வியாழன், 30 ஜூன், 2011

உப்புக்கும் காடிக்கும் கூற்று


குறள்:

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்புக்கும் காடிக்கும் கூற்று.
                            - குறள் எண்: 1050


தற்போதைய விளக்கங்கள்:


பரிமேலழகர் உரை: துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம். (மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப் பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி 'முற்றத் துறத்தலாவது துப்புரவு இல்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.)

பாவாணர் உரை:  துப்புரவு இல்லார் துவரத் துறவாமை-நுகர்ச்சிப் பொருள்களில்லாதார் உலகப் பற்றை முற்றத் துறக்கும் நிலைமையிருந்தும் அங்ஙனஞ் செய்யாதிருத்தல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று- பிறர் மனைகளிலுள்ள உப்பையும் புளித்த பழங்கஞ்சியையும் உண்டு ஒழித்தற்கேயாம். நுகர்ச்சிப் பொருள் ஒன்றுமில்லாதவர் மானமுள்ளவராயின் செய்யத் தக்கது உலகப்பற்றை முற்றத் துறத்தலே. ஏற்கெனவே உலகப் பொருளும் உறவினரும் இல்லாமையால், அவர் துறத்தற்கு எஞ்சி நிற்பது உடம்பொன்றே. ஆதலால், புறப்பற்றுத் தானாக நீங்கிய அவருக்கு அகப்பற்றை நீக்கும் துறவுநெறிச் செலவு எளிதாக இயலும். அதனால், இம்மையில் மானத்தைக் காத்தலொடு மறுமையிற் பெறற்கரிய வீடுபேறும் உண்டாம்.
அங்ஙனமிருந்தும், அதைச் செய்யாது பிறர் வீடுதொறும் சென்றிரந்து, வாயிற்கு
வெளியே அவரிடம் பழங் கஞ்சியை நாய்போலருந்தித் திரிவது, எத்துணை மடமையும் மானக்கேடுமான செயலாம் என்று ஆசிரியர் இரங்கிக் கூறியவாறு. கூற்றுவன் உயிர்கவர்தலை உயிருண்ணல் (குறள்,326) என்னும் வழக்குண்மையின், பழங் கஞ்சியுண்ணும் இரப்போரை அதற்குக் கூற்று என்றார். முற்றத் துறவாமையாவது துப்பிரவில்லாமையின் ஒருவாற்றாற் றுறந்தாராயினார் பின்னவற்றை மனத்தாற் றுறவாமை என்றுரைப்பது பொருந்தாது, துறவென்பது மனத்தால் துறத்தலேயாதலின்.
*Rev போப்.  **Unless the destitute will utterly themselves deny,*
*                      They cause their neighbour's salt and vinegar to die.
*
மு.வ: உரை:  நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.  
கலைஞர் உரை:  ஒழுங்குமுறையற்றதால்   வறுமையுற்றோர்,   முழுமையாகத்   தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும் தான் கேடு.
சாலமன் பாப்பையா உரை: உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.

உரைகளில் உள்ள குறைகள்:

மேலே கண்ட உரைகளேயன்றி இன்னும் பல உரைகள் இருந்தாலும் கட்டுரையின் விரிவஞ்சியும் அவ் உரைகள் யாவும் இவ் உரைகளில் ஏதேனும் ஒன்றைத் தழுவியே அமைந்துள்ளதாலும் அவை இங்கே கூறப்படவில்லை. இனி இவ் உரைகளில் உள்ள குறைகளைக் காண்போம்.

மேற்கண்ட உரைகள் அனைத்துமே கீழ்க்காணும் கருத்தை வலியுறுத்தி நிற்பதைக் காணலாம்.

' நுகரத்தக்க பொருள் ஏதும் இல்லாத வறியவர்கள் செய்யவேண்டிய ஒரே செயல் இல்வாழ்வைத் துறந்துவிட வேண்டும் அல்லது இறந்துவிட வேண்டும். ' என்பதே அக் கருத்தாகும். . முதலில் இக் கருத்து ஏற்புடையதா என்று காணலாம்.

பொருள் இல்லாமல் வறுமை நிலையில் இருக்கும் மக்களே! ஒன்று நீங்கள் இனி உங்கள் இல்வாழ்வினைத் துறந்து துறவறம் பூணுங்கள் அல்லது இறந்துபோய் விடுங்கள்' என்று வள்ளுவர் கூறுவதாக இவ் உரையாசிரியர்கள் இக் குறளுக்குப் பொருள் கூறுவது பேரதிர்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால், ஒரு மனிதன் எவ்வளவு துயரம் வந்தாலும் அதைக் கண்டு நகைத்து அத் துன்பத்தையே பயந்தோடச் செய்ய வேண்டும் (இடுக்கண் வருங்கால் நகுக) என்று துயரமான சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை ஊட்டிய ஒரு மாமேதையின் மேல் எவ்வளவு பெரிய பழியினை சுமத்தியுள்ளனர் இவ் உரையாசிரியர்கள். அப்பப்பா!

