திங்கள், 4 செப்டம்பர், 2017

கலித்தொகையில் தாழிசையும் தருக்கவியலும்

முன்னுரை:

கலித்தொகையில் தாழிசையும் தருக்கவியலும் - என்ற இக் கட்டுரையில் கலித்தொகையில் வரும் தாழிசை உறுப்பின் மூலம் பெண்களின் உடல் உறுப்புக்களைக் குறிப்பதான பல சொற்களுக்குப் புதிய அல்லது உண்மையான பொருட்களைத் தருக்கமுறைப்படி எப்படி நிறுவலாம் என்பது பல்வேறு சான்றுகளுடன் விளக்கப்படுகிறது. தாழிசையை அடிப்படையாகக் கொண்டு ஏரணமுறைப்படி நிறுவப்படுவதால், இப்புதிய ஆய்வு அணுகுமுறையினை 'தாழிசை ஏரணமுறை' என்று அழைக்கலாம்.


தாழிசையும் கலிப்பாவும்:

தாழிசை என்பது கலிப்பாவின் உறுப்புக்களுள் ஒன்றாகும். கலிப்பாவின் பொதுவான ஆறு உறுப்புக்களாக அறியப்படுகின்ற தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் ஆகியவற்றில் இரண்டாவதாக வருவது தாழிசை ஆகும். தாழிசை என்னும் உறுப்புக்குரிய பொது இலக்கணம் கீழே:

> அடிதோறும் இரண்டு முதல் ஐந்து சீர்கள் வரை பெற்று வரும்.
> ஒரு அடுக்கில் இரண்டு முதல் நான்கு அடிகள் வரை அமைந்து வரும்.
> மூன்று முதல் பல அடுக்குகள் வரை ஒருபொருள்மேல் அடுக்கி வரும்.

கலிப்பாக்களில் பல வகைகள் இருந்தாலும் கலித்தொகையில் அதிக எண்ணிக்கையில் பயின்று வருவது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும். கலித்தொகையில் மொத்தமுள்ள 150 பாடல்களில் 80 க்கும் மேற்பட்ட பாடல்களில் இதுவே பயின்று வருவதால், இக் கட்டுரையில் ஆய்வுக்கு இதுவே எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது. இப் பாவகையினைப் பற்றி விரிவாகக் கீழே காணலாம்.

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா:

அடிப்படை உறுப்புக்களான தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்ற நான்கு உறுப்புக்களை மட்டும் கொண்டு அமையும் கலிப்பா நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும். இதன் இலக்கணம் பின்வருமாறு:

> முதலில் ஒரு தரவு வரும். தரவின் குறைந்த அளவு மூன்றடி. அதிக அளவுக்கு எல்லை இல்லை.
> தரவைத் தொடர்ந்து மூன்று தாழிசைகள் ஒரு பொருள்மேல் அடுக்கி வரும். தாழிசையின் அடிச்சிறுமை இரண்டு அடி. அதிக அளவு நான்கு அடி. தரவைவிடத் தாழிசையானது ஓரடியாவது குறைந்து வரும்.
> தாழிசையைத் தொடர்ந்து ஒரு தனிச்சொல் வரும்.
> தனிச்சொல்லுக்குப் பின் ஒரு சுரிதகம் வரும். அது ஆசிரியப்பாவாகவோ வெண்பாவாகவோ இருக்கலாம்.

இப் பாவகையினைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள கலித்தொகைப் பாடல் எண் 11 இனைப் பல உறுப்புக்களாகப் பிரித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தரவு: ( அடி எண் 1 முதல் 5 வரை )

அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலின் புணர்ச்சியும் தரும்எனப்
பிரிவெண்ணிப் பொருள்வயின் சென்றநம் காதலர்
வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎள்இனி

தாழிசை: ( அடி எண் 6 முதல் 17 வரை மூன்று அடுக்குகளில் )

அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே கனம்குழாஅய் காடென்றார் அக்காட்டுள்
துடிஅடிக் கயம்தலை கலக்கிய சின்நீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறெனவும் உரைத்தனரே.

இன்பத்தின் இகந்தொரீஇ இலைதீந்த உலவையால்
துன்புறூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறகரால் ஆற்றும் புறவெனவும் உரைத்தனரே.

