வெள்ளி, 10 ஜூலை, 2009

புகழொடு தோன்றுக


பாடல்:

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
- குறள் எண்: 236

தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும். இயலாதவர்கள் அத்துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.
மு.வ.உரை: ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்றவேண்டும். அத்தகைய சிறப்பு இல்லாதவர்கள் அங்கு தோன்றுவதைவிட தோன்றாமல் இருப்பதே நல்லது.
சாலமன் பாப்பையா உரை: பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர்கள் உலகு காண காட்சி தருவதிலும் தராமல் இருப்பதே நல்லது. (நன்றி: திருக்குறள்.காம்)

தவறுகள்:

மேற்காணும் மூன்று உரைகளிலும் ஒரு பொருட்பிழை மட்டுமே உள்ளது. கலைஞர் உரையில் ஒரு துறையில் ஈடுபடுபவர்கள் புகழுடன் விளங்க முடியாவிட்டால் அத்துறையில் இருந்து பின்வாங்கிவிட வேண்டும் என்ற பொருள் தொனிக்கிறது. இது நடைமுறைக்கு ஒவ்வாத கருத்தாகும். ஏனென்றால் ஒரு துறையில் ஈடுபட்டு உள்ள அத்தனை பேருமே புகழ்பெற்று விளங்குவதென்பது சாத்தியமல்ல. வசதியும் வாய்ப்பும் இருந்தால் அவரவர் திறமைக்கேற்ப புகழ் பெறுவர். புகழ்பெற இயலாதவர்கள் பின்வாங்கவேண்டும் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத கருத்தே என்பது தெளிவு. அடுத்து மு.வ. உரையும் ஏறத்தாழ கலைஞர் உரையுடன் ஒத்துப் போவதால் இதுவும் நடைமுறைக்கு ஒவ்வாத கருத்து என்பது உறுதியாகிறது.

சாலமன் பாப்பையாவின் உரையில் புகழ் பெற்றவர்கள் மட்டுமே மேடையில் தோன்றவேண்டும் என்றும் புகழ் இல்லாதவர்கள் மேடையில் தோன்றவே கூடாது என்ற கருத்து தொனிக்கிறது. இது ஏற்கத்தக்க கருத்தே அல்ல. ஏனென்றால் மேடையில் அறிமுகம் ஆகும் அனைவரும் புகழ் பெற்றவர்களாகத் தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமை ஆகாது. புகழ் இல்லாத புதியவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்திக் காட்டி புகழ் பெறவேண்டி இன்று மேடையிலே தோன்றி செயலாற்றக் காண்கிறோம். இப் புதியவர்களுக்குத் தடை விதித்தால் அது ஒரு சமுதாய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது போலன்றோ?. இப்படி ஒரு கருத்தை வள்ளுவர் கூறி இருப்பாரா?. ஒருபோதும் கூறி இருக்க மாட்டார். எனவே சா.பா.உரையும் தவறானது என்று தெளியலாம். இப்படி மூன்று உரைகளும் தவறாகிப் போனதற்குக் காரணம் 'புகழ்' என்ற சொல்லிற்கு 'பெருமை' என்ற பொருள் கொண்டது தான். இப் பொருள் இவ்விடத்தில் இச்சொல்லுக்குப் பொருந்தாது.

திருத்தம்:

இக்குறளில் வரும் 'புகழ்' என்னும் சொல்லுக்கு 'நெஞ்சின் ஈரம் அதாவது இரக்கம்' என்று பொருள் கொள்வதே இங்கு திருத்தமாகும். இது எவ்வாறு சரி என்று கீழே காணலாம்.

நிறுவுதல்:

