வெள்ளி, 30 ஜூலை, 2010

ஊர் இரண்டுபட்டால்

பழமொழி:

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

தற்போதைய பொருள்:

'ஒரு ஊரைச் சேர்ந்த மக்கள் இரண்டு பிரிவானால் கூத்தாடிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவர்.'

தவறு:

முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இந்த தொடர் ஒரு பழமொழியே அல்ல; ஒரு விடுமொழி என்னும் உண்மையை. விடுமொழி என்றால் என்ன என்று காணும் முன்னர் இத் தொடருக்குக் கூறப்படும் தற்போதைய பொருள் எவ்வாறு தவறாகும் என்று பார்ப்போம். பொதுவாக ஒரு ஊர் என்றாலே அங்கே பலதரப்பட்ட மக்களும் வாழ்வார்கள். ஒரே ஊரில் வாழ்ந்தாலும் இம் மக்கள் சாதி, மதம், பொருளாதாரம் மற்றும் மொழி போன்றவற்றால் மற்றவர்களிடமிருந்து பிரிந்தே வாழ்கின்றனர். மனிதர்களுடைய இந்தப் பிரிவினை எண்ணங்களை தனக்குச் சாதகமாக இன்றுவரையில் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது யாரென்றால் அது அரசியல்வாதியாகத் தான் இருக்கும். இந்த அரசியல்வாதிகளின் வேலை மக்களைப் பிரிப்பது அல்ல; ஏற்கெனவே பிரிந்திருக்கும் மக்களை எக்காரணம் கொண்டும் ஒன்றுசேர விடாமல் தடுப்பதே ஆகும். ஏனென்றால் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் அது மிகப் பெரிய ஆற்றலாகிவிடும். அந்த ஆற்றலை எதிர்த்து நிற்க எந்த அரசியல்வாதியாலும் முடியாது. இறுதியில் அரசியல்வாதிகள் மண்ணைக் கவ்வ நேரிடும். அதனால் தான் அரசியல்வாதிகள் அனைவரும் மக்கள் ஒற்றுமையாகக் கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இது நாம் அனைவரும் நன்கு அறிந்த நடைமுறை உண்மை.

இப்போது பழமொழிக்கு வருவோம். ஒரு ஊர் எப்போது ஏன் இரண்டு படும்?. மேலே நாம் கண்ட சாதி, மதம், பொருளாதாரம், மொழி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு/பல காரணத்தின்/ காரணங்களின் அடிப்படையில் ஊர்மக்கள் இரண்டாகலாம்; மூன்றாகலாம்; நான்காகலாம்; இன்னும் எவ்வளவோ பிரிவுகளாகலாம். இதை யாரும் பிரிக்க வேண்டிய அவசியமில்லை. சாதி மத அடிப்படையிலான பிரிவினை எண்ணம் என்பது மக்களின் குருதியில் வேரூன்றிப் போய்விட்டது. நமது முன்னோர்கள் எவ்வளவோ முயன்றும் பிரிவினை எண்ணத்தை அகற்றுவதில் முழுவெற்றி அடைய முடியவில்லை. திருமணம் தொடங்கி அரசாங்க வேலை வரையிலும் இன்று சாதி மதப் பேய்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இப்படி ஏற்கெனவே சாதி மதப் பாகுபாட்டால் பலவாறாகப் பிளவுபட்டுக் கிடக்கும் மக்களை ஏன் இரண்டாக்க வேண்டும்?. அதுமட்டுமின்றி இது சாத்தியமும் அல்ல; ஏனென்றால் ஒற்றுமையாக இருப்பவர்களைத் தானே பிரிக்க முடியும்?. எனவே 'ஊர்மக்கள் இரண்டு பிரிவானால்' என்ற விளக்கமே தவறு என்பதை உணரலாம்.  

