புதன், 9 மே, 2018

வெறியாடல் என்னும் பழங்காலப் பேயோட்டும் முறை


முன்னுரை:

வீரமும் காதலும் தமிழர்களின் பரம்பரைச் சொத்து என்றால் மிகையில்லை. சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் இந்த இரண்டுக்குமே முதலிடம் கொடுப்பவர்கள் தமிழர்கள். இதில் வீரம் என்பதற்கான விளக்கம் தற்காலத்தில் சற்று மாறிப்போய் இருந்தாலும் இன்னும் தமிழர்களின் உள்ளத்தில் இருந்து நீங்கவில்லை. இதற்குச் சான்றாக பல போராட்டங்களைத் தமிழக மக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதைப் பார்க்கிறோம். உள்ளத்தில் வீரம் இல்லாத யாராலும் இத்தகைய போராட்டங்களைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாது என்பது உலகறிந்த உண்மை. வீரம் குறையாத நம் தமிழ் மண்ணில் என்றென்றும் சாகாவரம் பெற்று விளங்கும் இன்னொரு பண்பாட்டுக் கூறே காதலாகும். 'காதல், இல்லையேல் சாதல்' என்று காதலுக்காக உயிரையும் துச்சமாகக் கருதும் இனம் தமிழ் இனம். காதலுக்காக உயிரை மாய்த்த தமிழர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. இத்தகைய அளப்பரிய காதல் உணர்வு என்பது தமிழர்களுக்கு இன்று நேற்றல்ல மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துவருவதுதான். சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்கள் காளையரின்மேல் கொண்ட அளப்பரிய காதலை ஏராளமான பாடல்களில் பதிவு செய்துவைத்துள்ளனர் சங்கத் தமிழ்ப் புலவர்கள்.

பருவமடைந்த ஆணும் பெண்ணும் யாருக்கும் தெரியாமல் ஒருவரையொருவர் சந்தித்துக் கண்டு மகிழ்தலைக் களவு என்று கூறுகிறது தொல்காப்பியம். இப்படிக் களவில் சந்தித்து வளர்த்த காதல் ஒருநாள் ஊர்மக்களுக்குத் தெரியவருகிறது. ஊரார் வாய்க்குவந்தபடி இவர்களைப் பேசுவதனை அலர் என்று கூறுகிறது தொக்காப்பியம். இந்த அலரை அறிந்த காதலியின் அன்னை, காதலியை வீட்டுக்குள் அடைக்கிறாள். காதலனைக் காணாத ஏக்கத்தில் காதலியானவள் பெரும் துன்பம் அடைகின்றாள்; உண்ணாமல் உறங்காமல் அழுது அழுது கண்கள் சோர்ந்த நிலையில் உடல் மெலிகிறாள். இதனைக் காமம் மெய்ப்படுத்தல் என்று கூறுகிறது தொல்காப்பியம். சிலநேரங்களில் மகளின் காதலை தாய் அறியாமல் போவதுமுண்டு. இந்நிலையில், மகளின் உடல்மெலிவையும் அவளது நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கண்டு அஞ்சுகின்ற தாய் அவள் எதையாவது பார்த்து அஞ்சியிருப்பாளோ என்று நினைக்கிறாள். குறிசொல்லும் கட்டுவிச்சியை வீட்டுக்கு அழைத்துவந்து குறிகேட்கிறாள். இக்குறியினைக் கட்டு என்று தொல்காப்பியம் கூறுகிறது. 'உன் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது' என்று கட்டுவிச்சிக் கூறுகிறாள். இதனை வெறி என்று குறிப்பிடுகிறது கீழ்க்காணும் தொல்காப்பியப் பாடல்.

களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும்
அளவு மிக தோன்றினும் தலைப்பெய்து காணினும்
கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்
ஒட்டிய திறத்தான் செய்தி-கண்ணும் - தொல்.கள.24

பேயை ஓட்டித் தனது மகளை மறுபடியும் நல்ல நிலைக்குக் கொண்டுவருவதற்காகப் பேயோட்டும் பூசாரியைத் தனது வீட்டுக்கு அழைத்து வருகிறாள். இப்பூசாரியை வேலன் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. பேயோட்டும் நிகழ்ச்சியை வெறியாட்டு, வெறியாடல் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த வெறியாட்டு நிகழ்வினைப் பற்றி விரிவாகப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வெறியாடல் - பொருள்விளக்கம்:

வெறியாடல் என்னும் சொல்லில் வரும் வெறி என்பதற்குப் பல பொருட்களை அகராதிகள் கூறுகின்றன. அவை கீழே தரப்பட்டுள்ளன.