புகழ் என்னும் சொல்லுக்கு 'பெருமை அல்லது சிறப்பு' என்ற பொருளே நடைமுறையில் உள்ளது. 'புகழ் பாடுதல்' என்பது 'அனைத்து பெருமைகளையும் விரித்துக் கூறுதல்' என்ற பொருளில் ஆளப்படுகிறது. ஆனால் இந்த 'பெருமை' எனும் பொருள் விரிவாக்க முறையில் இரண்டாம் நிலையில் பெறப்பட்ட ஒன்றே ஆகும். இச் சொல் உணர்த்தும் முதல் நிலைப் பொருள் 'இரக்கம்' என்பதே ஆகும். இதனை நிரூபிக்க திருக்குறளில் வரும் புகழ் என்னும் அதிகாரத்தில் உள்ள ஏனை ஒன்பது பாடல்களையே சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு - 'ஈவும் இரக்கமும் அன்றி உயிர்களுக்கான நற்பேறு வேறில்லை' என்பதே இக்குறளின் பொருளாகும். இக் குறளில் வரும் ஈதல் என்பது ஈவினையும் (ஈகை) இசைபட வாழ்தல் என்பது இரக்கத்துடன் வாழ்தலையும் குறிக்கிறது. 'ஈவு இரக்கம்' என்ற தற்கால அடுக்குமொழியும் இக் கருத்தின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதைக் கவனிக்கவும். இதற்கு முந்தைய அதிகாரத்தில் ஈகை பற்றிக் கூறிய வள்ளுவர் இந்த அதிகாரத்தின் முதல் குறளில் முதல் சொல்லாக ஈகையைப் பற்றியும் அதையடுத்து இரக்கத்தையும் குறிப்பிடுகிறார். ஏனென்றால் ஈகையும் இரக்கமும் வேறுவேறு ஆகும். ஈகை என்பது பொருட்கொடையைக் குறிக்க இரக்கம் என்பது பிற உயிரின் துன்பத்தைக் கண்டு மனம் பொறாமல் முன்சென்று உதவுதலைக் குறிக்கும். பொருட்கொடை அளிப்பதால் ஒருவர் பெருமை அடைவார் என்பது உண்மையே ஆனாலும் வள்ளுவர் கூற வரும் கருத்து அதுவல்ல; பொருட்கொடையுடன் நிற்காமல் துன்பப்படும் உயிர்களிடத்தில் இரக்கம் காட்டி உதவுங்கள் என்று கூறுகிறார். ஏனென்றால் பொருள்வளம் உள்ள செல்வந்தர்கள் மட்டுமே பொருட்கொடை அளிக்க இயலும். ஆனால் பிற உயிர்களிடத்து இரக்கம் காட்டி உதவுவதற்கு பொருள்வளம் தேவையில்லை. பொருட்கொடை நன்றே; அது முடியாதவர்கள் இரக்கமாவது காட்டுங்கள் என்று வலியுறுத்துகிறார். இக்குறளில் வரும் இசை என்னும் சொல் இரக்கம் என்னும் பொருளிலேயே வந்திருப்பதை அறியலாம்.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் - 'போற்றுவோர் போற்றுவதெல்லாம் தன்னிடம் இரந்தவரின் மேல் இரக்கம் கொண்டு பொருள் அளிப்போரின் உள்ளத்தில் மேலாடி நிற்கும் இரக்கப் பண்பே ஆகும்' என்பதே இக் குறளின் பொருள் ஆகும். இங்கும் புகழ் என்னும் சொல் பெருமையைக் குறிக்காமல் இரக்கத்தையே குறிக்கும். இது எவ்வாறு என்று காணலாம். உள்ளத்தில் இரக்க உணர்வுடன் பொருள் தருவதே உண்மையான பொருட்கொடை ஆகும். இரக்கமே இல்லாமல் நான்குபேர் பாராட்டவேண்டும் என்ற வறட்டு எண்ணத்திலோ கைம்மாறாக எதையாவது பெற்றுக்கொண்டோ பொருட்கொடை செய்வது தவறு ஆகும். இவ்வாறு பெறப்படும் பெருமை நிலையற்றது என்பதுடன் பெருமைக்குப் பதிலாக சிறுமையினையே இறுதியில் ஈட்டித் தரும். இரப்போரின் நிலைகண்டு மனமிரங்கி கைம்மாறு கருதாமல் பொருள் அளிப்போரின் உயர்வே நிலையானது. போற்றிப் பாடும் புலவர்களும் இவர்களையே போற்றுவர். இப் பாடல்கள் யாவும் ஈந்தோரின் இரக்கப் பண்பினையே பலவாறாகக் கூறி நிற்கும். சங்க கால ஆற்றுப்படை நூல்கள் இதற்கு நல்ல சான்றாகும்.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல் - 'ஒற்றுமை இல்லாத இந்த உலகத்தில் இரக்கத்தைத் தவிர அழியாமல் இருப்பது வேறில்லை' என்பதே இதன் பொருளாகும். இந்த உலகம் கருத்து வேறுபாடுகள் நிறைந்தது. இந்த வேறுபாடுகளால் மக்கள் தமக்குள் பிளவு பட்டுள்ளனர். இது நாளடைவில் போருக்கு வழிவகுத்து உயிரினத்தின் அழிவுக்கும் அடிகோலும். அது மட்டுமின்றி ஊழிக்காலத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு உயிரினங்கள் யாவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் என்பது மூத்தோர் வாக்கு. இப்படி உயிரினமே அழிந்து போனபின்னாலும் அழியாமல் வெள்ளத்தாலும் அடித்துச் செல்லப் படாமல் இருப்பது இரக்க உணர்வு மட்டுமே என்கிறார் வள்ளுவர். இது எப்படி சாத்தியமாகும் என்று காணலாம். முதலில் இரக்கம் என்பது ஒரு பொருள் அல்ல; ஒரு உணர்வே என்பதால் அதனை ஊழிவெள்ளம் அடித்துச் செல்ல இயலாது. இரண்டாவது இரக்கத்தின் மொத்த வடிவமாக என்றென்றும் விளங்கிக் கொண்டிருக்கும் பூமித்தாயை ஊழிவெள்ளமோ போரோ அழித்துவிடாது. ஆம், பூமியை விட இரக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டை யாரால் சொல்ல இயலும்?. ' அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல் மாஞாலம் கரி.' என்று 245 ஆம் குறளில் பூமியின் இரக்க உணர்வினைப் பற்றியும் இரக்க உணர்வினால் பூமிக்கு ஒரு துன்பமும் நேராது என்றும் உறுதிபடக் கூறுகிறார் வள்ளுவர். எனவே மூன்றாம் குறளாகிய இங்கும் புகழ் என்பது இரக்க உணர்வினையே குறித்து நிற்கிறது என்று தெளியலாம்.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு - 'நிலமாகிய பூமிப்பரப்பில் எங்கும் இரக்கமே காட்டப்படுமானால் தேவர்கள் தாம் வாழும் உலகின் எல்லையைப் பேணமாட்டார்கள் அதாவது தம் உலகினை விடுத்து பூமியிலேயே வந்து வாழத் துவங்கிவிடுவார்கள்' என்பதே இக்குறளின் கருத்தாகும். மனிதர்கள் வாழும் பகுதியை பூமி என்றும் தேவர்கள் வாழும் பகுதியினை புத்தேள் உலகு என்றும் பிரித்துக் கூறும் வள்ளுவர் இந்த இரண்டு உலகிற்கும் உள்ள வேறுபாடு இரக்க உணர்வே என்கிறார். பூமியில் வாழும் உயிர்களிடத்தில் இரக்க உணர்வு குன்றும்போது தேவர்கள் தம் உலகிற்குச் சென்று விடுவர் என்றும் இரக்க உணர்வு பூமி எங்கும் மிக்கிருக்கும் போது தேவர்கள் மீண்டும் பூமிக்கு வந்து வாழத் துவங்குவர் என்றும் கூறுகிறார். இந்த தேவர்களின் வருகையினால் பூமியில் நல்ல மழையும் விளைச்சலும் உண்டாகி அனைத்து நல்ல வளங்களுடன் பூமி ஒரு சுவர்க்கம் போல் விளங்கும். இதிலிருந்து புகழ் என்னும் சொல் இங்கும் இரக்கத்தையே குறிக்கிறது என்பதை அறியலாம்.

