ஞாயிறு, 13 மே, 2018

இந்திய மொழிகளின் தாய் தமிழே - பகுதி 2


முன்னுரை:

இந்திய மொழிகளின் தாய் தமிழே என்ற தொடர்கட்டுரையின் முதல் பகுதியில் தலை, நெற்றி, கண் மற்றும் கண்சார்ந்த உறுப்புக்களின் தமிழ்ப் பெயர்கள் பிறமாநில மக்கள் பேசும் மொழிகளில் எவ்வாறு திரிபுடன் பேசப்படுகின்றன என்று கண்டோம். இக் கட்டுரையின் இரண்டாம் பகுதியான இதில் கண் தவிர ஏனை முக உறுப்புக்களைப் பற்றிக் காணலாம்.

காது:

சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் வழக்கில் இருந்துவரும் உறுப்புச் சொற்களில் இதுவும் ஒன்றாகும். ஐம்புலன்களில் கேட்கும் திறன் கொண்ட உறுப்பாக அறியப்படுகின்ற இச்சொல்லானது எவ்வாறெல்லாம் திரிந்து இந்தியாவின் பிற மாநில மொழிகளில் வழங்கப்படுகின்றது என்பதைக் கீழே காணலாம்.

காது >>> காது - மலையாளம்.
காது >>> `த்தா - இந்தி

காது எனும் உறுப்பினைக் குறிக்கத் தமிழில் செவி என்ற பெயரும் உண்டென்று அறிவோம். இச்சொல்லின் திரிபுகள் எந்தெந்த மொழிகளில் காது என்னும் பொருளில் வழங்கப்படுகின்றன என்று கீழே பார்க்கலாம்.

செவி >>> செவி - மலையாளம், தெலுங்கு
செவி >>> கிவி - கன்னடம்

கையில் பிடித்து அடிக்கப்படுகின்ற உடுக்கை போன்ற சிறுபறையினைக் கன்னம் என்ற சொல்லால் சங்ககாலப் புலவர்கள் அழைத்தனர். இச்சொல்லுக்கு இந்த புதிய பொருள் இருப்பதைப்பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள 'வெறியாடல் என்னும் பழங்காலப் பேயோட்டும் முறை' என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம். பறையினைக் குறிப்பதற்குச் சங்கத் தமிழர்கள் பயன்படுத்திய கன்னம் என்ற சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் எப்படியெல்லாம் திரிந்து செவிப்பறை / செவியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப் படுகின்றது என்று பாருங்கள்.

கன்னம் >>> கான் >>> கர்ண

சொல்வடிவம்   பேசப்படும் மொழிகள்

கர்ண           மலையாளம், தெலுங்கு, கன்னடம், செங்கிருதம், இந்தி,  
                       மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`.
கான்            இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`.

ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்னால் பறையினைக் குறிக்கத் தமிழர்கள் பயன்படுத்திய கன்னம் என்ற தூய தமிழ்ச்சொல்லானது இந்தியாவின் பிற மாநில மொழிகளில் சென்றபின்னர் தமிழில் ஏறத்தாழ வழக்கில் இருந்தே அருகிப் போனது. கர்ண என்றும் கான் என்றும் திரிந்துபோன இச்சொல்லை வடசொல்லாகக் கருதிய பிற்காலத் தமிழர்கள் மீண்டும் அதைத் தமிழுக்குக் கொண்டுவரும்போது கன்னம் என்று மாற்றி அச்சொல்லுக்குக் காதினையும் காதின் கீழ் உள்ள பகுதியையும் பொருட்களாகப் பயன்படுத்தலாயினர். இதைப்பற்றிக் கீழே காணலாம்.

