புதன், 17 ஆகஸ்ட், 2016

சங்க கால முதலிரவும் காதலர் தினமும்

முன்னுரை:

திருக்குறளில் முயக்கம் என்ற கட்டுரையில் முயக்கம் என்ற சொல் குறிக்கும் புதிய பொருட்களைப் பற்றி விரிவாகக் கண்டோம். முயக்கம் என்ற சொல்லுக்கு தழுவுதல், உடலுறவு கொள்ளுதல் என்ற பொருட்களை அகராதிகள் காட்டுகின்ற நிலையில் திருவள்ளுவர் இப் பொருட்களில் பயன்படுத்தாமல் 'பார்த்தல்' என்ற பொருளில் தான் அனைத்து குறள்களிலும் பயன்படுத்தி இருப்பார். காதலைப் பற்றி சங்க இலக்கிய நூல்களும் நிறையவே பாடுகின்றன தான். ஆனால், திருக்குறள் காட்டும் காதலுக்கும் சங்க இலக்கியக் காதலுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு.

சங்க இலக்கியங்கள் காட்டும் காதலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று திருமணம் ஆனவர்களிடையே நிலவுகின்ற அன்பு. இன்னொன்று திருமணத்திற்கு முன்னர் காதலர்களிடையிலான அன்பு. முன்னதில் காதல் மட்டுமின்றி கட்டி அணைத்தலும் குறிக்கப்பெறும். பின்னதில் காதல் பார்வையே முதன்மையாகக் குறிப்பிடப்பட்டாலும் தழுவுதலும் குறிப்பிடப்படுகிறது. இதில் தான் திருக்குறள் வேறுபட்டு நிற்கிறது. மணம் செய்துகொள்ளாமல் காதலிக்கின்ற ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் தழுவிக் கொள்வதை வள்ளுவம் ஏற்கவில்லை. அதனால் தான் காதலர்கள் காதல் செய்வது எப்படி என்று பல குறள்களில் விளக்கமாகக் கூறி இருப்பார் வள்ளுவர். மணம் செய்துகொள்ளும் முன்னர் உடலைத் தீண்டுதலாகிய செயல் எதுவுமின்றி கண்களாலேயே பார்த்தும் காதல்மொழி பேசியும் காதல் வளர்ப்பதைக் கூறுவதால் திருக்குறளை தமிழின் தலைசிறந்த காதல் இலக்கியம் என்று கூறலாம்.

இக் கட்டுரையில், முயக்கம் என்ற சொல் குறிக்கும் புதிய பொருட்கள் திருக்குறள் நீங்கலான ஏனை இலக்கியங்களில் எவ்வாறு பொருத்தமாக இருக்கிறது என்பதை விரிவாகக் காணலாம். அத்துடன், சங்க காலம் தொட்டு சிலப்பதிகாரக் காலம் வரையிலும் கொண்டாடப்பட்டு வந்த காதலர் தினம் பற்றிய செய்திகளையும் சங்க காலத்தில் நடந்த முதலிரவு பற்றிய செய்திகளையும் இங்கே விரிவாகக் காணலாம். 

காதலர் தினம் :

காதலர் தினம் என்பது காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது காதலின் ஆழத்தினை பிறருக்குத் தெரிவித்து மகிழ்தலும் தங்களது அன்பினை மேலும் உறுதிப்படுத்துவதும் ஆகிய செயல்களைச் செய்யும் ஒரு நன்னாளாகும். இக் காலத்தில், ஆங்கில மாதம் பிப்ரவரி 14 ஆம் தேதியினை காதலர் தினமாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இது மேலைநாட்டாரது பழக்க வழக்கமாகும். என்றால், காதலையும் வீரத்தையும் போற்றி வளர்த்துவந்த தமிழ்ப் பண்பாட்டில் காதலர் தினம் கொண்டாடப் படவில்லையா என்ற கேள்வி எழுகிறது அல்லவா?. உண்மையில் அப்படி ஒரு நாள் பழந்தமிழர்களால் ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது என்பதே நம்மில் பலருக்குத் தெரியாது.

ஆம், மறைந்துபோன முன்னோர்களின் பல நல்ல பழக்க வழக்கங்களில் பண்பாட்டுக் கூறுகளில் இந்த காதலர் தினமும் அடங்கும். தமிழ் இலக்கியங்கள் காதலர் தினத்தை பங்குனி முயக்கம் என்ற சொல்லால் குறித்ததாலும் முயக்கம் என்ற சொல்லுக்குத் தவறான பொருள் கொண்டதாலும் தமிழர்களின் காதலர் தினம் இதுநாள்வரை வெளிச்சத்திற்கு வர இயலாமல் போயிற்று. ஆய்வு செய்ததில், ஒருசில இலக்கியப் பாடல்களில் மட்டுமே பங்குனி முயக்கம் என்ற சொல்லாடல் வருகிறது. பங்குனி முயக்கம் பற்றி சிலப்பதிகாரத்தில் ஊர்காண் காதையிலும் அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும் கூறப்பட்டுள்ளது. அப் பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

விறற்போர்ச் சோழர் இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள் - அகம்.137

காலத்தால் முந்திய மேற்காணும் அகநானூற்றுப் பாடலானது, பங்குனி முயக்கமானது உறந்தை நகரின் காவிரி ஆற்றங்கரை மணலை அடுத்திருந்த குளிர்ந்த சோலையில் நடைபெற்றதைக் கூறுகிறது. இதனைப் பங்குனி விழவென்று கீழ்க்காணும் பாடல் குறிப்பிடுகிறது.

கழுமலம் தந்த நல் தேர் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு - நற்.234

அடுத்து, கீழ்க்காணும் சிலப்பதிகாரப் பாடல் வரிகளில், பங்குனி முயக்கமானது மதுரை மாநகரில் வெங்கண் நெடுவேளாகிய காமதேவனின் வில்விழாவுடன் தொடர்புடையது எனக் கூறப்பட்டுள்ளது. இது வைகை ஆற்றங்கரை மணல்பரப்பில் தான் நடந்திருக்க வேண்டும்.

கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்          
வெம் கண் நெடு வேள் வில்விழா காணும்
பங்குனி முயக்கத்து பனி அரசு யாண்டு உளன் - சிலப். ஊர்காண்.