வெறி³ vei , n. [T. verri, K. vei, M. veri.] 1. Toddy; கள். (பிங்.) 2. Drunkenness, drunken fury, intoxication; குடிமயக்கம். (W.) 3. Giddiness; மயக்கம். (W.) 4. Bewilderment; confusion, perturbation; கலக்கம். (பிங்.) 5. Madness, insanity; பயித்தியம். வெறிநாய். 6. Frenzy; மதம். 7. Anger; கோபம். (W.) 8. Quickness, hastiness; விரைவு. (அக. நி.) 9. Fragrance; வாசனை. வெறிகமழ் வணரைம்பால் (கலித். 57). 10. See வெறியாட்டு. (பிங்.) வெறிபுரி யேதில் வேலன் (அகநா. 292). 11. See வெறிப் பாட்டு. வேலனேத்தும் வெறியுமுளவே (பரிபா. 5, 15). 12. Savagery, wildness; மூர்க்கத்தனம். 13. Devil; பேய். (பிங்.) 14. Deity; தெய்வம். வெறி யறி சிறப்பின் (தொல். பொ. 60, உரை). 15. Sheep; ஆடு. இறும்பகலா வெறியும் (மணி. 19, 97). 16. Ignorance; பேதைமை. (பிங்.) 17. Fear; அச்சம். (பிங்.) வெறிகொளாக மாயை யாதலின் (ஞானா. 59, 5). 18. Disease; நோய். (பிங்.)

எதைப்பற்றியும் கவலையின்றி எதையோ எங்கோ வெறித்துப் பார்த்தமாதிரி அமர்ந்திருக்கும் நிலையினை வெறி என்று கூறுவர். காதல் வயப்பட்டு அது கைகூடாத பெண்களின் நிலை ஏறத்தாழ இந்நிலை தான். தன் மகளின் இந்நிலைக்குக் காதல் தான் காரணம் என்று அறியாத தாய், பேய்தான் காரணம் என்று கருதி பேயோட்ட முனைவாள். ஆக, அவளைப் பொறுத்தமட்டிலும் வெறி என்றால் பேய். வெறியாடலின் போது முருகக் கடவுளுக்குப் பல்வேறு வண்ணங்களைக் கொண்ட வாசனைப் பூக்களைப் பலியாகக் கொடுப்பர். இதனால் வெறி என்றால் முருகன் என்றும் வாசனை என்ற பொருளும் ஏற்பட்டது எனலாம். இதுவரையிலும் கூறப்பட்ட விளக்கங்களையெல்லாம் தொகுத்து, வெறியாடல் என்ற ஒற்றைச்சொல்லுக்கு, முருகக் கடவுளுக்கு வாசனை மலர்களைப் பலியாகக் கொடுத்து பேயோட்டுதல் என்ற விளக்கத்தைக் கொள்வது சாலவும் பொருத்தமாக அமைகின்றது.

வேலனின் தோற்றம்:

வெறியாடல் எனப்படும் பேயோட்டும் நிகழ்வினைச் செய்யும் பூசாரியை வேலன் என்று குறிப்பிடுகிறது சங்க இலக்கியங்கள். இக்காலத்தில் உடுக்கை அடித்துப் பேயோட்டும் நம் ஊர் கோடாங்கியைப் போன்றவனாக இந்த வேலனைக் கருதலாம். இந்த வேலன் என்பவன் முருகனை வழிபடும் பூசாரி ஆவான். இதற்கு அடையாளமாகத் தனது கையில் முருகனுக்குரிய வேலைப் பிடித்திருப்பான். வயது முதிர்ந்த ஒரு வேலனின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்று கீழ்க்காணும் பாடலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

அறுவை தோயும் ஒரு பெரும் குடுமி
சிறு பை நாற்றிய பல் தலை கொடும் கோல்
ஆகுவது அறியும் முதுவாய் வேல - அகம். 195