நத்தம்போல் கோடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது - இக் குறளின் பொருளை ஏற்கெனவே நாம் திருத்தம் வலைப்பூவில் கண்டிருக்கிறோம். 'நத்தையின் சங்கினைப் போல புகழுடம்பினை விட்டுச் செல்லும் இறப்பும் வித்தகர்களுக்கே அன்றி மற்றவர்களுக்கு அரிதாகும்' என்பதே இக்குறளின் பொருளாகும். இங்கே வித்தகர்கள் என்போர் இரக்கம் மீதோங்கிய வள்ளல்கள் ஆவர். வித்தகர் என்றால் வித்தினை அகத்தில் உடையவர் என்று பொருள். இங்கே வித்து என்னும் சொல் விந்து என்னும் சொல்லின் வலித்தல் விகாரமாகும். விந்து என்னும் சொல் முதல் நிலையில் நீர் மற்றும் நீர் போன்ற பசைத் திரவத்தைக் குறிக்கும். இரண்டாம் நிலையில் ஈரப்பசையைக் குறிக்கும். இதுவே பொருள் விரிவாக்கமாக நெஞ்சின் ஈரமாகிய இரக்கத்தைக் குறிக்கும். வித்தகர் என்னும் சொல்லில் வரும் வித்து என்பது இங்கே இரக்கப் பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன் - 'வாழும்காலத்தில் பிறர்மேல் இரக்கம் காட்டாமல் இகழ்ச்சியுடன் வாழ்ந்தவர்கள் தம்மால் இயலாத காலத்தில் தன் மீது இரக்கம் கொண்டு உதவவில்லையே என்று பிறரை நொந்துகொள்வது ஏன்?.' என்பதே இக்குறளின் பொருளாகும். 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்னும் முதுமொழியின் அடிப்படையில் எழுந்ததே இக் குறள் ஆகும். உடல் நலத்துடன் இருக்கும்போதே துன்புறுவோரிடத்தில் இரக்கம் காட்டி உதவுங்கள்; இகழ்ந்து செல்லாதீர்கள். அவ்வாறு சென்றால் நீங்கள் துன்புறும்போது உங்கள் மீது இரக்கம் காட்டி உதவிசெய்ய யாரும் முன்வர மாட்டார்கள் என்று இக் குறள் மூலம் எச்சரிக்கை விடுக்கிறார் வள்ளுவர். இங்கும் புகழ் என்பது இரக்க உணர்வினையே குறிக்கிறது.


