாகக் கூறுபவர் காட்டை மட்டும் நேரடியாகக் கூறுவாரா?. 'காடுறை உலகம்' என்பதில் அந்த உலகத்தின் பெயராகிய காடு என்னும் சொல் வெளிப்படையாக வந்துள்ளது. இவ்வாறு வருவது பிழை ஆகும். அன்றியும் ஒவ்வொரு உலகத்தைக் குறிப்பிடும் போது அந்த உலகத்தில் உள்ள சிறப்புப் பொருளைக் கூறி அதன் மூலம் அந்த உலகத்தின் பெயரை உணர வைப்பது தான் தொல்காப்பியரின் உத்தி என்பதால் காட்டு உலகத்தில் உறையும் ஏதோ ஒன்றைக் குறிப்பிடவே 'கா..றை உலகம்' என்கிறார். மேலும் 'காடுறை' என்ற சொல்லுக்கு 'காடு உறையும்' என்று பிரித்துப் பொருள் கொண்டாலும் அது பிழையாகவேத் தோன்றுகிறது. ஏனென்றால் காடு என்பது ஒரு வகை நிலம். அது எங்கே உறையும்?. எனவே 'காடுறை' என்னும் சொல்லில் பிழை உள்ளதை அறியலாம்.

அடுத்து நான்காம் வரியில் வரும் 'பெருமணல் உலகம்' என்பதற்கு ' பெரும் மணற்பரப்பை உடைய உலகம்' என்பது பொருள் ஆகும். மணற்பரப்பு என்பது கடலுக்கு மட்டுமின்றி ஆற்றுக்கும் பாலைவனத்துக்கும் உரியது. 'பெரும் மணற்பரப்பினை உடைய உலகம்' என்று கூறினால் அது கடலையும் குறிக்கும்; ஆற்றையும் குறிக்கும்; பாலைவனத்தையும் குறிக்கும். இதனால் நெய்தலா மருதமா பாலையா என்ற நில மயக்கம் ஏற்படும் என்பதால் தொல்காப்பியர் இப்படி ஒரு பொதுவான சொல்லைக் (மணல்) கூறி இருக்க முடியாது என்று உறுதியாகச் சொல்ல முடியும். 'தீம்புனல் உலகம்' என்று ஏற்கெனவே மூன்றாம் வரியில் மருதத்தைக் கூறி விட்டாரே பின்னர் என்ன குழப்பம்? என்ற கேள்விக்கு விடை இது தான்: 'தொல்காப்பியர் சிறந்த அறிவாளி. இலக்கண விதிகளை வகுத்து மொழி வழக்கில் தெளிவு ஏற்படச்செய்த பெருந்தகையாளர். அவர் தனது நூலில் பொருள் குழப்பம் ஏற்படும்படியான சொற்களைப் பயன்படுத்தி இருக்க மாட்டார்'. எனவே 'பெருமணல்' என்ற சொல் பிழையானது தான் என்பதை அறியலாம்.

திருத்தங்கள்:
'காடுறை' என்ற சொல்லுக்குப் பதிலாக 'கானுறை' என்று இருக்க வேண்டும். கானுறை = கான்+உறை. கான் என்றால் வாசனை என்று பொருள். 'கானுறை உலகம்' என்றால் 'வாசம் உறையும் உலகம்' அதாவது காடு என்று பொருள். 'பெருமணல்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'பெருமதில்' என்று வந்திருக்க வேண்டும். மதில் என்ற சொல்லுக்கு 'ஓதை அதாவது அலைஓசை' என்று பொருள். (நன்றி: பிங்கல நிகண்டு - பாடல் எண்: 628).'பெருமதில் உலகம்' என்றால் 'பெரும் ஓசையினை உடைய உலகம்' அதாவது கடல் என்று பொருள்.
 
நிறுவுதல்:
இப்பாடலை மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் நிலப்பாகுபாடு மட்டுமே தெரியும். ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே தொல்காப்பியரின் நுண்ணறிவும் அழகியல் நோக்கும் புலப்படும். நிலத்தை அடையாளம் காட்ட அவர் எடுத்துக் கொண்ட பொருள்கள் மிக அருமையானவை; அவற்றைப் பயன்படுத்தி அவர் விளக்கியுள்ள தன்மையோ அதிசயக்கத் தக்கது. நிலங்கள் ஐந்து என்பதைப் போல நம் புலன்களும் ஐந்து. ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு புலனுக்கு இன்பம் தரவல்லது என்னும் கருத்தில் பாலை நீங்கலான ஏனை நான்கு நிலங்களில் உள்ள சிறப்புப் பொருட்கள் மெய் நீங்கலான ஏனை நான்கு புலன்களுக்கு எவ்வாறு இன்பம் தரவல்லது என்று இப்பாடலில் கூருகிறார். அவ்வாறு கூறுவதன் மூலமாகவே அந்தந்த நிலத்தின் பெயரையும் அறியச் செய்கிறார். தொல்காப்பியரின் இந்த உத்தி கீழே விளக்கப்பட்டுள்ளது.

கண்களைக் கட்டிவிட்டு ஒருவரை காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்லுங்கள். எதையும் பார்க்காமலேயே அது ஒரு காடு என்று அவரால் கூறிவிட முடியும். எப்படி?. காடு என்பது பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்கும் பெரிய நந்தவனம்; இந்த மலர்களின் வாசமும், இலைகள், கொடிகள் மற்றும் பழங்களின் வாசமும் இணைந்து காட்டிற்குள் நுழைபவரைத் தன் வாசனையால் வரவேற்கும். இந்த வாசனைக்கு 'கான்' என்றொரு பெயர் உண்டு. கான் உடையதால் காட்டிற்கு 'கானகம் (கான்+அகம்)' என்றொரு பெயரும் உண்டு. காட்டிற்கே உரிய இந்த சிறப்பு இயல்பினை உணர்ந்த தொல்காப்பியர் 'காடு' என்று நேரடியாகக் கூறாமல் 'வாசம் உறையும் உலகம்' என்று பொருள்படும்படி 'கான் உறை உலகம்' என்று முதல் வரியில் கூறுகிறார். ஐம்புலன்களில் மூக்கிற்கு இனிய வாசனையைத் தருவதாக முல்லை நிலத்தை அவர் கூறியிருக்கும் பாங்கு இங்கே உணர்ந்து மகிழத்தக்கது.

கருமையாக இருந்தாலும் வெண்மையாக இருந்தாலும் மேகங்களின் அழகே தனி தான். இதில் வெண்மேகங்கள் கரிய நிற மலைகளின் மேல் வெண்ணிற ஆடை போலப் படிந்திருக்குமே அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டிருக்கிறீர்களா? நீங்கள் கண்டிருக்கிறீர்களோ இல்லையோ தொல்காப்பியர் இக்காட்சியைக் கண்டு தன் மனதைப் பறிகொடுத்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். பாருங்கள், 'மலை' என்று கூறாமல் 'மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகம்' என்று இரண்டாம் வரியில் (மை = மேகம்; வரை = எல்லை) எவ்வளவு நயமாகச் சொல்லுகிறார். அன்றியும் சில நேரங்களில் மலையே தெரியாத அளவுக்கு மேகங்கள் மூடியிருக்கும். ஆனாலும் அங்கே மலை இருப்பதை ஒருவர் தூரத்தில் இருந்துகொண்டே அங்கிருக்கும் மேகக்கூட்டத்தை வைத்து அடையாளம் காணமுடியும். ஐம்புலன்களில் கண்ணுக்கு இனிய காட்சியைத் தருவதாக குறிஞ்சி நிலத்தை அவர் கூறியிருக்கும் பாங்கு இங்கே உணர்ந்து மகிழத்தக்கது.

முல்லையை வாசனையாலும் குறிஞ்சியை மேகக்காட்சியாலும் அறிந்துகொள்வது போல மருதநிலத்தை அங்கே உள்ள நீரின் சுவையால் அறிந்து கொள்ளலாம். இனிய சுவையினை உடைய நீர் மருத நிலத்தின் சிறப்புப் பொருள் ஆகும். ஆறு,குளம்,ஏரி,கிணறு என்று பலவகையான நீர்நிலைகளை உடைய மருதநிலத்தை 'தீம்புனல் உலகம்' என்று ஐம்புலன்களில் நாவிற்கு இனிய நீரினால் அறியவைத்த பாங்கு இங்கே உணர்ந்து மகிழத்தக்கது.