வேலன் தன் தலையில் முண்டாசு கட்டியிருக்கிறான். அதற்கு மேல் உச்சியில் பெரிய குடுமி ஒன்று இருக்கிறது. கையில் வளைந்த கோல் ஒன்று வைத்திருக்கிறான். இந்தக் கோலின் தலையில் பல பிரிவுகள் இருக்கின்றன. ஒரு சிறிய பையினை இந்தக் கோலில் கட்டித் தொங்க விட்டிருக்கின்றான். நம்மூரில் குறிசொல்லவரும் கோடாங்கியும் இந்த வேலனைப்போலவே தலையில் முண்டாசு கட்டிக் கையில் கோல் வைத்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமின்றி, வேலன் என்பான் முருகனுக்குரிய கடம்ப மலர்களைச் சூடியிருப்பான் என்றும் தனது கையில் உடுக்கையும் கொண்டிருப்பான் என்றும் கீழ்க்காணும் பாடல்வழி அறியமுடிகிறது. இப்பாடலில் வரும் பாணி என்பது உடுக்கையைக் குறிப்பதாகும்.

வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர்
ஐது அமை பாணி இரீஇ கைபெயரா
செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன் - அகம். 98

இதுவரைக் கண்டதில் இருந்து, சங்ககால வேலனின் தோற்றமானது, (கடம்ப மலர்களை அணியாமல்) கையில் உடுக்கை அடித்துக் கொண்டுவரும் நமது உள்ளூர்க் கோடாங்கியைப் போலவே இருக்கும் என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது.

வேலனின் பொருட்கள்:

வேலனின் கையில் உடுக்கை இருக்கும் என்றும் இதற்குப் பாணி என்ற பெயருண்டு என்றும் மேலே கண்டோம். பாணி என்னும் சொல்லுக்குப் பாட்டு, தாளம், ஒலி என்றெல்லாம் பொருள்கூறிய தமிழ் அகராதிகள் பறை / உடுக்கை என்ற பொருளைக் கூறாமல் விட்டுவிட்டன. பாணன் கையில் இருக்கும் பறை / உடுக்கை போன்ற இசைக்கருவியே சங்ககாலத்தில் பாணி என்று அழைக்கப்பட்டது. வேலனும் தன் கையில் இந்த பறை / உடுக்கை போன்ற ஒன்றையே வைத்திருந்தான். இந்த உடுக்கைக்குப் பாணி என்ற பெயர் மட்டுமின்றி, கன்னம் என்ற பெயரும் இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல்களின் வழி அறியமுடிகிறது.

வேலன் கழங்கு மெய்ப்படுத்துக் கன்னம் தூக்கி .. - ஐங்கு.245
பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி முருகு என மொழியும் ஆயின் ... - ஐங்கு. 247

மேற்காணும் பாடல்களில் வரும் கன்னம் தூக்குதல் என்பது உடுக்கையை ஒலிக்கச்செய்தலைக் குறிப்பதாகும். தூங்குதல் என்ற தன்வினைச் சொல்லுக்கு ஒலித்தல் என்ற பொருளைக் கூறிய தமிழ் அகராதிகள், தூக்குதல் என்னும் பிறவினைச் சொல்லுக்கு ஒலிக்கச்செய்தல் என்னும் பொருளைக் கூறத் தவறிவிட்டன. ஆனால், தூக்கு என்னும் பெயர்ச்சொல்லுக்கு மட்டும் இசை, தாளம் என்று பொருள்கூறி இருக்கின்றன. இதைப்போலவே கன்னம் என்ற சொல்லுக்குப் பறை / உடுக்கை என்ற பொருளைக் கூறாமல் விட்டுவிட்டன தமிழ் அகராதிகள். கன்னம் என்ற சொல்லுக்குப் பறை / உடுக்கை என்ற பொருள் பொருத்தமாய் அமைவதனைக் கீழ்க்காணும் அகப்பாடலின் மூலமும் அறியலாம்.

.. பொன் செய் கன்னம் பொலிய வெள்ளி
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல
அரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்து
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப - அகம். 317

வண்டுகள் மொய்த்து ஊதுதலால் பெரிய வாயகன்ற மஞ்சள்நிறக் கிண்ணம் போன்ற கோங்கின் மலர்களின்மேல் குரவ மலரின் சிறிய வெண்ணிற மலர்மொட்டுக்கள் உதிர்ந்து விழுகின்றன. இக்காட்சியானது, பொன்னால் செய்யப்பட்ட ஒரு வலிய பறையின்மேல் மோதிய வெள்ளியால் ஆன கோல் (பறை அடிக்க உதவுவது) ஒன்று உடைந்து பல சிறுசிறு துண்டுகளாக விழுவதைப் போலத் தோன்றியதாகக் கூறுகின்றன மேற்காணும் பாடல்வரிகள். இப்பாடலில் கூறப்பட்டுள்ள உவமைகளின் மூலம், இப்பாடலில் வரும் கன்னம் என்பது உடுக்கை / பறையினையே குறிக்கும் என்பது உறுதியாகிறது.

வேலனின் பொருட்களில் மேற்கண்ட உடுக்கை மட்டுமின்றி கழங்கு என்ற பொருளும் அடங்குவதாகும். இக் கழங்கு என்பதனை இக்காலத்துச் சோவி / சோழியுடன் ஒப்பிட்டுக் கூறலாம். சிலவகைச் சிப்பிகளின் மேல் ஓட்டினையே சோழி என்று அழைக்கிறோம். இக் கழங்கு என்னும் சோழியின் கீழ்ப்புறமானது தட்டையாகச் சிறிய பிளவுடன் காணப்படும். இதன் குவிந்த மேற்புறமானது பார்ப்பதற்குப் புலியின் உடலிலுள்ள புள்ளிகளைப் போலத் தோன்றும் என்று கீழ்க்காணும் பாடல்வழி அறியமுடிகிறது.

கல் முகை வயப்புலிக் கழங்கு .... - ஐங்கு. 246

அருகில் உள்ள சோழிகளின் படம் இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றது. வேலன் தனது வலது உள்ளங்கையில் பல சோழிகளை அடக்கிக் குலுக்கித் தரையில் போடுவான். சோழியின் மேற்புறத்தினை மூடிய கண்ணாகவும் கீழ்ப்புறத்தினைத் திறந்த கண்ணாகவும் கொண்டு எத்தனை சோழிகள் கண் திறந்திருக்கின்றன என்று எண்ணி அந்த எண்ணிக்கைக்கு ஏற்பக் குறிசொல்வது வேலனின் வழக்கம். இவ் வழக்கத்தினை இன்றளவும் பல சாமியாடிகளும் குறிசொல்வோரும் பின்பற்றுவதை அறிவோம். தற்காலத்தில் சிலவகை விளையாட்டுக்களில் கூட இதேமுறையினைப் பின்பற்றுகின்றனர்.

வெறியாடும் களம்:

வெறியாடல் என்னும் நிகழ்வு நடக்கும் இடத்திற்கு வெறியாடும் களம் என்று பெயர். இந்த வெறியாடல் களமானது வீட்டின் முன்புறத்தில் ஆற்றுமணல் கொண்டு அமைக்கப்படும். பொதுவாகவே சங்ககாலத்தில் திருமணம் உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்ச்சியையும் துவங்கும் முன்னர் அந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கும் வீட்டிற்கு முன்னால் புதிய ஆற்றுமணலைக் கொண்டுவந்து கொட்டிப் பரப்பிச் சமமாக்கித் தளம் அமைப்பார்கள். இச் செய்தியினைப் பல்வேறு சங்கப் பாடல்களின் வழியாக அறியமுடிகிறது. இவ்வாறு அவர்கள் செய்ததன் காரணம், வீட்டின் முன்னால் மண்தரையில் இருக்கும் மேடுபள்ளங்களைச் சமப்படுத்தவும் தேங்கியிருக்கும் நீர் மற்றும் சேற்றினை மூடிமறைத்துச் சீர்படுத்தவுமே ஆகும். இவ்வாறு மணல்கொண்டு அமைக்கப்பட்ட களத்தில் வெறியாடல் நிகழ்ந்ததைக் கூறும் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெய்ம்மணல் முற்றம் கடிகொண்டு மெய்ம்மலி கழங்கின் ...- நற். 268
வெண்மணல் வேலன் புனைந்த வெறியயர் களம்தொறும் - குறு.53
பெய்ம்மணல் வரைப்பின் கழங்குபடுத்து அன்னைக்கு.....- ஐங்கு. 249

வெறியாடலின்போது பலவண்ண வாசமலர்களை முருகக் கடவுளுக்குப் பலியாகத் தூவுவான் வேலன். இதனால் அந்த வெறியாடல் களம் முழுவதிலும் வண்ணவண்ணப் பூக்கள் ஆங்காங்கே பரவிக் கிடந்து பார்ப்பதற்குப் பூத்துக் குலுங்கும் ஒரு பூக்காடு போலத் தோன்றும். இதைப் பற்றிக் கூறும் பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலன் வெறிஅயர் களத்து சிறு பல தாஅய
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின் - அகம். 114.

