வியாழன், 29 செப்டம்பர், 2016

திருக்குறளில் வேள்வியும் வேட்டலும்

முன்னுரை:

திருக்குறளில் எந்தவொரு மதம் சார்ந்த கருத்துக்களும் கூறப்படவில்லை என்று பல கட்டுரைகளில் முன்னர் கண்டுள்ளோம். இந்நிலையில், திருக்குறளில் வரும் வேள்வி, வேட்டல் ஆகிய சொற்கள் தேவர்களைக் குறித்து செய்யப்படும் யாகங்களைக் குறித்தது என்றும் இதன்மூலம் வள்ளுவர் இந்துமதம் சார்ந்த கருத்துக்களையே முன்வைக்கிறார் என்றும் சிலர் வாதிடுகின்றனர். இவர்களது வாதம் எவ்வளவு பொய்யானது என்பதை இக் கட்டுரையில் ஆதாரங்களுடன் காணலாம்.

வேள்வியும் வேட்டலும் - தற்போதைய அகராதிப் பொருட்கள்:

வேள்வி, வேட்டல் ஆகிய சொற்களுக்குத் தற்போதைய தமிழ் அகராதிகள் என்னென்ன பொருட்களைக் காட்டியிருக்கின்றன என்று கீழே பார்க்கலாம்.

வேள்வி vēḷvi , n. < வேள்-. [T. M. vēḷvi, K. bēluve.] 1. Sacrifice. See ஐவகைவேள்வி, 1. முன்முயன் றரிதினின் முடித்த வேள்வி (அகநா. 220). 2. Spiritual discipline. See ஐவகையாகம், 2. 3. Sacrificial pit; ஓமகுண்டம். (பிங்.) 4. Service, worship; பூசனை. (பிங்.) வேள்வியி னழகியல் விளம்பு வோரும் (பரிபா. 19, 43). 5. Marriage; கலியா ணம். நாமுன்பு தொண்டுகொண்ட வேள்வியில் (பெரியபு. தடுத்தாட். 127). 6. Benevolence; gift; கொடை. (பிங்.) 7. Religious merit; புண்ணியம். ஆள்வினை வேள்வியவன் (பு. வெ. 9, 27). 8. (Puṟap.) Theme eulogising a warrior on his destroying his enemies to feast devils with their dead bodies. See களவேள்வி. பண்ணி தைஇய பயங்கெழு வேள்வியின் (அகநா. 13). 9. The 10th nakṣatra. See மகம், 2.

வேட்டல் vēṭṭal , n. < வேள்-. 1. Sacrificing, one of antaṇan-aṟu-toḷil, q.v.; யாகம் பண்ணுகை. ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல் (பதிற்றுப். 24, 6). 2. Marriage; விவாகம். (பிங்.) 3. Desiring; விரும்புகை. (பிங்.) 4. Begging; ஏற்கை. (அரு. நி.)

வேள்¹-தல் [வேட்டல்] vēḷ-, 9 v. tr. [K. bēḷ.] 1. To offer sacrifices; யாகஞ் செய்தல். ஓதல் வேட்டல் (பதிற்றுப். 24, 6). 2. To marry; மணம்புரிதல். மெய்ந்நிறை மூவரை மூவரும் வேட் டார் (கம்பரா. கடிமணப். 102). 3. To desire; விரும்புதல். வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது (புற நா. 20). 4. To love; சினேகித்தல். மலர்ந்து பிற் கூம்பாது வேட்டதே வேட்டதா நட்பாட்சி (நலாடி, 215).

திருக்குறளில் வேள்வி:

முதலில் வேள்வி என்ற சொல் பற்றிக் காணலாம். திருக்குறளில் வேள்வி என்னும் சொல் இரண்டு பாடல்களில் பயின்றுவருகிறது. அப் பாடல்களையும் அவற்றுக்கு இன்றைய உரையாசிரியர்கள் கூறியிருக்கும் விளக்கங்களையும் கீழே காணலாம்.