கன்னம்:

கன்னம் என்ற சொல்லுக்குத் தற்போதைய தமிழ் அகராதிகள் காது, காதின் கீழ் உள்ள பகுதி ஆகிய பொருட்களைக் காட்டுகின்றன. இவற்றில் காது என்னும் பொருள் எவ்வாறு தோன்றியது என்று மேலே கண்டோம். இக்காலத்தில் காதின் கீழ் உள்ள பெரிய பகுதியினையே கன்னம் என்று தமிழ்மக்கள் நடைமுறையில் குறிப்பிடுகின்றனர். இச்சொல் எவ்வாறு திரிபுற்று பிற மாநில மொழிகளில் வழங்குகிறது என்று பார்ப்போம்.

கன்னம் >>> கென்னெ - கன்னடம்
கன்னம் >>> `னு - செங்கிருதம்

சங்ககால இலக்கியங்களில் கன்னத்தினைக் கவுள் என்ற சொல்லால் குறிப்பிட்டனர். கவுள் என்ற இத் தமிழ்ச்சொல்லின் திரிபுகள் இந்தியாவின் பிற மாநில மொழிகளில் வழங்கப்படும் விதங்களைப் பார்க்கலாம்.

கவுள் >>> கவிள்
கவுள் >>> கபோல
கவுள் >>> ~ல்ல >>> கா~ல்

சொல்வடிவம்   பேசப்படும் மொழிகள்

கவிள்                      மலையாளம்
கபோல                  மலையாளம், செங்கிருதம், இந்தி, மராத்தி
                                கு~ச்^ராத்தி, வங்காளம்.
~ல்ல, கா~ல்      கன்னடம், செங்கிருதம், இந்தி, மராத்தி
                                கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`.

மூக்கு:

சங்ககாலத்தில் இருந்து இன்றுவரையிலும் பயன்படுத்தப்பட்டு வரும் தூய தமிழ்ச்சொற்களில் மூக்கும் ஒன்றாகும். பிற மாநில மொழிகளில் இச்சொல்லின் திரிபுகளைப் பற்றிக் காணலாம்.

மூக்கு >>> மூங்கு, மூகு~
மூக்கு >>> முக`

சொல்வடிவம்   பேசப்படும் மொழிகள்

மூக்கு                    மலையாளம், தெலுங்கு
மூங்கு, மூகு~      கன்னடம்
முக`                    இந்தி (முகர்தல் பொருள்)

தமிழில் நாழி என்ற பழஞ்சொல்லுண்டு. இச்சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டென்றாலும் உள்துளையுடைய நீண்ட குழாய் என்ற பொருளும் தமிழ் அகராதிகளில் உண்டு. சங்ககாலத்தில் மூங்கில் மரங்களின் தண்டில் இரண்டு கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதியை அறுத்து அதனை ஒரு முகத்தல் அளவுக் கருவியாக அக்காலத்தில் பயன்படுத்தினர். அதுவே நாழி அளவு (சான்று: உண்பது நாழி) எனப்பட்டது. அக்காலத்தில் மட்டுமல்லாது இக்காலத்திலும் இந்த நாழியைப் பயன்படுத்துவோர் உண்டு. நாழியைப் போன்ற ஒரு கருவியைக் கொண்டே அக்காலத்தில் பொழுதைக் கணக்கிட்டதால் அப்பொழுதினை நாழிகை என்றே அழைத்தனர் முன்னோர். துளையினை உடைய நீண்ட குழாயினைக் குறிப்பதற்குத் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட இச்சொல் பிறமாநில மொழிகளில் சற்றே திரிந்து மூக்கினைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. காரணம், மூக்கும் நாழியைப் போலவே துளையுடன் நீண்டு இருப்பதால்.

நாழி >>> நாசி` >>> நாசி` >>> நாக்

சொல்வடிவம்      பேசப்படும் மொழிகள்

நாசி`                      மலையாளம், தெலுங்கு, கன்னடம், செங்கிருதம்,  
                                    இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம்.
நாக்                           பஞ்சாபி`, இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம்.

மேற்காணும் மாநில மொழிகளில் சில, சங்கத் தமிழரின் சொல்லான நாழி என்பதனை மூக்கினைக் குறிப்பதற்கு மட்டும் பயன்படுத்தவில்லை. மூக்கு போன்ற துளையுடைய நீண்ட நன்னீர்க் குழாயினையும் சாக்கடைநீர்க் குழாயினையும் குறிப்பதற்குப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

நாழி >>> நாலா, நாலி, நலிகா, நல் - கன்னடம், இந்தி, வங்காளம், கு~ச்^ராத்தி, மராத்தி.