வெறியாட்டின்போது பலவண்ணப் பூக்களைப் பலியாகக் கொடுத்தாலும் முருகனுக்குப் பிடித்தமான செந்நிறக் கடம்ப மலர்களை மிகுதியாகத் தூவுவான் வேலன். இதனால் வெறியாடும் களத்தில் குருதிநிறப் பூக்கள் அதிகம் காணப்படும். இதனை அழகான ஒரு இயற்கை நிகழ்வுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றது கீழ்க்காணும் பாடல்வரிகள்.

தீயின் அன்ன ஒண் செங்காந்தள்            
தூவல் கலித்த புது முகை ஊன் செத்து
அறியாது எடுத்த புன் புற சேவல்
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய்        
வெறிக்களம் கடுக்கும் வியல் அறைதோறும் - மலை.150

செந்தீயைப் போன்று சிவப்புடன் விளங்கிய செங்காந்தளின் பெரிய மலர்முகையினை இறைச்சித்துண்டு என்று தவறாகக் கருதிய கழுகு ஒன்று அதைக் கால்களால் பறித்துச் சென்றது. மரத்தின் கிளையில் அமர்ந்தவாறு தனது அலகினால் அதைக் குத்தவும் அது இறைச்சி இல்லை என்று தெரியவர உண்ணாமல் அதைக் கைவிட்டது. அப்போது மரத்தின் மேலிருந்து உதிர்ந்த அந்த செங்காந்தள் மலரின் இதழ்கள் நிலத்தில் பரவிக் கிடக்க அதைப் பார்ப்பதற்கு வேலனின் வெறியாடும் களம் போலத் தோன்றியதாகக் கூறுகிறார் புலவர். என்ன ஒரு உவமை !.

வெறியாட்டும் முறை:

கழங்குகளைக் கொண்டு கோட்டம் பார்த்து தலைவியின்மேல் அணங்கு அதாவது பேய் இறங்கியிருக்கிறது என்று உறுதியாகத் தெரிந்த பிறகே வெறியாட்டுவதற்கான ஏற்பாடுகளை வேலன் செய்யத் துவங்குவான். முதலில் வெறியாடுவதற்கான களத்தினை அமைத்த பின்னர் தனக்கு முன்னால் தலைவியை அமரச்செய்வான். இக்காலத்தில்கூட கோடாங்கியானவர் பேய் பிடித்திருப்பவர்களைத் தன்முன்னால் அமரவைத்து உடுக்கையினை அடித்துப் பேயோட்டுவதைப் பார்க்கிறோம். தலைவிக்குப் பிடித்திருக்கும் பேயினை முருகக் கடவுளின் உதவியால் ஓட்டச் செய்யவேண்டி முதலில் முருகக் கடவுளைத் தனக்குள் இறங்கச் செய்வான். இதற்காக முருகனுக்குப் பிடித்தமான கடம்பு, காந்தள் போன்ற செந்நிற நறுமண மலர்களைத் தானும் அணிந்து கொள்வான். பின்னர் முருகனுக்குப் பல்வேறு பொருட்களைப் பலியாகக் கொடுக்கத் துவங்குவான். பலவித உணவுப் பொருட்களையும் மலர்களையும் அரிசி, தினை முதலானவற்றையும் பல சிறிய பிரம்புக் கூடைகளில் வைத்துக் கடவுளுக்குப் பலியாகக் கொடுப்பான். இதைப் பற்றிக் கூறும் சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு உருவின் சில்அவிழ் மடையொடு - குறு. 362
பல்பிரப்பு இரீஇ அறியா வேலன் தரீஇ - அகம். 242

முதலில் முருகனுக்குகந்த செந்நிற மலர்களை நீரொடு தூவி வணங்குவான். பின்னர் உயிர்ப்பலியைக் கொடுக்கத் துவங்குவான். சிறிய இளைய ஆட்டுக்குட்டியின் கழுத்தை அறுத்து அதன் குருதியினை முருகனுக்குப் பலியாகக் கொடுப்பான் வேலன். தான் கொல்லப்படப் போவதை அறியாமல் இலைகளைத் தின்றுகொண்டிருப்பதும் தாயிடம் பால்கூடக் குடிக்காத பச்சிளம் குழந்தையுமான ஆட்டுக்குட்டியினைப் பலிகொடுப்பதைப் பற்றிக் கூறும் சில சங்கப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மென்முறி சிறுகுளகு அருந்து தாய்முலை பெறாஅ மறி கொலைப்படுத்தல் ... - அகம். 292
பல்வேறு உருவின் சில்அவிழ் மடையொடு சிறுமறி கொன்று - குறு.362
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து .. - நற். 47