(1)  இனைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன் - குறள் 87

கலைஞர் உரை: விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

மு.வ உரை: விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

சாலமன் பாப்பையா உரை: விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.

பரிமேலழகர் உரை: வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை - அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. (ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை: விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை. அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்.

(2)   பரிந்தோம்பி பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார் - குறள் 88

கலைஞர் உரை: செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.

மு.வ உரை: விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.

சாலமன் பாப்பையா உரை: விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.

பரிமேலழகர் உரை: பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் - நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார். ("ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.).

மணக்குடவர் உரை: விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார், வருந்தியுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிரப்பர்.

வேள்வி = யாகம் என்பது சரியா?

மேற்காணும் அனைத்து உரைகளையும் நோக்கினால், வள்ளுவர் விருந்தோம்புதலை வேள்வியுடன் ஒப்பிட்டுப் பாடியிருப்பது விளங்கும். இவற்றில் வரும் வேள்வி என்னும் சொல்லுக்கு அகராதிப் பொருளான யாகம் என்பதைப் பொருளாகக் கொண்டே உரையாசிரியர்கள் விளக்கம் கூறியிருக்கின்றனர். இவ் விளக்கங்கள் சரியா தவறா என்பதைக் கீழே விரிவாகக் காணாலாம்.

வேள்வி என்பதற்கு யாகம் என்ற பொருள் இப்பாடல்களில் பொருந்துமா என்றால் ஒருபோதும் இல்லை எனலாம். காரணம், இப் பாடல்களில் விருந்தோம்பலானது வேள்வியுடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டிருப்பதால், விருந்தோம்புதலும் யாகம் செய்தலும் ஒப்புமை கொண்ட செயல்கள் என்ற பொருள் தோன்றுகின்றது அல்லவா?. ஆனால் உண்மை என்ன?. விருந்தோம்புதலும் யாகம் செய்தலும் முற்றிலும் மாறுபட்டவை ஆகும். இது எவ்வாறெனின்,

விருந்தோம்பலில், வந்த விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று, அவர்களது தாகம் தீர நன்நீர் கொடுத்துப் பருகச் செய்வர். பின்னர் அவர்களது வயிறார உணவிட்டு அவரது இன்முகம் கண்டு மகிழ்ந்து அவர்களை மனமகிழ்வுடன் வழியனுப்பி வைப்பர். ஆனால், யாகத்தில்...?. தேவர்களின் ஆசைகளையும் குறைபாடுகளையும் நிறைவேற்றுவதாகக் கருதிக்கொண்டு, பூமியில் செய்யப்படுவதாகிய யாகத்தில்... நடப்பது என்ன?. குண்டத்தில் தீயை மூட்டி அதனைத் தொடர்ந்து வளர்ப்பதற்காக நெய், விறகு போன்ற எரிபொருட்களை இட்டு அதன்மேல் பலவகையான உணவுப் பொருட்களை பலிபொருட்களாக வரிசையாகக் கொட்டி அனைத்தையும் எரித்துப் புகையாக்கி, வான மண்டலத்தையே புகை மண்டலமாக்கி..... அப்பப்பா !. விருந்தோம்பலுக்கும் யாகத்திற்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடுகள்! முரண்பாடுகள்!!. கீழே பாருங்கள்.

விருந்தோம்பலில் விருந்தினரின் பசித்தீயானது உணவுகொடுத்ததும் அணைந்துவிடும். ஆனால் யாகத்தீயானது பொருட்களைக் கொடுக்கக்கொடுக்க அணையாமல் வளர்ந்துகொண்டே இருக்கும்.

விருந்தோம்பலில் உணவினை உண்டவர்கள் மட்டுமின்றி கொடுத்தவர்களின் உடலும் மனமும் குளிர்கிறது. ஆனால் யாகத்தில் யாகம் செய்பவர்களின் உடலும் மனமும் தீயின் அருகிலேயே இருப்பதால் குளிர்வதில்லை. அத்துடன் சுற்றுப்புறமும் காற்றும் கூட வெகுவாக சூடேறிவிடுகிறது.

