திங்கள், 10 ஜூன், 2013

நாளும் வாளும்

முன்னுரை:

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். - 334.

தற்போதைய விளக்கங்கள்:

கலைஞர் உரை: வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.

மு.வ உரை: வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.

சாலமன் பாப்பையா உரை: நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.

பரிமேலழகர் உரை: நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள் என்று அறுக்கப்படுவதொரு காலவரையறைபோலத் தன்னைக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயிர், உணர்வார்ப் பெறின் - அஃது உணர்வாரைப் பெறின். (காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது, தானாகக் கூறுபடாமையின், நாள் என ஒன்றுபோல் என்றும் அது தன்னை வாள் என்று உணரமாட்டாதார் தமக்குப் பொழுது போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் 'காட்டி' என்றும் இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது' என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின் உணர்வார்ப் பெறின் என்றும் கூறினார். உயிர் என்னும் சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது. ஈரப்படுவது அதுவேயாகலின். வாள் என்பது ஆகுபெயர். இனி இதனை நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை ஈர்வதொருவாளாம் என்று உரைப்பாரும் உளர் :'என' என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி' என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது' என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக.).

மணக்குடவர் உரை: நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரையீர்வதொரு வாளாம்: அதனை யறிவாரைப் பெறின். இஃது உயிரீரும் என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று.

உரைத்தவறுகள்:

மேற்காணும் உரைகளுள் முதல் நான்கு உரைகளில் 'நாள்' என்பதற்கு 'காலம்' என்று பொருள் கொண்டு விளக்கம் கூறியுள்ளனர். இது இங்கு பொருந்துமா என்றால் பொருந்தாது என்றே கூறலாம். ஏனென்றால் 'நாளென ஒன்றுபோல் காட்டி' என்று வள்ளுவர் கூறியுள்ளார். அதாவது இந்த 'நாள்' என்ற பொருளானது தன்னை வெளிப்படுத்திக் காட்டும் தன்மையது என்கிறார். ஆனால் காலத்திற்கோ தன்னை வெளிப்படுத்திக் காட்டும் ஆற்றலில்லை. அது ஒரு அருவப்பொருள். அதை யாரும் காணமுடியாது. எனவே வள்ளுவர் இக் குறளில் நாள் என்பதனை காலம் என்ற பொருளில் கையாளவில்லை என்பது தெளிவாகிறது.

மணக்குடவரோ நாள் என்பதற்கு இன்பம் என்ற பொருளைப் பயன்படுத்துகிறார். இப் பொருளும் இங்கே பொருந்தாது என்றே கூற்லாம். ஏனென்றால் நாளானது எல்லோருக்கும் இன்பம் தருவதில்லை. சிலருக்கு இன்பமும் சிலருக்கு துன்பமும் தருகிறது. இன்று ஒருவருக்கு இன்பமளித்த நாள் அவருக்கே அதே நாளில் துன்பம் தருகிறது. எனவே இங்கு நாள் என்ற சொல்லுக்கு இன்பம் என்று பொருள் கொள்வது பொருந்தவில்லை.

என்றால் இக் குறளில் வரும் நாள் என்ற சொல்லுக்கு வேறொரு புதிய பொருள் இருப்பது தெளிவாகிறது. அது என்னவென்று இங்கே காணாலாம்.

திருந்திய பொருள்:

இக் குறளில் வரும் நாள் என்ற சொல் ஒளி (பகல்) யினைக் குறிக்கும். இப் புதிய பொருளின்படி இக் குறளுக்கான திருந்திய புதிய விளக்கம் இதுதான்:

ஒரேபொருள்போல் தன்னை வெளிக்காட்டி நிற்கும் ஒளியே (பலவாகப் பிரிந்து ஒவ்வொரு உடலிலும் புகுந்து அவற்றின்) உயிரை வேரறுக்கும் வாளாக செயல்படுகின்றது என்ற உண்மையை அறிஞர்களே அறிவர். 

நிறுவுதல்:

நாள் என்ற சொல்லுக்கு தற்கால அகராதிகள் கீழ்க்காணும் பொருட்களைத் தருகின்றன.

சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி:

நாள் nāḷ
, n. 1. [T. nāḍu, M. nāḷ.] Day of 24 hours; தினம். சாதலொருநா ளொருபொழு தைத் துன்பம் (நாலடி, 295). 2. [T. nāḍu, M. nāḷ.] Time; காலம். பண்டைநாள் (கம்பரா. நட்பு. 43). 3. Lifetime, life; ஆயுள். நாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னை (தேவா. 219, 10). 4. Auspicious day; நல்ல நாள். நாட்கேட்டுக் கல்யாணஞ் செய்து (நாலடி, 86). 5. Early dawn; காலை. நாண்மோர் மாறும் (பெரும்பாண். 160). 6. Forenoon; முற் பகல். நாணிழற்போல விளியுஞ் சிறியவர் கேண்மை (நாலடி, 166). 7. Lunar asterism; நட்சத்திரம். திங்களு நாளு முந்துகிளந் தன்ன (தொல். எழுத். 286). 8. Lunar day, period of the moon's passage through an asterism; திதி. (W.) 9. Freshness, newness; புதுமை. கோதையை நாணீராட்டி (சிலப். 16, 8). 10. Youth, juvenility, tenderness; இளமை. நௌவி நாண்மறி (குறுந். 282). 11. New-blown flower; அன்றலர்ந்த பூ. பொன்குறையுநாள் வேங்கை நீழலுள் (திணைமாலை. 31). 12. A symbolic expression of the last metrical foot of one syllable, in veṇpā.  n. Flower; புஷ்பம். (தக்கயாகப். 68, உரை.)

ஆனால் இக் குறளில் வரும் நாள் என்ற சொல்லுக்கு ஒளி என்ற புதிய பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இப் பொருள் எவ்வாறு பொருந்தும் என்று பார்ப்போம்.

நாள் என்ற சொல் ஒளி என்ற பொருளில் திங்களுடனும் மலருடனும் இணைத்து பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே கீழே தரப்பட்டுள்ளன.

மதி நாள் முற்றிய மங்கலத் திருநாள் - மணிமேகலை: 10-083
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் - மணிமேகலை: 05-120
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து, - புறநானூறு.
நாள்நிறை மதியத்து அனையை; - புறநானூறு.
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர் - பரிபாடல்.
நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல், - பரிபாடல்
நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன; - பரிபாடல்.
குவளைக் குறுந்தாள் நாள்மலர் நாறும் - குறுந்தொகை
பொன்குறையு நாள்வேங்கை நீழலுள் - திணைமாலை. 31

இவற்றில் நாள்மலர் என்பது ஒளிமிக்க புதிய மலரைக் குறிப்பதாகும்.

நாள் என்பது ஒளியை மட்டும் குறிக்காமல் ஒளிமிக்க நேரமான பகலையும் கீழ்க்காணும் பாடலில் குறிக்கிறது.

நாளங்காடியில் நடுக்கின்றி நிலைஇய -சிலப். 5, 62.

மேலே கண்டவற்றில் இருந்து நாள் என்பதற்கு ஒளி என்ற பொருளும் பொருத்தமாயுள்ளது என்பது அறியப்படுகிறது. இப் பொருளில் தான் வள்ளுவர் இக்குறளை இயற்றியுள்ளார் என்பதனை கீழ்க்காணும் கருத்தும் உறுதிசெய்கிறது.

கதிரவனின் ஒளிக்கதிர்கள் ஒன்றிணைந்து பார்ப்பதற்கு ஒருபொருளாய்த் தோன்றினாலும் உண்மையில் அது பல கோடிக் கதிர்களால் ஆனது என்பதனை யாவரும் அறிவோம். இந்த உண்மையைத் தான் ஒரு உவமையாக இக் குறளில் கையாண்டுள்ளார் வள்ளுவர். ஒருபொருளாய்த் தோன்றும் ஒளிக்கதிர்கள் உடலினுள் பாய்ந்து உயிரை அறுக்கும் வாள்களாக செயல்படுகின்றன என்று கூறுவதன் மூலம் ஒளிக்கதிர்களை வாட்களுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். ஒளிக்கதிரும் வாளும் தம் கூர்மைப் பண்பினால் ஒப்புமையுடையவை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முடிவுரை:

வாழ்க்கை நிலையாமை குறித்த உண்மையினை அழகான ஒப்புமை மூலம் இக் குறளில் கூறுகிறார் வள்ளுவர். நாள்தோறும் கதிரவன் தோன்றுகிறான். அதன் அழகினில் நாம் இன்புறுகிறோம். ஒளியும் வெப்பமும் பெற்று வளர்கிறோம். ஆனால் அதே கதிரவனின் கதிர்கள் தான் நம் உடலில் புகுந்து நம் உயிரை அறுக்கும் வாட்களாகவும் செயல்படுகின்றன என்பதை நாம் உணரத் தவறுகிறோம். நம் உடலானது கொஞ்சம் கொஞ்சமாக வளர்கின்ற அதேசமயத்தில் நம் உயிரானது கொஞ்சம் கொஞ்சமாக அறுபட்டுக் கொண்டிருக்கிறது என்ற முத்தான உண்மையை எல்லோராலும் அறிய முடியாது என்பதால் தான் அறிஞர்கள் மட்டுமே அறிவர் என்ற பொருளில் 'உணர்வார்ப் பெறின்' என்று கூறி முடிக்கிறார் வள்ளுவர்.
--------------------------------- வாழ்க தமிழ்!-------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.