வெள்ளி, 3 நவம்பர், 2017

கனி இருப்பக் காய் உண்ணலாமா?

முன்னுரை:

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதி மிடுக்குடன் முழக்கிய பெருமைக்குரியவர் ஐயன் வள்ளுவன். பாரதியின் மொழிக்கேற்ப, வள்ளுவர் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்துமே ஆழ்ந்த பொருளுடையவை. இவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள மீள் ஆய்வுப் பயிற்சி தேவை. ஏனென்றால், இப்போது நம் கைவசமுள்ள திருக்குறள் ஒலைச்சுவடியானது வள்ளுவரால் எழுதப்பட்டதல்ல. பலநூறு ஆண்டுகளாகப் பல பேர்களால் பலப்பல படிகளாக எடுக்கப்பட்டு அவற்றில் ஏதோ ஒன்று நம்மிடம் கிடைத்து அது நூலாக வெளிவந்து நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

படியெடுத்து எழுதும்போது எழுத்துப்பிழைகள் உண்டாவது வெகு இயல்பான ஒன்று என்று நாம் அனைவரும் அறிவோம். இரண்டு பக்கங்கள் கொண்ட ஒரு கட்டுரையினைப் படியெடுத்து எழுதும்போதே எழுத்துப்பிழைகள் உண்டாகும்போது 1330 குறள்களைப் படியெடுத்து எழுதியவர் எழுத்துப் பிழைகளைச் செய்திருக்க மாட்டார் என்று நம்புவது ' கண்ணை மூடிக்கொண்டுத் தீயைத் தொட்டால் சுடாது ' என்று நம்புவதற்குச் சமமாகும். இதே கருத்தினைத் 'திருக்குறள் மெய்ப்பொருள் உரை' யில் பெருஞ்சித்திரனார் கீழ்க்காண்டவாறு கூறுகிறார்:

"பேராசிரியர் சாரங்கபாணி அவர்களின் திருக்குறட் சிந்தனைகள்-பக் 124 (1979) புள்ளிக் கணக்கின்படி, அறத்துப்பாலின் 380 குறட்பாக்களில் 217க் கும், பொருட்பாலின் 700 பாக்களில், 487க்கும், காமத்துப்பாலின் 250 கு றட்பாக்களில் 196க்கும், ஆக மொத்தம் 1330 குறட்பாக்களில் 900 பாக்களுக்கு உரைவேறுபாடுகள் காணப்படுகின்றன. "முப்பால் மூலநூலில் இல்லாத கருத்து முரண்பாட்டிற்கு இன்னுமொரு காரணம், திருக்குறளில் அவ்வப்போது பல பாட பேதங்கள் புகுத்தப் பட்டமையே. ஒரு பழைய நூலில் பாட வேற்றுமைகள் தவிர்க்க இயலாதவைதாம். ஆனால், நூற்கருத்தையும் பொருளையும் மாற்றியமைக்கும் பாட பேதங்கள் மூல நூலின் முழுக்கருத்தில் சிதிலமுண்டாக்கி விடுகின் "திருக்குறளுக்குப் பல நூற்றாண்டுகளாகச் சரியான உரை எழுதப்படாமையும், பெரும்பாலானவர்களால் அந்நூல் அடிக்கடி பயிலப் படாமையும், ஏடு எழுதுவோரால் ஏற்பட்ட குறைபாடுகளும், படிகள் எடுக்கும் போது உருவான இயல்பான தவறுகளும், இலக்கண முறைமையை எண்ணிப் புகுத்தப்பட்ட திருத்தங்களும், திருக்குறள் இலக்கிய நூல், அறநூல் என்ற அணுகுமுறையால் உந்தப்பட்டு, இயைபு காண்பதற்காக எழுந்த வேற்றுமைகளும், பத்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த உரையாசி ரியர்கள் மேலே கூறிய பதின்மர் தத்தம் சமய, சமுதாய, தனிக் கொள் கைகளின் தாக்கங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்ட கருத்துத் திருத்தங் களும் குறள் நூலின் பாட வேறுபாடுகளுக்கும் அடிப்படைக் காரணங்களாயின.” "திருக்குறளில் கந்திலியார்என்ற போலிப் புலவர் மிகைபடு பொருளை நகைபடு புன்சொலில் தந்து இடைமடுத்த பிழையினை - அஃதாவது இடைச் செருகலாகச் சில பொருந்தாப் பாடங்களைப் புகுத்தியதைத் தொண்டெனப் புரிந்துவிட்டார். அது காரணமாகப் பொருள் மாறுபாடுகள் ஏற்பட்டு உரையாசிரியர்கள் திண்டாடியிருக்கின்றனர். வள்ளுவ வடிவமே புரியாத நிலைக்கு ஒரளவு அல்லற்பட்டிருக்கின்றனர். - எனப் பேராசிரியர் செ. வைத்தியலிங்கம் தெளிவாக்குகிறார்” - (மேற்கோள் குறிப்பு, 4"உரை வேறுபாடுகள்” (பக்.150) "பாட பேதங்கள் இல்லாத திருக்குறள் மூலநூல் கிடைக்காததால் இன்றிருக்கும் குறட்பாக்களைக் கொண்ட, திருக்குறள் இயம்பும் உட்பொருளைக் கண்டு தெளிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” "திருக்குறள் எழுதப்பட்ட காலத்துக்கும் உரைகள் தோன்றிய காலத்துக்கும் இடையிலான நீண்டகாலப் பகுதி (1000 ஆண்டுகள்) உரையாசி ரியர்களின் உரை வேற்றுமைகள், அவர்கள் செய்த மாறுபட்ட இயல்....

இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய கருத்து என்னவென்றால், ஒரு குறளுக்குப் பொருள் உரைக்கும் முன்னர், அப்பொருள் அக் குறளுக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்றும், அக்குறளுக்குரிய அதிகாரத்தின் தன்மையுடன் ஒத்துப்போகிறதா என்றும் முதலில் சரிபார்க்க வேண்டும். குறளுடனோ அதிகாரத்துடனோ ஒத்துப்போகவில்லை என்றால் அதில் எழுத்துப்பிழை அல்லது பொருட்பிழை இருக்கிறது என்பது உறுதி. ஆனால், குறள்களுக்கு உரைவிளக்கம் எழுதும்போது அப்படி யாரும் சரிபார்க்காமல் எழுதிய பல குறள்களுக்கான விளக்கங்கள் அக் குறள்களுடன் பொருந்தாமல் நிற்கின்றன. இப்படிப்பட்ட ஒரு குறளைப் பற்றித்தான் இக் கட்டுரையில் விளக்கமாகக் காணப்போகிறோம்.

குறளும் பொருளும்:

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. - 100

கலைஞர் மு.கருணாநிதி உரை: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

மு.வரதராசனார் உரை: இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை: மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

பரிமேலழகர் உரை: இனிய உளவாக இன்னாதகூறல் - அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். ('கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை: பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அறம்பயக்கும் இனிமையான சொற்களும் தன்னிடத்தே இருக்க, அவற்றைக் கூறாமல் கடுஞ்சொற்களைச் சொல்லுதல், கனிகள் தன்னிடம் இருக்கும்போது காய்களைத் தின்பது போன்றதனை ஓக்கும்.

பழம் இருக்கக் காயைத் தின்பது தவறா?

இனியவை கூறல் என்னும் அதிகாரத்தின் இறுதிப் பாடலாக வரும் இக் குறளுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள உரைவிளக்கங்கள் அனைத்தும் ஒரே கருத்தை வலியுறுத்துவதனை அறியலாம். அதாவது: ' பழங்கள் இருக்கும்போது காய்களை உண்ணுதல் தவறான செயலும் முட்டாள்தனமான செயலும் ஆகும் ' என்பதே அக் கருத்தாகும். இக் கருத்து சரியா தவறா என்று கீழே பார்க்கலாம்.

ஆய்வு செய்ததில், பழங்கள் இருக்கும்போது காய்களை உண்ணும் செயல் ஒருபோதும் தவறாகாது என்பதே சரியாகப் படுகிறது. சான்றாக, மாம்பழங்கள் இருக்கும்போது அதனை விரும்பாமல் ஒருவர் மாங்காய்களை உண்டால் அது எப்படித் தவறான, முட்டாள்தனமான செயலாகும்?. மாங்கனியின் சுவை வேறு; மாங்காயின் சுவை வேறு. யாருக்கு எந்தச் சுவை பிடித்திருக்கிறதோ அதை அவர் உண்பார். இது எப்படித் தவறாக முடியும்?. அதேபோல, கொய்யாக்காய், தக்காளிக்காய், வெள்ளரிக்காய், நெல்லிக்காய், புளியங்காய்... இப்படிப் பலவகையான காய்கள் மக்களால் விரும்பிச் சமைக்கப்படாமல் பச்சையாகவே உண்ணப்படுகின்றன. வெள்ளரிக்காயினையும் வெள்ளரிப்பழத்தினையும் ஒரேசமயத்தில் முன்னால் வைத்தால் வெள்ளரிக்காயினையே நம்மில் அனைவரும் விரும்பித் தேர்ந்தெடுத்து உண்பார்கள். உண்மையைச் சொன்னால், வெள்ளரிப்பழம் என்ற ஒன்று இருக்கிறது என்பதே நம்மில் பலபேருக்குத் தெரியாது. பொதுவாக, காய்களுக்கு இருக்கும் சுவையும் தன்மையும் வேறு; அவை கனிந்தபின்னால் உண்டாகும் சுவையும் தன்மையும் வேறு. இவை இரண்டுமே இயற்கையின் கொடைதான். இவற்றில் ஒன்றை உண்பது சரி என்றும் இன்னொன்றை உண்பது தவறு, முட்டாள்தனம் என்றும் கூறுவது இயற்கைக்கு முரணானது. இப்படிப்பட்ட முரணான கருத்தினை நுண்மாண் நுழைபுலப் பெரியோராகிய திருவள்ளுவர் ஒருபோதும் கூறமாட்டார். இதிலிருந்து ' பழங்கள் இருக்கும்போது காய்களை உண்பது தவறு என்னும் கருத்தினை இக் குறள் கூறவில்லை ' என்பது தெளிவாகிறது.

குறளுக்கான திருந்திய பொருள்:

இக் குறளில் வரும் காய் என்னும் சொல்லுக்கு ' முதிர்ந்து பழுக்காத மரம் செடிகளின் பலன் ' என்ற அகராதிப் பொருளினை அதாவது 'காய்கறி' என்ற பொருளைக் கொண்டதே மேற்காணும் தவறான உரைவிளக்கங்களுக்கு வழிவகுத்து விட்டது. உண்மையில், இக் குறளில் வரும் காய் என்ற சொல் கொட்டை என்ற பொருளைக் குறிக்கும். காய் என்ற சொல்லுக்கு விதை என்ற பொருளைச் சென்னைத் தமிழ் இணையப் பேரகராதி கூறுவது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காய்³ kāy , n. < காய்²-. [T. kāya, K. M. kāy, Tu. kāyi.] 1. Unripe fruit; முதிர்ந்து பழக் காத மரஞ்செடிகளின் பலன். கனியொழிய . . . நற்கா யுதிர்தலு முண்டு (நாலடி, 19). 2. The last metrical division in a word of three syllables sounding like kāy; மூவசைச்சீரின் இறுதியிலுள்ள நேரசை. ஆம்கடை காயடையின் (காரிகை, உறுப். 7). 3. See காய்ச்சீர். 4. Unripe boil; பழுக்காத புண்கட்டி. கட்டி இன்னும் காயாகவிருக்கிறது. 5. Aborted foetus; முதிராது விழுங் கரு. Colloq. 6. Chessman, die; ஆடுதற்குரிய காய். 7. A preparation in the form of a cone made of pulse mixed with treacle, one of the many important eatables exhibited on marriage occasions; பருப்புத்தேங்காய்ப்பணிகாரம். Loc. 8. Burner in a lamp; விளக்கின் மரை. 9. Half; அரை. Loc. 10. Failure, defeat; பிரதிகூலம். அவனுள்ளங் காயோ பழமோ (பிரபுலிங். பிரபுதே. 51). 11. Deceit; வஞ்சனை. தெளிந்தேம்யாங்காய் (கலித். 89, 7). 12. Seed, as of a bull; விதை. காயெடுத்த எருது.

இப் புதிய பொருளின் அடிப்படையில், இக் குறளுக்கான திருந்திய பொருள் இதுதான்.

இனிய சொற்கள் இருக்க அதைவிடுத்துக் கடுஞ்சொற்களை ஒருவன் பேசுவது, பழங்கள் இருக்க அவற்றை உண்ணாமல் அவற்றுள் இருக்கும் கொட்டையினை உண்ணும் பேதைமைக்குச் சமமாகும்.

இப் புதிய பொருளானது இக் குறளின் கருத்துடன் எப்படிப் பொருந்தி வருகிறது என்பதனைக் கீழே விரிவாகக் காணலாம்.

பழம் இருக்கக் கொட்டையினை உண்ணலாமா?.

பழம் இருக்கக் கொட்டையை உண்ணலாமா என்று கேட்டால் தவறு என்றே அனைவரும் கூறுவர். சான்றாக, மாங்கனியைக் கையில் கொடுத்து உண்ணச் சொன்னால், கனியின் இனிப்பான சதையினை உண்ணாமல் அதனைப் பிய்த்து எறிந்துவிட்டு அதனுள் இருக்கும் கொட்டையை ஒருவன் உண்டால் அதனைச் சரியான செயலென்று யாரும் கூறமாட்டார்கள். இதைப்போலவே, பலாப்பழத்தின் இனிப்பான சுளையினை உண்ணாமல் அதனுள் இருக்கும் கொட்டையினை ஒருவன் உண்டால் அதனை அறிவார்ந்த செயலென்று யாரும் கூறுவார்களா?. மாட்டார்கள்.

ஏன், மாதுளம்பழம் போன்றவற்றில் விதைகளை விரும்பி உண்ணுகிறோமே, அது தவறாகுமா?. என்று சிலர் கேட்கலாம். ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மாதுளம்பழத்தில் இருப்பவை விதைகள்; கொட்டைகள் அல்ல. கொய்யாப் பழங்களில் இருப்பவையும் விதைகள் தான். கொட்டை என்பது பெரிய அளவில் இருக்கும். மேலே காட்டியபடி, தமிழ் இணையப் பேரகராதியானது காய் என்னும் சொல்லுக்குப் பொருளாகக் கொட்டை என்று எழுதாமல் விதை என்று தவறாக எழுதி இருக்கிறது. ஆனால், 'காயெடுத்த எருது' என்று சரியாக எடுத்துக்காட்டி இருக்கிறது. உண்மையில் விதை, கொட்டை ஆகிய சொற்களைப் பல நேரங்களில் நாம் தவறாகவே பயன்படுத்தி வருகிறோம். அளவில் சிறியதாகவும் எண்ணிக்கையில் பலவாகவும் இருந்தால் அவற்றை விதைகள் என்றும் அளவில் பெரியதாய் என்ணிக்கையில் ஒன்றாக இருப்பதனைக் கொட்டை என்றும் பயன்படுத்துவதே சரியான முறையாகும். எனவே, மாதுளம்பழத்தினை விதைகளுடன் உண்ணுவதனை இக் குறளுடன் உரசிப் பார்ப்பது பொருத்தமற்றதாகும்.

பழமும் சொல்லும் ஒப்பீடு:

இக் குறளில் இருவகையான ஒப்பீடுகள் உள்ளன. பழத்தினை இனிய சொல்லுக்கும் பழத்துக்குள் இருக்கும் கொட்டையினை கடுஞ்சொல்லுக்கும் உவமையாக்கிக் கூறி இருக்கிறார் வள்ளுவர். ஏன் அவ்வாறு கூறுகிறார் என்பதனைப் பார்க்கலாம்.

பொதுவாகப் பழம் என்பது உண்பதற்கு எளிமையாகவும் இனிப்பாகவும் எளிதில் செரியக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் அதனுள் இருக்கும் கொட்டையோ உண்பதற்குக் கடினமாகவும் கசப்பாகவும் எளிதில் செரியாததாயும் இருக்கும். இனிய சொற்கள் பழத்தைப் போலப் பேசுவதற்கு எளிமையாகவும் கேட்போருக்கு இனிமையைத் தருவதாயும் கேட்போரின் உள்ளத்தால் விரைந்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் கடுஞ்சொற்களோ பேசுவதற்குக் கடினமாய் இருப்பதுடன் கேட்போருக்கு மனக்கசப்பைத் தருவதாயும் ஏற்றுக்கொள்ள இயலாததாயும் இருக்கும். இப்படிப் பல பண்புகளால் ஒத்திருப்பதால் தான் வள்ளுவர் பழத்தையும் சொல்லையும் இக் குறளில் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த உவமைகளின் மூலம் வேறொரு கருத்தினையும் உணர்த்துகிறார் வள்ளுவர். இனிய சதைப்பற்றும் கசப்பான கொட்டையும் ஒரு பழத்துக்குள் இருப்பதைப் போலவே இன்சொற்களும் கடுஞ்சொற்களும் நமது மனம் என்னும் எண்ணக் கிடங்கில் இருப்பவையே. எண்ணங்களின் கிட்டங்கியாக விளங்கும் நம் மனதின் மேலடுக்கில் இனிய சொற்களும் உள்ளடுக்கில் கடுஞ்சொற்களும் இருக்கும். ஒருவரை வாழ்த்தும்போதோ கொஞ்சும்போதோ யோசிக்காமலேயே இனிய சொற்கள் அழுத்தமின்றி மிக எளிதாகத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இனிய சொற்களை ஒலிப்பதும் மிக எளிமையாக இருக்கும். ஆனால், கடுஞ்சொற்களைப் பயன்படுத்தும்போது பேசுவோரும் மனதளவில் அதிக அழுத்தத்திற்கு உள்ளாவதுடன் ஒலிப்பதும் கடினமாக இருப்பதைக் காண்கிறோம்.

தமிழ் மொழியில் இயல்பாகவே பெரும்பாலான இனிய சொற்களில் மெல்லின எழுத்துக்களே இனிமையைத் தருவதை அறியலாம். சான்றாக, வாங்க, போங்க போன்ற சொற்களைச் சொல்லலாம். மூக்கொலிகளான இந்த மெல்லின எழுத்துக்களை எவ்விதச் சிரமமும் இல்லாமல் மிக எளிதாகப் பேசலாம். பொதுவாக, எந்த ஒரு வினைச்சொல்லுடனும் 'ங்கள்' / 'ங்க' என்ற மெல்லினம் சார்ந்த விகுதியைச் சேர்த்துப் பேசினால் கேட்பவர் மனம் மகிழ்வார்.  அதே சமயம், நாக்கை வளைத்துச் சிரமப்பட்டு ஒலிக்கின்ற வல்லின எழுத்தான 'டா' சேர்த்து 'வாடா, போடா ' என்பதைப் போலப் பேசினால் கேட்பவர் எப்படி உணர்வார் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இவ்வாறு, ஒலிப்பதற்கு எளிமையாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் உள்ள சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்து ஒலிப்பதற்குக் கடினமாகவும் கேட்பதற்குக் கசப்பாகவும் உள்ள சொற்களை ஒருவர் பயன்படுத்தினால், அவரை முட்டாள் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறமுடியும்?. இதைத்தான் பழத்தை விட்டுவிட்டுக் கொட்டையைச் சாப்பிடும் முட்டாளுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் வள்ளுவர்.

முடிவுரை:

இக் குறளில் வரும் காய் என்ற சொல்லுக்குக் கொட்டை என்ற அகராதிப் பொருள் இருப்பதனை அறியாமல் காய் என்ற சொல்லைக் காழ் என்று திருத்தி 2009 ல் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. உண்மையில் இந்த எழுத்துத் திருத்தம் தேவையில்லை. காரணம், யகர ழகர எழுத்துக்களுக்கு இடையில் பரிமாற்றம் நடப்பது பேச்சு வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் இருந்து வருவதே ஆகும். கடின வேலை செய்ததால் உள்ளங்கைகளில் காழ்ப்பு உண்டாகியிருப்பதனை கை காய்த்திருக்கிறது என்று சொல்லுவது வழக்கம். இதன் அடிப்படையிலேயே வள்ளுவரும் காழ் = கொட்டை என்ற பொருளில் காய் என்ற சொல்லை இக் குறளில் பயன்படுத்தி இருக்கிறார். வாழ்க தமிழ்! வளர்க வள்ளுவம் !!.


1 கருத்து:

  1. இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

    2:83 மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்

    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

    49:11 கேலி செய்ய வேண்டாம்.

    குறை கூற வேண்டாம்
    .
    பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.