வெள்ளி, 18 நவம்பர், 2011

உலகியற்றியான் (வள்ளுவர் இறைவனை சபித்தாரா?)


குறள்: 

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற் றியான்
                          - எண்: 1062

தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.
மு.வ உரை: உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
சாலமன் பாப்பையா உரை: பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.

உரைத்தவறுகள்:

மேற்காணும் மூன்று உரைகளும் 'உலகியற்றியான்' என்னும் சொல்லுக்கு 'உலகைப் படைத்தவன்' என்றே பொருள் கூறுகின்றன. உலகைப் படைத்தவன் யார் என்றால் அது இறைவன் என்று அனைவருக்கும் தெரியும். அவ்வகையில் மேற்காணும் மூன்று உரைகளுமே உலகைப் படைத்த இறைவனுக்கு 'பரந்து கெடுக' என்று வள்ளுவர் சாபமிடுவது போன்ற தொனியில் விளக்கம் கூறியுள்ளன. இக் கருத்து சற்றேனும் ஏற்புடையதா?. இல்லை. ஒருபோதும் இல்லை.

ஏனென்றால் ஒரு மனிதன் தனது வறுமை நிலையினால் பிச்சை எடுத்துண்டு வாழ்கின்றான் என்றால் அதற்கு உலகைப் படைத்த இறைவன் எப்படிப் பொறுப்பாக முடியும்?. இவ் உலகில் அனைத்து உயிர்களையும் இறைவனே படைத்தான் என்றால் அவன் படைத்த அனைத்து உயிர்களிடத்திலும் ஒரே மாதிரித்தானே அன்பு செலுத்துவான். அப்படிச் செலுத்துவது தானே முறையென்று கூறப்படும். இறைவன் முன்னால் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமம் என்று தானே அனைத்து மதங்களுமே கூறுகின்றன. அப்படி இருக்க, ஒருவனுடைய ஏழ்மைக்கு இறைவன் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்விதத்திலும் அறமாகாது.

ஒருவரது ஏழ்மைக்கு இறைவன் பொறுப்பாகாத நிலையில் வள்ளுவர் இறைவனுக்கு சாபம் இடவேண்டிய தேவையும் இல்லை. அதுமட்டுமின்றி, கடவுள் வாழ்த்தில் இறைவனைப் புகழ்ந்த வள்ளுவர் ' இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்" என்று அவனது நன்மை தீமைகளுக்கு அப்பாற்பட்ட தன்மையைக் கூறுகிறார். அதன்படி வள்ளுவரது சாபமோ யாருடைய சாபமோ இறைவனைப் பற்றாது. இதை வள்ளுவரும் நன்கு அறிவார். எனவே இறைவனுக்குச் சாபமிடும் மதிகெட்ட செயலை அவர் ஒருபோதும் செய்திருக்க மாட்டார். இதிலிருந்து மேற்காணும் பொருள் விளக்கங்கள் தவறு என்பதை அறிந்து கொள்ளலாம்.

இப்பொருள் குளறுபடிக்குக் காரணம் 'உலகியற்றியான்' என்ற சொல்லுக்கு 'உலகைப் படைத்தவன்' என்று தவறாகப் பொருள் கொண்டதே ஆகும். இதன் உண்மையான பொருள் என்ன என்று கீழே காணலாம்.

திருந்திய பொருள்:

உண்மையில் 'உலகியற்றியான்' என்ற சொல் ஒரு நாட்டின் அரசனைக் குறிப்பதாகும். இது எவ்வாறெனில் 'உலகு' என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் இருந்தாலும் இங்கு இச்சொல் ஒரு நாட்டையே குறிக்கும்.

உலகு = நாடு
இயற்றுதல் = நடத்துதல், விதித்தல்

( ஆதாரம்: வின்சுலோ தமிழ் இணையப் பேரகராதி)

ஆக, உலகை இயற்றியவன் என்பது இங்கு ஒரு நாட்டை நடத்திச் செல்பவன் அல்லது ஒரு நாட்டிற்கு சட்டதிட்டங்கள் மற்றும் வரிகளை விதிப்பவன் என்ற முறையில் ஒரு அரசனையே குறிப்பதாகும்.

இனி இக்குறளின் திருந்திய பொருள் இதுதான்: " பிச்சை எடுத்தும் ஒருவன் (ஒரு நாட்டில்) உயிர்வாழ வேண்டுமானால் அந் நாட்டை நடத்திச் செல்கிற மன்னன் (பொருளை இழந்து உணவுக்காக) அலைந்து திரிந்து கெட்டொழியட்டும்." 

நிறுவுதல்:

ஒரு நாட்டில் பிச்சைக்காரர்கள் வாழ்வதற்கு முழுமுதல் காரணம் யார்?. உறுதியாக அந் நாட்டின் அரசனே அன்றோ?. ஆம், ஒரு நாட்டு மன்னன், தன் நாட்டு மக்களின் மீது ஏராளமான வரிகளை விதிப்பதாலும் கொடுங்கோலாட்சி புரிவதாலும் பொருள் வளம் இழந்தவர்கள் ஏழ்மையால் பிச்சை எடுத்துண்டு வாழும் நிலைக்குத் தள்ளப்படுவர். பொதுமக்களின் நலனை சற்றும் கருத்தில் கொள்ளாமல் தனது சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதிக வரி வசூலிக்கும்பொழுது அதைத் தாளமாட்டாமல் குடிமக்கள் வடிக்கும் கண்ணீர் அந் நாட்டு மன்னனின் செல்வத்தை அழிக்கும் கருவியாகும் என்று கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில் கூறுகிறார்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. - 555

இப்படியாக செல்வத்தை இழந்து அம் மன்னனும் வறுமை நிலையுற்று உணவுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கெட்டு ஒழியட்டும் என்று இக் குறளில் அவனுக்குச் சாபமிடுகிறார் வள்ளுவர்.

இதிலிருந்து இக் குறளில் வள்ளுவர் சாபமிடுவது பிச்சைக்காரனின் ஏழ்மை நிலைக்குக் காரணமான நாட்டு மன்னனையே அன்றி உலகைப் படைத்த இறைவனை அன்று என்பது உறுதி செய்யப்படுகிறது.

................................. வாழ்க தமிழ்!................................

11 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்லியிருப்பதே சரியாகத் தோன்றுகிறது. ஆராய்ச்சிக்கு என் பாராட்டுகள் :)

    பதிலளிநீக்கு
  2. அன்பின் திருத்தம்!

    தங்கள் விளக்கம் பொருத்தமாகயிருக்கிறது. மணக்குடவர் உரையும் பொருத்தமே!

    தொடர்ந்து எழுதுங்கள்!

    இரா.பானுகுமார்,
    சென்னை

    பதிலளிநீக்கு
  3. பானுகுமாரரே,

    சமணத்தை விளக்கும் பானுவே,

    எம்மதத்தையும் போற்றும் குமாரரே,

    மிக்க நன்றி.

    அன்புடன்,
    தி.பொ.ச.

    பதிலளிநீக்கு

  4. அதேபோல், கோயில் கோவில் இதில் எது சரி என்பதையும் விளக்கலாமே! நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் = கோய் + இல் = கள்ளுக்கடை / சாராயக்கடை

      கோவில் = கோ + இல் = ஆலயம், அரண்மனை.

      நீக்கு
  5. இறைவன், கடவுள் பற்றி வள்ளுவன் பாடியிருக்க வாய்ப்பில்லையே என்றே நான் ஐயமுற்றேன். உங்கள் உரை கண்டு தெளிந்தேன்..உலகியற்றியான் என்பதற்கு மிகச்சரியான விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.