இனி 'கூத்தாடிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி' என்பது எவ்வாறு தவறு என்பதை ஆராயலாம். அதற்குமுன் இங்கே ஒரு உண்மைக் கதையினையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு ஊரில் ஒரு சாதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்துவந்த படியால் இவ் ஊரில் ஒரே ஒரு அம்மன் கோவில் மட்டுமே இருந்து வந்தது. ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இக் கோவிலுக்குத் திருவிழா நடத்தி கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து வந்தனர். ஒருமுறை ஊர்த்தலைவரின் மகன்களுக்குள் நிகழ்ந்த பிணக்கு காரணமாக அவ் ஊர்மக்கள் இரண்டு பிரிவானார்கள். இந் நிலையில் அவ் ஊரில் திருவிழாவும் வந்தது. அப்போது இந்த இரண்டு பிரிவினருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு பல மண்டைகள் உடைய கலைநிகழ்ச்சிகள் நடத்த வந்திருந்த கூத்தாடிகள் உயிர் பயத்தில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டனர். இப்போது சொல்லுங்கள் இந்த ஊர் இரண்டு பட்டதால் கூத்தாடிகள் திண்டாடினார்களா இல்லை கொண்டாடினார்களா என்று. பெரும்பாலான சிற்றூர்களில் இப்படித் தான் நடக்கிறது. சில சிற்றூர்களில் ஒரு பிரிவினர் அமைதியுடன் விட்டுக் கொடுக்க ஆண்டுதோறும் அங்கே எப்போதும்போல திருவிழாக்கள் நடக்கிறது. இதில் கூத்தாடிக்கு எங்கே இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கிறது?. அதுமட்டுமின்றி பழமொழியில் ' கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்று தான் சொல்லப்பட்டுள்ளது. கொண்டாட்டம் என்றால் 'இரட்டிப்பு மகிழ்ச்சி' என்று வலிந்து பொருள் கொள்வது தவறே ஆகும். இதிலிருந்து இப் பழமொழிக்குக் கூறப்படும் மேற்காணும் பொருளானது முற்றிலும் தவறானது என்பது தெரிய வருகிறது.

திருத்தம்:

மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். அது என்ன? ' என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்குப் பதில் 'பல்லும் நாக்கும்' ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

நிறுவுதல்:

விடுகதைகளும் பழமொழிகளும் நாட்டுப்புற மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை என்பதை நாம் நன்கு அறிவோம். விடுகதைகளுக்கு என்று ஒரு தனிவடிவமும் பழமொழிகளுக்கென்று ஒரு தனி வடிவமும் உண்டு. என்றாலும் சில தொடர்களில் இவை இரண்டும் ஒன்றே போலத் தோன்றுவதும் உண்டு. இதற்குக் காரணம் விடுகதைகளில் வருகின்ற கேள்விகளான 'அவன் யார்?, அது என்ன?, அவள் யார்?' போன்றவை அவற்றில் விடுபட்டிருப்பதே ஆகும். இத்தகைய தொடர்களே 'விடுமொழிகள்' என்று அழைக்கப்படும். இந்த விடுமொழிகளில் ஒன்று தான் மேற்கண்ட தொடர் ஆகும். இதுபோலப் பல விடுமொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே காட்டப்பட்டு உள்ளன.

'எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.'
'இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.'
'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.'