பொதுவாக, பங்குனி முயக்கமானது பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர நன்னாளில் நடைபெற்றதாகவே கூறப்படுகிறது. இதைப் பற்றி மேலும் கூறப்படுவதாவது: " சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு. சித்திரையில் சூரியன் தன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். அந்த அடிப்படையில் பங்குனியிலேயே சூரியனின் கதிர்கள் தீவிரமடையத் தொடங்கிவிடும். உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இந்நாளில் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறுகிறது. பங்குனி உத்திரநாளில் சந்திரன் பலம்பெற்று கன்னிராசியிலும், சூரியன் மீனவீட்டிலும் இருக்கும். இவ்விரு கிரகங்களும் இந்நாளில் ஒருவரை ஒருவர் ஏழாம்பார்வையால் பார்த்துக் கொள்வர். இதன் மூலம் ஆத்ம பலமும், மனோபலமும் ஒருசேர நமக்குக் கிடைக்கிறது. "

இது உண்மையோ இல்லையோ தெரியாது. ஆனால், பங்குனி முயக்கத்தின் முதன்மை நோக்கமானது, பங்குனி உத்திர நன்னாளில் முழுநிலா ஒளிவீசும் இரவில் காதலர்களும் கணவன்-மனைவியும் ஆற்றங்கரை மணல்பரப்பில் ஒன்றுகூடி முழுநிலவைக் கண்டு மகிழ்ந்திருப்பர். அப்படி ஒன்றுகூடி முழுநிலவின் ஒளியில் நனைந்தவாறு அதனைத் தரிசனம் செய்தால், அவர்களது காதல் வாழ்க்கை இன்பமாக நீடித்து நிலைக்கும் என்ற நம்பிக்கை அக் காலத்தில் நிலவியது. இன்றைய காதலர் தினம் போல தமிழர்களும் அக் காலத்தில் பங்குனி உத்திரத் திருநாளைக் காதலர் தினமாகக் கொண்டாடி இருக்கின்றனர். இந்த நாளில் காதல் கடவுளாகிய காமதேவனுக்கு வில்விழா எடுத்த செய்தியினை சிலப்பதிகாரம் கூறுவது இதற்கு ஒரு சான்றாகும். பொதுவாக, முயக்கம் என்பது வெறுமனே காணுதல் என்ற பொருளில் அல்லாமல், தொடர்ந்து காணுதல் என்றே பொருள்படும். எப்படி காதலர் இருவர் காதல் பார்வையினால் கட்டுண்டு தொடர்ந்து பார்த்தவாறு இருப்பார்களோ, அதைப்போல பங்குனி முயக்கமானது பங்குனி உத்திர நாளன்று இரவு நேரத்தில் காதலர்கள் ஒன்றுசேர்ந்து முழுநிலவினைத் தொடர்ந்து கண்டு மகிழ்ந்திருத்தலாகும்.

சங்க காலத்து முதலிரவு:

முதலிரவு என்றாலே கிளுகிளுப்பான விசயம் தான். இந்தக் காலத்து முதலிரவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சொம்புப் பால், பழவகைகள், பாதாம், பிஸ்தா, முந்திரி, மல்லிகைப் பூ, வாசனைத் திரவியங்கள் என்று பல பொருட்கள் முதலிரவு அறையில் களைகட்டும். முதலிரவுக்கான கட்டிலை ஏதோ தேவலோகத் தேர் போல பூக்களால் அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள். முதலிரவு அறையில் மணமகன் காத்திருக்க, நல்லநேரம் பார்த்து மணமகள் கையில் பால் சொம்பினைக் கொடுத்து முதலிரவு அறைக்குள் அவரது தோழிகள் அவரைத் தள்ளிவிடுவர். அப்படித் தள்ளிவிடும் முன்னர், கேலிப் பேச்சுக்கும் சிரிப்புக்கும் பஞ்சமிருக்காது. இது இக்கால முதலிரவு முன்னேற்பாடுகள்.

முதலிரவு அறைக்குள் சென்றபின்னர், மணமகள் மணமகனின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு, கொண்டுவந்த பால் சொம்பினை வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு மணமகனிடம் நீட்டுவாள். மணமகனும் சொம்பை வாங்கிக் கட்டிலில் வைத்துவிட்டு, அவளது கையினைப் பற்றித் தன்னை நோக்கி இழுப்பான். அவள் வெட்கத்தால் மெதுவாக அவனருகே செல்வாள். மெல்ல அவனை நெருங்கி கட்டிலில் அமர்ந்து ..... ( மேற்கொண்டு நடக்கும் நிகழ்ச்சிகள் ஆளாளுக்கு மாறுபடும் என்பதாலும் இந் நிகழ்ச்சிகளை வெளியே சொல்வதற்கு சென்சார் அனுமதி இல்லை என்பதாலும் இதை ஆண்டு அனுபவித்து அறிந்துகொள்க. :))) )

சரி, சங்க காலத்தில் முதலிரவு எப்படி நடந்தது?. இதைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாக கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் கூறுகிறது.

...........வதுவை நன் மணம் கழிந்த பின்றை
கல்லென் சும்மையர் ஞெரேரென புகுதந்து
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர
ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல்
கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த காலை யாழ நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என
இன் நகை இருக்கை பின் யான் வினவலின்
செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர
அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
மடம் கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே.         - அகம்.86

விளக்கம்: திருமணம் முடிந்த பின்னர், கேலிப்பேச்சும் கிண்டலுமாக தோழியர் உடன்வந்து ' பெருமைக்குரிய மனைவியாவாய் ' என்று கூறி அவளை மணமகனின் வீட்டுக்குள் புகுவித்த இரவில், முதுகுப்புறமாக வளைத்துக் கொண்டுவந்த ஆடையினால் முகத்தை மூடிக்கொண்டு ஒடுங்கி அமர்ந்திருந்த அவளை ஒரு புறமாகத் தொட்டு அமர்ந்து, அவளது முகத்தைக் காணும் ஆவலுடன் அவளது முகத்திரையை நீக்கவும் அஞ்சியவளாய் அவள் பெருமூச்செறிய, ' அன்பே ! உன் மனதில் உள்ளதை ஒன்றுவிடாமல் எனக்குக் கூறு ' என்று மணமகன் புன்னகை பூத்தவனாய் அவளிடம் கேட்க, அதைக் கேட்டு உள்ளுக்குள் மகிழ்ந்த அவள் எதுவும் பேசாமல் தனது அழகிய காதணிகள் அசைந்தாடுமாறு முகத்தினைத் தாழ்த்தி அவனை வணங்கினாள் மாமரத்தின் தளிரிலைப் போலச் செவ்வண்ணம் தீட்டிய கண்ணிமைகளை உடைய அவள்.

