புதன், 28 ஏப்ரல், 2010

பொருட்பெண்டிர்

குறள்:

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.
                                            - எண்: 913

தற்போதைய பொருள்:

பரிமேலழகர் உரை: கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையுடைய முயக்கம், பிணமெடுப்பார் இருட்டறைக் கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற் போலும்.

மு.வ.உரை: பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவல் இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தினைத் தழுவினாற் போன்றது.

கலைஞர் உரை: விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவி பொய்யன்பு காட்டி நடிப்பது இருட்டறையில் ஒரு அந்நியப் பிணத்தினை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை: பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித்தழுவல், இருட்டு அறையில் முன்பு அறியாத பிணத்தினை தழுவுவது போலாகும்.

தவறுகள்:

மேற்காணும் உரைகளைப் படிக்கும்போது சில கேள்விகள் தாமாகவே மனதில் தோன்றுகின்றன. முதல் உரை நீங்கலான அனைத்து உரைகளிலும் ' இருட்டறையில் பிணத்தைத் தழுவுதல்' என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. இக் கருத்தின் மேல் எழுகின்ற கேள்வி இதுதான்: இருட்டறையில் ஒருவர் பிணத்தைத் தழுவக் காரணம் என்ன?. ஒன்று வரம்பு கடந்த பாலுணர்வாக இருக்கலாம். மற்றொன்று அறியாமை (பிணம் என அறியாமை) யாக இருக்கலாம். இவ் இரண்டில் எது காரணமாக இருந்தாலும் இக் கருத்து வள்ளுவர் கூற வரும் கருத்துடன் ஒத்துப் போகவில்லை. ஏனென்றால் பொருட்பெண்டிர் ஒரு ஆண்மகனைத் தழுவுவதன் காரணமாக வள்ளுவர் கூறுவது அந்த ஆண்மகனின் பொருள்வளமே அன்றி பொருட்பெண்டிரின் வரம்பு கடந்த பாலுணர்வோ அறியாமையோ அன்று. இப்படி பொருட்பெண்டிரின் தழுவுதல் மற்றும் பிணத்தைத் தழுவுதல் ஆகிய இரண்டு செயல்களுக்குமான அடிப்படைக் காரணங்கள் வேறுவேறாக இருக்கும் நிலையில் இவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டு உவமையாகக் கூற இயலாது; அப்படிக் கூறினால் அது தவறாகும். வள்ளுவர் அவ்வாறு கூறி இருக்க மாட்டார் என்பதால் இக் கருத்தில் பிழை இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

முதல் உரையான பரிமேலழகர் உரையிலோ 'இருட்டறையில் பிணத்தைத் தழுவி எடுத்தல்' என்ற பொருள் தொனிக்கிறது. இக் கருத்தில் இரண்டு தவறுகள் புதைந்து உள்ளன. இரவில் பிணம் எடுத்தல் என்ற கருத்து முதல் தவறாகும். ஏனென்றால் அக்காலத்தில் பகலில் பிணம் எடுக்கக் கூடாது என்றோ இறந்தவரது உடலை இரவில் தான் அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும் என்றோ விதிமுறைகள் எவையும் இல்லை. அப்படி ஒரு நடைமுறை அக்காலத்தில் இருந்ததாக இதுவரை யாரும் போதுமான ஆதாரங்களுடன் மெய்ப்பிக்கவும் இல்லை. எனவே இக் கருத்தினை ஒரு புனைகதை என்றே கொள்ள முடியும். பிணம் எடுப்பவர் பிணத்தைத் தழுவி எடுப்பதாக ஒரு கருத்து இந்த உரையில் கூறப்பட்டுள்ளது. இது இரண்டாவது தவறாகும். பிணம் எடுப்பவர் பிணத்தை ஏன் கட்டித் தழுவ வேண்டும்?. கூலிக்குப் பிணம் எடுப்பவருக்கு பிணத்தைக் கட்டித் தழுவ ஒரு காரணமும் இல்லையே!. அன்றியும் உயிர் பிரிந்த சில மணி நேரங்களில் உடலானது விறைத்து கனமாகத் தோன்றுவது இயல்பு. இந் நிலையில் ஒருவரே பிணத்தைத் தழுவி எடுத்தல் என்பது மிகவும் கடினமான செயல் என்பதுடன் தேவையற்றதும் ஆகும். ஒருவர் பிணத்தின் கால்மாட்டிலும் இன்னொருவர் பிணத்தின் தலைமாட்டிலும் பிடித்துத் தூக்கி எடுத்துக் கொண்டு செல்வதே இயல்பான நடைமுறை ஆகும். இதிலிருந்து 'பிணம் எடுப்பவர் பிணத்தைத் தழுவி எடுப்பர்' என்ற கருத்தும் ஒரு புனைகதையே என்று அறியலாம்.

