வெள்ளி, 13 மார்ச், 2015

திருக்குறளில் பள்ளி ( சுத்தம் சோறு போடும் )

குறள்:

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.    840:

தற்போதைய விளக்க உரைகள்:

கலைஞர் உரை: அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.

மு.வ உரை: சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

சாலமன்பாப்பையா உரை: சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.

உரைத் தவறுகள்:

மேற்காணும் உரைகள் யாவுமே ஒரே கருத்தையே வலியுறுத்துகின்றன. அதாவது, சான்றோரது அவையில் பேதை புகுவது அசுத்தமான காலை படுக்கையில் வைப்பது போன்றதாகும் என்று கூறப்பட்டுள்ளது. இவ் விளக்கம் பொருத்தமானதா என்றால் இல்லை என்றே கூறலாம். காரணம், ஒப்புமை பொருந்தி வரவில்லை. இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

இக் குறளில் இரண்டு கருத்துக்கள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன. ஒன்று சான்றோர் அவைக்குள் பேதை நுழையும் செயல். இன்னொன்று படுக்கையில் அசுத்தமான காலை வைக்கும் செயல். இந்த இரண்டு கருத்துக்களையும் ஒப்பிட முடியுமா என்றால் முடியாது. காரணம், இந்த இரண்டு செயல்களின் விளைவுகளும் வெவ்வேறானவை. ஒப்பிட முடியாதவை. இவற்றை ஒப்பிட வேண்டுமென்றால் முதலில் இவற்றின் விளைவுகள் என்ன என்று காணவேண்டும். முதலில் சான்றோரது அவைக்குள் பேதை நுழைந்தால் என்ன ஆகும் என்று காணலாம்.

சான்றோர்கள் அவையில் ஒன்று கூடி ஒரு பொருளைப் பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஒழுக்கமில்லாத முட்டாள் அந்த அவைக்குள் அவசரமாக நுழைந்துவிட்டான். நுழைந்ததும் சும்மா இராமல் எதைஎதையோ உளறுகிறான். இதனால் விவாதம் நின்றுவிட்டது. ஒருவேளை அவன் உளறாமல் அங்கு அமைதியாக இருந்துகொண்டு விவாதத்தைக் கேட்டிருப்பானேயானால் அவனுக்கு நல்ல பயன் கிட்டியிருக்கும். ஆனால் அவன் பேதையாயிற்றே!. அதனால் அவன் நன்மையை விடுத்துத் தீமையையே நாடுகிறான் குறள் 831 ல் கூறியுள்ளபடி.

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

அவன் செய்கையைக் கண்ட சான்றோர்கள் அவனைக் கடிந்துகொண்டு அவையை விட்டு வெளியேறக் கூறுகின்றனர். ஆயினும் பேதை ஆகிய அவன் அடங்காதவனாய் எதையும் பேணாதவனாய் தனது செயல்களுக்கு வெட்கப்படாதவனாய் தொடர்ந்து செய்கிறான் குறள் 833 ல் கூறியுள்ளபடி.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

அவர்கள் சான்றோர்கள் ஆதலால் அவனைத் தண்டிக்க இயலாமல் மனம் வருந்தியபடி அந்த அவையினை விட்டு வெளியேறுகின்றனர். ஆக, சான்றோரது அவைக்குள் பேதை நுழையும் செயலின் விளைவு சான்றோர்கள் அவையினை விட்டு வெளியேறுதலாகும்.

அடுத்தது, படுக்கையில் அசிங்கமான காலை வைத்தால் என்ன ஆகும்?. படுக்கை நாசமாகும். அவ்வளவுதான். இதற்காக யாரும் மனம் வருந்தியபடி வெளியேற மாட்டார்கள். ஆக, படுக்கையில் அசிங்கமான கால் வைக்கும் செயலின் விளைவு படுக்கை அசிங்கமாதலாகும்.

இப்போது இந்த இரண்டு செயல்களின் விளைவுகளையும் ( வெளியேற்றம், நாசம் ) ஒப்பிட முடியுமா என்றால் முடியாது. காரணம், இவை இரண்டுக்கும் பொருந்திவரக் கூடிய அம்சங்கள் எவையுமில்லை. ஒப்பீடு செய்யவே முடியாத இவ் இரண்டினை இக் குறளுக்கு விளக்கமாகக் கூறியிருப்பதில் இருந்து இவ் விளக்கங்கள் தவறு என்று அறியலாம். இத் தவறான விளக்கங்களுக்குக் காரணம், பள்ளி என்ற சொல்லுக்குக் கொள்ளப்பட்ட தவறான பொருளே ஆகும். இதன் சரியான பொருளைப் பற்றிக் கீழே காணலாம்.

பள்ளி - சரியான பொருள்:

இக் குறளில் வரும் பள்ளி என்ற சொல்லுக்கு இன்றைய அகராதிகள் கீழ்க்காணும் பல்வேறு பொருட்களைக் கூறுகின்றன.

 பள்ளி paḷḷi
, n. < palli. [K. paḷḷi.] 1. Place; இடம். சொல்லிய பள்ளி நிலையின வாயினும் (தொல். எழுத். 100). 2. Hamlet, small village; சிற்றூர். (பிங்.) 3. Herdsmen's village; இடைச் சேரி. காவும் பள்ளியும் (மலைபடு. 451). 4. Town; நகரம். (பிங்.) 5. Hermitage, cell of a recluse; முனிவராச்சிரமம். மாதவி மாதவர் பள்ளியு ளடைந்த தும் (மணி. 18, 8). 6. Temple, place of worship, especially of Jains and Buddhists; சைன பௌத் தக் கோயில். புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை (திவ். பெரியதி. 2, 1, 5). 7. Palace; anything belonging to royalty; அரசருக்குரிய அரண்மனை முதலியன. பள்ளித்தேவாரம். 8. Workshop; வேலைக்களம். தச்சன் வினைபடு பள்ளி (களவழி. 15). 9. Sleeping place or bed; மக்கட்படுக்கை. கழாஅக் கால் பள்ளியுள் வைத்தற்றால் (குறள், 840). 10. Sleep; தூக்கம். (கலித். 121.) 11. Sleeping place of animals; விலங்குதுயிலிடம். (பிங்.). 12. School; பள்ளிக்கூடம். பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் (திவ். பெரியதி. 2, 3, 8). 13. Room, chamber; அறை. (அக. நி.) 14. Alms-house; அறச்சாலை. (W.) 15. Enclosure; சாலை. புதுப்பூம் பள்ளி (புற நா. 33). 16. The Vaṉṉiya caste; வன்னியசாதி. 17. See பள்ளத்தி. Tinn. 18. Petty rulers; குறும்பர். ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுரு மாபோலே (திவ். இயற். திருவிருத். 40, வ்யா. 235). n. [M. paḷḷi.] Christian church; கிறிஸ்தவக் கோயில். சவேரியார் கோயிற் பள்ளி.

மேற்காண்பவற்றுள் இக் குறளுக்குப் பொருந்திவருவதான பொருள் அறச்சாலை என்பதேயாகும். இங்கு அறச்சாலை என்பது அன்னதானம் செய்யப்படும் இடமாகும்.

திருந்திய விளக்கம்:

பள்ளி என்பதற்கு அறச்சாலை என்ற புதிய பொருளின் அடிப்படையில், இனி இக்குறளுக்கான திருந்திய பொருள் இதுதான்:

சான்றோரது அவைக்குள் பேதை புகும் செயலானது, (தூய்மை பேணப்படும் இடமாகிய) அன்னதானக் கூடத்திற்குள் அசிங்கமான காலுடன் ஒருவன் நுழைந்துவரும் செயலுக்கு ஒப்பாகும்.

நிறுவுதல்:

இந்தப் புதிய விளக்கம் எவ்வாறு பொருந்தும் என்று இங்கே காணலாம். சான்றோரது அவைக்குள் பேதை புகுவதால் ஏற்படும் விளைவினை மேலே கண்டோம். அதைப் போல அன்னதானக் கூடத்திற்குள் அசிங்கமான காலுடன் ஒருவன் நுழைந்து வந்தால் என்ன ஆகும் என்று காணலாம்.

அறச்செயல்களில் யாவற்றிலும் தலையாயது, பிறர் பசி போக்குவதாகும். அதிலும் தமது பசியைப் பொறுத்துக்கொண்டு பிறர் பசியை போக்குவோரே இவ் உலகில் தவ வலிமை மிக்கவர் என்கிறார் வள்ளுவர்.

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். - 225

மேலும் ஒருவர் தனது செல்வத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வழி, பிறரது பசியை போக்குவதே என்கிறார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. - 226

மேலும் தன்னிடத்துள்ள உணவினைப் பிறருடன் பகிர்ந்துகொண்டு உண்பவனை பசிப்பிணி தீண்டவே தீண்டாது என்கிறார்.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. - 227

இப்படி பிறர் பசி தீர்ப்பதான அறச்செயலே வள்ளுவர் காலத்தில் மிகச் சிறந்த அறமாகக் கருதப்பட்டதால் பல அறச்சாலைகளும் அவர் காலத்தில் இருந்திருக்க வேண்டும். பெரும் செல்வந்தர்களால் நடத்தப்பட்டு வந்த இந்த அறச்சாலைகள், வறியவர்கள், வழிப்போக்கர்கள், ஆதரவற்றோர் போன்ற பலரின் பசியினை ஆற்றிவந்தன. இந்த அன்னதானக் கூடங்களில் தூய்மை மிக இன்றியமையாததாகக் கருதப்பட்டது. அதாவது, இக் கூடங்களுக்குள் நுழையும் முன்னர், மக்கள் தமது உடல் மற்றும் கைகால்களைத் தூய்மை செய்துகொண்டு வந்து, வரிசையாக அமர்ந்து உண்பர். இதன் அடிப்படையில் தான் ' சுத்தம் சோறு போடும் ' என்ற பழமொழியும் உருவாகியிருக்க வேண்டும். அதாவது சுத்தமாக இருந்தால் தான் உண்ண சோறு கிடைக்கும் என்பது இதன் பொருள்.. மேலும் இக் கூடங்களில் உணவு பரிமாறப்படும் இடத்திலும் தூய்மை பேணப்படும். காரணம், சுற்றுப்புறம் தூய்மையாக இல்லாவிட்டால் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகும்.

இந்நிலையில், அசிங்கத்தை மிதித்துவிட்டு வந்த ஒருவன், பசி மிகுதியால் அவசரப்பட்டுக் கைகால்களைக் கூடக் கழுவாமல் அப்படியே அன்னதானக் கூடத்திற்குள் நுழைந்துவந்தால் என்ன ஆகும்?.

அன்னதானக் கூடம் அசுத்தமடைவதால், அங்கே உணவு உண்டுகொண்டிருப்போர் அனைவரும் அந்த அசிங்கத்தைக் கண்டு மனம் அருவெறுப்புற்று மேற்கொண்டு உண்ணமுடியாமல் வருந்தி எழுந்துசென்று விடுவர் அன்றோ!.

இந் நிகழ்ச்சியைத் தான் வள்ளுவர் சான்றோரது அவைக்குள் பேதை புகும் செயலுடன் இக் குறளில் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். காரணம், இவ் இரண்டு செயல்களின் விளைவும் ஒன்றே ஆகும். அதாவது மனம் வருந்தி வெளியேறுதல். அதுமட்டுமின்றி, இவ் இரண்டு செயல்கள் நடைபெறும் இடமும் ஒன்றேயாகும். அதாவது மக்கள் கூடும் இடம். ஒன்று, சான்றோர் கூடும் அவை. மற்றொன்று, மக்கள் கூடி உண்ணும் அன்னதானக் கூடம். இப்படி செயலாலும் (விளைவாலும்) இடத்தாலும் பெரிதும் பொருந்தி வருகின்ற வகையில் இக் குறளில் உவமைகளை அமைத்துப் பாடிய ஐயனின் நுண்மாண் நுழைபுலம் எண்ணி எண்ணி வியக்கத்தக்கதே!
======================  வாழ்க தமிழ்!========================

4 கருத்துகள்:

  1. அருமையான விளக்கம்.இதே பொருளிலே இனி நான் பயன்படுத்துவேன்.இன்னும் சில குறள்களின் விளக்கம் எனக்குத் தேவைப்படுகிறது.தயவு செய்து தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தாருங்கள்.எனது எண்:9840165696

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே. உங்கள் ஐயங்களை நீங்கள் இந்த தளத்திலேயே எழுதிக் கேட்கலாம். மற்றவர்களுக்கும் பயன்படட்டும்.

      என்றும் அன்புடன்
      தி.பொ.ச.

      நீக்கு
  2. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.