வசையென்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும் எச்சம் பெறாவிடின் - வாழும் காலத்தில் இரக்கசீலர் என்னும் நற்பெயரைப் பெறாவிட்டால் அரசர்களும் செல்வந்தர்களும் பெரும்பழியே அடைவர் என்பதே இக்குறளின் கருத்தாகும். இக் குறளில் வரும் வையம் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு. அவற்றில் ஒன்று தேர் ஆகும். வையத்தார் என்பது தேரினை உடையவர்கள் என்ற பொருளில் அரசர்களையும் பெரும் செல்வந்தர்களையும் இங்கே குறிக்கப் பயன்பட்டது. செல்வத்துப் பயனே ஈதல் என்பதால் பெரும் செல்வம் படைத்த அரசர்களும் செல்வந்தர்களும் தம்மிடம் உள்ள செல்வத்தை இல்லாத வறியவர்களுக்குக் கொடுத்து உதவி இரக்கசீலர் என்னும் நற்பெயரை சம்பாதித்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யாமல் வாழ்ந்தால் அவர்களது வாழ்க்கை பழியுடைய ஒரு பாவ வாழ்க்கையாகவே அமைந்துவிடும் என்று கூறுகிறார் வள்ளுவர். இங்கும் இசை என்பது இரக்கத்தைக் குறித்தே நிற்கிறது.

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம் - இரக்கமில்லாத மக்களைத் தாங்கிய நிலம் தீங்கில்லாத பல்வேறு வளங்களை மென்மெல இழக்கும் என்பதே இதன் பொருளாகும். நெஞ்சின் ஈரமாகிய இரக்கம் குறையக்குறைய மண்ணின் ஈரமும் குறைந்து வறண்டு போகிறது. இதனால் மரங்களின் இலைகள் ஈரப்பசை இன்றி வற்றி உதிர்ந்துவிடும். மரங்களில் இலைகள் இன்மையால் மழையும் பெய்யாது; மழையின்மையால் மண்ணில் இருந்த அனைத்து வளங்களும் மெல்லமெல்ல அழியத் துவங்கும். இது எவ்வாறு உண்மை எனில் இரக்கம் இல்லாத கொடிய மக்கள் பொதுநலமற்ற சுயநலக் காரர்கள் என்பதால் இருக்கும் நீர்நிலைகளைக் காத்தல், புதிய நீர்நிலைகளை அமைத்தல் முதலான பொதுநலப் பணிகளில் ஈடுபட மாட்டார்கள். தமது தேவைக்கேற்ப மண்ணைத் தோண்டி நீரை எடுத்துக் கொள்வதால் நீர்வளம் குறைந்து மண்ணின் ஈரமும் குறையத் துவங்குகிறது. இதை நாம் இன்றைய காலகட்டத்தில் கண்கூடாகவே பார்க்கிறோம். இதைத் தான் வள்ளுவர் அக்காலத்திலேயே சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். இங்கும் இசை என்பது இரக்கத்தையே குறிப்பதை அறிக.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழாதவர் - இரக்கம் இல்லாமல் வாழும் மனிதர்கள் வாழாதவர்களாகவே கருதப்படுவர்; இரக்கமுடைய மனிதர்கள் மட்டுமே வாழ்வதாகக் கருதப்படுவர் என்பதே இக்குறளின் பொருளாகும். இரக்கம் இல்லாதவர்களை இந்த உலகம் மனிதர்களாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளாது என்பதே இதன் உள்ளுறைப் பொருளாகும். இரக்க உணர்வே ஒரு ஆறறிவு படைத்த மனிதனை ஐந்தறிவு படைத்த விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது ஆகும். இரக்க உணர்வு இல்லாதவர்கள் உருவத்தால் மனிதராக இருந்தபோதும் விலங்குகளாகவே கருதப்படுவர். இதில் இருந்து விலங்குகளுக்கும் மனிதருக்கும் இருக்கும் வேறுபாடாகிய ஆறாவது அறிவு என்பது இரக்க உணர்வே என்பதை அறியலாம். இங்கும் இசை என்பது இரக்கத்தையே குறித்து நிற்கிறது.

