சனி, 21 ஜனவரி, 2012

திருக்குறள் காட்டும் தேவர் யார்?


குறள்:

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான் - 1073

தற்போதைய விளக்கங்கள்:

கலைஞர் உரை: புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.
மு.வ உரை: கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை: தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.

உரைத்தவறுகள்:

மேற்காணும் மூன்று உரைகளிலுமே தேவர் என்ற சொல்லுக்கு வானுலகத்தவர்கள் என்ற பொருளைக் கொண்டுள்ளார்கள். மேலும் இத் தேவர்கள் தாம் நினைத்ததை உடனே செய்துவிடுவர் என்றும் இவர்களுக்கு நியமிப்பார் அல்லது கட்டுப்படுத்துவார் யாரும் இல்லை என்றும் மனம் போன போக்கில் நடப்பவர்கள் என்று கூறப்படுகின்றது. முதலில் தேவர்கள் அதாவது வானுலகத்தவர்கள் என்பதே  அறிவியலுக்குப் புறம்பான இதுவரை நிரூபிக்கப்படாத ஒரு கற்பனை என்பதை நாம் அறிவோம். அன்றியும், பல புராணங்களில் பேசப்படும் இத் தேவர்களுக்கு இந்திரன் என்ற தலைவன் உண்டென்றும் கூறப்படுகிறது. அங்ஙனம் இருக்க, இத் தேவர்கள் தம்மை நியமிப்பார் அல்லது கட்டுப்படுத்துவார் இன்றி தன்னிச்சையாய் செயல்படுவர் என்று இங்கே விளக்கம் கூறியிருப்பது தவறாகும். ஏனென்றால் புராணத்தின்படி, அனைத்து தேவர்களும் அவர்களின் தலைவனான இந்திரனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களே ஆகும். இந்திரனுடைய சொல்லை மீறி அவர்கள் தன்னிச்சையாய செயல்பட முடியாது. ஆனால் கயவர்களால் தன்னிச்சையாய் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி மனம் போன போக்கில் செயல்பட முடியும். அவ்வகையில், தேவர் - கயவர் என்ற ஒப்புமை தவறாக இருப்பதால், அதன் அடிப்படையில் அமைந்த மேற்காணும் விளக்கங்களும் தவறென்றே கொள்ளப்படும்.

மேலும் 'திருவள்ளுவர் சமய சார்பற்றவர்' என்னும் கருத்தானது ஆதிபகவன், இந்திரனே சாலும் கரி, செய்யவள் தவ்வை, மாமுகடி, தாமரைக் கண்ணான் போன்ற பல ஆய்வுக் கட்டுரைகளில் சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. இந் நிலையில், குறிப்பிட்ட சமய சார்புடையவரான தேவர்களைப் பற்றி இக்குறளில் மட்டும் திருவள்ளுவர் கூறியிருப்பாரா?. ஒருபோதும் மாட்டார். அன்றியும், ஒரு உவமையின் மூலம் ஒரு கருத்தைத் தெளிவாக்க விரும்பினால், மக்கள் நன்கு அறிந்த ஒரு பொருளை உவமையாகக் கூறினால் தான் விளக்கம் தெளிவாகப் புரியும். அதைவிடுத்து, 'வானுலகத்தில் வசிக்கும் தேவர்கள்' என்பது போன்ற இதுவரை யாரும் பார்த்திராத ஒரு கற்பனைப் படைப்பினை உவமையாகக் கூறினால் அவ் விளக்கமும் கற்பனையாக அமையுமே அன்றி தெளிவாக இராது. மேலும் இப்படி ஒரு கற்பனைப் படைப்பு வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு பெருமை சேர்க்காது என்பதால் வள்ளுவர் இக் குறளில் கயவர்களுக்கு உவமையாக வானுலகத் தேவர்களைக் குறித்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.