நாழி என்ற சொல் திரிந்து நாயனம் என்றாகி நீண்ட துளையுடைய வாத்தியக் குழலையும் தற்போது குறிக்கப் பயன்படுகிறது.

நாழி >>> நாயனம்.

வாய்:

வாய் என்ற சொல்லும் பழந்தமிழ்ச் சொற்களில் ஒன்றாகும். இச்சொல்லுக்கு பலவிதமான பொருட்களைத் தமிழ் அகராதிகள் கூறியுள்ளன. அவற்றுள் பேச உதவும் உறுப்பு, பேச்சுமொழி ஆகிய பொருட்கள் குறிப்பிடத்தக்கவை. வாய் என்ற சொல் பிறமாநில மொழிகளில் எப்படித் திரிந்து பேச உதவும் உறுப்பினைக் குறிக்கப் பயன்படுகிறது என்று கீழே பார்க்கலாம்.

வாய் >>> பா`யி >>> பா^ச்` >>> ஆச்`

சொல்வடிவம்      பேசப்படும் மொழிகள்

வாய்              மலையாளம்
பா`யி              கன்னடம்
பா^ச்`              செங்கிருதம்
ஆச்`             கு~ச்^ராத்தி

பேச்சுமொழியைக் குறிப்பதான வாய் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபுகள் அதேபொருளில் பிற மாநில மொழிகளில் எப்படி வழங்கப்படுகின்றன என்று கீழே பார்க்கலாம்.

வாய் >>> வாச் >>> வசன
வாய் >>> பா^~ >>> பா^~ண், பா^செ~

சொல்வடிவம்     பேசப்படும் மொழிகள்

வாச்                            கு~ச்^ராத்தி, மராத்தி, பஞ்சாபி`
வசன                         இந்தி, கன்னடம்
பா^~, பா^~ண்   இந்தி, மலையாளம், வங்காளம், மராத்தி
                                    பஞ்சாபி`, கு~ச்^ராத்தி, செங்கிருதம்
பா^செ~                    கன்னடம்

நாக்கு:

சுவை அறியும் உறுப்பான நாக்கு என்னும் தமிழ்ச்சொல்லின் வரலாறும் நீண்டதே ஆகும். நாக்கு என்றும் நா என்றும் தமிழ் இலக்கியங்கள் இவ் உறுப்பினைக் குறித்து வந்துள்ளன. இச்சொற்கள் பிறமாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து நாக்கு எனும் உறுப்பினைக் குறிக்கிறது என்று கீழே பார்க்கலாம்.

நாக்கு >>> நாலிகெ - கன்னடம்
நாக்கு >>> நாலுக - தெலுங்கு
நா >>> நாவு - மலையாளம்

நாக்கு என்பது பேசுவதற்கு மட்டுமின்றி, சுவை அறியும் உறுப்பாகவும் இருக்கும் நிலையில், சுவை என்னும் தமிழ்ச்சொல்லின் பல திரிபுகள் பிற மாநில மொழிகளில் சுவையினையும் சுவை அறியும் நாக்கினையும் பேச்சினையும் கூட குறிக்கப் பயன்படுத்தப்படுவது வியப்பை அளிக்கிறது. சுவை என்ற பழந்தமிழ்ச் சொல்லின் திரிபுகளும் பொருட்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சுவை >>> சீ^ >>> சீ^^
சுவை >>> சு^பா^ன், ^பா^ன்
சுவை >>> ச்`வாத்`
சுவை >>> சவி

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

சீ^ (நாக்கு)              தெலுங்கு, கன்னடம், செங்கிருதம்
சீ^^ (நாக்கு)             இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`.
சு^பா^ன் (பேச்சு)      இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`.
ச்`வாத்` (சுவை)         வங்காளம், கு~ச்^ராத்தி, இந்தி, மராத்தி,  
                                       பஞ்சாபி`, செங்கிருதம்.
சவி (சுவை)                கன்னடம்

பல்:

வாய்க்குள் அமைந்திருக்கும் பல உறுப்புக்களில் பல்லும் ஒன்றாகும். சங்ககாலம் தொட்டு தமிழில் வழங்கப்படுவதான இச்சொல் பிறமாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து பல்லைக் குறிக்கப் பயன்படுகின்றது என்று பார்க்கலாம்.

பல் >>> பல்லு >>> `ல்லு >>> கா`லு
பல் >>> பன்னு, பண்டுலு >>> பணீ

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்


பல்லு                         மலையாளம், தெலுங்கு
`ல்லு                        கன்னடம்
கா`லு                         செங்கிருதம்
பன்னு, பண்டுலு     தெலுங்கு
பணீ                           மராத்தி

பல் இல்லாமல் சொல் இல்லை என்பார்கள். பல் என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டே பலுக்குதல் அதாவது பேசுதல் என்ற வினையும் எழுந்தது. இதைப்போலவே, பல் என்ற தமிழ்ச்சொல் பிறமாநில மொழிகளில் கீழ்க்காணுமாறு திரிந்து சொல் / பேச்சையும் குறிக்கப்  பயன்படுகின்றது.

பல் >>> போ`ல் >>> போ`லன், போ`ல்னீ - இந்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, மராத்தி.

பல் என்னும் உறுப்பானது பேச்சுடன் மட்டுமின்றிச் சிரிப்புடனும் தொடர்புடையது என்று அறிவோம். முறுவல், மூரல், நகை ஆகிய சங்கத் தமிழ்ச்சொற்கள் பல்லை மட்டுமின்றி சிரிப்பையும் குறிக்கும் என்று தமிழ் அகராதிகள் கூறுகின்றன. இச்சொற்கள் பிற மாநில மொழிகளில் எவ்வாறு திரிந்து சிரிப்பைக் குறித்தன என்று கீழே காணலாம்.

புன்சிரிப்பு >>> புஞ்சிரி - மலையாளம்
நகை >>> நவ்வு - தெலுங்கு
முகிழ்நகை >>> மொலகநவ்வு - தெலுங்கு
நகை >>> நகெ~ - கன்னடம்
முகிழ்நகை >>> முகு~லுநகெ~ - கன்னடம்
முறுவல், மூரல் >>> ச்`மேர >>> ச்`மேரதா >>> ச்`மித

சொல்வடிவம்           பேசப்படும் மொழிகள்

ச்`மேர, ச்`மேரதா      செங்கிருதம்
ச்`மித                           மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், இந்தி, செங்கிருதம்.

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழமானது ஏனைப் பழங்களில் இருந்து மாறுபட்டது. ஒரு பெரிய பழத்திற்குள் ஏராளமான சுளைகள் இருக்கும். ஒரு பலாப்பழத்தை அறுத்துப் பார்த்தோமானால் அதனுள் இருக்கும் சுளைகள் / கொட்டைகளின் வரிசை முறையானது பார்ப்பதற்கு வாய்க்குள் இருக்கும் பற்களின் வரிசைமுறை போலவே தோன்றும். அருகில் உள்ள பலாப்பழத்தின் படம் இதனை உறுதி செய்யும். பல்லுக்கும் பலாப்பழத்திற்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பதால்தான் தமிழில் பல் >>> பலவு >>> பலா என்ற பெயர் இப் பழத்திற்கு ஏற்பட்டது எனலாம். பலாப்பழத்தினைக் குறிக்கும் இன்னொரு தூய தமிழ்ச்சொல் ஆசினி என்பதாகும். இச்சொல்லானது சற்றே திரிந்து பிற மாநில மொழிகளில் பல் மற்றும் சிரிப்பினைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றது.

