சனி, 31 ஜனவரி, 2015

தொடிப்புழுதியும் பிடித்தெருவும்

குறள்:

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். - 1037

தற்போதைய விளக்க உரைகள்:

கலைஞர் உரை: ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.

மு.வ உரை: ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.

சாலமன் பாப்பையா உரை: உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.

உரைத்தவறுகள்:

மேற்காணும் உரைகள் யாவுமே ஒரே கருத்தினையே கூறுகின்றன. அதாவது “ விளைநிலத்தின் மண்ணை உழுது காயவிட்டாலே போதுமானது; பயிர் நன்கு செழித்து வளர்வதற்கு உரம் இடவே தேவையில்லை.”

இக்கருத்து எவ்வளவு தவறானது என்பது வேளாண்மையினைப் பற்றி அதிகமின்றிக் கொஞ்சமே கொஞ்சம் அறிந்தவர்களுக்குக் கூடத்தெரியும். ஏனென்றால், பயிர்கள் தோன்றியபின்னர், அவை நன்கு செழித்துவளர, நல்ல விளைச்சலைக் கொடுக்க, அவைகட்கு உரம் இடவேண்டியது மிக மிகத் தேவையான ஒன்று என்பது நாடறிந்த செய்தி. இந்த உரம் இடப்படாவிட்டால், பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் முதலான பல கனிம சத்துக்கள் கிடைக்காமல் போய், விளைச்சல் பாதிக்கப்படும். இச் சத்துக்கள் இயற்கையாகவே மண்ணில் கிடைக்காத அல்லது மிகக் குறைவாகக் கிடைக்கின்ற காரணத்தினால் தான் பயிர்களுக்கு உரங்களை நாம் இடவேண்டிய தேவை உண்டாகிறது. இந்த உண்மையினை ஐயன் திருவள்ளுவர் அறியமாட்டாரா?. உரங்களின் தேவையினை நன்கு அறிந்தபின்னரும், "மண்ணை உழுது ஆறவிடுங்கள், உரம் இடத்தேவையில்லை" என்று எப்படிச் சொல்லுவார்?. ஒரு பலம் மண்ணை கால் பலமாக உழுது ஆறவிட்டால், அதுவரை மண்ணில் இல்லாத மேற்கூறிய சத்துக்கள், அம் மண்ணில் தாமாகத் தோன்றிவிடுமா?. என்ன ஒரு விந்தையான கற்பனையான செய்தி.! இப்படி ஒரு கற்பனைக் கருத்தினை வள்ளுவர் கூறியிருப்பாரா என்றால் ஒருபோதும் இல்லை. ஐயன் வள்ளுவன் அப்படியானதோர் பொருளில் இக் குறளை எழுதவேயில்லை.

இப்படி ஒரு தவறான விளக்க உரை தோன்றுவதற்கு முதன்மையான காரணம், தொடிப்புழுதி என்பதில் உள்ள எழுத்துப்பிழையே ஆகும். இதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருத்தம்:

இக் குறளில் வரும் தொடிப்புழுதி என்பது கொடிப்புழுதி என்று வந்திருக்கவேண்டும். இதில்,

கொடி = கொடியடுப்பு.                 புழுதி = சாம்பல்.
ஆக, கொடிப்புழுதி = கொடியடுப்புச் சாம்பல்.

மேலும், இக் குறளில் வரும் உணக்கின் என்பது பாடபேதம். உழக்கின் என்பதே சரியாகும்.

கஃசா என்பது கச்சினைப் போல இடையிடையே என்ற பொருளில் வந்துள்ளது.

இனி, இக் குறளின் திருந்திய வடிவம் இதுதான்:

கொடிப்புழுதி கஃசா உழக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். - 1037

இதன் திருந்திய பொருள் இதுதான்:

கொடியடுப்பின் சாம்பலை மண்ணுடன் இடையிடையே உழுதால் எருவினைப் பிடித்து இடவேண்டியதில்லை; அதுவே (சாம்பலே) போதுமானது.