விருந்தோம்பலில் எந்தவொரு எரிபொருளும் உணவுப்பொருளும் வீணடிக்கப்படுவதில்லை. ஆனால், யாகத்தில் எல்லா எரிபொருட்களும் உணவுப் பொருட்களும் எரிக்கப்பட்டு வீணடிக்கப்படுகிறது.

" இல்லை இல்லை. யாகத்தில் எந்தவொரு உணவுப் பொருளும் வீணடிக்கப்படுவதில்லை. மாறாக, தேவர்கள் அவற்றைப் புகை வடிவில் ஏற்றுக் கொள்கிறார்கள் " என்று சிலர் கூறுகின்றனர். இதை அவர்களது மூட நம்பிக்கை என்று கூறாமல் என்னவென்று சொல்வது?. இவர்களின் கூற்று உண்மையென்றால், " நாம் எல்லோருமே நாள்தோறும் தேவர்களுக்காக யாகம் செய்பவர்கள் தான் !. அன்றாடம் நாம் உருவாக்கும் வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை, இன்னபிற புகை யாவும் தேவர்களுக்குத் தான் !!. மாதம் மும்மாரி மண்ணில் மழை பெய்து மக்கள் மகிழ்வுடன் இருப்பது இப் புகையினை ஏற்றுக்கொண்டு அவர்கள் மகிழ்வதால் தான் !!!. " என்றெல்லாம் நகைச்சுவையாகக் கூறலாம் தானே?. ஆனால், இவற்றில் எதுவுமே உண்மையில்லை என்று நாம் அனைவரும் நன்கு அறிவோம். இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகள் இன்றல்ல நேற்றல்ல, பன்னெடுங்காலமாகவே சமுதாயத்தில் இருந்துவந்துள்ளன. இவற்றை உண்மையென்று நம்பத் துவங்கியதன் விளைவு, யாகத்தில் உணவுப் பொருட்களுடன் பல உயிர்களும் பலியிடப்பட்டன. சங்க காலத்தில் ஏதுமறியாத பல வாயில்லாப் பிராணிகள் யாக குண்டத்தில் பலி இடப்பட்டிருக்கின்றன. யாக குண்டங்களில் எருதுகள் பலியிடப்படுவதைக் கீழ்க்காணும் பட்டினப்பாலைப் பாடல் கூறுவதைக் காணுங்கள்.

......அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழும் கஞ்சி
யாறு போல பரந்து ஒழுகி
ஏறு பொர சேறாகி
தேர் ஓட துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல
வேறுபட்ட வினை ஓவத்து
வெண் கோயில் மாசு ஊட்டும்
தண் கேணி தகை முற்றத்து
பகட்டு எருத்தின் பல சாலை
தவ பள்ளி தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ.....

பொருள்: .... அறச்சாலைகளில் உணவாக அளிக்கப்பட்டு சிந்திய சோற்றுக்கஞ்சியானது ஆறுபோல எங்கும் பரந்து பின்னர் வெயிலில் காய்ந்து, மாட்டு வண்டிகளும் தேர்களும் ஏறிச்செல்ல வெண்புழுதியாகி மண்ணில் கிடக்க, அப் புழுதியைத் தன்மேல் வாரிவீசியும், அப் புழுதியின்மேல் புரண்டும் எழுந்த கரிய ஆண்யானையின் உடலெங்கும் வெண்ணிறமும் ஆங்காங்கே சிறிது கருநிறமும் ஒரு வரையப்பட்ட ஓவியம் போலத் தோன்ற, அந்த யானையின் உடலைப் போல வெண்ணிறமாகத் தோன்றிய கோயிலை மாசுபடுத்தும் விதமாக, கிணற்றினை உடைய அக் கோவிலின் முற்றத்தில் வெட்டப்பட்ட எருமைத்தலைகளையும் பெரிய யாகசாலைகளையும் உடைய அந்தச் சோலையிலே சடையுடை முனிவர்கள் யாகத்தில் தீ வளர்த்து எரித்த ஆவுதியின் புகையானது பெரிதாய்த் தோன்றிப் பரவவும், அதை வெறுத்து......