அடுத்து 'முன்னறியாத பிணம், அந்நியப் பிணம், தொடர்பில்லாத பிணம்' என்ற சொற்றொடர்கள் இவ் உரைகளில் குறிப்பிடப் பட்டுள்ளன. இவை யாவும் பொருளற்ற மொழிகளாய் இக் குறளுடன் சற்றும் பொருந்தாமலே உள்ளன. பிணம் எடுப்பவனுக்கு பிணத்தைப் பற்றி முன்னரே எதுவும் தெரியாதா என்ன?. யார் வீட்டில் பிணம் எடுக்க வேண்டும், அது யாருடைய பிணம் என்று முன்னரே அனைத்தையும் தெரிந்துகொண்டு தானே பிணத்தை எடுப்பார்கள்?. இதில் என்ன ஒளிவுமறைவு வேண்டிக் கிடக்கிறது?. அல்லது வரம்பு கடந்த பாலுணர்வு நிலையில் ஒரு பிணத்தைத் தழுவுபவனுக்கு அப் பிணத்தின் அடையாளம் என்ன வேண்டிக் கிடக்கிறது?. அல்லது பிணம் என்றே தெரியாமல் இருட்டில் பிணத்தைத் தழுவும் காமக் குருடனுக்குத் தான் பிணத்தின் அறிமுகம் என்ன வேண்டிக் கிடக்கிறது?. உண்மையில் இந்த மூன்று சொற்றொடர்களும் மிக வியப்பாகவும் அதேசமயம் சிறிதும் தரமின்றியும் உள்ளது.   

இப்படிப் பல புனைகதைகளையும் பொருத்தமில்லாத கீழான கருத்துக்களையும் கூறி இருந்தாலும் அவை வள்ளுவர் கூறவரும் கருத்துக்கு அரண் சேர்க்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. பரிமேலழகர் கூறுவது போல பொருட்பெண்டிரின் பொய்யான தழுவுதலும் இருட்டறையில் பிணமெடுப்பவன் பிணத்தைத் தழுவுதலும் ஒன்றான செயலாக முடியாது. ஏனென்றால் பொருட்பெண்டிர் பணம் படைத்தவனையே தழுவி மகிழ்வர். ஆனால் பிணம் எடுப்பவன் யாராக இருந்தாலும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் பிணம் எடுப்பான். இப்படி இந்த இரண்டு செயல்களும் தம்முள் மாறுபட்டவையாக இருக்கும்போது இவற்றை ஒன்றுக்கொன்று உவமையாகக் கூறுவது தவறாகும். வள்ளுவர் இந்தத் தவறைச் செய்யமாட்டார் என்பதால் இதைச் செய்தவர்கள் பிற்கால மக்களே என்பது தெளிவு. உண்மையில் இந்தக் கட்டுக்கதைகள் அனைத்தும் உருவாகக் காரணமாக இருந்தது ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். அதைப்பற்றி கீழே காணலாம்.