ஆசினி >>> ஆச்`னா >>> ஆசி`யம்
ஆசினி >>> கா`ச்`னா >>> கா`ச்` >>> கா`` >>> `சூ`, `சீ`

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

`சீ`                            இந்தி, வங்காளம், பஞ்சாபி`.
கா``, ஆசி`         செங்கிருதம்
கா`ச்`, `சூ`         மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம்
கா`ச்`யம்                  கன்னடம், தெலுங்கு, மலையாளம்.
               
சிரித்தல் வினையைக் குறிக்கும் இன்னொரு தமிழ்ச்சொல் நந்துதல் ஆகும். ஆனால் இச்சொல்லுக்கு இப்பொருளைத் தமிழ் அகராதிகள் கூறாமல் விட்டுவிட்டன. இச்சொல்லுக்கு இப்பொருளும் உண்டென்று நிறுவ பல சான்றுகள் இருந்தாலும் இங்கே ஒரே ஒரு சான்று மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த - கலி 119

செடிகளில் பூக்கள் மலர்ந்திருக்கும் நிலையில் அவை சிரிப்பதைப் போல இருந்ததாக மேற்பாடல் வரி கூறுகிறது. மனிதர்கள் பற்களைக் காட்டிச் சிரிப்பதைப் போலச் செடிகள் பூக்களால் சிரித்தனவாம். சுருக்கமாகச் சொல்வதென்றால், முறுவல் கொள்ளல் = நந்துதல். இதிலிருந்து நந்துதல் என்றால் சிரித்தல் என்ற பொருளும் இருப்பதை அறிந்து கொள்ளலாம். தமிழ் அகராதிகள் கூற மறந்துவிட்ட இப்பொருளை இந்தியாவின் பிற மாநில மொழிகள் பலவும் பிடித்துக்கொண்டு அதனைத் தமக்கேற்ப திரித்துக்கொண்டு சிரிப்புடன் தொடர்புடைய பல்லைக் குறிப்பதற்குப் பெரிதும் பயன்கொண்டு வருகின்றன.

நந்து (சிரி) >>> `ந்த (பல்)

பேசப்படும் மொழிகள்: மலையாளம், தெலுங்கு, கன்னடம், செங்கிருதம், இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா.

உதடு:

உதடு தமிழ்ச்சொல்லா?.என்ற ஐயம் பலருக்கு இருக்கிறது. காரணம் கலிங்கத்துப்பரணி தவிர ஏனை இலக்கியங்களில் இச்சொல்லைக் காணக் கிடைக்கவில்லை. ஆகவே, செங்கிருதச் சொல்லான ஓச்~ என்பதில் இருந்தே உதடு என்ற சொல் தோன்றியதாகச் சிலர் கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும். இதைப்பற்றி இங்கே விரிவாகக் காணலாம்.

உதடு என்பது தமிழ்ச்சொல்லே ஆகும். உதளுதல் என்னும் வினையின் அடிப்படையில் தோன்றிய பெயர்ச்சொல் இது. உதளுதல் என்றால் இதழ்களால் கவ்வுதல் என்று பொருள். உதளும் அதாவது கவ்வும் வினையைச் செய்வதால் வாயின் இதழ்கள் உதடு ஆயிற்று. புல் மேயும் விலங்குகளில் மாடுகளைக் காட்டிலும் ஆடுகளும் மான்களும் புல்லை உண்ணும் முறை மாறுபட்டதாகும். மாடுகளைப் போல ஆடுகளும் மான்களும் புற்களைத் தம் நாக்காலோ பற்களாலோ கவ்வுவதில்லை. மாறாகத் தமக்கு விருப்பமான குறிப்பிட்ட பகுதியை மட்டும் தமது வாயின் இதழ்களால் இறுகப் பற்றிப் பறிக்கும். பின்னர்தான் அவற்றைத் தன் வாய்க்குள் கொண்டுசென்று பற்களால் மெல்லும். இதற்கு ஏதுவாக ஆடு, மான்களின் வாய் குறுகியதாகவும் உதடுகள் நன்கு வளையக் கூடியதாயும் இருக்கும். இப்படி உதளும் வினையால் அதாவது வாயின் இதழ்களால் கவ்வி உண்ணுவதால் ஆட்டுக்கு உதள் என்ற பெயரும் ஏற்பட்டது எனலாம். தொல்காப்பிய மரபியலில் உதள் வரும் வரி கீழே:

மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்தொல். மரபியல். 546.