இன்றளவும் கூட பல யாகங்களில் உயிர்ப்பலி கொடுக்கப்படுவதாகக் கேள்வி. கொடுமை நிறைந்த இதுபோன்ற மூடநம்பிக்கைகள் என்று ஒழியுமோ தெரியவில்லை.

இதுவரை கண்டவற்றில் இருந்து, தேவர்கள் என்போரைக் கற்பனைசெய்துகொண்டு, அவர்களைத் திருப்திசெய்தால் பல ஆற்றல்களையும் நன்மைகளையும் பெறலாம் என்று நினைத்து, பல அப்பாவி உயிர்களைப் பலியிடுவதுடன் உணவுப் பொருட்களையும் எரிபொருட்களையும் எரித்து வீணாக்கி சுற்றுப்புறச் சூழலையும் மாசுபடுத்துவதான இந்த யாகம் என்ற இழிவான செயலை விருந்தோம்புதலாகிய மிகச் சிறந்த செயலுடன் ஒருபோதும் ஒப்பிடமுடியாது என்பதைத் தெள்ளிதின் விளங்கிக் கொள்ளலாம். எனவே மேற்காணும் பாடல்களில் வரும் வேள்வி என்ற சொல்லுக்கு யாகம் என்ற பொருள் தவறானது என்பது முடிபாகிறது. என்றால், வேள்வி என்பதன் பொருள்தான் என்ன?. இதைப் பற்றிக் கீழே காணலாம்.

வேள்வி - புதிய பொருளும் காரணமும்:

மேற்கண்ட குறள்களில் வரும் வேள்வி என்ற சொல் குறிக்கும் புதிய பொருள் : பசியாற்றுதல்.

பசியாற்றுதல் என்பது,

தனது பசியாற்றுதல் என்ற வகையில் உண்ணுதலையும்
பிறரது பசியாற்றுதல் என்ற வகையில் உணவளித்தலையும் ஊட்டுதலையும் குறிக்கும்.

வேள்வி என்னும் சொல்லுக்கு இப் புதிய பொருட்கள் தோன்றியதன் அடிப்படை ' வேள் ' என்ற வேர் ஆகும்.
வேள் என்பது வேண்டுதல் என்ற வினைவடிவில் விரும்புதலையும் தேவைப்படுதலையும் குறிப்பதாகும்.
வேள் என்பதிலிருந்து தோன்றுவதான வேட்கை என்ற பெயர்ச்சொல் பசி, தாகம் போன்ற அடிப்படை உடல் தேவைகளையும் இதர தேவைகளையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இனி,

பசி, தாகம் போன்ற தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும்பொருட்டு செய்யப்படும் உண்ணுதலாகிய தொழிலையும் ஊட்டுதலாகிய தொழிலையும் குறிக்க ' வேள்வி ' என்ற சொல்லைப் பயன்படுத்தினர் எனலாம். சுருக்கமாக,

வேள் ----> வே(ள்)ட்கை -----> வேள்வி.

திருக்குறளில் வேட்டல்:

இனி, திருக்குறளில் வேட்டல் என்ற சொல் பற்றிக் காணலாம்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று - குறள் 259

கலைஞர் உரை: நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.

மு.வ உரை: நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை: (மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.

பரிமேலழகர் உரை: அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.).

மணக்குடவர் உரை: நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.

வேட்டல் = யாகம் என்பது சரியா?