திருத்தம்:

இக் குறளின் இரண்டாம் அடியில் வருகின்ற 'பிணம்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'பணம்' என்ற சொல் வரவேண்டும். இதுவே இங்கு தேவையான திருத்தமாகும். இனி திருந்திய குறள் இதுதான்:

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் ணந்தழீஇ யற்று.
                                       
இக் குறளின் திருந்திய சரியான பொருள் இதுதான்: கொடுப்பாரை விரும்பாது கொடுப்பாரின் பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்யான தழுவலானது இருட்டறையில் திருடன் ஒருவன் பிறரது பணத்தைத் தழுவி மகிழ்வதை ஒக்கும்.

நிறுவுதல்:

விலைமாதர் என்று இக்காலத்தில் குறிப்பிடப்படும் பொருட்பெண்டிரின் தன்மைகளைப் பற்றி வரைவின் மகளிர் என்ற அதிகாரத்தில் கூறுகிறார் வள்ளுவர். வள்ளுவர் கூறும் பொருட்பெண்டிரின் தன்மைகளாவன:

1) இவர்கள் மனதளவில் உண்மையாக யாரையும் விரும்புவதில்லை. இவர்கள் விரும்புவதெல்லாம் பிறரிடம் உள்ள பொருள்வளத்தைத் தான்.

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் - குறள்: 911.

2) பிறரால் தனக்குக் கிடைக்கும் பயனின் அளவினை அறிந்துகொண்டு அதற்கேற்ப அவரிடம் இனிமையாகப் பழகும் இயல்புடையவர்கள் இப் பெண்கள்.

பயன்தூக்கி பண்புரைக்கும் பண்பில் மகளிர் - குறள் : 912.

3) இவர்கள் மனம் இருவகையாகச் செயல்படும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது மற்றும் செய்வது இவர்களுடைய பழக்கமாகும். இதனால் தான் இவரை 'இருமனப் பெண்டிர்' என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் - குறள்: 920

பொருட்பெண்டிர் தமது மனதில் உள்ள உண்மையான எண்ணத்தினை மறைத்து அதற்கு மாறாக செயல்படுவதால் அவர்களைத் திருடனுடன் ஒப்பிடுகிறார் வள்ளுவர். திருடன் ஒருவன் இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்குத் திருடச் செல்கிறான். அங்கே பெரும் செல்வத்தைக் காண்கிறான். அச் செல்வம் முழுவதையும் தான் அடையப் போகிறோம் என்று எண்ணி அதைக் கட்டிப் பிடித்து இருட்டிலே மகிழ்கிறான். திருடனுடைய இந்தச் செயலை பொருட்பெண்டிரின் செயலுடன் ஒப்பிடுகிறார் வள்ளுவர்.

பொருட்பெண்டிரின் கைகள் புறத்தே ஒரு ஆண்மகனைக் கட்டித் தழுவிக் கொண்டிருக்கும். ஆனால் அவரது மனமோ ஒரு திருடனைப் போல அகத்தே அந்த ஆண்மகனின் செல்வத்தினைக் கட்டிப்பிடித்துத் தான் அடையப் போகிறோம் என்று எண்ணி மகிழ்ந்திருக்கும். இத்தகைய பொருட்பெண்டிரின் பொய்யான தழுவலுக்கு ஆளாகி பொருள் செல்வத்துடன் மானத்தையும் இழந்து துன்பத்திற்கு ஆளாக வேண்டாம் என்று இக் குறள் மூலம் எச்சரிக்கை விடுக்கிறார் வள்ளுவர்.
------------------------------------------------------------------------------------

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

பெய்யெனப் பெய்யு மழை?

குறள்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.
                                                     -- குறள் எண்: 55

தற்போதைய பொருட்கள்:

பரிமேலழகர் உரை: பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள், பெய் என்று சொல்ல மழை பெய்யும்.

கலைஞர் உரை: கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.