இக்காலத்தில் ஆட்டுக்குட்டிக்குப் பதிலாகச் சேவல் கோழியைப் பலிகொடுக்கின்றார்கள். ஆட்டுக்குட்டியைப் பலியாக அறுத்த வேலன் அதன் குருதியினைச் செந்நெல், அரிசி, செந்தினை போன்றவற்றுடன் கலந்து அவற்றையும் முருகனுக்குப் பலிப்பொருட்களாகத் தூவுவான். இதைப்பற்றிக் கூறும் பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பலிகொடுத்து உருவச் செந்தினை குருதியொடு தூஉய்      - அகம். 22 

பலிகொடுத்த ஆட்டுக்குட்டியின் குருதியினைத் தொட்டு முருகனை வணங்கிக்கொண்டே பேய்பிடித்திருக்கும் தலைவியின் நெற்றியில் பூசி அவளைப் பிடித்திருக்கும் பேயினை விலகியோடுமாறு ஆணையிடுவான். இதுபற்றிய பாடல் ஒன்று கீழே:

சிறுமறி கொன்று இவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி ஆயின் .... - குறு. 362

பின்னர் வேலன் உடுக்கையைத் தனது கையில் எடுத்துக்கொண்டு அடிக்கத் துவங்குவான். அடிக்க அடிக்க அந்த உடுக்கை ஒலியில் பேய் பிடித்தவர்கள் மனம் ஒருநிலைப்பட்டுச் சாமியாடத் துவங்குவர். இக்காலத்தில் கோடாங்கி பேயோட்டும்போது பேய்பிடித்தவர்கள் தன் தலையினையும் உடலையும் பம்பரம் போலச் சுழற்றியவாறு ஆடுவர். இப்படிச் சாமியாடுவது இக்காலத்தில் மட்டுமல்ல சங்க காலத்திலும் உண்டு. வெறியாடலின்போது பெண்கள் சாமியாடிய விதத்தினைச் சில உவமைகளின் வழியாகக் கீழ்க்காணும் பாடல்களில் கூறியுள்ளனர்.

முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல
தாவுபு தெறிக்கும் ஆன் .. - புறம். 259

வெறியாடலின்போது சாமியாடும் பெண்ணைப் போல மாடானது தாவித் துள்ளிக் குதித்ததாக மேற்பாடல் கூறுகிறது. கடவுளுக்குப் படைத்தத் தினையினை அறியாது உண்ட மயிலொன்று வெறியாடலின்போது வெறிகொண்டு ஆடும் பெண்ணைப் போல ஆடியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

கடி உண் கடவுட்கு இட்ட செழும்குரல்
அறியாது உண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறிவுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்..  - குறு.105

முடிவுரை:

சங்க காலத்தில் நடைபெற்ற வெறியாடல் நிகழ்வினைப் பற்றிய பல செய்திகளை மேலே விரிவாகக் கண்டோம். இந்த வெறியாடல் நிகழ்வானது இரவுநேரத்தில் தான் நடந்திருக்க வேண்டும் என்று கீழ்க்காணும் பாடலின் மூலம் தெரிய வருகிறது.

உருவ செந்தினை குருதியொடு தூஉய்       
முருகு ஆற்றுப்படுத்த உருகெழு நடுநாள் - அகம். 22

இக்காலத்திலும் பேயோட்டும் நிகழ்வானது இரவுநேரத்தில்தான் நடைபெறுவது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இக்கட்டுரையில் பாணி, கன்னம், தூக்குதல் ஆகிய சொற்களுக்குத் தமிழ் அகராதிகள் கூறாத புதிய பொருட்கள் சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளன. இவற்றைத் தமிழ் அகராதிகளில் சேர்ப்பதன் மூலம் பழந்தமிழர் பண்பாட்டுக் கூறுகள் பல வெளிச்சத்திற்கு வரும் என்பதால் அவற்றை விரைந்து சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை இக் கட்டுரை முன்மொழிகிறது.

*************** வாழ்க தமிழ் ! *********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.