மேற்காணும் உரைகளை நோக்கினால், அவை அனைத்திலும் வேட்டல் என்பதற்கு யாகம் என்ற பொருளே கொள்ளப்பட்டுள்ளதை அறியலாம். ஆனால், இப்பொருள் இப்பாடலில் பொருந்துமா என்றால் இல்லை. இதைப்பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

யாகம் என்பது என்னவென்றும் அது ஒரு மூடத்தனமான இழிவான செயலென்றும் மேலே கண்டோம். அதனில் எத்தனை எத்தனை உயிர்கள் பலியிடப்படுகின்றன என்றும் மேலே கண்டோம். அன்புசெய்தலையும் அறம் புரிவதனையும் அனைத்து உயிர்களுக்கும் வலியுறுத்தும் கொள்கையினராகிய வள்ளுவப் பெருந்தகை, யாகம் போன்ற கொடிய செயல்களைப் பற்றித் தம் பாடல்களில் பேசுவாரா?. ஒருபோதும் பேசமாட்டார். யாகத்தைப் போலவே உயிர்களைக் கொல்லும் கொடிய செயல்களான சதி அதாவது உடன்கட்டை ஏறுதல், மரணதண்டனை விதித்தல் போன்றவை வள்ளுவரின் காலத்திலும் இருந்திருக்கக்கூடும். ஆனால், அதைப்பற்றி ஒருபாடலில் கூட அவர் குறிப்பிடவில்லை என்பதை இங்கே நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். இதிலிருந்து உயிர்க்கொலை புரியும் கொடிய செயலான யாகத்தைப் பற்றி இப் பாடல் பேசவில்லை என்பது தெளிவாகிறது.

வள்ளுவர் எந்த ஒரு குறளிலும் மதம் தொடர்பான கருத்துக்களைக் கூறவில்லை என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். அவற்றில் தேவர்கள் என்னும் கற்பனைப் படைப்புக்களைப் பற்றி எந்தவொரு பாடலிலும் அவர் குறிப்பிடவில்லை என்னும் கருத்தானது பல ஆதாரங்களுடன் ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. தேவர்களே கற்பனை என்றிருக்கும்போது அவர்களுக்காக யாகம் நடத்துவதென்பது அதைவிடக் கற்பனையான ஒன்றென்று சொல்லவும் வேண்டுமோ?. எனவே, இப்பாடலில் வரும் வேட்டல் என்பது ஒருபோதும் யாகத்தைக் குறிக்காது என்பது தெளிவு. என்றால், இப்பாடலில் வரும் வேட்டல் என்பது எதைக் குறிக்கும் என்பதைப் பற்றிக் காணலாம்.

வேட்டல் என்பது என்ன?

இப்பாடலில் வரும் வேட்டல் என்பது ' பசியாற்றுதல் ' ஆகிய அன்னதானத்தினைக் குறிப்பதாகும்.

இப் பாடலில் வரும் 'அவி' என்பது 'அவித்த உணவாகிய சோற்றினைக்' குறிப்பதாகும். இப் புதிய பொருட்களின்படி, இக்குறளுக்கான புதிய விளக்கம்:

' ஆயிரம் பேருக்கு உணவினை வழங்கி அவர்களின் பசியாற்றுவதைக் காட்டிலும் ஒரேயொரு உயிரைக் கொன்று உண்ணாதிருப்பது சாலச் சிறந்த செயலே. "

நிறுவுதல்:

வேட்டல் என்பது எவ்வாறு பசியாற்றுதலைக் குறிக்கும் என்று காணலாம்.

நாம் மேலே கண்டபடி, வேட்டல் என்ற சொல்லும் வேள் என்னும் வேரை அடிப்படையாகக் கொண்டு பிறந்ததே ஆகும். எப்படி வேள்வி என்பது பசியாற்றுதலைக் குறிக்குமோ அவ்வாறே வேட்டல் என்பதும் பசியாற்றுதலைக் குறிப்பதேயாம்.

வேள் + வி = வேள்வி. 
வேள் + தல் = வேட்டல்.