இந் நிகழ்ச்சியில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கருத்துக்கள் சில உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

சங்க காலத்தில் மணமகன் முதலிரவில் மணமகளைப் பேசச் சொல்கிறான். காரணம், இதன் மூலம் அவளது கூச்சத்தினை மெல்லமெல்ல போக்க விரும்புகிறான். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்பது பாடலில் இருந்து தெரிகிறது. ஆம், அவளது முகத்தைப் பார்க்கவே அவனுக்குப் பெரும்பாடாகிப் போகிறது. மாந்தளிர் போல செவ்வண்ணம் பூசி அழகு செய்யப்பட்டிருக்கும் அவளது கண்ணிமைகளையும் பல்வண்ணப் பொட்டுக்களால் அழகுபெற்று விளங்கும் அவளது நெற்றியினையும் காண அவனது மனம் ஏங்குகிறது.

இப்படி ஒரு பெண்ணுடைய கண்ணிமைகளின் ஒப்பனைகளைக் கண்டுமகிழ ஒரு விலை கொடுத்தாக வேண்டும். அதற்குப் பெயர் தான் 'முலைவிலை' ஆகும். முலை என்றால் கண்ணிமை என்று ' கண்ணகி மதுரையை எரித்தது எப்படி? ' என்ற கட்டுரையில் முன்னர் கண்டிருக்கிறோம். இக் காலத்தில் மணப்பெண்ணானவள் மணமகனுக்கு வரதட்சினை கொடுத்து மணம் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால், அக் காலத்தில் மணமகனானவன் மணப்பெண்ணுக்கு முலைவிலை கொடுத்துத்தான் மணம் செய்யவேண்டும். காலம் மாற மாற சமுதாயப் பழக்கவழக்கங்களும் எப்படியெல்லாம் மாறிப் போகின்றன என்பதற்கு இதை ஒரு காட்டாகக் கொள்ளலாம்.

முலைவிலை கொடுத்து திருமணம் செய்தபின்னர், முலைகளின் அதாவது கண்ணிமைகளின் அழகினைக் கண்டு மகிழ அவளது முகத்திரையாகிய ஆடையினை அவன் திறக்க முயல்கிறான். எங்கிருந்துதான் வந்ததோ அந்த அச்சமும் நாணமும்!. அஞ்சி நடுங்கி பெருமூச்செறிகிறாள். அவனது முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே அவளால் முடியவில்லை. அப்புறம் எப்படி பேசுவதாம்?. உள்ளுக்குள் அவனைக் காணும் ஆசை இருந்தாலும் நாணத்தால் முகம் தாழ்த்தி அவனை வணங்குகிறாள். இருவருக்குள்ளும் இப்படி ஒரு ஏக்கமும் காத்திருப்பும் இருக்கும்வரை அந்த முதலிரவு இன்பமானது தான் இல்லையா?. 

இப் பாடலில் வரும் முயங்கல் என்பதற்கு ' தழுவுதல் அல்லது உடலுறவு கொள்ளுதல் ' என்று பொருள்கொண்டால் அது நகைப்புக்குரியதாகி விடும். ஏனென்றால், அச்சமும் நாணமும் மேலோங்கிய நிலையில் இருக்கும் மணப்பெண்ணை முதலிரவில் எடுத்த எடுப்பிலேயே கட்டி அணைக்க முயன்றால் அவள் அஞ்சி நடுங்கிக் கூச்சலிட்டு வெளியே சென்று விடுவாள் அல்லவா?. இப் பாடலில் வரும் முயங்கல் என்பதற்கு காணுதல் என்னும் பொருளே மிகப் பொருத்தமாய் இருப்பதை மேலே கண்ட விளக்கமே பறைசாற்றி விடும்.

முயக்கு = பார்வை :

முயக்கு என்பது பார்த்தல் / பார்வை என்ற பொருளில் பல இலக்கியப் பாடல்களில் பயின்று வருகின்றது. அவற்றுள் சில பாடல்கள் மட்டும் கீழே விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

முயக்குக்கு செவ்வி முலையும் முயக்கத்து நீரும் அவட்கு துணை - பரி 24/43,44
( காதல் பார்வைக்குத் தகுதிபெற்ற அவளது கண்களும் அவளுக்குத் துணையாக
காதல் பார்வையை உடைய நீங்களும் ....)

இதில் வரும் செவ்வி என்பது தகுதி என்னும் அகராதிப் பொருளைக் குறிக்கும். தகுதி பெற்ற கண்கள் எனப்படுவதாவது, இமைகளின் மேலும் சுற்றியும் மைவண்ணம் பூசி அழகுசெய்த கண்கள் ஆகும். காதலியின் கண் அழகினைக் காதலன் பார்த்தவாறு காதல் பார்வையில் கட்டுண்டு கிடத்தல் இங்கே முயக்கு எனப்பட்டது.

காதலொடு திருகி மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து ஓர் உயிர் மாக்களும்.. - அகம் 305/7,8
( காதலில் முதிர்ந்து மற்றொருவரின் உடலுக்குள் புகுந்துவிட்டதைப் போன்ற கண்ணொளியால் வசப்பட்ட பார்வையினராய் ஓருயிர் ஈருடலாய் வாழும் காதலரும்.....)

இப் பாடலில் வரும் திருகுதல் என்பது முதிர்தல் என்றும் கை என்பது கண்ணொளி என்றும் கவர்தல் என்பது வசப்படுதல் என்றும் அகராதிகளின் வழியே பொருள்பெறும்.