மேற்கண்ட குறள் விளக்கங்களில் இருந்து புகழ், இசை, வித்து ஆகிய மூன்று சொற்களும் இரக்கப் பொருளில் தான் பயன்படுத்தப் பட்டுள்ளன என்பதைத் தெள்ளிதின் அறியலாம். புகழ் என்ற சொல் நான்கு குறள்களிலும் இசை என்ற சொல் நான்கு குறள்களிலும் வித்து என்ற சொல் ஒரு குறளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. தற்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள குறளில் புகழ் என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டுள்ளது. இக் குறளிலும் 'புகழ்' என்ற சொல்லுக்கு 'இரக்கம்' என்ற பொருளைக் கொண்டு அதன் விளக்கம் காணலாம்.


' (இவ் உலகில்) உயிர்கள் பிறப்பதானால் (நெஞ்சில்) இரக்கத்துடன் பிறக்கட்டும்; இரக்கம் இல்லாத உயிர்கள் பிறப்பதைவிட பிறவாதிருப்பதே நல்லது.'



சரி, வள்ளுவர் ஏன் இவ்வாறு கூறவேண்டும்?. ஆராய்ந்து பார்த்ததில் ஓர் உண்மை புலப்பட்டது. இரக்கம் என்பது ஒரு குலப்பண்பு ஆகும் அதாவது மரபு சார்ந்த பண்பு ஆகும். ஈவும் இரக்கமும் உடைய தயாள சிந்தனை கொண்டவர்களின் வழித்தோன்றல்கள் யாவரும் நெஞ்சில் இரக்கத்துடன் இருப்பர். இரக்கமற்ற கல்நெஞ்சர்களின் மக்கள் யாவரும் கல்நெஞ்சர்களாகவே இருப்பர். இது நடைமுறை உண்மை. இப்படி இரக்கம் இல்லாதவர்களின் மக்கள் இம் மண்ணில் பிறந்து வாழ்ந்தால் என்ன ஆகும்?. முன்னர் குறளில் கண்டபடி, இப் பூமி தனது நல்ல பல வளங்களை இழக்கும்; இதனால் இரக்கமுடைய மனிதர்களின் வாழ்வும் அல்லவா பாதிக்கப்படும்?. எனவே தான் இரக்கமற்றவர்களின் மக்கள் இம் மண்ணில் பிறப்பதைவிட பிறவாதிருப்பதே நல்லது என்கிறார் வள்ளுவர். அதேசமயம் இரக்கமுடையவர்களின் மக்கள் இம் மண்ணில் பிறந்து வாழ்ந்தால் முன்னர் குறளில் கண்டபடி இப் பூமியே ஒரு சுவர்க்கம் போல ஆகிவிடும் நன்மையும் இருக்கிறது. எனவே தான் இவ் உலகில் உயிர்கள் பிறப்பதானால் இரக்கத்துடனே பிறக்கட்டும் என்கிறார். இதை வள்ளுவரின் விருப்பமாக மட்டுமல்ல இறைவனை நோக்கி அவர் வேண்டிக் கொள்வதாகவும் கருதலாம்.

முடிவுரை:

நாம் மேலே கண்டபடி புகழ் என்னும் சொல் முதல்நிலையில் இரக்கத்தை மட்டுமே குறித்து வந்தது. 'புகழ்பாடுதல்' என்பது 'இரக்க உணர்வினை விரித்துக் கூறுதல்' என்ற பொருளில் தான் முதலில் கையாளப்பட்டது. சங்க கால ஆற்றுப்படை நூல்கள் யாவும் அரசர்களின் கொடைத்திறனையே விரிவாகக் கூறுவது இதற்கு ஒரு சான்றாகும். காலப்போக்கில் இச்சொல் அரசர்களின் இரக்க உணர்வினை மட்டுமின்றி வீர உணர்வினையும் காதல் உணர்வினையும் விரித்துக் கூறப் பயன்படலாயிற்று. இன்று இச்சொல் ஒருவரது கொடை, வீரம், காதல் முதலான சிறப்புப் பண்புகள் (பெருமைகள்) அனைத்தையும் விரித்துக் கூறப் பயன்படுகிறது. இது இச் சொல்லின் இரண்டாம் நிலைப் பொருளாகும். வள்ளுவர் இச் சொல்லை இந்த அதிகாரத்தில் முதல்நிலைப் பொருளில் தான் பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிக.