சனி, 6 மே, 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 5 ( நுசுப்பு - நுதல் - மருங்குல் - முகம் )

முன்னுரை:

கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற கட்டுரையின் ஐந்தாம் பகுதியாகிய இதில் நுசுப்பு, நுதல், மருங்குல், முகம் ஆகிய சொற்களைப் பற்றிச் சுருக்கமாகக் காணலாம். 

நுசுப்பு:

நுசுப்பு என்ற சொல்லானது பெண்களது கண்ணிமையினைக் குறிக்கவே புலவர்களால் பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் மைபூசும்போது காக்காய்ப்பொன் (மைக்கா) போன்ற மின்னும் பொருட்களையும் கலந்து பூசுவர் என்றும் இப்படிப் பூசியபின்னர் அவர்கள் இமைகளை மூடித்திறக்கும்போது மின்னல் வெட்டுவதைப் போல பளிச்சென்று ஒரு ஒளி தோன்றி மறையும் என்று முன்னர் ஓதி என்ற கட்டுரையில் கண்டோம். இதேபோல நுசுப்பு ஆகிய கண்ணிமை குறித்தும் பாடல்கள் உண்டு. சில சான்றுகள் கீழே:

மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார் - சிந்தா:1 371/1
மின் பிறழ் நுசுப்பினார் தாமும் விம்மலால் - கம்பரா: பால:5 111/3 

வண்ண மையினால் பூசப்பட்ட கண்ணிமையானது வேங்கையின் பொன் நிறத்துப் புதுமலரைப் போல இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப் பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய - அகம் - 318

மையினால் மட்டுமின்றி, பூக்களின் தாதுக்களாலும் ( சுணங்கு ) கண்ணிமையினை அலங்கரிப்பது பெண்களின் வழக்கம். கீழ்க்காணும் பாடல் அதை உறுதிசெய்கிறது.

அரும்பிய சுணங்கின் நுசுப்பு அழித்து ஒலிவரும் - அகம் - 253

பெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் பல வண்ணங்களில் மைபூசி அழகுசெய்வர் என்று முன்னர் கண்டோம். அதுமட்டுமின்றி, இமைகளுக்கு மேலாகவும் புருவங்களுக்குக் கீழாகவும் உள்ள பகுதியில் தாவரக்கொடிகளைப் போல வரைந்தும் அழகுசெய்வர். பல வண்ணங்களில் மையினால் வளைத்து வளைத்து வரையப்படும் கொடிகளில் இலைகளுடன் பூக்களையும் சேர்த்து வரைந்திருக்கும்போது மிக அழகாக இருக்கும். கொடிகள் வரையப்படுவதாலும் கொடிகளைப் போல மிக நுட்பமான தடிமன் கொண்டிருப்பதாலும் கண்இமைகளைக் கொடி நுசுப்பு என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.

குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் - திரு -101
கொடி புரையும் நுசுப்பினாய் - கலி 58
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ - கலி 1/7

கொடி போன்ற அல்லது கொடிகள் வரையப்பட்ட கண்ணிமைகளை உடைய பெண்களைக் கொடிச்சி என்று கூறுகிறது இலக்கியம்.

பேர் அமர் மழை கண் கொடிச்சி - குறு 286, ஐங்கு. 282
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் - மலை 304

பெண்களது கண்ணிமைகள் மிக மெல்லிய அல்லது நுட்பமான தடிமன் கொண்டவை என்பதால் அவற்றை மெல்லிய கொடிகளுடன் மட்டுமின்றி  ஆடையின் மெல்லிய நூலுடன் ஒப்பிட்டும் கூறுவர்.

துகில் நூலின் வாய்த்த நுண் கேழ் நுசுப்பின் மடவீர் - சிந்தா: 2346

பெண்களது கண்ணிமை எவ்வளவு மெல்லியது என்றால் அதன்மேல் சிறிய முல்லை மலர் மாலை அணிந்தால் கூட பாரம் தாங்காமல் முறிந்து விடும் என்று கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.

முல்லை அம் சூட்டு வேயின் முரிந்து போம் நுசுப்பின் நல்லார் - சிந்தா:13 3119/3

பெண்களின் நுசுப்பு ஆகிய கண்ணிமை பற்றித் திருவள்ளுவர் காட்டும் குறளோவியக் காட்சி மிக அழகானது. காதலன் ஒருவன் தனது காதலியின் கண்ணழகினைப் புகழ்கின்றபோது அவள் நெற்றியில் அணிந்திருந்த அனிச்சப் பூமாலையைப் பார்க்கின்றான். அவளோ அந்த அனிச்சப்பூக்களைக் காம்பு களையாமல் அப்படியே சூடியிருக்கிறாள். அனிச்சப் பூமாலை காற்றில் அசையும்போது அதன் காம்புகள் அவளது கண்ணிமையின்மேல் பட்டு பட்டு எழுகின்றன. இதைக்காணும் காதலனுக்குப் பறையினை கோல்கொண்டு அடிக்கும் நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. கண்ணிமையினைப் பறையாகவும் அனிச்சப் பூவின் காம்பினைக் கோலாகவும் உவமைப் படுத்தி இவ்வாறு பாடுகிறான்.

அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை. - குறள் - 1115

பறையினைக் கோல்கொண்டு அடித்தால் ஒலி எழும். ஆனால் காதலியின் கண்ணிமை ஆகிய பறையிலோ எந்தவிதமான ஒலியும் எழவில்லை என்பதால் அதனை ' படாஅ பறை ' ( ஒலிக்காத பறை ) என்று கூறுகிறார் வள்ளுவர். நுசுப்பு பற்றி மேலும் அறிந்துகொள்ள கதுப்பு - ஓதி - நுசுப்பு என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

நுதல்:

நுதல் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் கண்விழியினையும் கண்ணிமையினையும் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பசலை / பசத்தல் என்பது கண்ணீர் / அழுகையினைக் குறிக்கும் என்று பசலை என்றால் என்ன என்ற கட்டுரையில் கண்டோம். அழுகையின்போது கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடுவதனைக் குறிப்பிடுகின்ற சில பாடல்வரிகள் கீழே:

பாஅய் பாஅய் பசந்தன்று நுதல் - கலி 36/12,13
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை - கலி 127/17

நுதல் பற்றிக் குறிப்பிடும்போது வாள்நுதல் என்றும் ஒள்நுதல் என்றும் சுடர்நுதல் என்றும் பல இடங்களில் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சான்றுக்கு சில பாடல்கள் கீழே:

ஒள்நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து - ஐங்கு.107
வாள்நுதல் பசப்ப - ஐங்கு.423

இப்பாடல்களில் வரும் சுடர், வாள், ஒள் ஆகிய மூன்று முன்னொட்டுக்களும் கண்ணின் ஒளியைக் குறித்து வருவன ஆகும். பொதுவாக, பெண்களின் வெண்ணிற ஒளிவீசும் கண்ணினை வெள்ளொளி வீசுகின்ற பால்நிலவுக்கு ஒப்பிடுவது புலவர்களின் வழக்கமே. இதைப்பற்றி கொங்கை என்ற கட்டுரையிலும் முன்னர் கண்டோம். இங்கும் சில சான்றுகளைக் காணலாம்.

மதி இருப்பு அன்ன மாசு அறு சுடர் நுதல்- அகம் 192
திங்கள் வாள் நுதல் மடந்தையர் - சுந்:12 49/1

நிலா என்றாலே மேகம் அதனை அடிக்கடி மறைப்பதும் வழக்கமே. இந்த மேகத்தினைப் பாம்பு என்றும் அரவு என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. நிலவினை மேகம் மறைக்கும் நிகழ்வினைப் பெண்களின் கண்ணைக் கண்ணீர் மறைப்பதுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற பாடல்வரிகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் - நற் 128/2
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப - அகம் 313/7

பெண்களின் கண்ணை வானத்தில் ஒளிவீசுகின்ற விண்மீனுடன் ஒப்பிட்டு கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

பெரு நல் வானத்து வட வயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறு நுதல் - - பெரும் 303,304

பெண்கள் தமது கண்களைச் சுற்றிலும் மையிட்டு அலங்கரிப்பது பொதுவான வழக்கம். ஆனால், சங்க காலப் பெண்கள் தமது கண்களை மீன் போல மையால் எழுதி அலங்கரித்த செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்களின் வழியாக அறியலாம்.

மகர வலயம் அணி திகழ் நுதலியர் - பரி -10
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் - பெரும்.

பெண்கள் தமது கண்ணிமைகளைப் பூக்களின் இதழ்களைப் போல மையிட்டு அழகுசெய்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். அதைப்போல நுதல் ஆகிய இமைகளையும் அழகுசெய்வர் என்று கூறும் சில பாடல்கள்:

பூத்த முல்லை பசு முகை தாது நாறும் நறு நுதல் - குறு - 323
சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல்- அகம் 338

இதில் வரும் நாறும் என்ற சொல்லானது தோன்றுகின்ற என்ற பொருளில் வந்துள்ளது. பெண்களின் கண்ணிமைகள் வளைந்திருப்பதுடன் அவரது கண்கள் பார்வை என்னும் அம்பினையும் எய்வதால், பெண்களின் இமைகளை வில்லுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் புலவர்களில் பாடியுள்ளனர். சான்றுக்குச் சில பாடல்கள் கீழே:

சிலை தொழில் சிறு நுதல் தெய்வ பாவை போல் - சிந்தா:3 657/1
வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்தே - கம்ப.அயோ:10 17/1

பெண்கள் தமது இமைகளின்மேல் பூசுகின்ற மையணியினைத் தொய்யில், தொடி, கரும்பு என்று இலக்கியங்கள் குறிப்பிடுவதைப் பற்றி தோள் முதலான கட்டுரைகளில் முன்னர் கண்டோம். இதற்குத் திலகம் என்று இன்னொரு பெயரும் இருப்பதாகக் குறிப்பிடுகிறது இலக்கியம். சான்றுக்குச் சில பாடல்கள் கீழே:

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் - திரு 24, நற் - 62
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும் - அகம் 389

கம்புள் என்ற பறவையின் கண்ணைச் சுற்றிலும் வெள்ளைநிற வளையம் இருப்பதால் அதனை வெண் நுதல் கம்புள் என்று குறிப்பிடுகிறது ஐங்குறுநூற்றின் 85 ஆம் பாடல். யானையின் கண்களைத் தீக்கங்குகளுடன் ஒப்பிட்டு பூ நுதல் என்றும் புகர்நுதல் என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. பெண்களின் கண்களுக்கு நுதல் என்ற பெயர் ஏற்படக் காரணம், அவை நுதலும் தன்மை அதாவது பேசும் தன்மை வாய்ந்தவை என்பதால் தான். நுதல் பற்றி மேலதிக தகவல்களுக்கு நுதலும் நுதலப்படாத கருத்துக்களும் என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

மருங்குல்:

மருங்குல் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டிலும் கண்ணையும் கண்ணிமையினையும் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் தமது கண்ணிமைகளுக்கு மேலாகவும் புருவங்களுக்குக் கீழாகவும் உள்ள பகுதியில் கொடி போன்ற ஓவியங்களை வரைந்து அழகுசெய்வர் என்று நுசுப்பு என்ற கட்டுரையில் கண்டோம். அதைப்போலவே மருங்குல் ஆகிய இமையின் மேலும் கொடிகளை வரைந்து அழகுசெய்ததனைப் பற்றிக் கூறுகின்ற சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கொடி மருங்குல் விறலியருமே - புறம்.139
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய - புறம். 316
வஞ்சி போல் மருங்குல் - கம்ப.பால.3/9