இனி நாம் மேற்கொண்டிருக்கும் விடுமொழி எவ்வாறு 'பல்லையும் நாக்கையும்' குறிக்கும் என்று பார்ப்போம். மனிதரின் வாய்க்குள் பற்கள் இரண்டு வரிசைகளாக (மேல், கீழ்) 32 எண்ணிக்கையில் அமைந்தவை என்பதை நாம் அறிவோம். பொதுவாக நாம் வாய் மூடி இருக்கும்போது இந்த இரண்டு வரிசைப் பற்களும் ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொண்டு ஒரு குழுமமாக இருக்கும். அப்போது இந்தப் பற்களுக்குப் பின்னால் உள்ள நாக்கோ மிக அமைதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும். இங்கே இந்த நாக்கு தான் கூத்தாடி ஆகும். இரண்டு வரிசைகளிலும் உள்ள 32 பற்களின் ஒருங்கிணைந்த குழுமம் தான் ஊர் ஆகும். இந்த ஊர் இரண்டாகும்போது அதாவது மேல்வரிசையும் கீழ்வரிசையும் பிரிந்து வாய் திறக்கும்போது இந்த நாக்கு ஆகிய கூத்தாடி ஆடத் துவங்கிவிடும். அதன் ஆட்டம் பேசுவதற்காகவோ உணவைச் சுவைப்பதற்காகவோ வேறு எதற்காகவோ இருக்கலாம். ஆக மொத்தம் பற்குழுமம் ஆகிய  ஊர் இரண்டு பட்டால்தான் நாக்கு ஆகிய கூத்தாடிக்குக் கொண்டாட்டமாக இருக்கும். இந்த நடைமுறை உண்மையினை உருவகமாக்கி அழகான ஒரு விடுகதையாகப் புனைந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இந்த விடுகதையே நாளடைவில் தனது 'அது என்ன?' என்ற கேள்வித்தொடரினை இழந்து பழமொழியாகி விட்டது.
...............................................வாழ்க தமிழ்!.............................................

இக் கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.

வெள்ளி, 23 ஜூலை, 2010

நுதல் என்றால் என்ன?

முன்னுரை:

நுதல் என்னும் சொல் சங்க காலத்தில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு இன்று வழக்கிழந்த நிலையில் உள்ள பல சொற்களுள் ஒன்றாகும். இச் சொல்லுக்குச் சில பொருட்களை தற்கால அகராதிகள் கூறி இருந்தாலும் அப் பொருட்கள் பல இடங்களில் குறிப்பாக பெண்களைப் பொருத்த மட்டில் பொருந்தாத நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறு சில பொருட்களும் உள்ள நிலையினையே எடுத்துக் காட்டுகிறது.  இக் கட்டுரையில் இச் சொல் குறிக்கும் வேறு பொருட்களைப் பற்றிக் காணலாம்.

தற்போதைய பொருட்கள்:

நுதல் என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இணையத் தமிழ்ப் பேரகராதி: சொல், நெற்றி, புருவம், தலை, மேலிடம்.
கழகத் தமிழ்க் கையகராதி: நெற்றி, தலை, புருவம், சொல்.


பொருள் பொருந்தாமை:

மேற்காணும் பொருட்களில் ஏதேனும் ஒரு பொருளாவது கீழ்க்காணும் பாடல்களில் பொருந்துகின்றதா என்று பார்ப்போம்.

ஒள் நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67
பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே.- ஐங்கு-55
ஒள் நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து -ஐங்கு.107
என் நுதல் பசப்பதுவே. - ஐங்கு.222
திருநுதல் பசப்பவும் - ஐங்கு.230
வாள்நுதல் பசப்ப - ஐங்கு.423
ஒள்நுதல் பசப்பது எவன்கொல் - ஐங்கு.219
ஒள்நுதல் பசத்தல் - ஐங்கு.225
நல்நுதல் பசப்பவும் - ஐங்கு.227
நல்நுதல் பசத்தல் - ஐங்கு.234
ஒள்நுதல் பசப்ப - ஐங்கு.424
சுடர்நுதல் பசலை - கலி.125
வாள்நுதல் பசப்பு ஊர - கலி.127
ஆய்நுதல் பசப்பே - கலி.144
பாராட்டாக்கால் பசக்கும் நுதல் - கலி.25
நுதல் ஊரும் பசப்பு - கலி.28
பசந்தன்று நுதல் - கலி.36
நுதல் பசப்பு ஊர - கலி.99. அக.-205

மேற்காணும் பாடல்கள் அனைத்தும் காதலி அழுதுநின்ற நிலையைக் கூறுகின்றன. பசப்பு, பசத்தல், பசலை ஆகிய சொற்கள் யாவும் அழுகையைக் குறிக்கும் என்று ஏற்கெனவே நாம் பசப்பு என்றால் என்ன? என்ற கட்டுரையில் ஆய்வுசெய்து நிறுவியுள்ளோம். இந் நிலையில், அழுகையுடன் தொடர்புடைய உறுப்பாக மேற்காணும் பாடல்கள் அனைத்திலும் குறிப்படப்படும் 'நுதல்' என்ற சொல்லுக்குப் பொருளாக நெற்றியோ புருவமோ தலையோ பொருந்தாது. ஏனென்றால் நெற்றியோ புருவமோ தலையோ அழுவதில்லை.

அடுத்து 'சிறுநுதல்' என்ற சொல்லானது ஐங்குறுநூறு.394, 179. குறுந்தொகை-129. அகநானூறு.-57,334, 307. புறநானூறு.-166 ஆகிய இடங்களில் பயின்று வந்துள்ளது. சிறு என்றால் சிறிய அளவினது என்ற பொருள்நிலையில் இங்கும் நுதல் என்னும் சொல்லுக்கு முற்சொன்ன ஐந்து பொருட்களும் பொருந்தாது. இது எவ்வாறெனில் நெற்றியும் தலையும் அகன்ற பரப்புடையவை; புருவமோ நீளமானது ஆகும். சொல்லுக்கும் மேலிடத்திற்கும் சிறுமைப் பண்பு பொருந்தாது.

அடுத்து சுடர்நுதல், வாள்நுதல், ஒள் நுதல், நறுநுதல் ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களிலும் கீழ்க்கணக்கு நூல்களிலும் பல இடங்களில் பயின்று வந்துள்ளன. இச் சொற்களில் நுதல் என்னும் சொல்லுடன் அடைமொழியாய் வருகின்ற சுடர், வாள், ஒள் ஆகிய சொற்கள் யாவும் ஒளிரும் பண்பைக் குறிப்பவை என்று நாம் நன்கு அறிவோம். அதேபோல நறு (நறிய) என்னும் சொல்லும் ஒளிரும் பண்பையே குறிக்கும் என்று ஏற்கெனவே நாம் கூந்தலுக்கு மணம் உண்டா என்ற கட்டுரையில் ஆய்வு செய்து நிறுவியுள்ளோம். இந்த நான்கு சொற்களும் ஒளிரும் பண்பையே குறிக்கின்ற நிலையில் இவற்றை அடைமொழியாகக் கொண்ட நுதல் என்னும் சொல்லுக்குப் பொருளாக சொல், நெற்றி, புருவம், தலை, மேலிடம் என்ற பொருட்களில் எதுவும் பொருந்தாது. ஏனென்றால் இவற்றில் எதற்குமே ஒளிரும் பண்பு இல்லை.

இவற்றில் இருந்து நுதல் என்னும் சொல்லுக்கு அகராதிகள் கூறியுள்ள பொருட்கள் நீங்கலாக பிற பொருட்களும் உண்டு என்று தெளியலாம்.

புதிய பொருட்கள்:

நுதல் என்னும் பெயர்ச்சொல் குறிக்கும் புதிய பொருள் 'கண்விழி ' ஆகும்.

நிறுவுதல்:

நுதல் என்னும் சொல்லானது எவ்வாறு கண்விழியினைக் குறிக்கும் என்பதை இங்கே பார்ப்போம். உடல் உறுப்புக்களில் கண்விழிக்கு சில சிறப்புப் பண்புகள் உண்டு. அவை: சிறுமைப் பண்பு, ஒளிரும் பண்பு மற்றும் கலங்கி நீர்வார்க்கும் (அழும்) பண்பு ஆகியன. இந்தப் பண்புகளை விளக்கும் சங்க இலக்கிய மற்றும் கீழ்க்கணக்குப் பாடல்களைக் கீழே காணலாம்.

சிறுமைப் பண்பு:

சிறுநுதல் - ஐங்கு.394, 179. குறு-129. அக.-57,334, 307. புற.-166.