காதலில் முதிர்ந்தவர்கள் காதலரின் கண்ணொளியால் கவரப்பட்டு தம்நிலை மறந்து அதாவது மெய்ம்மறந்து கண்களையே பார்த்தவாறு இருப்பர் என்று முன்னர் கண்டுள்ளோம். இவர்களைத் தான் ஓருயிர் மாக்கள் என்று மேற்காணும் அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது. இப் பாடலில் வருகின்ற ' கை கவர் முயக்கம் ' அதாவது ' கண்ணொளியால் வசப்பட்ட பார்வை ' என்ற பொருளைத் தருவதான அதே வரிகள் கீழ்க்காணும் சில பாடல்களிலும் வருவதைக் காணலாம்.

கை கவர் முயக்கம் மெய் உற திருகி - நற் 240/3
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் - அகம் 11/10,11
மெய் புகு அன்ன கை கவர் முயக்கின் - அகம் 379/15,16
மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் - ஐங் 337/2,3

புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவு உற்ற கொடியொடும் - கலி 32/12
( சந்தித்த காதலர்களின் காதல்பார்வை போல பூத்துக்குலுங்கும் கொடியுடனும்....)

இப் பாடலில் வரும் புரிவு என்பது புரிதல் என்னும் வினையை அடிப்படையாகக் கொண்டது. புரிதல் என்பது ஈனுதல் என்ற அகராதிப் பொருளைக் குறிக்கும். அவ்வகையில் இங்கே அது கொடியில் பூக்கள் தோன்றி மலர்ந்திருத்தலைக் குறிக்க வந்துள்ளது.

பொதுவாக, பூந்தாதுக்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் கொண்டு அரைத்துப் பல வண்ணங்களில் பூசி அழகு செய்யப்பட்ட காதலியின் கண்இமைகளைப் பூ எனக் கருதி கள் குடிக்கும் சிறுவண்டுகள் மொய்ப்பது வழக்கம். இதைப் பற்றிய பல பாடல்களை இலக்கியங்களில் காணலாம். அவற்றுள் சில மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.

வண்டு இமிர் சுடர் நுதல் குறுமகள் - ஐங் 254/3
வண்டு படு கூந்தல் தண் தழை கொடிச்சி - ஐங் 256/2
வண்டு படு கூந்தலை பேணி - ஐங் 267/4

இப் பாடல்களில் வரும் நுதல் மற்றும் கூந்தல் ஆகிய சொற்கள் பெண்களின் கண் மற்றும் கண் இமைகளைக் குறிக்கும் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். காதலர் இருவர் முயக்கத்தில் அதாவது காதல் பார்வையில் கட்டுண்டு இருக்கும்போது, காதலியின் கண்ணிமைகளை வண்டுகள் மொய்க்கும். அப்படி அவை மொய்க்கின்ற நிலையிலும், அந்தக் காதல் பார்வையில் தொய்வு ஏற்படலாகாது. அவ்வாறு இருப்பதே அவரது காதலின் வலிமையைக் குறிப்பதாகும். இதைப் பற்றிக் கூறும் பாடல் கீழே:

வண்டு இடை படாஅ முயக்கமும் தண்டா காதலும் தலை நாள் போன்மே - அகம் 332/14,15

கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ - பதி 50/20,21
( கொல்லும் நோயாகிய தன்மை முற்றிய கண்களின் வசப்படுத்தும் பார்வை போல முல்லை மொட்டுக்கள் பொழுதுடன் மலர்ந்து தோன்ற .....)

முகை மலர்ந்து அன்ன முயக்கில் - கலி 78/26
( முல்லைமொட்டு மலர்ந்ததைப் போல மலர்ச்சியையுடைய காதல்பார்வையில்.....)

பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ
அன்னை முயங்க துயில் இன்னாதே - குறு -353
( வரிகளை உடைய எனது கண்ணிமைகளைத் தடவிக்கொடுத்தவாறு எனது அன்னை என்னைப் பார்த்திருக்க, எனது உறக்கம் துன்பமானதே............)

சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி - நற் 319/9
( பூந்தாதுக்களைப் பூசிய அழகிய கண்ணிமைகளைக் காண நினைத்து......)

அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே - அகம்.19

( பொன்னாலானதைப் போன்ற அழகிய அகல்விளக்கின் சுடரொளியினைத் துணையாகக் கொண்டு, அச்சுடரைப் போலவே அசையாமல் காத்துக்கிடக்கின்ற எனது காதலியின் வருத்தத்தினால் மெலிந்திருக்கும் கண்ணிமைகளைக் கண்ட பின்னர்…...)

கோடல் எதிர் முகை பசு வீ முல்லை
நாறு இதழ் குவளையொடு இடை இடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே    - குறு.62

விளக்கம்: கோடல் மலர்மொட்டுக்களுடன் முல்லை மொட்டுக்களை குவளை மலர் இதழ்களுடன் இடையிட்டு அழகாகத் தொடுத்த மாலை போல பல வண்ணங்களில் பூசப்பட்டு ஒளிர்கின்ற என் காதலியின் கண் இமைகள் மாந்தளிரைக் காட்டிலும் சிறந்தன; காண்பதற்கும் இனியன.

ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்
ஏதிலாளர் சுடலைபோல காணா கழிப மன்னே - குறு.231

விளக்கம்: ஒரே ஊருக்குள் வாழ்ந்தாலும் அவர் எனது சேரிக்கு வருவதில்லை; அப்படியே சேரிக்கு வந்தாலும் என்னுடன் காதல்பார்வை கொள்வதில்லை; அயலாரின் சிதைத்தீ போல கண்டும் காணாமல் சென்றுவிடுகிறார்.

இப்பாடலில் வரும் உவமைநயம் அருமையானது. பொதுவாக, நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டால், அவரது உடலுக்குத் தீமூட்டி அது எரிந்துமுடியும் வரை உள்ளத்தில் உணர்ச்சிபொங்க பார்த்துக்கொண்டே இருப்பது வழக்கம். அதுவே தூரத்து உறவினர் அல்லது அறிமுகமற்றவர் என்றால், அவரது உடல் எரிவதைக் கண்டும் காணாமல் சென்றுவிடுவர். அதைப்போல, இப் பாடலில் வரும் காதலியானவள் தனது காதலனைப் பிரிந்த துயரத்தீயினால் வெந்துகொண்டு இருக்கிறாள். ஆனால் காதலனோ அவள் உள்ளத்தால் எரிவதைக் கண்டும் காணாமல் சென்றுவிடுகிறான். இவ் இரண்டு நிகழ்ச்சிகளையும் இப் பாடலில் ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார் புலவர். ஏதிலாளர் சுடலையினை உவமையாகக் கூறி இருப்பதில் இருந்து இப் பாடலில் வரும் முயங்கல் என்பது காணுதலையே அன்றி தழுவுதலைக் குறிக்காது என்பது உறுதி.