புல்லை உதளும் ஆட்டினங்களைப் பற்றிக் கூறும் பெருங்கதைப் பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புல் உதள் இனத்தொடு புகன்று விளையாடும் - பெருங்.உஞ்சை.49

பல தமிழ் இலக்கியங்களில் பயன்பாட்டில் இல்லை என்றாலும் உதளுதல் என்னும் வினையின் அடிப்படையில் உருவான உதடு என்னும் சொல் தமிழ்ச்சொல் தான் என்று நிறுவுவதற்கு இந்த சான்றுகளே போதுமானது ஆகும். இனி, இந்த உதடு என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்து பிற மாநில மொழிகளில் உதட்டினைக் குறிக்கும் சொற்கள் எவ்வாறு தோன்றின என்று பார்க்கலாம்.

உதடு >>> ஓச்~, ஓச்` >>> ஓண்ட், கோ`ண்ட் >>> கோ`
உதடு >>> துட்டி
உதடு >>> தோண்ட
உதடு >>> பெதவி

சொல்வடிவம்      பேசப்படும் மொழிகள்

ஓச்~, ஓச்`           மலையாளம், தெலுங்கு, செங்கிருதம், இந்தி,  
                                   கு~ச்^ராத்தி, ஒரியா.
ஓண்ட்                      இந்தி, மராத்தி, பஞ்சாபி`.
கோ`ண்ட்                கு~ச்^ராத்தி, இந்தி
கோ`                     கு~ச்^ராத்தி
துட்டி                       கன்னடம்
தோண்ட                வங்காளம்
பெதவி                   தெலுங்கு

அத^ என்னும் சொல் செங்கிருதத்தில் 'கீழ்' என்ற பொருளுடையது. இதனை அடிப்படையாகக் கொண்டு எழுந்த அத^ரோச்~ என்பது கீழ் உதட்டினைக் குறிக்கப் பயன்பட்டது. நாளடைவில் இச்சொல் அத^ என்று சுருங்கிக் கீழ் உதட்டைக் குறிக்கப் பயன்படுகிறது. மேற்காணும் சான்றுகளில் இருந்து, உதடு என்ற தமிழ்ச்சொல்லுக்கு ஓச்~ என்ற செங்கிருதச்சொல்லே மூலம் என்று கூறுவது தவறான கருத்தென்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தாடை:

நம் முகத்தில் கீழ் உதட்டின் கீழே உள்ள குவிந்த பகுதியினைத் தாடை என்று கூறுகிறோம். இதில் தோன்றும் மயிரினைத் தாடி என்றும் தற்காலத்தில் கூறுகிறோம். தாடியும் தாடையும் தமிழ் அல்ல என்றும் வடமொழியின் திரிபுகள் என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து என்பதை இங்கே காணப்போகிறோம்.

சங்க இலக்கியங்களில் தாடைப் பகுதியினைக் கதுவாய், முகடு ஆகிய சொற்களால் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இச்சொற்களுக்கு இப்பொருட்களைத் தமிழ் அகராதிகள் காட்டத் தவறிவிட்டன. இச்சொற்களுக்கு இப்பொருட்கள் உண்டு என்று பல சான்றுகளுடன் செம்பாகம்கதுவாய்முகடு என்ற ஆய்வுக் கட்டுரையில் காணலாம். இந்த இரண்டு பழந்தமிழ்ச் சொற்களும் கீழ்க்காணும் பிற மாநில மொழிகளில் சற்றே திரிந்து தாடைப் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றன.

கதுவாய் >>> `வட` >>> தா`டி` >>> துட்டி^ >>> துடி
கதுவாய் >>> ``பசி
முகடு >>> ~ட்ட^

சொல்வடிவம்      பேசப்படும் மொழிகள்

~ட்ட^                       கன்னடம், தெலுங்கு
தா`டி`                        கு~ச்^ராத்தி, மலையாளம்.
துட்டி^                        இந்தி
துடி                            வங்காளம்
``பசி                    கு~ச்^ராத்தி

இடமாறு உறுப்புப் பெயர்கள்:

தமிழ்மொழியில் ஒரு உறுப்பினைக் குறிக்கப் பயன்படும் / பயன்பட்ட பெயரானது பிறமாநில மொழிகள் சிலவற்றில் அந்த உறுப்பிற்கு அருகில் உள்ள இன்னொரு உறுப்பினைக் குறிக்கப் பயன்படுவதை. இக் கட்டுரையின் முதல் பகுதியில் கண்டோம். சான்றாக, இமையைக் குறிக்கும் தமிழ்ப்பெயர்கள் பிறமாநில மொழிகளில் கண்களைக் குறிக்கப் பயன்படுகின்றன. அதைப்போலவே இங்கும் சில உறுப்புக்களுக்கான தமிழ்ப் பெயர்கள் பிறமாநில மொழிகளில் அருகில் உள்ள உறுப்புக்களைக் குறிக்கப் பயன்படுவதனைச் சில சான்றுகளுடன் காணலாம்.

சங்கத் தமிழ்ச்சொல்லான செம்பாகம் என்ற சொல் கன்னத்தைக் குறிப்பதாகும் என்று செம்பாகம்கதுவாய்முகடு என்ற ஆய்வுக் கட்டுரையில் நிறுவப்பட்டுள்ளது. இச்சொல்லானது பிறமாநில மொழிகளில் திரிபுற்றுக் கன்னங்களையும் கன்னங்கள் ஒன்றுசேரும் தாடைப் பகுதியினையும் குறிக்கக் கீழ்க்கண்டவாறு பயன்படுகின்றது.

செம்பாகம் >>> செம்ப, சம்பதெலுங்கு. பொருள் - கன்னம்
செம்பாகம் >>> ^`ராஇந்தி. பொருள் - கன்னம்
செம்பாகம் >>> சிபு`மலையாளம், இந்தி, கு~ச்^ராத்தி, வங்காளம்.
பொருள்தாடை.

இதைப்போலவே கீழ்க்காணும் தமிழ்ச்சொற்களும் திரிபுற்று இடமாறு உறுப்புப் பெயர்களாகச் சில மாநில மொழிகளில் வழங்கப்படுகின்றன.

கன்னம் >>> `னுசெங்கிருதம், மராத்தி, கு~ச்^ராத்தி. பொருள்தாடை.
கதுவாய் >>> `வட` - தெலுங்கு. பொருள்கன்னம்
கதுவாய் >>> தோபா`` - மராத்தி. பொருள் - கன்னம்
முகடு >>> பு`க்க^ - தெலுங்கு. பொருள்கன்னம்.

முடிவுரை:

இதுவரை கண்டதிலிருந்து, முகத்தில் அமைந்திருக்கும் பல்வேறு உறுப்புக்களைக் குறிக்கும் தமிழ்ப் பெயர்கள் பிறமாநில மொழிகளில் எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். தமிழில் ஒருமொழி பலபொருள் இருப்பதைப் போலவே பிற மொழிகளிலும் உண்டு. சான்றாக, இந்தியில் மூ என்றால் வாய், முகம் என்ற இரு பொருட்கள் உண்டு. கல் என்றால் நேற்று, நாளை என்ற இருபொருட்கள் உண்டு. இதுபோல பொருள்மயக்கம் தரும் மொழிகள் பல இந்திய மொழிகளில் உண்டு


 ………………. தொடரும் ………………………. 

பார்வைக்கு:

 1. வெறியாடல் என்னும் பழங்காலப் பேயோட்டும் முறை:
http://thiruththam.blogspot.in/2018/05/blog-post_9.html

  2. செம்பாகம் - கதுவாய் - முகடு
http://thiruththam.blogspot.in/2018/05/blog-post_15.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.