பெண்களின் மையுண்ட கண்ணிமைகளை மின்னலுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்களைப் பற்றி ஓதி முதலான கட்டுரைகளில் கண்டோம். அதைப்போல மருங்குலை மின்னலுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்கள் கீழே:

மின் நேர் மருங்குல் குறுமகள் - அகம். 126
முகில் ஏந்து மின் மருங்குல் - சிந்தா: 3/679
மழைஉறா மின்னின் அன்ன மருங்குல் - கம்ப.பால. 21/9

மின்னுகின்ற தன்மைகொண்ட மைப்பூச்சுக்களில் பெரும்பான்மை பொன்போல மஞ்சள் நிறத்தில் இருப்பதால் அவற்றைப் பொலம் துடி ( பொன்போல மின்னுகின்ற ) என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.

பொலம் துடிக்கு அமை மருங்குல் - கம்ப.சுந்தர. 2/202
பொலம் துடி மருங்குலாய் - கம்ப. சுந்தர.3/32

பெண்களின் கண்ணிமைகள் மிக மெல்லிய தடிமன் கொண்டவை என்பதால் அவற்றின் நுட்பத்தைக் காட்ட அவற்றை ஆடையில் உள்ள நூலுடன் ஒப்பிட்டுக் கூறுவது இலக்கிய வழக்கம் என்று நுசுப்பு என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். அதைப்போல மருங்குலையும் நூலுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற பாடல்வரிகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நூல் ஒக்கும் மருங்குலாள் - கம்ப. கிட்.13/46
இழை புரை மருங்குல் - கம்ப. சுந்தர. 3/88

பெண்களின் கண்ணிமைகள் மிக மென்மையானவை என்றும் அவை எவ்வளவு மென்மையானவை என்றால் மெல்லிய பூமாலையினைச் சூடினாலும் அதன் பாரம் தாங்காமல் முரிந்து அதாவது நைந்து போகும் என்று நுசுப்பு என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். இதேபோல பெண்களின் மருங்குல் ஆகிய கண்ணிமையும் பாரம் தாங்காமல் முரிந்துபோகும் என்று கூறும் பாடல் வரிகள் கீழே:

இறும் மருங்குல் போது அணியின் என்று இனைந்து - சிந்தா: 7/1698
பூ மாலை சூடின் பொறை ஆற்றா நுண் மருங்குல் - சிந்தா: 7/1699

மருங்குல் என்பது பெண்களுக்கு மட்டுமின்றி யானைகளைப் பொருத்தமட்டிலும் சில இடங்களில் கண் என்ற பொருளில் பயன்பட்டு உள்ளது. சான்றாக ஒரு பாடலின் வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

.... யானை மருங்குல் ஏய்க்கும் வண்தோட்டுத்
தெங்கின் வாடுமடல் வேய்ந்த - பெரும்.

யானையின் கண்களைப் பனைமரத்தில் காய்த்துள்ள நுங்குகளுடன் உவமைப் படுத்திக் கூறுகிறது மேற்காணும் பெரும்பாணாற்றுப் பாடல் வரிகள். கடும் கோடைகாலத்தில் தாகம் தீர்க்கத் தண்ணீரைத் தேடி அலைந்து கிடைக்காததால் இலைதழைகளை உண்ண மறுத்துக் கண்ணில் நீர்வழிய நிற்கின்ற யானைகளைப் படம்பிடித்துக் காட்டும் அகநானூற்றுப் பாடல் வரிகள் கீழே: 

... குளகு மறுத்து உயங்கிய மருங்குல் - அகம். 229

நீண்டநாள் கடும்பசியினால் வாடி உழந்த ஒரு கிணைமகளின் கண்களைப் பற்றிக் கூறுகிறது சிறுபாணாற்றுப் பாடல்.

.. ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் .... - சிறு.

பெண்களின் கண்ணிமைகளுக்கு மருங்குல் என்ற பெயர் ஏற்படக் காரணம், பெண்களுக்கு அவை மருங்கு போன்றவை என்பதால். மருங்கு என்பதற்குச் செல்வம் என்ற பொருள் உண்டு. பெண்கள் தமது கண்ணிமைகளையே தமது பெருஞ்செல்வமாகக் கருதுவதால் அதற்கு மருங்குல் என்ற பெயர் ஏற்பட்டது. மருங்குல் பற்றி மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள மருங்குல் என்றால் என்ன என்ற கட்டுரையினைப் படிக்கலாம்.

முகம்:

முகம் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் கண் என்ற பொருளிலும் பல இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் அழும்போது கண்களில் இருந்து கண்ணீர் வழிவதனைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் காட்டுகின்றன.

பழி தபு வாள்முகம் பசப்பு ஊர - கலி: 100
மை இல் வாள்முகம் பசப்பு ஊரும்மே - கலி: 7

இப்பாடலில் வரும் பசப்பு என்பது கண்ணீரைக் குறிக்கும். இதைப்பற்றி விரிவாக அறிந்துகொள்ள பசப்பு என்றால் என்ன என்ற கட்டுரையைக் காணலாம். கண்ணீரால் மறைக்கப்பட்ட விழிகளை மேகத்தால் மறைக்கப்பட்ட நிலவுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற பாடல் வரிகள் கீழே:

கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார
பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற- கலி.145

பெண்களின் வெள்ளொளி வீசுகின்ற கண்களை வெண்ணிற ஒளிவீசுகின்ற நிலவுடன் ஒப்பிட்டுக் கூறுவது புலவர்களின் வழக்கம் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். அதைப்போல பெண்களின் முகம் ஆகிய கண்களையும் நிலவுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற பாடல் வரிகள் சில கீழே தரப்பட்டுள்ளன.

மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை - கலி: 62
திங்கள் அன்ன நின் திருமுகத்து - அக: 253
தீங்கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் - கலி: 15

தனது அருள்நிறைந்த பார்வையினால் தீயதை அழிப்பவனின் கண்களைப் போல இருளை அழித்து நிலவானது ஒளிவீசுவதாகக் கூறும் பாடல் வரிகள் கீழே:

அல்லது கெடுப்பவன் அருள்கொண்ட முகம் போல
மல்லல் நீர்த்திரை ஊர்பு மாலிருள் மதி சீப்ப - கலி: 148

தனக்குப் பின்புறமாக இருக்கின்ற பொருளைக் காட்டுகின்ற பளிங்குபோல மனதில் தோன்றும் விருப்பு வெறுப்பு முதலான எண்ணங்களை அப்படியே வெளிக்காட்டும் தன்மை வாய்ந்தவை கண்கள். அதைப்பற்றிக் கூறும் குறள் வரிகள் கீழே:

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்    --குறள்  706

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முந்துறும். - குறள் - 707

அனிச்ச மலரைத் தொடவே வேண்டாம்; அருகில் சென்று மோந்து பார்த்தாலே வாடிவிடுகிற அளவுக்கு மென்மையானது அனிச்சப்பூ. அதுபோல விருந்தினர்களும் மென்மையானவர்களே. அவர்களை அருகில் சென்று திட்டவோ துன்புறுத்தவோ வேண்டாம்; நமது கண்களில் சிறிது வேறுபாட்டினைக் காட்டினாலும் அவர்கள் வாடிவிடுவார்கள் என்று கூறுகிறார் வள்ளுவர்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. - குறள் -90

முகம் பற்றி மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள இன்னொரு முகம் என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.






........... தொடரும்..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.