எட்டின விசும்பினை எழு பட எழுந்து
முட்டின மலைகளை முயங்கின திசையை
ஒட்டின ஒன்றை ஒன்று ஊடு அடித்து உதைந்து
தட்டுமுட்டு ஆடின தலையொடு தலைகள் - கம்ப. சுந்.40

விளக்கம்: ஆகாயத்தை எட்டின; ஆயுதம் படத் துள்ளி எழுந்து மலைகளை முட்டின; திசைகளை நோக்கின; ஒன்றுடன் ஒன்று ஒட்டியும் முட்டியும் தட்டுமுட்டு ஆடின தலையுடன் தலைகள்.

முயங்குதல் = தோன்றுதல் :

முயங்குதல் என்பது காணுதல் என்ற பொருளையும் தரும் என்று மேலே பல சான்றுகளில் கண்டோம். இனி,

முயங்குதல் = காணுதல் ----> காட்சி, தோற்றம் ------> தோன்றுதல்

என்ற பொருளிலும் கீழ்க்காணும் பாடல்களில் பயின்று வந்துள்ளதைக் காணலாம்.

எரி முயங்கு இலங்கு வாள் கை ஏற்று இளம் சிங்கம் அன்னான் - சிந்தா:1 272/4
எரி முயங்கு இலங்கு வை வேல் இளையவர் குழாத்தின் நீங்கி - சிந்தா:1 383/1
எரி முயங்கு இலங்கு வேல் காளை என்பவே - சிந்தா:13 2862/4
திரு முயங்கு அலங்கல் மார்பின் சீவகன் கொண்டு வேறா - சிந்தா:1 383/2
வார் முயங்கு மெல் முலைய வளை வேய் தோளாள் மனம் மகிழ - சிந்தா:7 1888/1
நீர் முயங்கு கண் குளிர்ப்ப புல்லி நீள் தோள் அவன் நீங்கி - சிந்தா:7 1888/2
வளை முயங்கு உருவ மென் தோள் வரம்பு போய் வனப்பு வித்தி - சிந்தா:12 2598/2

மேற்காணும் பாடல்களில் முயங்குதல் என்பது எவ்வாறு தோன்றுதல் பொருளில் வந்துள்ளது என்பதைக் கீழே காணலாம்.

எரி முயங்கு இலங்கு வாள் = தீப்போலும் தோன்றுகின்ற கூரிய ஒளிர்வாள்
எரி முயங்கு இலங்கு வைவேல் = தீப்போலும் தோன்றுகின்ற கூரிய ஒளிர்வேல்
திரு முயங்கு அலங்கல் மார்பு = அழகுடன் தோன்றும் மாலையணிந்த மார்பு
வார் முயங்கு மெல் முலை = மேகம் போலத் தோன்றுகின்ற மைபூசிய மெல்லிய கண்ணிமைகள்
நீர் முயங்கு கண் = நீர் தோன்றும் கண்
வளை முயங்கு உருவ மென் தோள் = சிப்பியின் மேலோடு போலத் தோன்றுகின்ற வண்ணம் பூசிய மெல்லிய கண்இமை.

அகில் இடும் புகை அட்டில் இடும் புகை
நகல் இன் ஆலை நறும் புகை நான்மறை
புகலும் வேள்வியில் பூம் புகையோடு அளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும் - கம்ப.பால.41

விளக்கம்: அகிலை எரிக்கும் புகை, உணவு சமைக்கும் புகை, ஆலையில் உண்டாகும் புகை, வேள்வியில் தோன்றும் புகை என யாவும் ஒன்றாய்க் கலந்து மேகங்கள்போலப் பெருத்துத் தோன்றின எவ்விடத்திலும்.

முடிவுரை:

இதுகாறும் கண்டவற்றிலிருந்து முயக்கு, முயங்குதல், முயக்கம் போன்றவற்றுக்கு தழுவுதல் என்ற அகராதிப் பொருள் நீங்கலாக காணுதல், காட்சி / பார்வை, தோன்றுதல் ஆகிய பொருட்களும் உண்டென்று கண்டு தெளிந்தோம்.

அதுமட்டுமின்றி, சங்க காலத்தில் முதலிரவு நடந்த விதம் பற்றியும் சங்க காலத்தில் காதலர் தினம் கொண்டாடப்பட்டதைப் பற்றியும் கண்டோம். ஒரு சொல்லின் பொருள் மாறுவதன் மூலம் ஒரு சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறானது மாறுபட்டுப் போவதற்கு இக் கட்டுரை ஒரு எடுத்துக்காட்டாகும். இன்னும் இதுபோல பல சொற்களுக்கான புதிய பொருட்களை ஆய்வுசெய்வதன் மூலம் அறியப்படாத பல புதிய உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரலாம்.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

வடு என்றால் என்ன?


முன்னுரை:

சங்க காலத்தில் புலவர்களால் பயன்படுத்தப்பட்டு இன்றுவரையிலும் மக்களால் நடைமுறையில் பேசப்பட்டும் வருவதான பல தமிழ்ச் சொற்களுள் ஒன்றுதான் ' வடு ' என்பதாகும். இச் சொல்லுக்குப் பத்துக்கும் மேற்பட்ட பொருட்களை இன்றைய அகராதிகள் காட்டினாலும் இவை ஏதும் பொருந்தாத நிலையே பல பாடல்களில் காணப்படுகிறது. இது இச்சொல்லுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகிறது. இக் கட்டுரையில், அந்தப் புதிய பொருளைப் பற்றி விரிவாக ஆதாரங்களுடன் காணலாம்.

வடு - அகராதிகள் காட்டும் பொருட்கள்:

சென்னைத் தமிழ்ப் பேரகராதி வடு என்னும் சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்களைக் காட்டுகின்றது.