மு.வ உரை: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

சாலமன் பாப்பையா உரை: பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

தவறுகள்:

மேற்காணும் உரைகளே அன்றி இணையத்தில் பல உரைகள் காணக் கிடைத்தாலும் அவற்றை இங்கே விரிக்கப் போவதில்லை. இந்த நான்கு உரைகளில் கலைஞர் உரை தவிர மற்ற உரைகள் யாவும் ஒரே கருத்தையே கூறி இருக்கின்றன. இவர்கள் உரை கூறும் முன்னர் திருவள்ளுவரின் நுண்மாண் நுழைபுலத்தை ஒருவேளை நினைவுகூர மறந்து விட்டார்களா இல்லை வள்ளுவரின் மதிப்பினைக் குறைக்க வேண்டி இவ்வாறு செய்துள்ளனரா எனப் புரியவில்லை. ஏனென்றால் இந்த விளக்க உரை நடைமுறைக்குச் சற்றும் பொருந்தாத ஒன்று என்பதை நாம் நன்கு அறிவோம். இவ் உரைகளில் உள்ள தவறு என்ன என்று காணலாம்.

இக் குறளின் முதல் அடியில் ஒரு பெண் திருமணத்திற்குப் பின்னர் தனது கணவனையே தெய்வமாகத் தொழ வேண்டும் என்ற கருத்து புலப்படுகிறது. இது நடைமுறையில் சாத்தியமா என்றால் சாத்தியமே ஆகும். ஏனென்றால் கணவனைத் தெய்வமாக எண்ணித் தொழுவது என்பது அவனது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் மனைவி ஆனவள் தனது முழுமையான ஒத்துழைப்பு அதாவது ஆதரவு அளித்தல் ஆகும். இதை இன்றளவும் பல பெண்கள் செய்துகொண்டு தான் உள்ளனர். செய்யாதவர்களைப் பற்றியோ செய்ய விரும்பாதவர்களைப் பற்றியோ இங்கே நமக்குக் கவலையில்லை. ஆனால் அவர்கள் விரும்பினால் இது சாத்தியம் தான் என்பதையே இங்கே இக் கட்டுரை நிறுவ முயல்கிறது.

ஆனால் இரண்டாம் அடியில் வரும் கருத்து மிகவும் சிக்கலானது என்பதுடன் வேடிக்கையாகவும் அமைந்து விட்டது. கணவனையே தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் மேகத்தைப் பார்த்து 'பெய்' என ஆணையிட்டால் மழை உடனே பெய்யும் என்ற கருத்து இரண்டாம் அடிக்குக் கூறப்படுகிறது. இது நடைமுறையில் சாத்தியமா என்றால் ஒருபோதும் இல்லை. ஏனென்றால் இக் கருத்து அறிவியலுக்கு முற்றிலும் புறம்பானது. இதைத் திருவள்ளுவரும் அறிவார். அவ்வாறு இருக்க, வள்ளுவர் இக் கருத்தினைக் கூறியுள்ளதாக இவர்கள் விளக்க உரை இயற்றினால் அது வள்ளுவருக்குப் பெருமை சேர்க்காது. இப்படி வள்ளுவரை முட்டாளாகக் காட்டுவதில் யாருக்கு மகிழ்ச்சியோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் மிகவும் கண்டிக்கப் பட வேண்டியவர்கள். கலைஞரின் உரையோ குறளுடன் சற்றும் ஒட்டாமல் இருக்கிறது. இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். அதைப் பற்றி கீழே காணலாம்.

திருத்தம்:

இரண்டாம் அடியில் வரும் மழை என்ற சொல்லுக்குப் பதிலாக மிழை என்ற சொல் வரவேண்டும். இதுவே இங்கு தேவையான திருத்தமாகும். இரண்டாம் அடியினைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.

பெய்யெனப் பெய்யு மிழை = பெய்+என+பெய்யும்+இழை

இதில் வரும் 'பெய்' என்பதற்கு 'அணி' என்றும் 'இழை' என்பதற்கு 'அணிகலன்' என்றும் 'எழு' என்பதற்கு 'தொடங்கு' என்றும் பொருளாகும். (சான்று: கழகத் தமிழ்க் கையகராதி, திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.) இனி இக் குறளின் திருந்திய சரியான பொருளானது ' தெய்வத்தைக் கூட தொழாமல் கணவனையே தொழுது (தனது வேலைகளைத்) தொடங்கும் பெண்ணானவள் (கட்டிய கணவன் கொணர்ந்து தந்து) 'அணிக' என்று கூற அணிகலனை அணிந்துகொள்வாள்.'

