திங்கள், 30 மார்ச், 2015

அன்பும் என்பும்

முன்னுரை:

திருக்குறளில் அன்புடைமை அதிகாரத்தில் அன்பின் சிறப்பினைப் பற்றி விளக்க வந்த வள்ளுவர், அந்த அதிகாரத்தின் பல குறள்களில் என்பு அதாவது எலும்பைப் பற்றியும் கூறியுள்ளார். வள்ளுவர் ஏன் எலும்பினைப் பற்றிக் கூறினார்?. எலும்புக்கும் அன்புக்கும் என்ன தொடர்பு? என்பதைப் பற்றி இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

அன்புடையார் எலும்பையும் தருவர்:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. - 72

இதன் பொருள்: உள்ளத்தில் கொஞ்சம்கூட அன்பில்லாதவர்கள் பிறருக்கு இம்மியளவும் கொடுத்து உதவமாட்டார்கள். உள்ளத்தில் அன்பு நிறைந்தவர்கள் தம் எலும்பைக் கேட்டால்கூட தம்மை அழித்துக்கொண்டு தந்துவிடுவார்கள்.

இக் குறளில் அன்பின் இரண்டு விளிம்பு நிலைகளைக் கூறியிருக்கிறார் வள்ளுவர். ஒன்று, அன்பே இல்லாத நிலை. இந்நிலையில் உள்ளோர் யாருக்கும் உதவி செய்ய மாட்டார்கள். இன்னொன்று, அன்பே முழுவடிவாய் இருக்கும் நிலை. இந்நிலையில் உள்ளோர் தேவைப்பட்டால் பிறருக்காகத் தமது இன்னுயிரையும் மாய்த்துக் கொள்வர். ஆனால், இந்த இரண்டு விளிம்பு நிலைகளுக்கிடையில் தான் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பிறரிடத்தில் அன்பு செய்யத் தெரியும். ஆனாலும் சில காரணங்களால் அன்பு காட்டத் தயங்குகிறார்கள்.

பொதுவாக, அன்பு என்பது ஒரு அக உணர்வாகும். இவ் உணர்வு வெளிப்படுத்தப் பட்டால் ஒழிய பிறருக்குத் தெரியாது. அதை மறைத்து வைக்கவும் முடியாது. அன்புடையவர்களைக் கண்டதும் அது கண்ணீராய் வெளிப்பட்டு விடும். இதைத்தான் கீழ்க்காணும் குறளில் சொல்கிறார் வள்ளுவர்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். - 71

அதேபோல, நம் உடம்பில் உள்ள எலும்பும் ஒரு அகத்துறுப்பாகும். இதை நாம் வெளிப்படுத்திக்காட்ட முடியுமா?. சாதாரணமாக முடியாது. ஆனால் அன்பினை வெளிப்படுத்திக் காட்ட வல்லவர்களால் தம் எலும்பினையும் வெளிக்காட்ட இயலும். அதாவது தம்மை அழித்துகொண்டுகூட தமது எலும்பினை வெளிப்படுத்திக் காட்ட வல்லவர் இவர்கள். இதிலிருந்து, அகத்துணர்வான அன்பினை அகத்துறுப்பான எலும்புடன் வள்ளுவர் ஒப்பீடு செய்திருப்பதாக அறிய முடிகிறது. இக் கருத்தினை உறுதி செய்ய அடுத்த குறளைப் பார்ப்போம்.

அன்பே ஆருயிரே :

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. - 73

இதன் பொருள்: உடலுக்கு எலும்புடன் என்ன தொடர்போ அதுவே ஆருயிர்க்கு அன்புடன் உள்ள தொடர்பாகும்.

இக் குறளில் வரும் ஆருயிர்க்கு என்ற சொல் இரண்டு இடங்களில் இருவகையான பொருட்களில் வருகிறது. இதன் பொருளை அறிய குறளை கீழ்க்காணுமாறு பிரித்துக் கொள்ளவேண்டும்.

ஆருயிர்க்கு அன்போடு இயைந்த வழக்கென்ப
ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு.

முதல்வரியில் வரும் ஆருயிர் என்பது நேரடியாக உயிரைக் குறிக்கும்.
இரண்டாவது வரியில் வரும் ஆருயிர் என்பது ஆகுபெயராய் உயிர் தங்கியிருப்பதான உடலைக் குறிக்கும்.

முதலில், உடலுக்கும் எலும்புக்கும் என்ன தொடர்பு என்று காணலாம். உடலில் எவ்வளவுதான் சதை இருந்தாலும் அதற்கு வலிமை சேர்ப்பதே இந்த எலும்பு தான். எலும்பு இல்லாவிட்டால் நம்மால் நிற்கவோ நடக்கவோ ஏன் சரியாக உட்காரவோ கூட முடியாதன்றோ.! அதுமட்டுமில்லாமல் நமது உடலுக்கு ஒரு வடிவத்தையும் நமது முகத்திற்கு அழகையும் கொடுப்பது கூட இந்த எலும்பு தான். மொத்தத்தில் நமது உடலில் எலும்புகளே இல்லாவிட்டால் நாம் ஒரு சதைக்கோளம் தான்.

ஆக, எலும்புகள் இல்லாவிட்டால் நமது உடலின் இயக்கம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதைப்போலத்தான் அன்பு இல்லாவிட்டால் உயிரின் இயக்கம் பாதிக்கப்படும் என்கிறார் வள்ளுவர். இது எவ்வாறெனில்,

நமது உயிரை உடலுடன் பிணித்து வைக்கும் ஆற்றல் அன்புக்கு மட்டுமே உண்டு. அன்பு குறையக் குறைய இந்த பிணைப்பு வலுவிழக்கும். ஒருகட்டத்தில் அன்பில்லாமல் போக உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடும். இந்த அன்பினைத்தான் சிவம் என்கிறார் சித்தரான திருமூலர். சிவம் இல்லாவிட்டால் சீவனும் (உயிர்) இருக்காது.

இக் குறளின் மூலம் அன்பினை நேரடியாகவே எலும்புடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதை அறியலாம்.

அன்பில்லாதவர் எலும்பற்றவரே:

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். - 77

இதன் பொருள்: எலும்பில்லாத புழுவினை வெயில் வாட்டுவதைப் போல அன்பில்லாதவர்களை அறம் தண்டிக்கும்.

இக் குறளில் அன்பில்லாதவர்களை எலும்பற்ற புழு போன்றவற்றுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார் வள்ளுவர். எலும்பில்லாத புழு நிழலில் இருக்கும்வரை நன்றாக இருக்கும். அதுவே அறியாமல் வெயிலுக்கு வந்துவிட்டால், வெயிலின் உறைப்பைத் தாங்கமாட்டாமல் சுருண்டு இறந்துவிடும். அதைப் போல உள்ளத்தில் சிறிதும் அன்பில்லாதவர்களை அறம் கண்டிப்பாக ஒருநாள் தண்டிக்கும். அதாவது, இந்த அறம், கதிரவனின் வெயில் போல எங்கும் பரவிக் கிடப்பதாய், நேரம் வரும்வரை காத்திருந்து, அவனைக் கொல்லும் என்கிறார். இக் குறளின் மூலமும் வள்ளுவர், அன்பினை எலும்புடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதை அறியலாம்.

இதே கருத்தைத்தான் வேறுவிதமாக கீழ்க்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. - 78

இதன் பொருள்: அன்பில்லாதவர்கள் உயிர் வாழ்தலென்பது, வறண்ட பாலைநிலத்தில் வற்றிய மரங்கள் துளிர்ப்பது போல அரிதான ஒன்றாகும்.

அதாவது, அன்பில்லாதவர்களின் உள்ளத்தினை இங்கே வறண்ட பாலைநிலமாக உருவகப் படுத்துகிறார். பாலைவன மணலில் மழை பெய்தாலும் நீர் தங்காது என்பதால், அங்கே மரங்கள் துளிர்க்க இயலாது. அதைப்போல, அன்பில்லாதவர்களின் நெஞ்சத்தில், பிறர் அவர்மீது காட்டும் பாசமும் புறக்கணிக்கப்படுவதால், அவரது உயிர் நீண்ட நாள் நிலைத்திராது.

புறத்துறுப்பும் அகத்துறுப்பும்:

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. - 79

இதன் பொருள்: உடலின் அகத்துறுப்பாகிய அன்பு இல்லாவிட்டால் உடலின் புறத்துறுப்புக்களால் ஒருபயனுமில்லை.

இக் குறளில் அன்பினை உடலின் அகத்துறுப்பு என்று கூறுகிறார். ஆனால், உடலின் அகத்துறுப்பு எலும்பு என்று முன்னர் குறள்களில் கண்டோம். இதிலிருந்து அன்பினையும் எலும்பினையும் வள்ளுவர் ஒன்றாகவே நோக்குவதை அறியமுடிகிறது. அதாவது அன்புதான் எலும்பின் வடிவாக உடலுக்குள் இருந்து உடலுக்கு உறுதியைத் தந்து நலமுடன் வாழ வழிசெய்கிறது. இந்த அன்பு என்னும் அளப்பரிய ஆற்றல் எலும்புக்குள் இல்லாவிட்டால், எலும்புகள் இருந்தாலும் வலிமையற்றவையே. அதனால், இந்த எலும்பைச் சார்ந்து இயங்குகின்ற புறத்துறுப்புக்களாகிய கைகளும் கால்களும் இயங்குவதற்கான வலிமையின்றி பயனற்றுக் கிடக்கும். மொத்தத்தில் அன்பில்லாதவன் உயிரோடிருந்தாலும் அவன் ஒரு நடைபிணமாகவே கருதப்படுவான். இதே கருத்தினை வேறு விதமாக அடுத்த குறளில் வலியுறுத்துகிறார்.
.

அன்பின் வழியது உயிர்நிலை:

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. - 80

இதன் பொருள்: உயிரானது, அன்பையே அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால், அன்பில்லாதவர்கள் வெறும் எலும்பு தோலினால் ஆன நடைப்பிணமே ஆவர்.

இதையே கவிதை நடையில் சொன்னால்,

உடலைச் செதுக்குவது
உணவாக இருந்தாலும்
உயிரைச் செதுக்குவது
உள்ளத்தில் அன்பொன்றே.

ஆம், உணவு உண்பதால் மட்டும் ஒருவரது உடல் வலிமை பெறுவதில்லை. உடல் வலிமை பெற எலும்புக்குள் அன்பின் ஆற்றல் பாயவேண்டும். அவ் ஆற்றல் இல்லாவிட்டால் அவரது உடல் வெறும் எலும்பினைத் தோலால் மூடிய ஒரு உயிரற்ற பிணத்தையே ஒக்கும்.


முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து வள்ளுவர் அன்பு எனப்படுவது, எலும்புக்குள் மின்சாரம் போல பாய்ந்து இயங்குகின்ற ஓர் ஆற்றல் என்று கூறியிருப்பதை அறியலாம். இந்த ஆற்றல் எலும்புக்குள் பாய்ந்து கொண்டிருக்கும்வரை மட்டுமே உடல் வலிமையுடன் இருக்கும். இந்த ஆற்றல் தடைபட்டால், அதாவது உயிர்களின் மேல் அன்பு குறையுமானால், உடல் வலிமை குன்றும். நாளடைவில் உடலின் இயக்கமும் குன்றும். முடிவில், கவனிப்பார் யாருமின்றி இறக்க நேரிடும். இதைத்தான் குறள் 237 ல் கூறுகிறார்.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.

நெஞ்சில் சிறிதும் அன்பின்றி வாழ்ந்து இப்போது துன்பமுற்றுக் கொண்டிருப்பவர்கள், தம்மைத்தாம் அதற்காக நொந்துகொள்ளாமல், தம்நிலையினைக் கண்டு இரக்கம் கொள்ளாமல் செல்லும் பிறரை ஏன் நொந்துகொள்ளவேண்டும்? என்று கேட்கிறார்.

இதில் அனைவருக்குமான ஒரு எச்சரிக்கையும் இருக்கிறது. அதாவது, பிறர் மீது அன்பு காட்டாமல் வாழ்பவர்கள், தம் மீதும் அன்பு காட்ட யாருமின்றி துன்புறுவர் என்கிறார்.

எனவே, வாழும்காலத்தில் அனைவரிடத்திலும் அன்புடன் நடந்துகொள்வோம்!. பதிலுக்கு அன்பினைப் பெற்று மகிழ்வோம்.!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.