வடு¹ vatu, n. 1. cf. வடி&sup5;. [K. miḍi.] Unripe fruit, especially very green mango; மாம் பிஞ்சு. மாவின் வடுவகிரன்ன கண்ணீர் (திருவாச. 9, 2). (பிங்.) 2. Wart, mole; உடல்மச்சம். (W.) 3. Scar, cicatrice, wale; தழும்பு. சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் (புறநா. 14). 4. cf. வடி&sup7;. Chiselled figure; உளியாற்செதுக்கின உரு. கூருளி பொருத வடுவாழ் நோன்குறடு (சிறுபாண். 252). 5. Mouth of an ulcer or wound; புண்வாய். தாழ் வடுப் புண் (பு. வெ. 10, சிறப்பிற். 11). 6. Fault, defect; குற்றம். வடுவில் வாய்வாள் (சிறுபாண். 121). 7. Reproach; பழி. வடுவன்று வேந்தன்றொழில் (குறள், 549). 8. Injury, calamity; கேடு. நாயகன் மேனிக் கில்லை வடுவென (கம்பரா. மருத்து. 5). 9. Fine, black sand; கருமணல். வடுவா ழெக்கர் மணலினும் பலரே (மலைபடு. 556). 10. Copper; செம்பு. (பிங்.) 11. Sword; வாள். (யாழ். அக.) 12. Beetle; வண்டு. (பிங்.)

மேலே உள்ளவற்றை நோக்கினால், வடு என்பதற்கு 12 விதமான பொருட்கள் கொடுக்கப்பட்டு இருப்பதையும் இவற்றில் ஒரே ஒரு உயிருள்ள பொருளாக ' வண்டு ' குறிப்பிடப்பட்டு இருப்பதையும் அறிந்துகொள்ளலாம்.

வடு - அகராதிப் பொருட்கள் பொருந்தா இடங்கள்:

வடு என்பதற்கு அகராதிப் பொருட்கள் பன்னிரெண்டில் ஒன்றுகூட பொருந்தாத பல இடங்கள் இருக்கின்றது. இருப்பினும் சிலவற்றை மட்டும் இங்கே காணலாம்.

கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று       
வடு வாழ் எக்கர் மணலினும் பலரே - மலைபடு.556

கொடு விரல் உளியம் கெண்டும்
வடு வாழ் புற்றின வழக்கு அரு நெறியே - அகம்.88

வெண் தலை புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு வாழ் எக்கர் மணலினும் பலவே - புறம்.55

மேலுள்ள பாடல்களை நோக்கினால், வடு எனப்படுவது எக்கர் மணலிலும் புற்றிலும் வாழும் தன்மையது என்பதை நன்கு அறிந்துகொள்ளலாம். இதிலிருந்து, வடு எனப்படுவது ஒரு வாழும் உயிரியைக் குறிக்கும் என்பதை எளிதின் புரிந்துகொள்ளலாம். ஆனால், தமிழ் உரையாசிரியர்கள் இப் பாடல்களில் வரும் வடு எனும் சொல்லுக்குக் கருமணல் என்று பொருள் கொள்கிறார்கள். இது பொருந்துமா என்றால் சற்றும் பொருந்தாது. முதல் காரணம், கருமணலானது வாழும் தன்மை உடையது அல்ல; அது ஒரு உயிரற்ற பொருள். இரண்டாவது காரணம், கருமணலை கறையான் புற்றில் காணமுடியாது. மூன்றாவது காரணம், கருமணலை இப் பாடல்களில் கூறவேண்டிய தேவையுமில்லை. இதிலிருந்து, வடு என்னும் சொல்லுக்கு அகராதிகள் காட்டும் பொருட்கள் நீங்கலாக வேறு பொருளும் உண்டு என்பதை முடிவுசெய்யலாம்.

வடு - புதிய பொருட்கள்:

வடு என்னும் சொல்லுக்கு இக் கட்டுரையில் காட்டப்படும் புதிய பொருட்கள் மூன்று.

ஒன்று: கறை.
இரண்டு: நத்தை, சிப்பி, பலகறை (சோழி) முதலியன.
மூன்று: கறையான்.

வடு என்னும் சொல்லுக்கு இப் புதிய பொருட்கள் எவ்வாறு பொருந்தும் என்று தனித்தனியாகக் கீழே ஆதாரங்களுடன் காணலாம்.

வடு = கறை :

வடு என்னும் சொல்லுக்குக் கறை என்னும் பொருள் எவ்வாறு பொருந்தும் என்று கீழே சில ஆதாரங்களுடன் காணலாம்.

மண் ஆர் முழவின் கண்அகத்து அசைத்த
விரல் ஊன்று வடுவின் தோன்றும் மரல் - அகம்.155

விளக்கம்: கண்போல மைபூசிய பறையை விரல்களால் முழக்கியபோது பறையில் படிந்த கறைகளைப் போலத் தோன்றுகின்ற இலைகளையுடைய மரல்செடிகள்......

பொதுவாகப் பறையின் நடுவில் கண்போல வட்டமாக மை அல்லது சேறு கொண்டு பூசுவது வழக்கம். அப்படிப் பூசிவிட்டு, அது முற்றிலும் காயாதநிலையில், பறையினை விரல்களால் முழக்கினால் விரல்களில் அம் மையானது ஒட்டிக்கொள்வதுடன், விரல்களில் உள்ள மைக்கறைகள் அப் பறையிலும் பதியும். விரல்களின் கறைகளுக்கு இடையே பறைத்தோலின் வெண்மை நிறம் மாறிமாறித் தோன்றும். இது பார்ப்பதற்கு மரல் செடி என்று அழைக்கப்படும் மரலாக்குச் செடியின் இலைகளைப் போலவே காட்சியளிக்கும். அருகில் மரல் செடியின் படம் இணைக்கப்பட்டுள்ளது. மரல் செடியினைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா? என்ற கட்டுரையைப் படிக்கலாம்.