கல்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலான்
துன்னரூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்
இன்நிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்தனரே.

தனிச்சொல்: ( அடி எண் 18 மட்டும் )

என ஆங்கு,

சுரிதகம்: ( அடி எண் 19 முதல் 23 வரை )

இனைநலம் உடைய கானம் சென்றோர்
புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயின்
பல்லியும் பாங்கொத்து இசைத்தன
நல்எழில் உண்கண்ணும் ஆடுமால் இடனே.

தாழிசையின் தன்மை விளக்கம்:

பொதுவாகவே தாழிசை என்பது ஒரே பொருளின் மேல் பலமுறை அடுக்கி வருவதாகும். அதாவது ஒரே பொருளின் பல்வேறு தன்மைகளைப் பற்றித் தெளிவாக விளக்குவதற்காகப் புலவர்கள் பயன்படுத்தும் அமைப்புமுறை ஆகும். இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள, மேற்கண்ட கலித்தொகைப் பாடல் 11 ல் வரும் தாழிசையைக் காணலாம்.

அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே கனம்குழாஅய் காடென்றார் அக்காட்டுள்
துடிஅடிக் கயம்தலை கலக்கிய சின்நீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறெனவும் உரைத்தனரே.

இன்பத்தின் இகந்தொரீஇ இலைதீந்த உலவையால்
துன்புறூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறகரால் ஆற்றும் புறவெனவும் உரைத்தனரே.

கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலான்
துன்னரூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்
இன்நிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்தனரே.

பாடல் 11 ல் தாழிசையானது மூன்று அடுக்குகளாய் ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு அடிகளைக் கொண்டு வந்துள்ளது. கலித்தொகையின் பெரும்பாலான தாழிசைகள் இதுபோன்ற அமைப்பிலேயே எழுதப்பட்டுள்ளன. இனி, இவற்றில் கூறப்படுகின்ற பொருளைப் பற்றிப் பார்க்கலாம். 

முதலடுக்கு: கால்வைக்க முடியாத அளவுக்குத் தீயினைப் போல சுடுகின்ற வெம்மை கொண்டது அக்காடு. அக்காட்டில் தேங்கியிருந்த சிறிதளவு நீரினையும் குட்டியானை தனது கால்களால் கலக்கிவிட, அந்த நீரையும் தான் முதலில் உண்ணாமல் தனது பெண்துணைக்கு ஊட்டிவிட்டுப் பின்னரே தானுண்ணுமாம் களிற்றுயானை.

இரண்டாமடுக்கு: இலைகள் தீய்ந்துபோகும் அளவுக்கு வெப்பக்காற்று வீசுவதால் அவ்வழியே செல்வோர் இன்பம் சிறிதுமின்றி பெருந்துன்பம் அடைகின்ற தன்மையது அக்காடு. அக்காட்டில் தனது அன்புக்குரிய பெண்துணையின் துன்பம் தணியுமாறு தனது மெல்லிய சிறகுகளை அசைத்து வீசி வெப்பத்தினை ஆற்றுமாம் ஆண்புறா.

மூன்றாமடுக்கு: மலையில் இருக்கும் மூங்கில்களும் வாடி அழியுமாறு கொடிய வெப்பக்கதிர் வீசுகின்ற நெருங்குதற்கு அரிய காடாகும் அது. அக்காட்டில் மரநிழல் இன்மையால் வருந்திய தனது பெண்துணைக்குத் தன்னுடைய உடல்நிழலைக் கொடுத்து உதவுமாம் ஆண்மான்.

இம் மூன்று அடுக்குகளும் ஒரேபொருளையே அல்லது ஒரே கருத்தினையே வலியுறுத்துகின்றன. அதாவது, தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லவிருக்கும் காட்டுப்பாதையானது மிகவும் கொடிய வெப்பமுடையது. அந்தக் கொடுமையான வெப்பத்திலும் அக்காட்டில் வாழ்கின்ற உயிரினங்கள் தமது பெண்துணையின்மீது அன்பு குறையாமல் வாழ்கின்றன. இக் கருத்தினைத் தலைவனுக்குத் தெளிவாகப் புரியவைத்துப் பிரிவினைத் தடுக்கவே ஒருமுறை இருமுறை இன்றி மூன்றுமுறை இக்கருத்தினைப் பலவிதமாகக் கூறி வலியுறுத்துகிறாள்.