கடற்கரைக்குச் சென்று அமர்ந்துகொண்டு கண்களை மூடியவாறு கடல் அலைகளின் ஓசையைத் தொடர்ந்து கேட்டிருக்கிறீர்களா?. அது ஒரு சுகமான அனுபவமாய் இருக்கும். அந்த ஓசையில் உலகத்தை மறந்து உங்கள் மனம் ஒருமைப்படும். கடல் அலைகளின் இந்த ஓசைக்கு 'ஓதை' என்று பெயர். கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலும் அருகில் கடல் இருப்பதை இந்த ஓதையால் ஒருவர் அறிந்துகொள்ளமுடியும். கடலுக்கே உரிய இந்த சிறப்பு இயல்பினை அறிந்த தொல்காப்பியர் 'கடல்' என்று நேரடியாகக் கூறாமல் 'பெரும் ஓசை உடைய உலகம்' என்று பொருள்படும்படி 'பெருமதில் உலகம்' என்று நான்காம் வரியில் கூறுகிறார். ஐம்புலன்களில் காதிற்கு இனிய ஓசையைத் தருவதாக நெய்தல் நிலத்தை அவர் கூறியிருக்கும் பாங்கு இங்கே உணர்ந்து மகிழத்தக்கது.

தொல்காப்பியர் கையாண்டுள்ள இந்த உத்தி எவ்வளவு நேர்த்தியானது என்பதை அறிந்திருப்பீர்கள். இதில் இருந்து இப்பாடலின் சரியான பொருளையும் அறிந்திருப்பீர்கள். அது இது தான்: ' மாயோன் ஆகிய திருமால் பொருந்திய வாசனை உறையும் உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும் வருணன் பொருந்திய பெரும் ஓசையினை உடைய உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.'

சரியான பாடல்:
' மாயோன் மேய கானுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமதில் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.'

----------------------------------வாழ்க தமிழ்!--------------------------------------

சனி, 4 ஏப்ரல், 2009

' உயிர் பிணித்த காதல் '


பாடல்:

' இடிக்கும் கேளிர் நும்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோம் நன்று மற்றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கரிதே.'
- குறுந்தொகை பாடல் எண்: 58.

பொருள்:

இடித்துரைக்கும் நண்பினரே! (எனது குறையினை) உமது குறையாக (க்கருதி அதனை முடிப்பீர் என்று) எண்ணி இதுகாறும் (எனதுயிரைப் போகாது தடுத்து) நிறுத்தினேன். (இவ் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது அன்றி எனக்கு நீர் செய்யும்) நன்மை வேறு ஒன்றும் இல்லை. சூரியன் வெயில் எறிப்பதால் வெப்புற்ற பாறையின் மேல் வைக்கப்பட்டு இரண்டு கையும் இல்லாதவனும் ஊமையனுமான ஒருவனால் கண்பார்வையால் மட்டும் காக்கப்படும் காய்ந்து உருகி ஓடிய வெண்ணெயைப் போல இக்காம நோய் என் உடலெங்கும் பரவி விட்டது. இனிப் பொறுக்க முடியாது.'
நன்றி: குறுந்தொகை மூலமும் உரையும், இராமரத்தினம், கங்கை புத்தக நிலையம், சென்னை, 2002.

தவறுகள்:

இப்பாடலின் முதல் அடியில் ஒன்றும் இறுதி அடியில் ஒன்றுமாக இரண்டு தவறுகள் உள்ளன.இவற்றைக் காணும் முன்னர் இப்பாடலின் பின்புலத்தைப் பற்றிக் காணலாம். வெள்ளிவீதியார் என்னும் புலவரால் பாடப்பட்ட இப்பாடல் ஒரு தலைவன் கூற்று ஆகும் அதாவது காதல் கொண்ட ஒரு காளை தனது நிலையினை நண்பர்களிடத்தில் எடுத்துக் கூறுவது. ஒரு பெண்ணைப் பார்த்துக் காதல் கொள்கிறான் ஒரு காளை. அவளும் அவனைக் காதலிக்கிறாள். இடையில் அப்பெண்ணைப் பல நாட்களாக சந்திக்க முடியவில்லை அவனால். அவளைக் காணமுடியாமல் தவிக்கிறான் காளை. தனது காதலை நண்பர்களிடத்தில் எடுத்துக் கூறி தன்னுடன் அவளைச் சேர்த்துவைக்குமாறு கூறுகிறான். அவர்களும் பலவாறு முயன்று பார்க்கின்றனர். ஆனால் முடியவில்லை. அவளின் பிரிவால் அவனது உடல்நலம் குன்றுகிறது. அந்தப் பெண்ணை மறந்துவிடுமாறு அவனை வேண்டுகின்றனர் அவனது நண்பர்கள். இந்தச் சூழ்நிலையில் தான் அந்தக் காளை அவர்களை நோக்கிக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பாடலின் முதல் சொல்லாக 'இடிக்கும்' என்ற சொல் வந்துள்ளது. இதற்கு 'கண்டிக்கும்' என்று பொருள். இங்கே இச்சொல்லும் பொருளும் பொருந்தாதவை ஆகும். ஏனென்றால் ஏற்கெனவே உடல்நலம் குன்றி சோர்ந்த நிலையில் உள்ள அவனுக்கு ஆறுதல் கூறுவதை விடுத்து கண்டிப்பது அறிவுடையோர் செய்யும் செயல் ஆகுமா?. கண்டிப்பது என்றால் அவன் தனது காதலை வெளிப்படுத்திய அன்றே அல்லவா செய்திருக்க வேண்டும்?. இவ்வளவு நாள் முயற்சி செய்துவிட்டு சேர்த்துவைக்க முடியாத நிலையில் அவனைக் 'கண்டித்தார்கள்' என்று கூறுவது பொருந்தாத கருத்தாகும். இதில் இருந்து இந்தச் சொல்லும் பொருளும் இவ்விடத்தில் தவறாக வந்துள்ளது என்பதை அறியலாம்.