ஒளிரும் பண்பு:

ஒள் நுதல் - ஐங்கு.73, 168,123,449,322, கலி - 105,110,35,142,147,4,97. குறு-167,22,292,70,273. அக-5,50,84,116,306,325,344. நற்.-77,240,283,339,377. பரிபா.தி-1. பதிற்.-30,48,57,74,81. புற.-25. குறள்-1088,1240. கார்.-34. நாலடி.-379,380
சுடர்நுதல் - ஐங்கு.94, 474, 466,254,375,443. கலி-13,58. அக.-192. குறி.-182. நற்.-208,245. பதிற்.-16,51,70. பெரும்பாண்.-385. பட்டின.-21
வாள்நுதல் - ஐங்கு.404, 408,420,447. குறு-135. அக.-9,33,179,230,386. பரிபா.-8. பதிற்.-19,38,89. புற.-105,211,314. நான்மணி.-22
நறுநுதல் - கலி.105,17,37,47,92,12,14,21,53,60,61. குறு.-259,323,362. அக.-43,90,93,173,338,238. நற்.-50. பரிபா.-11. பதிற்.-65. பெரும்பாண்.-303. நாலடி.-381. கார்.-21.

கலங்கி நீர்வார்க்கும் (அழும்) பண்பு:

ஒள் நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67
பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே.- ஐங்கு-55
நலம்பெறு சுடர்நுதல் தேம்ப - ஐங்கு.56
ஒள் நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து -ஐங்கு.107
என் நுதல் பசப்பதுவே. - ஐங்கு.222
திருநுதல் பசப்பவும் - ஐங்கு.230
வாள்நுதல் பசப்ப - ஐங்கு.423
ஒள்நுதல் பசப்பது எவன்கொல் - ஐங்கு.219
ஒள்நுதல் பசத்தல் - ஐங்கு.225
நல்நுதல் பசப்பவும் - ஐங்கு.227
நல்நுதல் பசத்தல் - ஐங்கு.234
ஒள்நுதல் பசப்ப - ஐங்கு.424
சுடர்நுதல் பசலை - கலி.125
வாள்நுதல் பசப்பு ஊர - கலி.127
ஆய்நுதல் பசப்பே - கலி.144
பாராட்டாக்கால் பசக்கும் நுதல் - கலி.25
நுதல் ஊரும் பசப்பு - கலி.28
பசந்தன்று நுதல் - கலி.36
நுதல் பசப்பு ஊர - கலி.99. அக.-205
நுதல் பசப்பு இவர்ந்து - குறு.-185
நுதல் ஊர்தரும் பசப்பே - குறு.-205
நல்நுதல் பசலை - குறு.-48
பசந்தன்று நுதலே - குறு.-87
நல்நுதல் பசப்பவும் - அக.-77,85
ஒள்நுதல் பசப்பே - அக.-102
திருநுதல் பசப்ப - அக.-186
நுதல் பசந்தன்றே - அக.-227
ஒள் நுதல் பசலையும் - அக.-251
சிறு நுதல் பசந்து - அக.-307
நுதல் பாய பசலை - அக.-317
திருநுதல் பசப்பே - அக.-354
பசந்தன்று கண்டிசின் நுதலே - அக.-376
பசலை பாய்ந்த நுதலேன் - அக.-135
பசந்தன்று நுதலும் - அக.-95
நறுநுதல் பசத்தல் - நற்.-1
நுதல் கவின் அழிக்கும் பசலையும் - நற்.-73
சுடர்புரை திருநுதல் பசப்ப - நற்.-108
நுதலும் பசலை பாயின்று - நற்.-133
நல்நுதல் பசப்பினும் - நற்.-151
திருநுதல் பாய பசப்பே - நற்.-167
நுதலே ..... பசப்பு ஊர்ந்தன்றே - நற்.-197
நுதல் பரந்த பசலை - நற்.-288
நல்நுதல் பசந்த - நற்.-322
பசலை பாய்தரு நுதலும் - நற்.-368
பசந்தது பைந்தொடிப் பேதை நுதல் - குறள்.-1238

வெள்ளைக்கண் கம்புள்:

ஐங்குறுநூற்றில் 85 ஆம் பாடலில் ' வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை' என்ற வரி உள்ளது. இதில் குறிப்பிடப்படும் கம்புள் என்ற பறவைக்கு வெள்ளை நிறத்தில் நெற்றியோ தலையோ இருந்ததாகக் கொள்ளலாமா என்றால் கொள்ள முடியாது. ஏனென்றால் வெள்ளை நிறத் தலையோ நெற்றியோ பறவை இனங்களில் பரவலாகக் காணப்படும் பண்பாகும். அன்றியும் ஒரு பறவையைப் பாடலில் குறிப்பிடும் புலவர் அதன் சிறப்புத் தன்மையையே கூறுவார் என்பதால் நுதல் என்ற சொல் இங்கும் நெற்றி அல்லது தலையைக் குறித்து வந்திருக்காது என்பது தெளிவு.

அதே சமயம் வெள்ளை நிறக் கண்களானது பறவை இனங்களில் அரிதாகவே காணப்படும் பண்பாகும்.  பறவைக் குடும்பங்களில் ஜோஸ்டெரோபிடே என்ற குடும்பம் ஒன்று உண்டு. இக் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்துப் பறவைகளின் கண்களைச் சுற்றிலும் பெரிய வெள்ளை நிற வளையம் ஒன்று காணப்படுகிறது. இது இப் பறவைகளின் தனிச் சிறப்பாகும். இக் குடும்பத்தைச் சேர்ந்த பறவை ஒன்றின் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இப் பறவைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விக்கிபீடியாவில் தேடலாம். ஆக இங்கும் 'நுதல்' என்பது 'கண்விழி' என்ற பொருளில் தான் வந்துள்ளது என்பது பெறப்படுகிறது. கண்களைச் சுற்றிலும் வெள்ளை நிறத்தில் பெரிய வளையத்தைக் கொண்ட இப் பறவைகளை சங்க காலத்தில் கம்புள் என்று அழைத்தனர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

முடிவுரை:

இன்றைய தமிழ் அகராதிகளில் பல சொற்களுக்குத் தவறான பொருட்கள் கொடுக்கப் பட்டுள்ளன என்பதை நாம் முன்னரே கண்டுள்ளோம். இந்த அகராதிப் பொருட்களின் அடிப்படையில் பல சங்க இலக்கியப் பாடல்களில் பயின்றுவரும் 'நறுநுதல்' என்ற சொல்லுக்கு' மணம் வீசும் நெற்றி' என்றே உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர். ஆனால் நெற்றி எங்காவது மணம் வீசுமா?. சந்தனம் பூசினாலும் இன்ன பிற திரவியங்களைப் பூசிக் கொண்டாலும் நெற்றி சிறிது நேரம் மட்டும் தானே மணக்கும்; மணம் வீசிக்கொண்டே இருக்க முடியுமா?. அதிலும் பெண்கள் நெற்றியில் எப்போதும் சந்தனத்தையோ வாசனைத் திரவியங்களையோ பூசிக் கொண்டே இருப்பார்களா?. ஒருவரிடம் இருந்து மணம் வீசுகிறது என்றால் அது அவருடைய நெற்றியிலிருந்து தான் வீசுகிறது என்று எவ்வாறு உறுதியாகச் சொல்ல முடியும்?. என்றெல்லாம் உரையாசிரியர்கள் சிந்திக்காமல் உரை எழுதியுள்ளது வேதனையளிக்கிறது. நாம் அறிந்தவரையில் பெண்கள் வாசனைத் திரவியங்களைத் தலைமுடியில் பூசிக் கொள்வார்கள்; சிலர் உடலெங்கும் (முகம் தவிர) பூசிக் கொள்வார்கள். இந் நிலையில் 'மணம் வீசும் நெற்றி' என்ற பொருள் எவ்வகையில் பொருத்தமாகும் அல்லது சாத்தியமாகும் என்று ஏன் உரையாசிரியர்கள் சிந்திக்கவில்லை என்பது புரியாமலே உள்ளது. எது எப்படியோ இனி 'நறுநுதல்' என்பது பாரதியார் சொன்னதுபோல் 'ஒளி படைத்த கண்'  ணையே குறிக்கும் என்பது தெளிவு.