இதேபோல பெண்கள் தமது கண்ணிமைகளை அழகுசெய்வதற்குப் பூசிக்கொள்ளும் மையானது, அப் பெண்கள் தமது காதலரின் அல்லது கணவரின் தோளில் அல்லது மார்பில் தலைசாய்க்கும்போது, அவ் ஆடவரின் மார்பிலோ கழுத்தின் கீழோ கறையாக ஒட்டிக்கொள்ளும். இக் காலத்துப் பெண்களின் உதட்டுச் சாயமானது ஆடவரின் மார்பில் படிந்திருப்பதைப் போல அக் காலத்து நிகழ்வான இதனை வடுப்படுதல் என்றும் வடுக்கொள்ளுதல் என்றும் இலக்கியம் கூறுகிறது. பெண்களின் கண்ணிமையில் பூசிக்கொள்ளும் அணியினை பூண் என்றும் இழை என்றும் தொடி என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. இதைப் பற்றி தொடி ஆகம் தொடர்பு என்ன?. என்ற கட்டுரையில் முன்னரே கண்டுள்ளோம். இனி, வடுக்கொள்ளுதல் பற்றி ஏராளமான பாடல்கள் உள்ள நிலையில், சில பாடல்களை மட்டுமே கீழே விளக்கங்களுடன் காணலாம்.

ஏதிலார் தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவதை - கலி.78
(பிற பெண்களின் கண்மை அணிகளால் உண்டான கறைகளைக் காட்டி இங்கு எனது வீட்டுக்கு வருவதை......)

நல்லார் செறி தொடி உற்ற வடுவும் - கலி.91
( பெண்களின் கண்மை அணியினால் உற்ற கறையும்...)

இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப
தொடி கண் வடு கொள முயங்கினள் - அகம்.142
( பொன்னிறத்துப் பூந்தாதுக்களை அரைத்து இமைகளின் மேல் பூசியிருந்த மையணியானது அவனது மார்பினை கறைப்படுத்துமாறு தழுவினாள்.....)

புணர்ந்த நின் எருத்தின்கண் எடுத்துக்கொள்வது போலும்
தொடி வடு காணிய - கலி.71
( தழுவிய உனது கழுத்தருகே எடுத்து பூசிக்கொள்ளலாம் போலத் தெளிவாக ஒட்டியிருக்கின்ற கண்ணிமையின் மையணிக் கறையினைக் காண்க...)

நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி - மது.568
( மிகுதியாகப் பூசிய மையணியினை உடைய கண்ணிமைகளின் கறைப்படுமாறு தழுவி....)

இழை அணி ஆகம் வடுக்கொள முயங்கி - நற்.229
( மையணி கொண்ட கண்ணிமைகளின் கறைப்படுமாறு தழுவி.....)

எல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து
புல்லிய வடுவும் போகாது - கம்ப. யுத். 28/61
( ஒளிவிடும் வான்மதியில் தோன்றும் கறையானது எப்படி அதைவிட்டு நீங்குவதில்லையோ அதைப்போல என்னை நீவந்து தழுவியதால் உண்டான மையணியின் கறையும் என்னைவிட்டு நீங்காது....)

திகழ்ந்து ஏந்து அகலத்து செம் சாந்து சிதைய
பூண் வடு பொறிப்ப புல்லுவயின் வாராள் - பெருங்.2/16
( என் மார்பில் பூசியிருக்கும் செஞ்சாந்தினை அழித்து அவளது மையணியின் கறைப்படியுமாறு தழுவுவதற்கும் வாராள்.....)

நறு வெண் சாந்தம் பூசிய கையால்
செறிவுற பிடித்தலின் செறி விரல் நிரை வடு
கிடந்தமை நோக்கி - பெருங்.5/8
( நறுமணம் மிக்க சந்தனத்தைப் பூசிய கையினால் கெட்டியாகப் பிடித்தலால் விரலின் சந்தனக்கறைகள் வரிசையாகத் தோன்றியதைப் பார்த்து.....)

வடு = நத்தை முதலியன:

வடு என்ற சொல்லானது நத்தை முதலானவற்றை எவ்வாறு குறிக்கும் என்பதை இங்கே ஆதாரங்களுடன் காணலாம்.

பொதுவாக நத்தை, சிப்பி, பலகறை முதலானவை அழகிய பல வண்ணங்களைக் கொண்ட மேலோடுகளை முதுகில் சுமப்பவை என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இவை பற்றி பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா?. என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். அக் கட்டுரையில் நத்தை முதலானவற்றை அறல் என்ற சொல்லால் குறித்திருப்பார்கள். இக் கட்டுரையில், இவற்றை வடு என்ற சொல்லால் குறித்திருக்கின்றனர். காரணம், இவை ஆற்றுமணல் அல்லது கடற்கரை மணலில் ஊர்ந்துசெல்லும்போது மணலின்மேல் ஒரு சுவட்டினை அதாவது வழித்தடத்தை உருவாக்கி விட்டுச்செல்லும். இதை அருகில் உள்ள படம் தெளிவாகக் காட்டும். இப்படி இவை ஒரு வடுவினை அதாவது சுவட்டினை விட்டுச் செல்வதால் தான் இவற்றை வடு என்ற சொல்லால் குறித்தனர் புலவர்.

வடு என்பது நத்தை, சிப்பி, பலகறை ஆகிய பொருட்களில் பயின்றுவரும் பல பாடல்களில் சிலவற்றை மட்டும் கீழே காணலாம்.

வெண் தலை புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு வாழ் எக்கர் மணலினும் பலவே - புறம்.55

செந்தில் நெடுவேளாகிய முருகன் நிலைகொண்டிருக்கும் திருச்செந்தூரின் அழகிய கடற்கரை மணலில் நத்தை, சிப்பி போன்றவை ஊர்ந்து செல்லும் காட்சியினை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றது மேற்காணும் புறநானூற்றுப் பாடல்.

கழகத்து தவிராது வட்டிப்ப கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ- கலி.136

இப் பாடலில் வரும் காமரு பூ என்பது நெய்தல் பூவினையும், வடு என்பது பலகறையினையும் குறிக்கும். பலகறையின் மேலோடுகளான சோழிகளைத் தான் தாய விளையாட்டில் கவறாக அதாவது உருட்டும் காய்களாகப் பயன்படுத்துகிறோம். அருகில் சோழியின் படம் காட்டப்பட்டுள்ளது. சோழியின் அடிப்புறமானது ஒரு சிறிய வாய் போன்ற பிளவுடன் காணப்படும். இது பார்ப்பதற்கு மேல் இமை, கீழ் இமைகளுடன் கூடிய கண் போலத் தெரிவதால், இதைப் பெண்களின் மையுண்ட கண்ணுக்கு ஒப்பிடுவது இலக்கிய வழக்கம். இப்பாடலில், இதனைக் கண்போன்ற வடிவுடைய நெய்தல் பூவிற்கு ஒப்பிட்டுக் கூறி இருக்கின்றனர்.