பாடலின் இறுதி அடியில் 'பரந்தன்று' என்ற சொல் வந்துள்ளது. இதற்கு 'பரவியது' என்று பொருள். 'பரந்தன்று இந்நோய்' என்பதற்கு 'இந்தக் காதல் நோய் என் உடலெங்கும் பரவி விட்டது' என்று பொருள் கூறுவது அறிவுக்குப் புறம்பானது ஆகும். ஏனென்றால் தலையில் தோன்றி கால்வரை பரவும் தோல்வியாதி அல்ல காதல். உடலெங்கும் பரவுதல் என்னும் பொருள் காதலுக்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் காதல் ஒரு உடல் நோய் அல்ல; அது ஒரு மன உணர்வு ஆகும். அந்த உணர்வினால் இன்பமும் உண்டு; துன்பமும் உண்டு. காதல் துன்பம் தரும் நோயாகும்போது அதற்கு மருந்தும் காதலே ஆகும். எனவே 'பரவிவிட்டது' என்ற பொருளைத் தரும் 'பரந்தன்று' என்ற சொல் இங்கே தவறாக வந்துள்ளது என்பதை அறியலாம்.

திருத்தங்கள்:

'இடிக்கும்' என்ற சொல்லுக்கு பதிலாக 'இரக்கும்' என்று வந்திருக்க வேண்டும். இரத்தல் என்றால் வேண்டுதல், யாசித்தல் என்று பொருள். 'அந்தப் பெண்ணை மறந்துவிடு' என்று யாசிப்பதாகக் கொள்வதே சரியான பொருள். இதுவே இந்த இடத்தில் பொருத்தமாகும். இறுதி அடியில் வரும் 'பரந்தன்று' என்ற சொல்லுக்குப் பதிலாக 'பிணித்தன்று' என்று வந்திருக்க வேண்டும். பிணித்தல் என்றால் தன் வசப்படுத்துதல், தன்னுடன் சேர்த்துக்கட்டுதல் என்று பொருள். 'பிணித்தன்று இந்நோய்' என்னும் சொற்றொடருக்கு 'இந் நோய் என் உயிரை தன் வசப்படுத்திவிட்டது.' என்பது பொருள். இதுவே இவ் இடத்தில் பொருந்துகின்ற பொருளாகும்.

நிறுவுதல்:

முதலில் 'இரத்தல்' பற்றிக் காண்போம். அவனது நண்பர்கள் அவன் விரும்பிய படியே அப்பெண்ணைச் சேர்த்துவைக்க முதலில் முயன்றனர். இயலாமல் போகவே அவனிடம் வந்து 'அப்பெண்ணை மறந்துவிடு' என்று யாசிக்கின்றனர். இதைத்தவிர அவர்களால் வேறு என்ன செய்யமுடியும்?. மோசமான உடல்நிலையில் உள்ள அவனிடம் கண்டிப்பாக நடந்து கொள்ள யாருக்கு மனம் வரும்?. எனவே 'யாசிக்கும்' என்னும் பொருள்படுகின்ற 'இரக்கும்' என்னும் சொல்லே இந்த இடத்தில் மிகப் பொருத்தமானது என்பதை அறியலாம்.