நிறுவுதல்:

வள்ளுவர் எவ்வாறு இக் குறளில் தொடிப்புழுதி என்று கூறாமல் கொடிப்புழுதி என்றே கூறியிருப்பார் என்பதை முதலில் காணலாம். இதற்கு வேளாண்மை தொடர்பான சில கருத்துக்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆதியில் மக்கள் இயற்கை வேளாண்மையினையே செய்துவந்தனர். உழுகருவிகளாகட்டும், உரங்களாகட்டும், பூச்சிவிரட்டிகளாகட்டும் அனைத்தும் மிக எளிமையான இயற்கைப் பொருட்களாலேயே செய்யப்பட்டிருந்தன. வலிமையான மரங்களில் இருந்து செய்யப்பட்ட உழுகருவிகளும், அடுப்புச்சாம்பல், சாண எரு, வைக்கோல், இலைதழைகள் போன்ற இயற்கை உரங்களும், வேப்பிலைச்சாறு, இஞ்சிச்சாறு போன்ற இயற்கைப் பூச்சிவிரட்டிகளும் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க உதவியதுடன், நஞ்சில்லாத நலமான உணவுப் பொருட்களை நமக்கு அளித்துவந்தன. ஆனால் இன்றைய வேளாண்மையின் நிலை என்ன என்பதை நாம் நன்கு அறிவோம். எல்லாமே செயற்கையாகிப் போன இக் காலத்தில் செயற்கை உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் வேளாண் உணவுகளை நச்சுப் பொருட்களாக மாற்றி மனிதருக்கும் விலங்குகளுக்கும் புதுப்புது நோய்கள் தோன்றக் காரணமாகிவிட்டன.

ஆம், நாகரீகம் என்ற பெயரில் நமக்கு நாமே வைத்துக்கொண்ட தீ தான் இந்த நவீன செயற்கை விவசாயம். ஆனால், உணவுப் பொருட்களில் வேதிப்பொருட்களின் கலப்பு இருக்கக்கூடாது என்ற முனைப்புடன் இன்றளவும் இயற்கை வேளாண்மையினைப் பின்பற்றுவோரும் இருக்கவே செய்கின்றனர். இவர்கள் செயற்கை உரங்களை இடுவதில்லை; இயற்கை உரங்களையே இடுகின்றனர். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லுவதில்லை; விரட்டவே செய்கின்றனர்.

கிராமத்தில் ஒரு பொது இடத்தில் பெரிய ஆழமான குழியினைத் தோண்டி அதில் அடுப்புச்சாம்பல், சாணம், வைக்கோல் கழிவுகள், இலைதழைகள் போன்றவற்றை அவ்வப்போது தொடர்ந்து கொட்டி குழியினை நிரப்புகின்றனர். உழுவதற்கான பருவம் வந்ததும், இவற்றைக் குழியிலிருந்து எடுத்துப் பங்கிட்டுக் கொள்கின்றனர். விளைநிலத்தை புழுதியாக உழுதபின்னர், குழியிலிருந்து எடுத்தவற்றை மண்ணின் மேல் பரப்பி மீண்டும் மீண்டும் உழுது அவை மண்ணுடன் நன்கு கலக்கும்படி செய்கின்றனர். இதனால் மண்ணானது, தான் இழந்த சத்துக்களை மீண்டும் பெற்று வளமடைகின்றது. இம் முறையில் பயிர் செய்தால், பயிர்கள் வளர்ந்தபின்னர் தனியாக உரம் இடத்தேவையில்லை. காரணம், பயிர்கள் விளைந்தபின்னர் தனியாக உரம் இடுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