இக் குறளில் நேர்ந்த பொருள் தவறுகளுக்குக் காரணம், தேவர் என்ற சொல்லுக்குக் கூறப்பட்ட பொருளே ஆகும். உண்மையில் இச் சொல்லுக்கு வள்ளுவர் மேற்கொண்ட பொருள் எதுவாக இருக்கும்  என்பதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருக்குறள் காட்டும் தேவர் யார்?:

வள்ளுவர் 'தேவர்' என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை 'கயமை' என்னும் அதிகாரத்தின் துணை கொண்டு அறிய முயலலாம்.

1. கயமை என்னும் அதிகாரத்தில் முதலாவதாக கீழ்க்காணும் குறள் வருகிறது.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். - 1071.

இதில், கயவர்களை 'மனிதப்போலிகள்' என்று கூறுகிறார். கயவர்கள் உருவத்தால் மனிதர்களைப் போன்று இருந்தாலும் பண்புகளால் அவர்கள் மனிதர்களை ஒப்பாரல்லர் என்கிறார்.

இப்படி முதல் குறளிலேயே கயவர்களை மனிதருக்கு ஒப்பானவராகக் கூறிவிட்டதால், இதனை அடுத்து வரும் 1073 ஆம் குறளில் தேவர் என்ற சொல்லின் மூலம் அவர் மறுபடியும் கயவர்களை மனிதர்களுக்கு உவமையாகக் கூறி இருக்க மாட்டார். அவ்வாறு கூறினால் அது கூறியது கூறல் குற்றமாகி விடும். வள்ளுவர் அத் தவறைச் செய்யமாட்டார் என்பதால் தேவர் என்ற சொல் இக்குறளில் மனிதர்களைக் குறிக்காது என்பது பெறப்படுகிறது.

2. என்றால் தேவர் என்ற சொல் ஏதேனும் விலங்கினையோ பறவையினையோ தான் குறித்து வந்திருக்க வேண்டும். இவ் இரண்டிலும், தேவர் என்பது பறவையினைக் குறித்து வந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகின்றது. ஏனென்றால், கயவர்கள் தம் மனம் விரும்பியபடி தன்னிச்சையாக செயல்பட்டு மனிதர்களுக்குத் துன்பம் தருபவர்கள். இத்தகைய பண்புகள் எந்த ஒரு பறவைக்கும் பொருந்தாது என்பதால் தேவர் என்பது ஏதேனும் ஒரு விலங்கினையே குறித்து வந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது.

3. மேலே கண்டபடி, தேவர் என்பது ஒரு விலங்கினைக் குறித்தாலும் அது ஒரு காட்டு விலங்காக இருக்க முடியுமா என்றால் முடியாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் கயவர்கள் மனிதரோடு மனிதராக சமுதாயத்தில் வாழ்பவர்கள். ஆகவே தேவர் என்பது மனிதனால் வளர்க்கப்படும் ஒரு பண்ணை விலங்காகத் தான் இருக்க வேண்டும் என்னும் செய்தி பெறப்படுகிறது.

4. மனிதனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகளில் ஆடு, பசு, எருது, காளை, பன்றி, குதிரை போன்றவை அடங்கும். இவ் விலங்குகளுள் மனிதருக்குத் துன்பம் செய்பவை எவை என்று பார்த்தால் அவை காளைமாடுகள் மட்டுமே என்பது புலப்படும். ஆம், காளை மாடுகள் மட்டுமே யாருக்கும் அடங்காமல் தன்னுடைய முரட்டுத்தனமான செயல்களால் மனிதருக்கும் பிற உயிரினங்களுக்கும்  துன்பம் விளைவிப்பவை. மனம் போன போக்கில் திரிந்து அவ் வழியே செல்வோரையும் வருவோரையும் துரத்தித் தாக்கிக் காயப்படுத்தும். அதுமட்டுமின்றி, காளையானது தன் காலடியின் கீழ் அகப்பட்டவரை வெளியேறிச் செல்ல விடாமல் தடுத்து தனது கொம்புகளால் அவரைத் தாக்க முயன்று கொண்டே இருக்கும். இந்தக் காளைகளைப் போலவே கயவர்களும் தமக்குக் கீழே அகப்பட்டவரிடம் மிகவும் அகங்காரத்துடன் நடந்து அவர்களை மன்னித்து விடாமல் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருப்பர் என்று குறள் 1074 ல் கூறுகிறார் வள்ளுவர்.