அதுமட்டுமின்றி, வறியவர்கள் துறவறம் பூணாவிட்டால், அவர்கள் உப்புக்கும் புளித்த கஞ்சிக்கும் எமனாக இருப்பார்களாம். என்ன கொடுமை!. யாருமே விரும்பாத புளித்துப் போன கஞ்சிக்கும் மிக எளிதாகக் கிடைக்கின்ற உப்புக்கும் வறியவன் எப்படி எமனாவான்?. வறியவர்கள் மேல் வள்ளுவருக்கு அப்படி ஏன் வெறுப்பு வரவேண்டும்?. மனித நேயத்தையும் ஒன்றும் இல்லாத வறியவர்களுக்குக் கொடுத்து உதவும் ஈகைக் குணத்தையும் போற்றிப் பாடிய எம் வள்ளுவனோ இக் கருத்தைக் கூறியிருக்க முடியும்?. ஒருக்காலும் இருக்காது!

இருந்தாலும் தங்களது கருத்தை நிலைநாட்ட அனைவரும் முயன்றளவுக்கு சப்பைக்கட்டுக கட்டியிருக்கிறார்கள். இதனால் யாருக்கு என்ன லாபம்?. வள்ளுவனின் மானத்தைக் கப்பலேற்றியதைத் தவிர!. இதுதான் உண்மையான கருத்தா? இதைத்தான் வள்ளுவர் கூறியிருப்பாரா?. என்று சற்றேனும் வேறு கோணத்தில் இவர்கள் சிந்தித்திருந்தால் வள்ளுவருக்கு இப் பழி ஏற்பட்டிருக்காது. இக் குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். அப் பிழை 'காடி' என்ற சொல்லில் தான் உள்ளது. அதைப் பற்றிக் காணலாம்.

திருந்திய குறள்:

'காடி' என்ற சொல்லுக்குப் பதிலாக 'சாடி' என்று வந்திருக்க வேண்டும். இனி திருந்திய குறள் இதுதான்:

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்புக்கும் சாடிக்கும் கூற்று.

இதன் பொருளானது: கெட்ட பழக்கங்களால் இன்பம் நுகர்ந்து சீரழிந்து வறுமைநிலையினை அடைந்தோர் இனியேனும் அக் கெட்ட பழக்கங்களை முற்றிலும் கைவிடவேண்டும். இல்லாவிட்டால், சாடியில் உள்ள உப்புடன் சேர்ந்த அழுக்கானது எப்படி அந்த உப்பினையும் கெடுத்து சாடியினையும் கெடுக்குமோ அதைப்போல அவனது கெட்ட பழக்கங்கள் அவனை அழிப்பதோடு நிற்காமல் அவனைச் சார்ந்துள்ள குடும்பத்தாரையும் அழிக்கின்ற எமனாக அமையும். 

நிறுவுதல்:

நல்குரவு என்னும் அதிகாரத்தில் வறுமையின் தன்மையினைப் பற்றிக் கூறும் வள்ளுவன் வறியவரிடத்தில் கெட்ட பழக்கங்கள் அறவே இருக்கக் கூடாது என்று பல குறள்களில் கூறுகிறார். இவ் அதிகாரத்தின் முதல் குறளில் இவ்வாறு கூறுகிறார்.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.  - 1041

இதன் பொருளானது: நுகர்பொருள் இன்மையான வறுமையை விடக் கொடியது யாதெனில் அவ் வறியவனிடத்தில் ஒழுக்கமின்மையே ஆகும். இது எப்படி என்று இன்னொரு குறளில் விளக்கம் கூறுகிறார்.

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.  - 1049

இங்கே நெருப்பு எனப்படுவது வயிற்றின் உள்நின்று உடற்றும் பசித்தீயாகும். நிரப்பு என்பது கெட்ட பழக்கங்களால் உண்டாகும் குற்ற உணர்வும் பின்விளைவும். இதன் பொருளானது: ' வயிற்றுக்குள்ளே பசித்தீ கனன்று எரிந்து கொண்டிருந்தாலும் வறியவனால் தூங்க முடியும். ஆனால் அவனது கெட்ட பழக்கங்களால் உண்டான பின்விளைவுகள் அவனது தூக்கத்தைக் கெடுக்கும்.'

இன்னொரு குறளில், ' நல் ஒழுக்கமில்லா வறியவனை அவனைப் பெற்ற தாயும் தனது பிள்ளையெனக் கருதாமல் பிறரைப் போலவே மதிப்பாள்.' என்று கூறுகிறார்.

அறஞ்சாரா நல்குரவு ஈன்ற  தாயானும்
பிறன்போல நோக்கப் படும். - 1047

இம் மூன்று குறள்களையும் நோக்கும்போது, வறியவனுக்குப் பொருள் இன்றியமையாதது என்றாலும் அதைவிட ஒழுக்கம் இன்றியமையாதது என்னும் கருத்தினை வள்ளுவர் வலியுறுத்திக் கூறுவதை அறியலாம்.

அதிகாரத்தின் இறுதிக் குறளில் வறியவன் இறுதிவரை கெட்ட பழக்கங்களைக் கைவிடாவிட்டால், அவனும் அழிந்து அவனைச் சார்ந்துள்ள குடும்பத்தினரும் அழிவர் என்று எச்சரிக்கிறார். இதற்கு உவமையாக உப்புச்சாடியைக் கூறுகிறார்.  சாடிக்குள் உள்ள உப்பில் சிறிதளவு கசடிருந்தாலும் அது உப்பின் இளகும் தன்மையால் மெல்லப்பரவி  உப்பு முழுவதையும் தொற்றிக் கெடுப்பதுடன் உப்பிருக்கும் சாடியையும் அரித்துக் கெடுத்து விடும். எனவே எச்சரிக்கை தேவை என்கிறார். உண்மை தானே!

........................................................தமிழ் வாழ்க!........................................