வடு வாழ் கூந்தல்! அதன்பால் போக' என்று - மணி.17
வடு வாழ் கூந்தல் வாசவதத்தையொடு - பெருங். 4/6

இப் பாடல்களில் வரும் ' வடு வாழ் கூந்தல் ' என்பது நத்தை, சிப்பி, பலகறையின் மேலோடுகளைப் போல வண்ணம் தீட்டிய கண்ணிமைகளைக் குறிக்கும். இதனையே ' அறல் வாழ் கூந்தல் ' என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. இதைப்பற்றி பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா? என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் காணலாம். வடு பற்றிய இன்னும் சில பாடல்களைக் கீழே காணலாம்.

வடு பிளவு அனைய கண்ணாள் - சிந்தா.1573
வாள் ஆர் மதி முகத்த வாளோ வடு பிளவோ - சிந்தா.1972
வடு போழ்ந்து அன்ன வாள் அரி நெடும் கண் - பெருங்.1/46
வடுவும் வேலும் மலரும் கயலும் வனப்பு அழித்த கண் - சிந்தா.1654
வடு கண் வார் கூந்தலாளை - கம்ப.ஆரண்-113

இப் பாடல்களில் வரும் வடு என்பதற்கு மாவடு அதாவது மாம்பிஞ்சு என்ற பொருள் கூறுவாருளர். ஆனால் இப் பொருள் இவற்றுக்குப் பொருந்தாது. காரணம், மாவடுவானது இயற்கையிலேயே பிளவினை உடையது அல்ல. அதனை ஒரு இரும்பாலான கத்தி போன்ற ஆயுதத்தால் இரண்டாகக் கிழித்தால் தான் அது கண்ணின் மேல் இமை, கீழ் இமை போன்ற அமைப்புடன் ஒத்திருக்கும். மேலும், மாவடுவினைக் குறிப்பதற்கு வடு என்ற சொல்லைக் காட்டிலும் வடி என்ற சொல்லைத்தான் மிக அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர் புலவர். இதோ சங்க இலக்கியத்தில்,

வடு = மாம்பிஞ்சு என்ற பொருளில் ஒரேஒரு பாடலிலும்
வடி = மாம்பிஞ்சு என்ற பொருளில் ஒன்பது பாடல்களிலும் பயன்படுத்தியுள்ளனர். 

மேற்கண்டவற்றில் முதல் மூன்று பாடல்களில் வரும் வடு என்பது இயற்கையிலேயே பிளவினை உடையதும் கண்ணின் மேல் இமை மற்றும் கீழ் இமைகளைப் போல இரண்டு பிரிவுகளை உடையதும் பல வண்ணங்களை உடையதுமான பலகறையினைக் குறிக்கும். ஏனையவற்றில் வரும் வடு என்பது நத்தை, சிப்பி போன்றவற்றின் ஓடுகளைக் குறிக்கும். அதாவது, பெண்கள் தமது கூந்தலாகிய கண்ணிமைகளைப் பல வண்ணங்களில் அழகாக மைதீட்டி அலங்கரித்திருப்பதை இவற்றின் மேலோடுகளுடன் உவமையாக்கிப் பாடியுள்ளனர் புலவர்.

வடு = கறையான் :

வடு என்னும் சொல் கறையான் என்ற பொருளில் கீழ்க்காணும் ஒரே ஒரு இடத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொடு விரல் உளியம் கெண்டும்
வடு வாழ் புற்றின வழக்கு அரு நெறியே - அகம்.88

இப் பாடலில் வடு என்பது புற்றில் வாழ்வது என்றும் அதனை உண்பதற்குக் கரடிகள் தோண்டியெடுக்கும் என்றும் கூறப்படுவதால், அது கறையானைத் தான் குறிக்கும் என்பதில் ஐயமில்லை. சரி, கறையானை ஏன் வடு என்ற சொல்லால் குறித்தனர் என்று காண்போம்.

பொதுவாக, ஒரு இடத்தில் கறையான் வாழ்ந்தால் என்ன செய்யும்?. அது கூடியவரையில் அனைத்து இடங்களிலும் அதாவது மரம், சுவர், மண் தரை என்று எந்தத் தளத்தினையும் விடாமல் செம்மண் கொண்டு மெல்லிய குருதி நாளங்களைப் போன்ற அமைப்பில் தனது கூடுகளைப் படரவிட்டு அமைத்துக்கொண்டு விடும். கறையான் கூடுகளின் அமைப்பினை அருகில் உள்ள படத்தில் காணலாம். இப்படி இவை தாம் இருக்கும் இடம் முழுவதையும் கூடுகளைக் கட்டிக் கறைப்படுத்துவதாலும், கூடுகளின் மேல் இருக்கும் செம்மண்ணை நீக்கிய பின்னரும், அது ஒரு நீங்காத வடுவாக அத் தளத்தில் தங்கிவிடுவதாலும் இவற்றை வடு என்று குறித்தனர். இதன் பேரிலேயே 'கறை' இருப்பதையும் இதற்கொரு சான்றாகக் கொள்ளலாம்.

முடிவுரை:

இதுவரை கண்டதிலிருந்து, வடு என்பதற்கு அகராதிப் பொருட்கள் நீங்கலாக, கறை, கறையான், பலகறை, நத்தை, சிப்பி போன்ற பொருட்களும் உண்டு என்பது அறியப்பட்டது. இப் பொருட்களில் கறை என்பதே முதல்நிலைப் பொருளாகவும் இதில் இருந்தே தழும்பு, மச்சம், குற்றம், பழி, கேடு போன்ற அகராதிப் பொருட்களும் அதற்கடுத்த நிலையில் தோன்றியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

வடு என்னும் சொல்லைப் போலவே பல சொற்களுக்கு அகராதிகள் காட்டாத பொருட்கள் பல உள்ளன. அவற்றை மீளாய்வு செய்து வெளிக்கொணர்வதின் மூலம் தமிழில் சொல்வளம் பெருகும் என்பதுடன் அப்போதுதான் பாடல்களின் உண்மையான பொருளை அறிந்து சுவைக்கவும் முடியும்.