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

திருந்திய பொருள்:

மேலே கண்டவற்றில் இருந்து, வள்ளுவர் இக் குறளில் 'தேவர்' என்ற சொல்லை 'காளைமாடு' என்ற பொருளில் தான் பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிந்தோம். இனி இக் குறளின் திருந்திய பொருள்:

" தாம் விரும்பியவாறு (அகங்காரத்துடன்) செயல் புரிந்து திரிவதால் கயவர்கள், காளைமாடுகளைப் போன்றவராவர்."

நிறுவுதல்:

மேற்காணும் குறளில், 'தேவர்' என்ற சொல்லுக்கு 'காளைமாடு' என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதை இன்னும் சில ஆதாரங்களுடன் கீழே காணலாம்.

திருக்குறளில் 'தெய்வம்' என்னும் சொல்லை 'பசு' என்ற பொருளில் தான் வள்ளுவர் பயன்படுத்தி உள்ளார் என்பதை 'திருக்குறளில் தெய்வம் - பகுதி 2' என்ற கட்டுரையில் பல சான்றுகளுடன் கண்டோம். இந்த 'தெய்வம்' என்ற சொல் பெண்பால் பெயராகும். இதற்கு நேரான ஆண்பால் பெயர் 'தேவன்' என்பதாகும்.

தெய்வம்           ------------------------------->  தேவன்           --------------> தேவர்
(பெண்பால் ஒருமை)           ( ஆண்பால் ஒருமை)           (ஆண்பால் பன்மை)

காளைமாடுகளைக் குறித்து வந்த இந்த தேவன் என்ற பெயரானது பின்னர் அக் காளைகளை அடக்குகின்ற வீரர்களுக்கும் பெயராக விளங்கியது. வெள்ளைநிறக் காளையை அடக்கிய வீரனுக்கு வெள்ளையத் தேவன் என்ற பெயர் சூட்டப்பட்டது எனலாம். இதுவே பின்னாளில் ஒட்டுமொத்தமாக காளைகளை அடக்கும் வீரர்களைக் குறிக்கும் பெயராக மாறியிருக்கலாம்.

சல்லிக்கட்டு:

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் முதன்மையானது ஏறு தழுவுதல் ஆகும். இக்காலத்தில் இதனை சல்லிக்கட்டு என்றும் கூறுகின்றனர். சல்லிக்கட்டு என்னும் சொல்லானது 'சல்லியைக் கட்டுப்படுத்துதல்'  என்று விரிந்து 'காளையினை அடக்குதல்' என்று பொருள்படும். இதிலிருந்து 'சல்லி' என்னும் சொல்லுக்குக் 'காளை' என்ற பொருளும் உண்டென்று அறியப்படுகிறது. சல்லிமாடு என்பது ஏறுதழுவத் தயார் செய்யப்பட்ட காளை மாட்டினைக் குறிக்கும்.

வின்சுலோ இணையப் பேரகராதி:

சல்லிமாடு--சல்லியெருது, s. A lusty bull decorated for fighting.

தன் மனம்போன போக்கில் யாருக்கும் அடங்காமல் திமிருடன் திரிந்து பிறருக்குத் துன்பம் தரும் இயல்புடையது காளை மாடாகும். எருதுகளையாவது உழவுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் இந்த காளைகள் மிக மோசமானவை. மூர்க்கத்தனம் நிறைந்தவை. ஒரு காளையினை அடக்குவதற்கு எத்தனை பேர் போராடுகின்றனர் என்பதை சல்லிக்கட்டு விளையாட்டில் பார்த்திருக்கலாம். இவற்றை அடக்கி உழவுக்குப் பயன்படுத்துவதென்பது மிகவும் கடினமான செயலாகும்.