ஒருவரது பசியாற்ற வேண்டுமெனில், அவருக்கு நல்ல உணவினை வழங்கவேண்டும். அந்த உணவைப்பெற பணம் வேண்டும். ஆக, ஒரே ஒருவருக்கு உணவுவழங்கவே பணம் தேவைப்படும் நிலையில், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்வதென்றால் அது சாதாரண செயலன்று. பெரும் நிலக்கிழார்கள், மன்னர்கள், வணிகர்கள் போன்ற பணம் படைத்தவர்களால் தான் இதைச்செய்ய முடியும் இல்லையா?. பணம் மட்டுமின்றி எவ்வளவு உழைப்பும் மேலாண்மையும் இதற்குத் தேவைப்படும் என்பது நாம் அறிந்த ஒன்றேயாகும். இப்படி பலரது பசியினைப் போக்கினால் என்ன கிடைக்கும்?. எதைப்பெறுவதற்காக இந்தக் கடினமான செயலைச் செய்யவேண்டும்?. இக் கேள்விகளுக்கான ஒரே விடை: உள்ளத் தூய்மை.

தம் கைப்பொருள்கொண்டு செலவழித்து உணவுவழங்கி பலரது பசியினைப் போக்கி அவரை மகிழ்விக்கும்போது, அன்னதானம் செய்வோரின் மனம் குளிர்ந்து அமைதி பெறுவதுடன் தூய்மையடையத் துவங்குகிறது. பொருட்களின் மேல் அவருக்கிருக்கும் பற்று கொஞ்சம் கொஞ்சமாக விலகி அவர் உள்ளத்தால் சிறந்த துறவியாகிறார். தன்னிடத்தில் இருக்கும் எதையும் தனக்கெனக் கொள்ளாமல் பிறருக்கே என்றெண்ணும் பெருந்தகை ஆகிறார். ஆனால், இதை அடைவதற்கு ஒரு தடையும் உண்டு. அதுதான் புலால் உண்ணுதல். புலால் என்பது ஒரு உயிரைக்கொன்று அதனின் இருந்து பிரிந்துவந்த ஊன் ஆகும். உயிர்களின் பசியாற்றி அவர்களை மகிழ்வுடன் வாழவைப்பதையே கொள்கையாகக் கொண்டொழுகும் ஒருவர் வேறொரு உயிரினைக் கொன்று அதை உண்டுவந்தால், அது கொள்கைமுரண் என்பது மட்டுமின்றி அவரது மனம் ஒருபோதும் அமைதியடையாது; தூய்மையும் ஆகாது. அதனால் தான் இக் குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்: ' ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி அவரது பசியாற்றுவதை விட ஒரே ஒரு உயிரைக் கொன்று உண்ணாதிருப்பது சாலச் சிறந்தே செயலே '.

இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய இன்னொரு கருத்தும் உள்ளது. நமது மனம் அமைதியும் தூய்மையும் அடைய வேண்டுமெனில், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யவேண்டிய அவசியமில்லை. அது எல்லோராலும் முடியக்கூடியதுமல்ல; எந்தவொரு உயிரையும் கொன்று தின்னாதிருந்தால் போதும்; இது எல்லோராலும் முடியக்கூடியதே; அமைதியும் தூய்மையும் தானே மனதில் குடிகொண்டுவிடும்.

முடிவுரை:

துறவறவியலில் புலால்மறுத்தல் அதிகாரத்தில் வரும் இப்பாடல் முற்றுந்துறந்த துறவியருக்கானது என்று சிலர் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று அனைத்தையும் துறந்தவனே துறவி. இந்நிலையில் ஒரு துறவி ஏன் அன்னதானம் செய்யவேண்டும்?. ஒரே ஒருவருக்கு அன்னதானம் செய்யவே அதிக பணம் தேவைப்படும்போது, ஆயிரக்கணக்கான பேருக்கு உணவளிக்க எந்தத் துறவியால் முடியும்? அப்படி முடிந்தால் அவன் துறவியே அல்ல. ஆக, இப் பாடல் துறவியருக்கானதல்ல; பணம் படைத்த இல்லறத்தாருக்கு உரியதே என்பது தெளிவாகிறது.
-----------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.