நிறுவுதல்:

இக் குறள் வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தின் கீழ் அமைந்துள்ளது. ஒரு சிறந்த வாழ்க்கைத் துணையானவள் எவ்வாறு தனது புகுந்த வீட்டிற்கு ஏற்றாற் போல வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதைப் பத்து குறள்களில் விளக்க முற்படுகிறது இந்த அதிகாரம். தனது கணவனின் பொருள் வளத்திற்கு ஏற்றாற் போல வாழ்க்கை நடத்துபவளே சிறந்த வாழ்க்கைத் துணை என்று கூறுகிறது இந்த அதிகாரத்தின் முதல் பாடல்.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

பொருட்செல்வம் இன்றி யாரும் இல்வாழ்க்கை நடத்த இயலாத நிலையில் கணவனின் பொருள்வளம் பற்றிய அறிவு மனைவிக்குக் கண்டிப்பாகத் தேவை. அதை அறிந்து கொள்வதுடன் அதற்கேற்றாற் போல குடும்பத்தைச் சிக்கனமான முறையில் நடத்திச் செல்ல வேண்டியதும் மனைவியின் கடமை ஆகும். பொதுவாக இல்வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத பொருட்கள் மூன்றே மூன்று தான். அவை: உணவு, உடை, உறைவிடம் ஆகும். இவை தவிர தோடு, மூக்குத்தி, கைவளை, மார்பாரம் முதலான அணிகலன்கள் யாவும்  ஆடம்பரப் பொருட்களே ஆகும். ஆடம்பரமாகவே இருந்தாலும் இவற்றை மனைவிக்கு வாங்கித் தந்து அவளை அழகாக்கிப் பார்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு கணவனின் ஆசை தான். ஆனால் இந்த ஆசையை நிறைவேற்ற விடாமல் ஒரு ஏக்கமாகவே வைத்திருப்பது அவனது பொருள்வளம் அதாவது வருமானமே ஆகும்.

கணவனின் பொருள்வளத்தை அறிந்துகொண்டாலும் எல்லா இல்லத்தரசிகளும் கணவனிடம் 'அணிகலன்' வேண்டும் எனத் தொல்லை கொடுக்காமல் இருப்பதில்லை. சிலர் கணவனைக் கேட்காமல் தானே வாங்கிக் கொண்டு பின்னர் கணவனுக்குத் தெரிவிக்கின்றனர். பலர் கணவனை வற்புறுத்தியே பெற்றுக்கொள்கின்றனர். என்றால் அணிகலனுக்காக கணவனை எவ்வகையிலும் வற்புறுத்தாத பெண்கள் இவ் உலகில் இல்லையா?. என்ற கேள்வி நம்முள் எழுகிறது. இக் கேள்விக்கு 'இருக்கிறார்கள்' என்று இக் குறளின் மூலம் விடை பகர்கிறார் வள்ளுவர்.

' இப் பெண்கள் தெய்வத்தைத் தொழுவதில்லை; மாறாக தமது கணவனையே தொழுது தமது இல்லறக் கடமைகளைச் செய்யத் தொடங்குகிறார்கள். புதிய அணிகலன்களை கணவன் மகிழ்ச்சியுடன் கொண்டுவந்து கொடுத்து 'அணிந்துகொள்' எனக் கூறினால் மட்டுமே தாம் அணிந்து மகிழும் பண்பினர் இவர்கள். இவர்களே சிறந்த வாழ்க்கைத் துணைநலம் ஆவர்.' என்கிறார் வள்ளுவர்.

சரியான குறள்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மிழை.
.......................................................................................................................