காளையைக் குறிக்கின்ற 'சல்லி' என்ற சொல்லுக்கு 'போக்கிலி' என்ற பொருளும் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

சல்லி² calli
, n. [T. tjalli, K. Tu. jalli.] 1. [M. calli.] Small pieces of stone or glass, potsherd; கல்முதலியவற்றின் உடைந்த துண்டு. எறி சல்லி புதுமலர்க ளாக்கினான்காண் (தேவா. 596, 8). 2. Small chips, as of stone; rubble; சிறிய கல். 3. Small flat shells, used for lime; கிளிஞ்சல் முதலியவற்றின் சிற்றோடு. (W.) 4. [M. calli.] Small copper coin, fractional part of a larger coin, 1/12 anna; சிறுகாசு. Loc. 5. Short pendant in ornaments, hangings; ஆபரணத்தொங்கல். (சூடா.) முத்தாலாகிய சல்லியையும் (மணி. 18, 46, உரை). 6. A thin, emaciated person; மெலிந்த சரீரமுடையவன். அந்த ஆள் சல்லியாயிருப்பான். Loc. 7. Perforation, hole; துவாரம். Colloq. 8. Falsehood; பொய். (W.) 9. Villain, black-guard; போக்கிலி. Colloq.

இந்தப் போக்கிலிகளைத் தான் கயவர்கள் என்று கூறுகிறார் வள்ளுவர். இவர்களும் காளை மாடுகளைப் போல மூர்க்கத்தனம் நிறைந்தவர்களே. தாம் விரும்பியதை செய்து தமது அகங்காரத்தினால் பிறருக்குத் துன்பம் விளைவிப்பவர்கள். இவர்கள் யார் பேச்சையும் கேட்டு அதன்படி நடக்கவோ கட்டுப்படவோ மாட்டார்கள். இவர்கள் 'கொடிறு உடைக்கும் கூன் கையருக்கே கட்டுப்படுவர்' என்று குறள் 1077 ல் கூறுகிறார் வள்ளுவர்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.

கயவர்களைப் போலவே காளைகளும் லேசில் யாருக்கும் அடங்குவதில்லை. அவற்றின் மேலேறி அவற்றின் திமிலைப் பிடித்துத் திருக்கி கழுத்தைப் பிடித்து அடக்குபவருக்குத் தான் கட்டுப்படுகிறது. இப்படிப் பல பண்புகளால் காளைகளும் கயவர்களும் ஒத்திருப்பதால் தான் இருவரும் 'சல்லி' என்ற ஒரே சொல்லால் குறிக்கப் பெறுகின்றனர். வள்ளுவரும் இத்தகைய ஒப்புமைகளைக் கருதியே கயவர்களை 'காளைமாடுகளைப் போன்றவர்கள்' என்ற பொருளில் 'தேவர் அனையர்' என்று கூறுகிறார்.

முடிவுரை:

சிறுமைக்குணமே கயவர்களின் அடையாளம் என்பதால் கயவர்களைக் குறித்து வந்த சல்லி என்ற சொல் நாளடைவில் சிறுமைக் குணத்தையும் சிறுசிறு பொருட்களையும் குறிக்கப் பயன்படலாயிற்று.

சல்லி² calli
, n. [T. tjalli, K. Tu. jalli.] 1. [M. calli.] Small pieces of stone or glass, potsherd; கல்முதலியவற்றின் உடைந்த துண்டு. எறி சல்லி புதுமலர்க ளாக்கினான்காண் (தேவா. 596, 8). 2. Small chips, as of stone; rubble; சிறிய கல். 3. Small flat shells, used for lime; கிளிஞ்சல் முதலியவற்றின் சிற்றோடு. (W.) 4. [M. calli.] Small copper coin, fractional part of a larger coin, 1/12 anna; சிறுகாசு.

................................... தமிழ் வாழ்க!...................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.