இதிலிருந்து, தாழிசை என்பது எத்தனை அடிகளில் எத்தனை அடுக்குகளில் வந்தாலும் ஒரே பொருளை அல்லது ஒரே கருத்தினை வலியுறுத்தவே அமைக்கப்பட்டவை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

தாழிசையும் தருக்கவியலும்:

தாழிசையின் தன்மை பற்றிய விளக்கத்தினை ஒரு சான்றின் மூலம் தெளிவாக மேலே அறிந்துகொண்டோம். இனி இதைத் தருக்கவியலில் எப்படிப் பயன்படுத்தலாம் எதற்குப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். அதற்குமுன்னர் தருக்கவியலைப் பற்றிய ஒரு சிறிய விளக்கத்தினைக் கீழே காணலாம்.

ஏரணவியல் அல்லது அளவையியல் அல்லது தருக்கவியல் என்பது அறிவடிப்படையில் ஓர் உண்மை ஆகும், ஒரு பொருள் பற்றி அது ஏற்கக்கூடியது என்று அறியவும், ஒரு முடிவுக்கு வரவும், உறுதியாக நிலைநிறுத்தவும் பயன்படும் ஓர் அடிப்படைக் கருத்தியல் முறைகளைப் பற்றிய ஓர் அறிவுத்துறையாகும். ஏரணம் மெய்யியலின் ஒரு முக்கியமான துறை. ஏரணம் என்னும் தமிழ்ச்சொல் ஏல் = ஏற்றுக்கொள், இயல்வது, பொருந்துவது என்பதில் இருந்து ஏல் -> ஏர் -> ஏரணம் என்றாயிற்று. ஏரணம் என்பது படிப்படியாய் அறிவடுக்க முறையில் ஏலும், ஏலாது என்று கருத்துக்களைப் படிப்படியாய் முறைப்படி தேர்ந்து மேலே சென்று உயர் முடிபுகளைச் சென்றடையும் முறை மற்றும் கருத்தியல் கூறுகள் கொண்ட ஒரு துறையாகக் கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை Logic (லாஜிக்) என்று கூறுவர்.

தாழிசையின் ஒரேபொருளைக் குறிப்பதான தன்மையைக் கொண்டு பல தமிழ்ச்சொற்களுக்கு அகராதிகள் காட்டாத புதிய பொருட்களைத் தருக்கவியல் முறைப்படி இங்கே கண்டறியலாம். அதாவது, தாழிசை என்பது எத்தனை அடுக்குகளில் வந்தாலும் அவையனைத்தும் ஒரே பொருளை விளக்குவதற்காகவே புலவர்களால் எழுதப்பட்டவை என்பதனை ஓர் கலித்தொகை எடுத்துக்காட்டின் மூலம் மேலே கொண்டோம் அல்லவா, அதனையே இங்கே நாம் ஏரணமாகப் பயன்படுத்திப் பல சொற்களுக்குப் புதிய பொருட்களைக் கண்டறியப் போகிறோம். கீழே சில எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே கலித்தொகையில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.

சான்று ஒன்று: கலித்தொகைப் பாஎண்: 15

புரிபு நீ புறம் மாறிப், போக்கு எண்ணிப், புதிது ஈண்டிப்
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ -
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம்
பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக் கால்?

பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ -
தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம்,
பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக் கால்?

பின்னிய தொடர் நீவிப், பிறர் நாட்டுப் படர்ந்து, நீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ -
புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனாத்,
திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்கும்கால்?

மேலே உள்ள தாழிசையின் ஒவ்வொரு அடுக்கின் இறுதியிலும் வருகின்ற வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக் கால்?
பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக் கால்?
திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்கும்கால்?

தாழிசையின் தன்மையின்படி, மேற்காணும் மூன்று வரிகளுமே ஒரே பொருளையே குறித்து வந்திருக்கவேண்டும். இதுதான் இங்கே நமக்குத் தேவையான ஏரணம். இந்த ஏரணப்படி,

பயலையால் உண்ணப்படுதல் என்பதும்
பசப்பு ஊர்தல் என்பதும்
தெண்பனி உறைத்தல் என்பதும்

ஒரே வினையினைத் தான் குறித்துவந்திருக்க வேண்டும். இம் மூன்றனுள், தெண்பனி உறைத்தல் என்பது கண்ணீர் வழிதல் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றேயாகும். இதிலிருந்து தாழிசையின் ஏரணமுறைப்படி,

பயலையால் உண்ணப்படுதல் என்பதும் பசப்பு ஊர்தல் என்பதும் தெண்பனி உறைத்தலைப் போலவே கண்ணீர் வழிதலையே குறித்து வந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. மேலும், பயலையும் பசப்பும் கண்ணீரைக் குறிக்கின்ற சொற்களே என்பதும் பெறப்படுகிறது.

சான்று இரண்டு: கலித்தொகைப் பாஎண்: 25

மணக்கும்கால், மலர் அன்ன தகையவாய்ச், சிறிது நீர்
தணக்கும்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ?
சிறப்புச் செய்து, உழையராப், புகழ்பு ஏத்தி, மற்று அவர்
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்;

ஈங்கு நீர் அளிக்கும்கால் இறை சிறந்து, ஒரு நாள் நீர்
நீங்கும்கால், நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ?
செல்வத்துள் சேர்ந்து அவர் வளன் உண்டு, மற்று அவர்
ஒல்கு இடத்து உலப்பு இலா உணர்வு இலார் தொடர்பு போல்;

ஒரு நாள் நீர் அளிக்கும்கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர்
பாராட்டாக்கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ?
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம் மறை
பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல்

மேலே உள்ள தாழிசையின் ஒவ்வொரு அடுக்கிலும் வருகின்ற இரண்டாவது அடிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தணக்கும்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ?
நீங்கும்கால், நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ?
பாராட்டாக்கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ?

தாழிசையின் தன்மையின்படி, மேற்காணும் மூன்று வரிகளுமே ஒரே பொருளையே குறித்து வந்திருக்கவேண்டும். இதுதான் இங்கே நமக்குத் தேவையான ஏரணம். இந்த ஏரணப்படி இவ் வரிகளில் வரும்

கலுழ்பு ஆனாக் கண் என்பதும்
நெகிழ்பு ஓடும் வளை என்பதும்
பசக்கும் நுதல் என்பதும்

ஒரே பொருளையே குறித்து வந்திருக்க வேண்டும். இம்மூன்றனுள், கலுழ்பு ஆனாக் கண் என்பது கண்ணீர் வழிகின்ற கண்ணைக் குறிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். இதிலிருந்து, தாழிசையின் ஏரணமுறைப்படி,

நெகிழ்பு ஓடும் வளை என்பதும் பசக்கும் நுதல் என்பதும் கலுழ்பு ஆனாக் கண்ணைப் போலவே கண்ணீர் வழிகின்ற கண்ணையே குறிக்கும் என்பது பெறப்படுகிறது. மேலும், நெகிழ்தல் என்பது அழுகையைக் குறிக்கும் என்பதால், வளை என்பது கண்ணீருடன் கலந்து ஓடுவதான மையணியைக் குறிப்பதே என்று அறிந்துகொள்ளலாம். பசத்தல் என்பது கண்ணீர் / அழுகையைக் குறிக்கும் என்று மேலே கண்டதால், நுதல் என்பது கண்ணையும் குறிக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

சான்று மூன்று: கலித்தொகைப் பாஎண் 100

ஐயம் தீர்ந்து யார் கண்ணும் அரும் தவ முதல்வன் போல்   
பொய் கூறாய்' என நின்னைப் புகழ்வது கெடாதோ தான்-   
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள்   
பல் இதழ் மலர் உண் கண் பனி மல்கக் காணும் கால்!

'சுரந்த வான் பொழிந்தற்றாச் சூழ நின்று யாவர்க்கும்   
இரந்தது நசை வாட்டாய்' என்பது கெடாதோ தான்-
கலங்கு அஞர் உற்று, நின் கமழ் மார்பு நசைஇயாள்
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணும் கால்!   

'உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல்,
முறை செய்தி' என நின்னை மொழிவது கெடாதோ தான்-
அழி படர் வருத்த நின் அளி வேண்டிக் கலங்கியாள்
பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணும் கால்!   

மேலே உள்ள தாழிசையின் ஒவ்வொரு அடுக்கின் இறுதியிலும் வருகின்ற வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பல் இதழ் மலர் உண் கண் பனி மல்கக் காணும் கால்!
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணும் கால்!   
பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணும் கால்!   

தாழிசையின் தன்மையின்படி, மேற்காணும் மூன்று வரிகளுமே ஒரே பொருளையே குறித்து வந்திருக்கவேண்டும். இதுதான் இங்கே நமக்குத் தேவையான ஏரணம். இந்த ஏரணப்படி,

கண் பனி மல்குதல் என்பதும்
தொடி இறை ஊர்தல் என்பதும்
முகம் பசப்பு ஊர்தல் என்பதும்

ஒரே வினையினைத் தான் குறித்துவந்திருக்க வேண்டும். இம் மூன்றனுள், கண் பனி மல்குதல் என்பது கண்ணீர் வழிதலைக் குறிக்கும் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றேயாகும். இதிலிருந்து தாழிசையின் ஏரணமுறைப்படி,

தொடி இறை ஊர்தல் என்பதும் முகம் பசப்பு ஊர்தல் என்பதும் கண் பனி மல்குதலைப் போலவே கண்ணீர் வழிதலையே குறித்து வந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. மேலும், பசப்பு என்பது கண்ணீரைக் குறிக்கும் என்று மேலே கண்டபடியால், முகம் என்பது கண்ணையும் தொடி என்பது கண்ணீருடன் கலந்துஓடும் மையணியையும் இறை என்பது கண் / கண்ணிமையையும் குறிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

சான்று நான்கு: கலித்தொகைப் பாஎண்: 127

கொடும் கழி வளைஇய குன்று போல், வால் எக்கர்,
நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோ -   
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க,   
இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை!

குறி இன்றிப் பல்நாள், நின் கடும் திண் தேர் வருபதம் கண்டு,
எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோ -
அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய் நலம் வறிது ஆகச்
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை!   

காண்வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை,   
யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோ -   
வேய் நலம் இழந்த தோள் விளங்கு இழை பொறை ஆற்றாள்,   
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை!   

மேலே உள்ள தாழிசையின் ஒவ்வொரு அடுக்கின் இறுதியிலும் வருகின்ற வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை!
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை!   
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை!   

தாழிசையின் தன்மையின்படி, மேற்காணும் மூன்று வரிகளுமே ஒரே பொருளையே குறித்து வந்திருக்கவேண்டும். இதுதான் இங்கே நமக்குத் தேவையான ஏரணம். இந்த ஏரணப்படி,

இனைபு ஏங்குதல் என்பதும்
வளை தோள் ஊர்தல் என்பதும்
நுதல் பசப்பு ஊர்தல் என்பதும்

ஒரே வினையினைத் தான் குறித்துவந்திருக்க வேண்டும். இம் மூன்றனுள், நுதல் பசப்பு ஊர்தல் என்பது கண்ணில் இருந்து கண்ணீர் வழிதலைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். இதிலிருந்து தாழிசையின் ஏரணமுறைப்படி,

இனைபு ஏங்குதல் என்பதும் வளை தோள் ஊர்தல் என்பதும் நுதல் பசப்பு ஊர்தலைப் போலவே அழுதல் / கண்ணீர் வழிதலையே குறித்து வந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. மேலும், வளை என்பது கண்மை அணி என்று முன்னர் கண்டதால், தோள் என்பது இங்கே கண் / கண்ணிமையையும் குறிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

முடிவுரை:

இதுவரை, தாழிசை ஏரண முறைப்படி நாம் மேலே கண்டவற்றில் இருந்து, இனைதல், பசப்பு, பயலை, இறை, தோள், முகம், நுதல், தொடி, வளை போன்ற சொற்களுக்கு அகராதிகள் காட்டாத புதிய பொருட்கள் இருப்பதைக் கண்டோம். இதேமுறையில், இன்னும் பல சொற்களுக்கு அகராதிகள் காட்டாத புதிய / பொருத்தமான பொருட்களைக் கண்டறிய முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.