அடுத்து 'பிணித்தல்' பற்றிக் காணும் முன்னர் இப்பாடலில் வரும் ஒரு அரிய செய்திக் குறிப்பைக் காணலாம். இக்காலத்தில் இறைச்சியை 'உப்புக்கண்டம்' போடும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அக்காலத்தில் இறைச்சியை 'நெய்க்கண்டம்' போடுவார்கள். 'வெண்ணெய் உணங்கல்' என்பது இதைத்தான் குறிக்கிறது. ஒரு அகன்ற பாத்திரத்தில் வெண்ணெயை ஊற்றி அதில் இறைச்சித் துண்டுகளைப் போட்டு வெயிலில் காயவைப்பர். வெண்ணெய் உருகி நெய்யாகி நன்றாக சூடேறி இறைச்சிக்குள் ஊடுருவும். இப்படி ஊறவைக்கும் பொழுது பறவைகள் மற்றும் விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க யாராவது ஒருவர் காவலுக்கு இருப்பர். இப்படி நெய்யில் ஊறவைத்த இறைச்சிக்கு 'நெய்யூன்' என்றும் பெயர். இப் பெயர் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் காணப்படுகின்றது. இந்த அரிய செய்தி இப்பாடலில் ஒரு அழகான உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

கைகள் இல்லாத ஊமையன் ஒருவனை நெய்க்கண்டத்தைக் காவல் காக்க வைத்ததாகப் பாடலில் வருகிறது. இப்படிச் செய்வதால் என்ன ஆகும்?. தடுப்பார் யாருமின்றி அந்த நெய்க்கண்டம் பறவைகளாலும் விலங்குகளாலும் மிக எளிதாகக் கவரப்படும் அல்லவா?. அப்படித் தான் இங்கே தலைவனது உயிரும் ஆனது. உயிருக்குயிரான காதலியைச் சேர்த்து வைத்து தனது உயிரைக் காப்பாற்ற இயலாத நண்பர்களை 'கையில் ஊமன்' என்று நோகிறான் காதலன். காதலியைத் தூக்கி வந்து தன்னுடன் சேர்த்துவைக்காததால் 'கைகள் இல்லாதவர்கள்' என்றும் அவளது பெற்றோரிடம்/தோழிகளிடம் சென்று பேசி மணம் முடித்து வைக்க இயலாததால் 'வாய் பேச முடியாத ஊமைகள்' என்றும் கூறுகிறான். இப்படிக் கையில் ஊமன் போல அவனது நண்பர்கள் நடந்து கொண்டதால் நெய்க்கண்டம் போன்ற அவனது உயிரைக் காதல் நோய் தன்வசப் படுத்திக் கொண்டது. இந்தச் சூழ்நிலையில் 'பிணித்தல்' என்ற பொருள் தான் இங்கே பொருத்தமாக இருக்குமே அன்றி 'பரவுதல்' பொருள் பொருந்தாது அல்லவா?. அத்துடன் ஒவ்வொரு அடியிலும் எதுகை நயம் பயின்று வருவதற்கேற்ப 'வெண்ணெய்' என்னும் சொல்லுக்கு 'பிணித்தன்று' என்ற சொல் எதுகையாக வருவதும் இங்கே குறிப்பிடத் தக்கது. எனவே 'பிணித்தன்று' என்ற சொல்லே இங்கே மிகப் பொருத்தமாகும் என்பது தெளிவு.

இனி சரியான பொருள் இது தான்: '(மறந்துவிடு என்று என்னிடம்) யாசிக்கும் நண்பர்களே! நீங்கள் கடமையை நிறைவேற்ற (என் உயிரைப்) பொறுத்து இருந்தேன். நல்லது, இனி அது ஆவதற்கில்லை. கதிரவன் காய்கின்ற வெம்மை மிக்க பாறையின் மேல் கைகள் இல்லாத ஊமையன் ஒருவன் கண்களால் காத்த நெய்க்கண்டம் போல இந்தக் காதல் நோய் தன் வசப்படுத்திக் கொண்டதால் (என் உயிரைப்) பொறுத்திருப்பது அரிதாகும்.'

சரியான பாடல்:

' இக்கும் கேளிர் நும்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோம் நன்று மற்றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பிணித்தன்று இந்நோய் நோன்று கொளற்கரிதே.'

-------------------------------வாழ்க தமிழ்!---------------------------------------------