ஐயன் வள்ளுவர் இக் குறளில் கூறியிருப்பது இம் முறையினைப் பற்றித்தான். மண்ணுடன் கலந்து உழப்படும் பல பொருட்களில் அதிகமாக இருப்பது அடுப்புச்சாம்பலே என்பதால் தான் வள்ளுவர் அடுப்புச்சாம்பலை மட்டுமே குறளில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார். மேலும் உழவுசெய்யும் ஒவ்வொரு முறையும் இவ்வாறு கலந்து உழவேண்டிய தேவையில்லை; இடையிடையே இப்படி உழுதாலே போதுமானது என்கிறார். காரணம், இதனால் மண்ணின் அமிலத்தன்மை குறைந்து காரத்தன்மை அதிகரித்து பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி, வள்ளுவர் வெறுமனே சாம்பல் என்று கூறாமல் கொடியடுப்பின் சாம்பல் என்று கூறியிருக்கிறார். காரணம், சாம்பலில் பலவகைகள் உண்டு. வைக்கோல், சாணம், நெல் உமி, இலைதழைகள், கரும்புச் சக்கை மற்றும் தோகைகள், மரத்துண்டுகள் போன்றவை சாம்பலைத் தரும் பொருட்களில் சில. இவற்றுள் கொடியடுப்பில் பயன்படுவது பெரும்பாலும் மரத்துண்டுகள் மட்டுமே. காரணம், கொடியடுப்பின் அமைப்பு அத்தகையது. அருகில் உள்ள படம் கொடியடுப்பின் அமைப்பினைக் காட்டுகின்றது.

ஒரு பெரிய முதன்மை அடுப்பும் அதனுடன் இணைந்த ஒரு சிறிய துணை அடுப்புமே கொடியடுப்பின் பகுதிகளாகும். முதன்மை அடுப்பில் வைக்கப்படும் தீயின் வெம்மையானது துணை அடுப்பிற்கும் சென்று அதனையும் சூடேற்றும். இதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போன்ற பலன் கிடைக்கின்றது. முதன்மை அடுப்பில் தொடர்ச்சியாக அதிக வெம்மை இருந்தால் மட்டுமே அது துணை அடுப்பிற்கும் செல்லும். முன்னர் கூறிய பல எரிபொருட்களில் மரத்துண்டுகள் மட்டுமே நீண்ட நேரம் நின்று எரிவதுடன், அதிக வெம்மையினையும் தரவல்லதாகும். அதனால் தான் கொடியடுப்புக்களில் மரத்துண்டுகளே எரிபொருட்களாக பயன்படுத்தப்பட்டன. இந்த மரத்துண்டுகள் எரிந்த பின்னர் கிடைக்கின்ற சாம்பலில் சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம் சத்து, பாஸ்பரஸ் சத்து போன்ற பல சத்துக்கள் இருக்கின்றன. காரணம், இவை ஒரு மரத்தின் பகுதிகள் என்பதால். ஆம், ஒரு மரம் வளரும்போது மண்ணில் இருந்து எடுத்துக் கொள்ளும் சத்துக்களில் பெரும்பான்மையானவை, அம் மரத்தின் கட்டைகளை எரிக்கும்போது கிடைக்கின்ற சாம்பலில் தங்கிவிடும். இச் சாம்பலை நாம் மண்ணுடன் கலப்பதின் மூலம் இழந்த சத்துக்களை மண் மீண்டும் பெறுகின்றது.

மரச்சாம்பலில் கலந்துள்ள சத்துக்கள் மற்றும் வேளாண்மையில் மரச்சாம்பலின் பயன்பாடு குறித்து மேலும் செய்திகளை அறிந்துகொள்ள கீழ்க்காணும் சுட்டி உதவியாக இருக்கும்.

http://extension.uga.edu/publications/detail.cfm?number=B1142


மேலே கண்டவற்றில் இருந்து வள்ளுவர் கொடிப்புழுதி என்றே கூறியிருப்பார் என்பதை உறுதியாக முடிவுசெய்யலாம்.

முடிவுரை:

திருவள்ளுவர் வெறுமனே ஓர் புலவர் என்றில்லாமல் ஒரு மிகச் சிறந்த வேளாளர் என்பதை இதற்கு முன்னர் பல குறள்களில் கண்டுள்ளோம். இக் குறளின் மூலம் மீண்டும் அதனை நிலைநாட்டி இருக்கிறார் வள்ளுவர். இயற்கை வேளாண்மையின் பெருமையைக் கூறியிருக்கும் இக் குறளின் அடிப்படையில் இனியேனும் உழவுசெய்து, நலம்தரும் உணவுப்பொருட்களைத் தோற்றுவித்து, நோயற்ற சமுதாயத்தினைப் படைக்க முற்படுவோம்.